பதிப்புகளில்

யூடியூப்பில் வெற்றி பெற 3 வழிகள்!

22nd Oct 2017
Add to
Shares
693
Comments
Share This
Add to
Shares
693
Comments
Share

பீட்டர் மெக்கின்னானை உங்களுக்குத்தெரியுமா? 

நீங்கள், வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் அடிக்கடி உலா வருபவராக இருந்து, அதிலும் குறிப்பாக புகைப்படக்கலை நுணுக்கங்கள் தொடர்பான வீடியோக்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பவர் என்றால் மெக்கினானை நிச்சயம் அறிந்திருக்கலாம். இல்லை என்றாலும், மெக்கினானை இப்போது அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனெனில், டொரண்டோவைச்சேர்ந்த புகைப்படக் கலைஞரான மெக்கினான் யூடியூப்பில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். அவரது யூடியூப் சேனலுக்கு 11 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர். இத்தனைக்கும் அவர் சேனல் துவங்கிய ஓராண்டுக்குள் இந்த ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்திருக்கிறார். தனது சேனலின் மூலம் அவர் விளம்பர வருவாயாக மட்டுமே மாதந்தோறும் 13,000 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறார் என அறிய முடிகிறது. இதைத்தவிர, ஸ்பான்ஸர்ஷிப், துணை விளம்பரம் உள்ளிட்ட வழிகளிலும் அவர் வருவாய் ஈட்டி வருகிறார்.

image


இதெல்லாம் எப்படி சாத்தியம்? மெக்கினான் யூடியூப்பில் வெற்றி பெற்ற ரகசியம் என்ன? என்னாலும் அவரைப்போல யூடியூப்பில் கலக்க முடியுமா? இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால், 11 நிமிடம் பொறுமையாக இருந்தால் போதும். அதற்காக 11 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்றில்லை, 11 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு யூடியூப் வீடியோவை பொறுமையாக பார்க்க வேண்டும்.

’பேடி கல்லோவே’ எனும் யூடியூப்வாசி தான் இந்த வீடியோவை உருவாக்கியிருக்கிறார். பாகுபலி போன்ற பிரும்மாண்ட படைப்புகள் பெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் போது அவற்றின் வெற்றி ரகசியங்கள் அலசி ஆராயப்படுவது போல, கல்லோவே யூடியூப்பில் மெக்கினான் வெற்றி பெற்ற ரகசியத்தை அலசி ஆராய்ந்து விளக்கும் வகையில் இந்த வீடியோவை உருவாக்கி இருக்கிறார்.

புகைப்படக் கலைஞரான மெக்கினான் புதிய யூடியூப் சேனல் துவங்கிய 9 மாதங்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற முடிந்ததற்கான காரணங்களை அழகாக விளக்கும் இந்த வீடியோ மூலம் அவரது வெற்றி ரகசியத்தை அறிந்து கொள்வதோடு, யூடியூப்பில் வெற்றி பெற என்ன தேவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

புகைப்படக் கலைஞர் மற்றும் இயக்குனரான மெக்கின்னான் புகைப்படக் கலை தொடர்பாக தான் அறிந்த நுணுக்கங்களை வீடியோக்களாக யூடியூப்பில் பகிர்ந்து வருகிறார். இதற்கென தனது பெயரிலேயே யூடியூப் சேனலையும் அமைத்திருக்கிறார். இந்த சேனலுக்கு தான் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. யூடியூப்பில் தடுக்கி விழுந்தால் புகைப்படக்கலை தொடர்பான வீடியோக்களையும், போட்டோஷாப் நுணுக்கங்களை கற்றுத்தரும் வீடியோக்களையும் பார்க்கலாம். புகைப்படக்கலை நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களால் இந்த வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான முறை பார்த்து ரசிக்கப்படுகின்றன.

ஆனால் இவற்றுக்கு மத்தியில் பத்தோடு பதின்னொன்னாக காணாமல் போய்விடாமல், மெக்கின்னான் சேனல் மட்டும் தனித்து நிற்க என்ன காரணம்? இந்த கேள்விக்கான பதிலை தான், 11 நிமிட வீடியோவில் சுவையாக முன்வைக்கிறார் கல்லோவே.

மெக்கின்னான் வழக்கமான வீடீயோ வலைப்பதிவாளராக தான் துவங்கியிருக்கிறார். அதாவது வீடியோக்களை உருவாக்கி யூடியூப்பில் பதிவேற்றியிருக்கிறார். புகைப்படக்கலை நுணுக்கங்களை எளிய முறையில் விளக்கும் இந்த வீடியோக்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தாலும் அவர் எதிர்பார்த்த ஆதரவு குவியவில்லை. இதன் பிறகே மெக்கின்னான் தனது வீடியோக்களில் முக்கிய மாற்றத்தை செய்ததாகவும் அதன் பலனாகவே அவரது வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி புதிய பார்வையாளர்களை ஈர்த்ததுடன் அவர்களில் பெரும்பாலானோரை சந்தாதாராகவும் ஆக்கியிருக்கிறது.

இந்த மாற்றத்திற்கு பின் அவரது வீடியோக்களில் மூன்று முக்கிய அம்சங்கள் இருப்பதாக கல்லோவே சுட்டிக்காட்டுகிறார்.


ஆரம்ப கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோக்கள் இருப்பது தான் முதல் அம்சம் என்கிறார் அவர். இரண்டாவது அம்சம் தரமான உள்ளடக்கத்தை அளிப்பது என்றால் மூன்றாவது அம்சம் ரசிகர்களுடன் உறவை வளர்த்துக்கொள்வது என்கிறார். இந்த மூன்று அம்சங்களுக்கும் மெக்கின்னான் வீடியோக்களில் இருந்தே உதாரணம் காட்டி விளக்கியிருக்கிறார்.

’ஆரம்ப கவனத்தை ஈர்க்க வேண்டும்’ எனும் முதல் அம்சத்தையே எடுத்துக்கொள்வோம். முதலில் மெக்கின்னான் பொதுவான தலைப்புகளில் தான் வீடியோக்களை உருவாக்கியிருக்கிறார். ஆனால், பின்னர் அவற்றின் தலைப்பையே ஈர்ப்பு மிக்கதாக மாற்றிவிட்டார். உதாரணமாக ’90 நொடிகளில் கற்றுக்கொள்ளக்கூடிய 8 புகைப்படக்கலை நுணுக்கங்கள்’ எனும் தலைப்பில் உருவாக்கிய வீடியோ தான் அவருக்கு முதல் ஹிட்டாக அமைந்துள்ளது. இந்த தலைப்பே கவர்ந்திழுக்கிறது அல்லவா? இதை தான் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் உத்தி என்கிறார் கல்லோவே. கவனத்தை ஈர்ப்பதோடு கிளிக் செய்யும் வகையில் மற்றும் மற்றவர்களுடன் பகிரும் வகையில் இவை அமைந்துள்ளன. அது மட்டும் அல்ல, அவரது வீடியோவின் அறிமுகமும் அவற்றில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை எடுத்த எடுப்பில் புரிய வைத்துவிடும் வகையில் கச்சிதமாக அமைந்துள்ளன என்கிறார். 15 நொடியில் வீடியோவை அறிமுகம் செய்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறார்.

இப்படி ரசிகர்களை உள்ளே வர வைத்தால் மட்டும் போதாது, அவர்களை கவரக்கூடிய உள்ளடக்கமும் இருக்க வேண்டும். மெக்கின்னானை பொருத்தவரை ரசிகர்களுக்கு புதிய நுணுக்கங்களை எளிமையான முறையில் கற்றுத்தரும் வீடியோக்களை உருவாக்குகிறார். இந்த தரத்திற்காக தான் பார்வையாளர்கள் அவரது ரசிகர்களாக மாறுகின்றனர். அது மட்டும் அல்ல, அவர் தனது வீடியோவை ஏனோதானோவென்றெல்லாம் உருவாக்குவதில்லை. துல்லியமான தரத்தில், நேர்த்தியான ஒளி அமைப்புடன் கச்சிதமாக உருவாக்குகிறார். இந்த தரம் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. புதிய நுணுக்கங்களை கற்றுத்தருவதாலும், அவற்றை மிகவும் விளக்கமாகவும் செய்வதாலும் பார்வையாளர்கள் உளவியல் நோக்கில் அவருக்கு கடமைப்பட்டவர்கள் போல உணர்கின்றனர். அதன் காரணமாகவே அந்த வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு வெளியேறமால், சந்தாதாரராகி விடுகின்றனர்.

கொஞ்சம் மெனக்கெட்டால் தரமான வீடியோக்களை உருவாக்கிவிடலாம் தான். ஆனால் மெக்கின்னான் இத்துடன் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு வீடியோவிலும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். வெறும் புகைப்படக்கலை நுணுக்கங்கள் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்காமல் தன்னைப்பற்றி தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் உரையாடுகிறார். 

உதாரணத்திற்கு ஒரு வீடியோவில் அப்பாக்கள் பற்றி பேசி தானும் ஒரு தந்தை தான் என்று பேசுகிறார். இந்த தனிப்பட்ட தன்மையே ரசிகர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள வழி செய்கிறது என்கிறார் கல்லோவே. ரசிகர்களுக்கு நல்ல விதமாக வரவேற்பு கூறுவது, நகைச்சுவையாக பேசுவது மற்றும் தனிப்பட்ட தகவலை பகிர்வது மூலம் இதை அவர் சிறப்பாக செய்வதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ரசிகர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள தயாராக இருக்கும் அம்சமே ஒரு சில மாதங்களில் அவருக்கான சந்தாதாரர்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

யூடியூப்பிலேயே முழுநேரமாக ஈடுபட்டு வரும் யூடியூப்வாசிகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் பலர் பெரிய அளவில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால் இவர்களின் வெற்றி ரகசியம் இதுவரை இந்த அளவுக்கு நுணுக்கமாக அலசி ஆராயப்படவில்லை என்று சொல்லும் வகையில், கல்லோவே தனது மாஸ்டர்கிளாஸ் வீடியோ வரிசையில் மெக்கின்னான் வெற்றியின் பின்னணியை விவரித்திருக்கிறார்.

யூடியூப்பில் வெற்றி பெற வேண்டும் எனும் எண்ணம் உள்ளவர்கள் அவர் சுட்டிக்காட்டும் மூன்று வழிகளையும் முயன்று பார்க்கலாம்.

வீடியோ விளக்கம்: https://www.youtube.com/channel/UClga3ybuyyjpvqsh-cf3DvQ

(கட்டுரையாளர் சைபர்சிம்மன் – பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர், இணையம் தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர். தகவல் திங்கள்; இது தொழில்நுட்பம், இணையம் மற்றும் புதிய அம்சங்கள் பற்றி அலசும் கட்டுரையாகும்.)

Add to
Shares
693
Comments
Share This
Add to
Shares
693
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக