’வேனலும் இனிதே’- சுட்டெறிக்கும் சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள சில டிப்ஸ்!

  10th May 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  பாலைவனத்தைப் பார்க்க சுற்றுலா செல்லத் தேவை இல்லாத அளவுக்கு, வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. கோடையின் தொடக்கமே இப்படி என்றால், அக்னி வெயிலை எப்படிச் சமாளிப்பது என்கிற பதற்றம் வரும். அதிக வியர்வை, வியர்க்குரு, கட்டிகள், அம்மை, சோர்வு, மயக்கம் என வெயில் தரும் தொல்லைகள் அநேகம். கூடவே, வெயில் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் அலுவலகத்தில் சக ஊழியர்கள் வரை எரிந்துவிழுவார்கள். 

  வெயில், நம் மனதின் ஈரத்தையும் உறிஞ்சி, நம்மைச் சிடுசிடுப்பாக்கிவிடுவதே இதற்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, தயாராக இருந்தால் கோடையை கூலாக எதிர்கொள்ளலாம்.

  image


  நீர் வறட்சி

  அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, நீர் வறட்சிப் பிரச்னை (Dehydration) வருகிறது. நீரிழப்பு ஏற்படும்போது, உடலில் உள்ள சத்துக்களும் வெளியேறி விடும். வியர்வை வராத நபர்களுக்குக்கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும். இதனால், மயக்கம், வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். சுற்றுலா செல்வோர் பல மணி நேரத்துக்குச் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பதால், கிருமிகள் பல்கிப் பெருகி தொற்று ஏற்பட்டு, எரிச்சல் உணர்வைத் தருகிறது. சிறுநீர் தொடர்ச்சியாக வெளியேறும் அளவுக்கு உடலில் நீர்த்தன்மையைப் பராமரித்துக்கொள்வது அவசியம்.

  உடல் வெப்பம்

  உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், சிவந்துபோதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வெளியில் வெயில் தகித்துக்கொண்டிருக்கையில், அறையில், ஏ.ஸியில் 16 டிகிரி அளவுக்கு அதிகக் குளிருடன் இருக்கக் கூடாது. வெளியே வரும்போது, வெப்ப நிலை வேறுபாடு உடலைப் பாதிக்கும். கண்களின் வெப்பத்தைப் போக்க, குளிர்ந்த நீரால் அடிக்கடி கண்களைக் கழுவலாம்.

  சன் ஸ்ட்ரோக்

  வயதானவர்கள், இதயப் பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள் வெயிலில் போகக் கூடாது. அவசியம் எனில், அதற்குரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடலில் நீர் சரியான அளவில் இருந்தால்தான், ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். ரத்த ஒட்டம் மூளைக்குச் சரியாக செல்லாதபோது, சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயக்கம் வரலாம். சுய நினைவு இருப்பவர்களுக்கு, வாய் வழியாகத் திரவ உணவுகளைக் கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்ப்பதே நல்லது.

  வயிற்றுப்போக்கு

  வெளியில் சாப்பிடுபவர்களுக்கு, வெப்பச் சூழலில், அடிக்கடி ஃபுட் பாய்சன் ஏற்படும். இதனால், தொடர் வயிற்றுப்போக்கால் அவதிப்பட நேரிடும். உணவகங்களில், நீர் பற்றாக்குறையால் சுகாதார மற்ற நீரைக்கொண்டு, உணவு தயாரிக்கப்படும். வெளியில் குடிக்கும் தண்ணீர்கூட சுகாதாரமானதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறி வடிகட்டிய பிறகு, குடிப்பதே நல்லது.

  டைஃபாய்டு

  கோடையில் இந்தக் காய்ச்சல் அதிகம் தாக்கும். தண்ணீர் முலம் பரவும் நோய் என்பதால், 21 நாட்கள் வரை இதன் தீவிரம் இருக்கும். அவரவர் உடல் எதிர்ப்புத் திறனைப் பொறுத்து, காய்ச்சலின் வீரியம் மாறுபடும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்த உணவுகளை உண்பது நல்லது. சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்த்தாலே, இந்தக் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

  அம்மை நோய்கள்

  வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். குழந்தைகளுக்கு அம்மைவந்தால், அதிகம் சிரமப்படுவார்கள் என்பதால், டாக்டர் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போடுவதே சிறந்தது. இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தாலே, அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்.

  வியர்வை பிரச்னை:

  கோடைக் காலத்தில் குளிர்ந்த அல்லது மிதமான சுடுநீரில் ரோஜா இதழ்கள், வேப்பிலை போட்டுக் குளிச்சா வியர்வை நாற்றம் மட்டுமில்லாம எவ்விதமான தோல் பிரச்னையும் வராமல் இருக்கும். தலைமுடியில் தங்கியிருக்கும் அதிகப்படியான வியர்வையை அகற்ற வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் இரண்டையும் சமபங்கு சேர்த்து லேசாகச் சுட வைத்து சீயக்காயுடன் தேய்த்துக் குளிப்பது ரொம்பவே நல்லது. இதனால் உடல் சூடு தணியும்.

  அதிகமான வியர்வை, பொடுகு பிரச்னைக்கும் வழிவகுக்கும். வெந்தயத்தைத் தயிருடன் ஊறவைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், அதற்கும் தீர்வு காணலாம். ஆண்கள் தலைமுடியை ஷார்ட்-கட் செய்துகொள்வது நல்லது.

  கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்:

  கண்களைத் தரமான கூலிங் கிளாஸ் அணிந்து காத்துக்கொள்ளுங்கள். கண்களுக்குக் கற்றாழை ஜெல் மசாஜ் கொடுக்கலாம். வெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே தஞ்சமடைந்து கிடந்தால் சருமமும் முடியும் வறண்டுவிடும். சாத்தியமில்லாதது போலத் தெரிந்தாலும் ஏ.சி. அறைகளிலேயே தவம் கிடப்பதைத் தவிர்ப்பது நல்லது. கோடையில் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறும் என்பதால், ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் நீர் அருந்த வேண்டும். கோடையில் ஏற்படும் கண் எரிச்சல், கண்கட்டி, கண்களிலிருந்து நீர் வழிவது போன்ற தொல்லைகளைத் தவிர்க்க, வெளியில் சென்று வந்ததும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். நறுக்கிய வெள்ளரிக்காயை கண்களில் சில நிமிடங்கள் வைத்திருந்தாலும், சூடு தணியும்.

  உணவை மாற்றுங்கள் :

  மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்க, விறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீ¬ர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. அதனால், இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

  உணவில் அதிகக் காரம், மசாலா, பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர்களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம். வயிறு முட்ட உண்பதையும், காரசாரமான உணவுகளையும் தவிர்க்கவும். நீராகாரங்களையும், வெயில் காலங்களில் விளையும் காய்கள், பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் தவிர்த்து இளநீர், மோர் பருகலாம். மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கலாம். 

  image


  குடிநீரில் குறுமிளகு, சிறிதளவு வெட்டிவேர், சீரகம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு, ஆறவைத்துக் குடிக்கலாம். முடிந்த வரை டீ, காபி தவிர்த்து எலுமிச்சைச் சாற்றில் சர்க்கரை மற்றும் உப்பு சம அளவு கலந்து குடிக்கலாம். நறுக்கிய வெள்ளரிக்காயில் மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் தூவி சாப்பிட்டால்... நீர் கடுப்பைத் தவிர்க்கலாம். எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். காலையில், ஊறவைத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

  தொப்பி /குடை:

  தலையில் வெயில் நேரடியாக படாதவாறு தொப்பி, குடை பயன்படுத்தலாம். வியர்வையை உறிஞ்சி அலர்ஜிகளைத் தவிர்க்கும் காட்டன் சாக்ஸ், கோடைக்கு நல்லது.

  நோ மேக் அப்

  வேனல் கட்டிகளுக்கு சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி வர, நல்ல பலன் கிடைக்கும். அதிகப்படியான மேக்கப், கோடையில் வேண்டாம்.

  நோ ஜீன்ஸ்:

  வெயில் நேரத்தில் தோலோடு ஒட்டும் அளவுக்கு ஜீன்ஸ் உடுத்துவதால், தோலில் சிவந்த நிறக் கொப்புளங்கள், கடுமையான அரிப்பு, எரிச்சல், படர்தாமரை போன்ற தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். தொடர்ந்து இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் பயன்படுத்துவதால், கால்களில் நரம்புகளும் தசைகளும்கூடப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த அறிகுறிகளை மொத்தமாக ‘Tight pants syndrome’ என மருத்துவச் சமூகம் அழைக்கிறது.

  வீட்டை கூல் ஆக்குங்கள் :

  மாநகர்களில் ஒரே ஒரு அறையில் மட்டும் ஏ.ஸி இருக்கும் வீடுகளில் கோடைக்காலத்தில் திண்டாட்டம்தான். இரண்டு பெட்ரூம்களிலும் ஏ.ஸி வைத்திருப்பவர்கள்கூட எகிறும் மின் கட்டணத்துக்குப் பயந்து, ஒரே அறைக்குள் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள். கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என, எல்லோரும் ஒரே அறையில் நெரிசலை அதிகப்படுத்தினால் இடநெருக்கடியோடு, மனநெருக்கடியும் சேர்ந்துவிடும். வெயிலுக்குப் பயந்து ஒரே அறைக்குள் ஒடுங்குவதைவிட, குடியிருக்கும் வீட்டை குளிர்ச்சியாக்குவது பற்றி யோசிக்கலாம். கிடைக்கிற இடங்களில் எல்லாம் செடிகள் வளர்ப்பது, கூரைக்குக் கீழே தெர்மோகோல் அமைப்பது, மாடியில் தோட்டங்கள் அமைப்பது, இளநிற பெயிண்டுகள் அடிப்பது என, வீட்டை வெயிலில் இருந்து பாதுகாத்து, செயற்கைக் குளிரூட்டிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துவிடலாம்.

  நோ ஃப்ரிட்ஜ் :

  வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், நம் கைகள் திறப்பது ஃப்ரிட்ஜைத்தான். சில்லென தண்ணீரோ, ஜூஸோ குடித்தால்தான் நமக்கு உயிர் வரும். இதைவிட தொண்டைக்கு ஆபத்து தருவது வேறொன்று இல்லை. அதிக வெப்பநிலை, அடுத்த நொடியே அதிகக் குளிர் என்கிற வெப்பநிலை மாற்றங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. 

  ‘‘வெயில் காலத்துலகூட ஏன் ஜலதோஷம் பிடிக்குது?’’ என்று சந்தேகக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் இந்த ஃப்ரிட்ஜ் தண்ணீர்தான். அறை வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதே எப்போதும் சிறந்தது. சில்லென்ற தண்ணீர்தான் வேண்டும் என்பவர்கள், மண்பானைத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளில், சிவப்பு நிறத்துக்காக ரெட் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடலுக்குக் கெடுதல்தான் என்பதால், மண்பானை வாங்கும் முன் பானையின் தரத்தை உறுதிப்படுத்துவது நல்லது.

  image


  வெப்ப காலத்தில் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போய்விடும் என்பதால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களைச் சூடுபடுத்தி உண்ணாமல், அவ்வப்போது சமைத்துப் பயன்படுத்தலாம். ஆஸ்பெஸ்டாஸ் அபாயம் கோடையில் நிழலுக்காக வீட்டின் முன்புறமோ, பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தற்காலிகக் கூரைகள் அமைப்பது வழக்கம். அந்த ஷீட் மெலிதாக இருப்பதால், சூரிய வைப்பத்தை அப்படியே உள்வாங்கி, நமக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகளைவிட, பல மடங்கு பாதிப்புகளை இந்த ஷீட்கள் நமக்கு ஏற்படுத்திவிடும். வெயிலுக்குப் பயந்து மேற்கூரை போட திட்டமிடுபவர்கள் ஒலைக் கூரை, ஒடுகளால் செய்த மேற்கூரை போடலாம். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட வேண்டுமெனில், நான்கு புறமும் காற்றோட்டமான இடைவெளியுடன், மேற்பரப்பில் படரும் செடிகளை வளர்த்து, சூட்டை குறைத்துக்கொள்ளலாம்.

  சாலையோர ஜூஸ் கவனம்

  பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.

  வியர்க்க வியர்க்கக் குளிக்காதீர்கள்:

  தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால், உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும், டவலால் துடைத்து வியர்வையை அகற்றுங்கள். சில நிமிடங்கள் கழித்துக் குளிக்கவைக்கலாம். வியர்வையோடு குளிப்பது, வியர்வை வழிய, வழிய முகம் கழுவுவது இரண்டுமே தவறு.

  இயற்கை முறையில் வெயிலை எதரிகொள்ளலாம்

  வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும். கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி இருக்கும். 

  இது, அந்தந்தப் பருவ காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மாறும். எதிர்ப்புத் திறனைப் பொறுத்துப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது, பொதுவாகக் காணப்படும் வெப்ப காலப் பிரச்னை என்றாலும் சிலருக்கு உள்ளுறுப்புப் பாதிப்புகள், பிடிப்புகள், சருமப் பாதிப்புகள், பருக்கள், மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

  உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடலை சமமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.

  வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறு, கண் பகுதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டு, உலர விடலாம். மருதாணி இலைகளை அரைத்து, உள்ளங்கை, பாதத்தின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளலாம்.

  உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால், சருமத்தில் பருக்கள், கட்டிகள், சிவப்புத் திட்டுகள், வியர்க்குரு, தொடை இடுக்குகளில் அரிப்பு போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்கு, எண்ணெய்ப் பசை பிரச்னையும் இருந்தால், அவர்களுக்கு வெயில் காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதி, தேன், வெள்ளரிக்காய் சாறு, வேப்பிலை விழுது, தேங்காய் எண்ணெய், தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் ‘மட் பேக்’ (Mud pack)கிடைக்கும், அதை நீரில் கலந்து, உடல் முழுவதும் தடவலாம். வயிறு, கண் பகுதிகளில் ‘மட் பேக்’ போட்டுக்கொள்ளலாம்.

  கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதைப் போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.

  கோடைக்கேற்ற உணவுகள்

  கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.

  காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

  நீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, சீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

  எலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும், இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.

  image


  நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு, நெல்லிச் சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிச் சாறு, சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்யும். வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

  காற்றோட்டமாக வைத்திருங்கள்

  ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தால், அது வேறொரு பக்கம் கண்டிப்பாக வெளியேற வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் சீராக இருக்கும். காலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை நன்றாகத் திறந்து வையுங்கள். ஆனால், உச்சி வெயிலடிக்கும் போது, அவற்றை மூடிவிடுங்கள். இதனால் வெப்பமானது வீட்டில் இறங்காமல் இருக்கும்.

  மெல்லிய திரைகளை உபயோகியுங்கள்

  வெயிலின் தாக்கம் இல்லாமலிருக்க முரட்டுத் திரைத் துணிகளை சிலர் தங்கள் கதவு, ஜன்னல்களில் மாட்டியிருப்பர். அது தவறு. மெல்லிய திரைகளை மாட்டினால் தான் வீடு காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்.

  ஸ்விட்சுகளை ஆஃப் செய்யுங்கள் டி.வி., மைக்ரோவேவ் ஓவன், ட்யூப்லைட் உள்ளிட்ட மின் சாதனங்கள் நிறைய வெப்பத்தைப் பரப்பும். ஆகவே அவற்றைப் பயன்படுத்தாத போது ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள்.

  லைட்டிங்கை மாற்றுங்கள் :

  மஞ்சளாக எரியும் குண்டு பல்புகளை விட சி.எஃப்.எல். போன்ற ப்ளோரெஸண்ட் பல்புகளைப் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால், வீடு இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்

  செடிகள் வளருங்கள் நம் வீட்டு மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறுசிறு செடிகளை தொட்டியில் வளர்க்கலாம். இந்த பசுமையான செடிகள் கோடை வெப்பத்தைக் குறைக்கும்.

  Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  Our Partner Events

  Hustle across India