பதிப்புகளில்

இணைய பயன்பாடு அதிகரித்தும், நகர- கிராமப்புற இந்தியா இடையே டிஜிட்டல் இடைவெளி நிலவுகிறது...

22nd Mar 2018
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

இந்தியா எழுச்சி பெறுகிறது, ஆனால் 60 சதவீத இந்தியர்கள் இணைய இணைப்பிற்கான வசதி பெற முடியாமல் இருக்கின்றனர் மற்றும் இன்னும் பல பகுதிகள் தகவல் நெடுஞ்சாலை வசதியை பெறவில்லை. இந்தியாவின் இணையத்தின் நிலையை ‘யுவர்ஸ்டோரி’ ஆய்வு செய்து இணையம் சார்ந்த நுகர்வில் உள்ள வாய்ப்புகளை பட்டியலிடுகிறது.

மெட்ரோக்கள் மற்றும் முக்கிய இந்திய நகரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் ஆகியவை அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளாக இருக்கின்றன. ஆனால் 6,000 கிராமங்கள் மற்றும் 7,935 சிறிய நகரங்களில் கடன் தள்ளுபடி, மானியம், அரசியல் அதிகார சண்டை ஆகியவை தான் முக்கிய வார்த்தைகளாக இருக்கின்றன. காரணம், அரசியல் அல்லது மதம் போல இணையம் இன்னும் அத்தனை ஆழமாக கிராமப்புற இந்தியாவில் இணையம் இன்னமும் ஊடுருவவில்லை.

image


இந்தியாவின் இணைய பயன்பாடு அதிகரித்து வந்தாலும் பெரும்பாலும் நகரங்கள் சார்ந்தாகவே இருக்கிறது. 2017 டிசம்பரில் நகர்புற இந்தியாவில் இணைய பயன்பாடு 64.84 சதவீதமாக இருந்தது. 2016 டிசம்பரில் இது 60.6 சதவீதமாக இருந்தது. கிராமப்புற இந்தியாவில் இது 2016 டிசம்பரில் 18 சதவீதமாகவும், 2017 டிசம்பரில் 20.26 சதவீதமாகவும் இருந்தது. 2017 ல் இந்தியாவில் இணையம் எனும் அறிக்கை இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நகரப்புற இந்தியாவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் கிராமப்புற இந்தியாவில் மாற்றம் மெதுவாகவே நிகழ்கிறது. அடுத்த பத்தாண்டுகள் தான் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் மாற்றத்தை கொண்டு வரும் எதிர்பார்ப்பை அளிக்கிறது.

டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் வகையில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு 2019 ல் 1,50,000 கிராங்களில் அதி வேக இணைய வசதி அளிக்க ரூ.34,000 கோடி வழங்கியுள்ளது. ஆனால், இணைய சேவைகள் மூலம் இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட, இதற்கு முன் நேஷனல் ஆப்டிக் பைபர் நெட்வொர்க் என அழைக்கப்பட்ட பாரத் நெட் திட்டம் இன்னமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை 67,271 கிராமங்கள் மட்டுமே இதன் கீழ் இணைய வசதி பெற்றுள்ளன. இலக்கை அடைய வேண்டும் எனில் அரசு தனது முயற்சியை இரு மடங்காக்க வேண்டும். அப்போது கூட, 30 சதவீத இந்திய கிராமங்களே இணைய இணைப்பு பெற்றிருக்கும்.

2018 ஜனவரியில் வெளியான டிலியோட் அறிக்கை 17 சதவீத இணைய வசதியை மட்டுமே பெற்று கிராமப்புற இந்தியா தகவல் தொடர்பில் பின் தங்கியிருப்பதாகவும், அகண்ட அலைவரிசை வசதியை அளிப்பதில் உள்ள சவால்களே இதற்குக் காரணம் என தெரிவிக்கிறது.

ஆனால் இவற்றை மீறி நம்பிக்கை தரும் விஷயங்கள் இருக்கின்றன.

மனிபால் குளோபல் எஜுகேஷன் தலைவரான மோகன்தாஸ் பை,

“டிஜிட்டல் இணைப்பு இந்தியர்களை செயல்திறன் மிக்கவர்களாக மாற்ற இருக்கிறது. தகவல்கள் இந்தியர்கள் செயல்படும் விதத்தை மாற்றும். புதிய வர்த்தக முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு வழிகாட்டும். இந்த ஆதரவு நாட்டில் புதிய வளர்ச்சி அலையை உண்டாக்கும்,” என்கிறார்.

இணையம் மீது நம்பிக்கை

இதற்கான விதை, இந்தியாவில் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட 2005-ல் விதைக்கப்பட்டது.

பியூச்சர் குழுமத்தின் தலைவரான கிஷோர் பியானி இதில் ஒருவர். சில்லறை வணிகம் அடுத்த பெரிய விஷயமாக உருவான போது 2005-ல் அவர் இணையத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வழியை யோசித்தார். 2006 ஏப்ரலில் பியூச்சர்பசார்.இன் தளத்தை உருவாக்கினார். 2009 ல் இது ரூ.120 கோடி வர்த்தகமாக உருவானது. அப்போது இந்தியாவில் இணைய வீச்சு என்பது 5 மில்லியன் மக்கள் மத்தியில் தான் இருந்தது. ஆனால் பியானி இணைய நுகர்வு பற்றி சரியாக கணித்திருந்தார்.

image


“வருமான அளவு உயர்வதற்கு ஏற்ப இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்கும்,” என அவர் கூறினார்.

2014 ல் இணைய சில்லறை விற்பனை தொடர்பான கவனம் பிளிப்கார்ட், ஸ்னேப்டீல் போன்ற நிறுவனங்கள் மீது திரும்பி விட்டாலும், நாட்டின் எதிர்காலம் பற்றிய பியானியின் கணிப்பு பத்தாண்டுகள் கழித்து இன்னமும் பொருத்தமாகவே இருக்கிறது.

டிராய் அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை 276.52 மில்லியனாகும்..

இந்த புள்ளிவிவரம் இந்திய டிஜிட்டல் யுகத்தில் நிகழ்த்தியுள்ள பாய்ச்சலை உணர்த்தினாலும் இணைய நுகர்வு என்பது அதிகம் நகரம் சார்ந்ததாகவே இருக்கிறது. 10 ஆண்டுகளில் இது 90 மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கையை தொட்டிருக்கலாம் ஆனால் இந்தியா முழுவதும் வசிக்கும் 450 மில்லியன் நடுத்தர வர்க இந்தியர்களின் நிலை என்ன? அவர்கள் இணையத்தை பயன்படுத்தும் நிலை வர பத்தாண்டுகளை விட குறைவான காலம் போதுமா? 

மேலும் கிராமப்புறத்தில் உள்ள 600 மில்லியன் இந்தியர்கள் இணைய நுகர்வுக்கு மாற உள்ளனர். இந்திய நடுத்தர வர்கம் மற்றும் கிராப்புற இந்தியர்கள் இணையத்திற்கு ஏன் மற்றும் எப்படி மாற போகின்றனர் என்பது தான் கேள்வி.

கேபிஎம்ஜி நிறுவன பங்குதாரர் மற்றும் நுகர்வோர் சந்தை தலைவர் ஸ்ரீதர் பிரசாத் இது குறித்து சில கருத்துக்களை கொண்டுள்ளார். 

“நான்கு அல்லது ஐந்து விஷயங்களால் இது பல மடங்கான வாய்ப்பாக இருக்கப்போகிறது. அதிக செலவில்லாத டேட்டா திட்டங்கள் மற்றும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களால் கிராமப்புற நுகர்வோர் மத்தியில் உண்டாகும் வேட்கையால் இது வழிநடத்தப்படும்,” என்கிறார் அவர்.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் கிழ் கண்டவை நிகழும் என்கிறார் ஸ்ரீதர்:

• நரகங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தை அணுகுவார்கள்.

• கிராமங்களில் இருந்து குடிபெயரும் தொழிலாளர்கள் உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கத்ததை அணுகுவார்கள்.

• அனைத்து நிறுவன டேட்டா திட்டங்களின் கட்டணம் குறையும்.

• ஸ்மார்ட்போன்கள் விலை ரூ.4,000 க்கும் குறைவாக வரும்.

• நகர்ப்புற இந்தியர்கள் இணையத்தில் கட்டண சேவையை பெறுவார்கள். (அமேசான் பிரைம், பைஜு).

• திருமணம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு இணையத்தை பயன்படுத்திய இந்தியர்கள் உள்ளடக்கத்தை இணையத்தில் தேடுவார்கள்.

• இணையம் சார்ந்த பிராண்ட்கள் உருவாகும். (நுகர்வோர், ஜவுளி மற்றும் மின்னணுத்துறைகளில்).

நுகர்வு ஜனநாயகமயமாதல்

பிரைஸ் வாட்டர்ஸ் கூப்பர்ஸ் தகவல்படி 2010 ல் 75 மில்லியன் பயனாளிகளை கொண்டிருந்த இணையம் 2017ல் 450 மில்லியன் பயனாளிகளை கொண்டதாக வளர்ந்திருக்கிறது. 2020 ல் இது 600 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைய பயன்பாடு அதிகரிப்பது பல புதிய வர்த்தகங்கள் அதன் மூலம் தங்கள் பொருட்கள் மற்றும் சேவையை வழங்க வழி செய்துள்ளது.

பி.டபில்யூ.சி இயக்குனரான சேதன் ஆனந்த், 

“தகவல் தொடர்பு, கல்வி, ஷாப்பிங், பொழுதுபோக்கு, வங்கிச்சேவை உள்ளிட்ட பலவித சேவைகளை இணையம் இந்தியர்களின் கைகளில் அளிக்கத்துவங்கியிருக்கிறது. இது நுகர்வை ஜனநாயகமயாமாக்கி, இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்கிறார்.

நுகர்வு என்பது மின் வணிகம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல், தரவுகள் சார்ந்த மெய்நிகர் சேவைகளாகவும் இருக்கும் என்கிறார் அவர்.

இந்திய மின் வணிகத் துறை, 2010 ல் 4 பில்லியன் டாலராக இருந்தது என்றும் 2017 ல் இதன் மொத்த மதிப்பு 50 பில்லியன் டாலர் என்றும் பிடபிள்யுசி தெரிவிக்கிறது. பி2சி பிரிவிலான வளர்ச்சி இதற்கு அடையாளமாக இருக்கிறது.

“மக்கள் சொத்துக்களை சொந்தமாக கொண்டிருக்க தேவையில்லாத சேவைகளை இணையம் உருவாக்கி இருக்கிறது. உபெர், ஓலா, ஒயே ரூம்ஸ், ஃபிள்ப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் எந்த சொத்தையும் உரிமையாக கொண்டிருக்காமலே மகத்தான வர்த்தகத்தை உருவாக்க முடியும் என உணர்த்தியுள்ளன,” என்கிறார்.

ஐஐடி-பி இயக்குனர் எஸ்.சடகோபன். எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் முன்னணியில் இருப்பதாகவும், இந்திய வர்த்தக நிறுவனங்கள் சர்வதேச மாற்றங்களில் இருந்து கற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இன்னொரு இந்தியாவில் இணையம்

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் ஸ்மார்ட்போன்களே முதன்மை நுகர்வு சாதனமாக இருக்கின்றன: லேப்டாப்கள் இல்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐ.ஏ.எம்.ஏ.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கைபடி கிராமப்புறங்களில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு மற்றும் ஆன்லைன் தகவல் தொடர்பு, சமூக ஊடகங்களுக்காக இணையத்தை பயன்படுத்துகின்றனர். சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இணையம் பல துறைகளில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

• டிரக் டிரைவர்கள்

பாஸ்கர் பொன்னப்பல்லி பெங்களூருக்கு அருகே உள்ள விவசாய நகரமான ஹோஸ்கோட்டில் 10 டிரக்குகள் வைத்துள்ளார் மற்றும் 100 டிரக்குகளின் முகவராக உள்ளார். அவரது வர்த்தகம் ரொக்கம் சார்ந்தது. லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் டிரக் சேவை மற்றும் கார்கோ டெலிவரிக்காக அவரை தொடர்பு கொள்கின்றன. பல அழைப்புகள் வந்தாலும் அவருக்கு எத்தனை டிரக்குகள் இருக்கின்றன என்று தெரிவதில்லை. தன்னிடம் உள்ள 110 டிரக்குகளையும் பயன்படுத்த முடியாமல் அவர் தவிக்கிறார். அதனால் அவர் ஆன்லைனுக்கு வந்திருக்கிறார். லாப் எனும் செயலியை பயன்படுத்துவதன் மூலம் அவரால் தனது வர்த்தகத்திற்கான தேவை மற்று இருப்பை அறிய முடிகிறது.

image


“லாப் மேடையில் உள்ள தேவைக்கேற்ப எனது டிரக்குகளை தொடர்பு கொள்ள முடிகிறது. இது டிரக் பயன்பாட்டை அதிகரித்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. யு.பி.ஐ மூலம் பணமும் அனுப்பி வைக்கிறேன்,” என்கிறார் பவ்யா ரோட்வேஸ் உரியமையாளரான பாஸ்கர்.

தொழில்நுட்ப நிறுவனமான லாப் இவரைப்போன்ற 10,000 டிரக் உரிமையாளர்கள் மற்றும் 200 பிராண்ட்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் அனுபவம் உள்ள வேணு கொடுர் மற்றும் ஜெயராம் ராஜு ஆகியோர் இணைந்து இந்த சேவையை உருவாக்கியுள்ளனர்.

“நாட்டில் சரக்கு போக்குவரத்து வேகமாக இருக்கும் போது தான் ஜிடிபி வளர்ச்சி வேகமாக இருக்கும். தொழில்நுட்பம் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்,”என்கிறார் லாப் இணை நிறுவனரான ஜெயராம் ராஜு.

• உள்ளடக்கம் மீது ஆர்வம்

ஆந்திராவின் குப்பம் சிறிய நகரைச்சேர்ந்த வெங்கடேஷ் குமார் பெங்களூரு விமான நிலையத்தில் டாக்சி டிரைவராக இருக்கிறார். அவர் ஸ்மார்ட்போன் மூலம் அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை வாசிக்கிறார். டெய்லி ஹண்ட் செயலி மூலம் உள்ளூர் செய்திகளை பெறுகிறார். 

“தினமும் இரண்டு முறை விமான நிலையத்தில் இருந்து சவாரி செல்கிறேன். தெலுங்கு மொழியில் தகவல்களை குறைந்தது 5 மணி நேரம் வாசிக்கிறேன்,” என்கிறார் அவர்.
image


”எங்கள் மேடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட அனுபவம் கிடைப்பதை உறுதி செய்கிறோம்,” 

என்கிறார் டெய்லிஹண்ட் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ வீரேந்திர குப்தா. ஸ்மார்ட்போன் சார்ந்த இந்த வகையான நுகர்வு மற்றும் தகவல் தொடர்பு இந்தியா முழுவதும் சிறிய சில்லறை விற்பனை நிலையங்கள் மீதும் தாக்கம் செலுத்த துவங்கியிருக்கிறது.

• சிறிய விற்பனை நிலைய அனுபவம்

நாட்டில் மொத்தம் 12 மில்லியனுக்கு மேற்பட்ட சிறிய கடைகள் உள்ளன என்றும் தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இந்திய ரிடைல் சங்கம் தெரிவிக்கிறது.

பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் வெங்கடேஸ்வரா ஸ்டோர்ஸ் உரிமையாளராக இருக்கும் நான்காம் தலைமுறை சிறிய கடை உரிமையாளரான ரோஷன் ஷெட்டி தனது கடையில் டிஜிட்டல் பி.ஓ.எஸ் வசதியை நிறுவியுள்ளார். அவர் எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்வதோடு, வர்த்தக நிறுவனங்கள் விளம்பரம் செய்ய போட்டி போடும் டிஜிட்டல் டிவியும் வைத்துள்ளார்.

“நீண்ட காலமாக என் குடும்பம் 3 சதவீத நிகர லாபத்தை கொண்டு இயங்கி வந்தது. வாழ்க்கை என்பது சேமிப்பது மற்றும் பொருட்கள் விரிவாக்கத்தில் மீண்டும் முதலீடு செய்வதாக இருந்தது. தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது இணையம் மற்றும் செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் மேம்பட்ட பிராண்ட்களுடன் பணியாற்ற முடிவதோடு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க முடிகிறது. இதன் மூலம் லாபத்தை இரு மடங்காக்கி இருக்கிறோம்,” என்கிறார் ரோஷன்.

“உள்ளூர் மக்கள் தேவைகளை நிறைவேற்றி வரும், எங்கும் காணக்கூடிய பெட்டிக்கடை அல்லது சிறிய மளிகைக்கடை தினசரி செயல்பாடுகளுக்கு கால்குலேட்டரில் இருந்து கிளவுட் சேவைக்கு தாவியிருக்கிறது,”

என்கிறார் ஸ்னாப்பிஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓவான பிரேம் குமார். 10 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள ஸ்னேப்பிஸ் 3000 மளிகைக்கடைகளை கிளவுட் சேவைக்குள் கொண்டு வந்துள்ளது.

சிறிய கடைகள் தொழில்நுட்பத்தை தழுவிக்கொள்வதன் மூலம் சப்ளை சங்கிலியை தானியங்கி மயமாக்கி வாடிக்கையாளர் தொடர்பை மேம்படுத்தியுள்ளன. பாரம்பரிய அமைப்பிற்குள் எஸ்.எம்.எஸ் மற்றும் எல்.இ.டி திரை போன்ற டிஜிட்டல் கருவிகள் வாடிக்கையாளர் மற்றும் விற்பனை மீது தாக்கம் செலுத்தி வருகின்றன. மளிகை கடைகள் விர்ச்சுவல் சூப்பர் மார்க்கெட்களாக மாறி வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கின்றன.

நகர்புற இந்தியாவில் உள்ள 600 மளிகைக்கடைகளில் ஸ்னேப்பிஸ் நடத்திய ஆய்வு படி, பாதிக்கு மேற்பட்ட கடைகள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் சேவை தொடர்பான தகவல்களை வழங்குகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகளில் 53 சதவீதம் தனிப்பட்ட செய்திகளாக இருக்கின்றன. மும்பையில் மட்டும் 5 லட்சம் செய்திகளுக்கு மேல் வாடிக்கையாளர்களுடன் பகிரப்பட்டுள்ளன. தனிப்பட்ட செய்திகள் மற்றும் காட்சிரீதியான சேவைகள் மூலம் பல கடைகள் விற்பனை அதிகரித்திருப்பதை உணர்ந்துள்ளன. 23 சதவீதத்திற்கு மேலான கடைக்காரர்கள் வழக்கமான பரிவர்த்தனைகளை மீறி வாடிக்கையாளர்களுடன் எஸ்.எம்.எஸ் மற்றும் கடை சார்ந்த செய்திகள் மூலம் உரையாடுகின்றன.

“டிஜிட்டல் இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய சேவை, பிரமிட்டின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில் திறன் மேம்பாடு உள்ளிட்ட பரவலான மாற்றங்களோடு, புதிய தலைமுறை புதுமையான அணுகுமுறையோடு வர்த்தக்கத்தில் நுழைவதை கடைகளில் பார்க்க முடிகிறது,” என்கிறார் பிரேம் குமார்.

• கல்விக்கான வழி

கேபிஎம்ஜியின் ஸ்ரீதர் பிரசாத், 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் உள்ளடக்கத்தை நுக்ரவதாக தெரிவிக்கிறார். ஆய்வுகளும் இதை நிருபிக்கின்றன.

கூகுள் மற்றும் கேபிஎம்ஜி நடத்திய ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது:

• இன்று 247 மில்லியன் டாலராக இருக்கும் ஆன்லைன் கல்வி 2021 ல் 1.96 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

• 20121 ல் 280 மில்லியன் குழந்தைகள் பள்ளிகளில் சேர உள்ளன. பெற்றோர்கள் டிஜிட்டல் சேவைகளை விரும்பும் நிலையில் இது 39 சதவீத சந்தையை அளிக்க கூடியதாக இருக்கிறது.

• ஆன்லைன் ரிஸ்கில்லிங் இந்தியாவில் 38 சதவீத சந்தையை பெற உள்ளது.

“கல்வி என்பது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகியவை இணைந்ததாக இருக்கிறது என்கிறார் மனிபால் எஜுகேஷன் தலைவர் மோகன்தாஸ் பை.

• விவசாயத்தில் தொழில்நுட்பம்

தமிழகத்தின் வெப்பம் மிகுந்த திருநெல்வேலியில் பெஞ்சமின் ராஜா, தனது 100 ஏக்கர் பண்னையில் சரியான அளவு நீர் மற்றும் சரியான அளவு உரம் பயிர்களுக்கு கிடைக்க தினமும் 14 மணி நேரம் கடினமாக உழைக்கிறார். பெங்களுரூ போன்ற நகரங்களில் உள்ள கடைகளுக்காக அவர் காய்கறிகள் மற்றும் பழங்களை பயிர் செய்கிறார். ஐ.ஒ.டி சாதனங்கள் மூலம் அவர் ஆறு ஏக்கர் நிலத்தில் தர்பூசனி சாகுபடியை ஏக்கருக்கு 2 டன் கொண்டதாக உயர்த்தியிருக்கிறார்.

“மகசூலை அதிகரிக்கும் வகையில் வலைப்பின்னல்களை பயன்படுத்தி பயிர் செய்யப்படும் அமைப்பு மற்றும் மண் நிலை தொடர்பான தகவல்களை பெறுகிறேன்” என்கிறார் பார்ம் எகைனின் பெஞ்சமின் ராஜா. இந்தியா முழுவதும் உள்ள 5,000 ஏக்கர் பண்ணைகளை ஒருங்கிணைத்துள்ளவர் விவசாயிகளிடம் இருந்து பயிர் தகவல்களை பெற்று பயிர், உரமிடுதல், சந்தை தொடர்பு ஆகியவை குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார். ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குழுமத்திற்கு பொருட்களை சப்ளை செய்கிறார்.

• மின்வணிகம், பண பரிவர்த்தனை மற்றும் பங்கு வணிகம்

சில்லறை பங்கு பரிவர்த்தனையை ஜனநாயகமயமாக்கும் வகையுல் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தை டகு குமார் மற்றும் ரவி குமார், ஸ்ரீனிவாஸ் விஸ்வநாத் ஆகியோர் துவக்கியுள்ளனர்.

“அமெரிக்காவை விட மாறுபட்ட வழியில் இந்தியா வளர்ச்சி அடைய உள்ளது. அமெரிக்காவில் பொருளாதாரம் முதலில் செழிப்படைந்த பிறகு இணையம் அதற்கு புதிய ஆற்றல் அளித்தது. இந்தியாவில் இணைய செழிப்பு முதலில் உண்டாகி அதன் பிறகு பொருளாதார செழிப்பு ஏற்பட உள்ளது,” என்கிறார் ஸ்ரீனிவாஸ்.

இந்தியாவில் பண பரிவர்த்தனை சேவைகளில் பாய்ச்சல் நிகழந்துள்ளது. யார் வேண்டுமானலும் அரசு சார்ந்த சேவைகள் மூலம் உடனடியாக பணம் அனுப்ப முடியும். அமெரிக்காவில் பண பரிவர்த்தனைக்கு இன்னும் சில நாட்கள் ஆகின்றது. அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளில் அதிகம் கவனம் செலுத்தப்படும் நிலையில் இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது.

“நாம் அதிக எண்ணிக்கையில் குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைக்கு இணயத்தை பயன்படுத்துகிறோம். கதை வேறுபட்டாலும் வளர்ச்சி ஒன்று தான். பொருளாதார வளர்ச்சி எண்களை பாருங்கள்,” என்கிறார் ஸ்ரீனிவாஸ்.

அப்ஸ்டாக்ஸ் இரண்டாம் கட்ட நகரங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

“முதல் அல்லது இரண்டாவது வேலையில் இருக்கும் இளைஞர்களில் பலர் வெளிநாட்டு பயணம் அல்லது ஆடம்பர பொருட்களை வாங்க விரும்புகின்றனர். அவர்களை பொருத்தவரை வழக்கமான சேமிப்பு முறைகளான தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஈர்ப்புடையதாக இல்லை,” என்கிறார் ஸ்ரீனிவாஸ்.

நாட்டின் எல்லா பகுதிகளிலும் இணைய வசதி இருப்பதால் எல்லோரும் தில்லி அல்லது மும்பையில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதால் எங்கும் சந்தை வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆக, அமேசன் இந்தியா நாட்டின் குக்கிராமத்தில் கூட சேவை அளிப்பதில் வியப்பில்லை.

“லே-லடாக், திரிபுரா, ஜர்கண்ட் மற்றும் மேகாலயாவில் எங்கள் சொந்த டெலிவரி சேவையை துவக்கியிருக்கிறோம். இந்த பகுதிகளில் உள்ளவர்கள் அமேசான் போன்ற நிறுவனங்களின் நம்பகமான மற்றும் வேகமான சேவையை பெறுவதை இது உறுதி செய்யும். பிரைம் உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்பட இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் அதிக வளர்ச்சியை காண்கிறோம்,” என்கிறார் இந்தியா கஸ்டமர் புல்பில்மண்ட், அமேசான் இந்தியா, துணைத்தலைவர் அகில் சக்சேனா.

அமேசானின் இந்த டெலிவரி வலைப்பின்னல் வளர்ச்சி, உள்ளூர் தொழில்முனைவோர்கள் அமேசானின் ஐ ஹேவ் ஸ்மேப் மற்றும் பங்குதாரர் திட்டங்கள் மூலம் வர்த்தக வாய்ப்பை பெருக்கி கொள்ள உதவும். அமேசான் ஏற்கனவே 5,000 ஐஎச்.எஸ் பங்குதாரர்கள் மற்றும் 100 சேவை பங்குதாரர்களை பெற்றுள்ளது.

பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான மாதிரியாக சேவை பங்குதாரர் திட்டம் அமைகிறது. இதன் கீழ் உள்ளூர் தொழில்முனைவோர் அமேசானின் விநியோகிஸ்தராக செயல்படுகிறார். அகர்தலா, நாகர்கோவில், ஷில்லாங், போர்பந்தர், ஜின்ந், பிலாய் உள்பட பல இடங்களில் நாடு முழுவதும் 350 சேவை பங்குதாரர்களை நிறுவனம் பெற்றுள்ளது.

மீண்டும் நகரங்களுக்கு திரும்பினால் வாடிக்கையாளர்கள் கடைகளில் சுய சேவை பரிவர்த்தனைக்காக பெர்பியூல் மறும் பிளுரே உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துகின்றனர். இது போன்ற டிஜிட்டல் சேவைகள் விரைவில் கிராமப்புறங்களுக்கும் செல்லும். உதாரணத்திற்கு பெர்பியூல் தனது சேவியை யூபிஐ சேவையுடன் ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்காமல் சேவை பெறலாம். ஹைபர்சிட்டி போன்ற இடங்களில் 6,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர்.

ஜிடிபி 7.2 சதவிதமாக வளரும் நிலையில் நுகர்வு அதிகரிக்க உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் பரப்பு அதிகரிக்கும் சூழலில் புதிய வாடிக்கையாளர்களை கவர்வதில் இணையம் முக்கிய பங்காற்றும். 90 மில்லியன் இணையம் சார்ந்த வாடிக்கையாளர்களை பெற 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள் இதைவிட இரு மடங்கு எண்ணிக்கையை அடையலாம். அதோடு 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களை சென்றடையலாம்.

“இவை அனைத்தும் வளர்ச்சிக்கு ஆதரவான நல்ல நிர்வாகம் தேவை. வருமானம் அதிகரித்தால் இந்தியாவில் இணைய வர்த்தகம் வெற்றி பெறும். இந்தியா பெளதீக மற்றும் இணைய சூழலில் வளர்ச்சி பெறும்,” என்கிறார் மோகன்தாஸ் பை.

விஷால் கிருஷ்ணா. தமிழில் சைபர்சிம்மன் 

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக