பதிப்புகளில்

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காற்று சுத்திகரிக்கும் சாதனம்!

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் தயாரித்துள்ள இந்த ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான், காற்று மாசு சார்ந்த உயிரிழப்புகளை வருங்காலத்தில் வெகுவாக தடுக்கும்.

29th Nov 2018
Add to
Shares
709
Comments
Share This
Add to
Shares
709
Comments
Share

காற்று மாசு மெல்ல மெல்ல உயிர்களைக் கொல்லக்கூடியது. ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினர் காற்று மாசு காரணமாக உயிரிழக்கின்றனர். 2015-ம் ஆண்டு இந்தியாவில் 2.51 மில்லியன் உயிரிழப்புகளுடன் மாசு சார்ந்த உயிரிழப்புகளில் இந்தியா முதலிடத்தில் இருந்ததாக லான்செட் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய அபாயகரமான சூழல் நாட்டின் தலைநகரில் மட்டும் காணப்படவில்லை. உலகில் அதிகமாக மாசுபட்டிருக்கும் பத்து நகரங்களில் ஆறு நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்ததாகும்.

ஐஐடி மெட்ராஸால் இன்குபேட் செய்யப்பட்ட ’ஏர்ஓகே’ (AirOK) ஸ்டார்ட் அப் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான Vistar 550-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தீக்‌ஷித் வர பிரசாத், யாசா பவன் ரெட்டி, வனம் ஸ்ரவன் கிருஷ்ணா ஆகிய மூன்று ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களும் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஸ்டார்ட் அப் காற்று சுத்திகரிப்பானை தயாரிக்கிறது. இந்நிறுவனம் பயன்படுத்தும் தொழில்நுட்பமானது முக்கிய மாசுகள் மற்றும் வாயுப் பொருட்களை வடிகட்டக்கூடியதாகும். இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை நிலுவையில் உள்ளது.

image


முதல் முறையாக அறிமுகமாகும் இந்த வகையான தொழில்நுட்பம் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும். வணிகங்களில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஹெல்த்கேர், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல், ஐடி போன்ற பகுதிகளில் ஏர்ஓகே நிறுவனம் காற்று சுத்திகரிப்பானை விநியோகித்து வருகிறது. டெல்லியில் உள்ள வீடுகளுக்கும் சில யூனிட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஏர்ஓகே சுத்திகரிப்பான் செயல்பாடுகள்

AirOK 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பி2பி பிரிவிற்கான ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான் Vistar 550-ஐ அறிமுகப்படுத்தியது. EGAPA பயன்படுத்தி இந்த சுத்திகரிப்பான் துகள்கள், நுண்ணுயிரிகள், பூஞ்சை, வாயுக்கள் (கார்பன் மோனாக்ஸைட், நைட்ரஜன் டயாக்சைட், சல்ஃபர் டயாக்சைட்) போன்றவற்றை வடிகட்டிவிடுகிறது. இவ்வாறு வெவ்வேறு மாசு வகைகளை வடிகட்டக்கூடிய ஒரே சுத்திகைப்பான் இது மட்டுமே என்கின்றனர் இந்நிறுவனர்கள்.

550 சதுர அடி பரப்பளவு வரை Vistar 550 செயல்படுகிறது. ஆனால் ஏர்ஓகே அதிகமான பகுதிகளுக்கும் தனித்தேவைக்கேற்றவாறு தீர்வளிக்கிறது. Vistar சுத்தமான காற்றை வழங்கும் விகிதம் (CADR) மணிக்கு 480 m3 ஆகும். இது சந்தையில் வழக்கமாக கிடைக்கும் காற்று சுத்திகரிப்பான்களைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் சுத்திகரிப்பான்களில் HEPA வடிகட்டிகள் ஆண்டிற்கு இரு முறை மாற்றப்படவேண்டும். அத்துடன் ஒப்பிடுகையில் ஏர்ஓகே வடிகட்டி ஓராண்டு வரை நீடிக்கும்.

இந்த தயாரிப்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. 

“இந்த சுத்திகரிப்பான் குழந்தைகள் தீவிர பராமரிப்பு பிரிவில் காணப்படும் காற்றில் பரவக்கூடிய பாக்டீரியவை திறம்பட நீக்குகிறது,” என மருத்துவமனை உறுதிசெய்துள்ளது. 

பெங்களூருவில் உள்ள ஸ்ரீராம் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த தயாரிப்பு சோதனை செய்யப்பட்ட பிறகு சந்தையில் அறிமுகமாக தயாரானது. 

ஏர்ஓகே தயாரிப்பு சந்தையில் அறிமுகமாவதற்கு முன்பே சென்னை தூர்தர்ஷன் கேந்திரா அதன் சர்வர் அறையில் உள்ள மாசைக் கட்டுப்படுத்த இந்நிறுவனத்தை அணுகியது. தற்போது தூர்தர்ஷனில் இருந்து ஏர்ஓகே நிறுவனத்திற்கு தொடர் ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கிறது.

”நாங்கள் இதுவரை 120 யூனிட்கள் விற்பனை செய்துள்ளோம்,” என்றார் தீக்‌ஷித். Vistar 550 ஆன்லைனிலும் கிடைக்கிறது.

”நாங்கள் எங்களது காற்று சுத்திகரிப்பானை கார் உற்பத்தி நிறுவனத்திடம் கொடுத்து சோதனை செய்தோம்,” என்றார். காற்றை சுத்திகரிக்கும் சாதனம் கார் உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் கார்களின் உள்ளேயே இணைக்கப்பட்டிருக்கும். சமையலறையில் இருக்கும் காற்றின் தரத்தை சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் ஏர்ஓகே மாசு நிறைந்த பொதுவெளியில் காணப்படும் காற்று மாசு பிரச்சனைக்கு தீர்வளிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

”நாங்கள் முக்கியமாக டெல்லியில் செயல்படுகிறோம்,” என்கிறார் பவண். இவர் ஏர்ஓகே நிறுவனத்தின் மார்க்கெட்டிங் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கிறார். டெல்லியில் நடைபெற்ற கண்காட்சி, நிகழ்வுகள் போன்றவற்றில் ஏர்ஓகே தயாரிப்பு பலத்த வரவேற்பைப் பெற்றது. 

அறிமுகம் செய்யப்பட்ட பிறகு டெல்லியில் விற்பனை சிறப்பாக உள்ளது. க்ளீன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து Livpure ப்ராண்டினை வழங்கும் SAR க்ரூப் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏர்ஓகே நிறுவனத்தில் 2 மில்லியன் டாலர் மூதலீடு செய்தது.

image


உள்நாட்டு ஸ்டார்ட் அப்

ஐஐடி மெட்ராஸில் உள்ள சுற்றுச்சூழல் பொறியியல் துறைதான் இந்த மூன்று நிறுவனர்களின் யோசனைக்கு வித்திட்டது. மூவரும் காற்று மாசு தொடர்பான வெவ்வேறு திட்டங்களில் பணியாற்றினர். 

”காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப தீர்வுகளை ஆராய்ந்தபோது அனைத்து மாசையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே தொழில்நுட்பத்தை உருவாக்க விரும்பினோம்,” என்றார் தீக்‌ஷித்.

ஸ்ரவனின் முதுகலை பட்டப்படிப்பிற்கான திட்டம் ஒரு முன்வடிவமாக உருவாக்கப்பட்டது. இதனை ஒரு ப்ராடக்டாக உருவாக்க ஐஐடி-மெட்ராஸ் இன்குபேஷன் செல் அங்கீகரித்தது.

நிறுவனர்கள் 18 மாதங்களில் மூன்று முன்வடிவங்களை உருவாக்கினர். ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் சீட் நிதியாக 5 லட்ச ரூபாய் முதலீடு செய்து வளர்ச்சியை மதிப்பீடு செய்தது. மூவரும் ஒரு முன்வடிவத்தை உருவாக்க சீட் நிதியைப் பயன்படுத்தியபோது இந்த ஸ்டார்ட் அப் ஐஐடி-எம் முன்னாள் உறுப்பினர்கள் நிதி வாயிலாக குறைந்த வட்டி விகிதத்தில் 30 லட்ச ரூபாய் கடன் பெற இன்குபேஷன் செல் உதவியது. இந்தத் தொகையைக் கொண்டு தீக்‌ஷித், பவன் மற்றும் ஸ்ரவன் வணிகரீதியான முன்வடிவத்தை உருவாக்கினர். 

“வடிவமைப்பை கட்டமைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்றார் தீக்‌ஷித்.

ஆர் & டி செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கும் ஸ்ரவன் மாசு அளவை மதிப்பிட ஒரு தனித்துவமான உணர்கருவி சார்ந்த வடிவமைப்பை உருவாக்கினார். இது மாசு அளவைப் பொருத்து சாதனத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யும். சுத்திகரிப்பான் வட்ட வடிவில் இருப்பதால் 360 டிகிரி செயல்படும்.

உலகம் முழுவதையும் காற்றை நச்சு மற்றும் மாசுப் பொருட்களில் இருந்து பாதுகாக்கும் கனவுடன் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஸ்டார்ட் அப்பின் பணிகள் துவங்கப்பட்டது. காற்று மாசு தொழில்நுட்பங்களில் இந்திய-ஜெர்மானிய திட்டத்தில் பணியாற்றிய பிறகு தீக்‌ஷிட் ஸ்டார்ட் அப் பணியைத் துவங்கினார். அவர் கூறுகையில், 

“பி-டெக் முடித்ததும் திட்டத்தில் இணைந்தேன். மற்றவர்கள் ஈடுபடும் செயலையே நானும் பின்பற்ற விரும்பவில்லை. எனது செயல்பாடுகளை வேறுபடுத்திக்காட்ட விரும்பினேன். சுயமாக முயற்சி செய்ய இரண்டாண்டுகள் அவகாசம் அளிக்குமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொண்டேன்,” என்றார்.
image


சந்தை மற்றும் எதிர்காலம்

வாழ்க்கைமுறை மேம்படுத்தப்பட்டு காற்று மாசு மோசமடைவதால் காற்று சுத்திகரிப்பான் சந்தை வளர்ச்சியடைந்து வருவதாக சந்தை ஆய்வு நிறுவனமான ReportLinker அறிக்கை தெரிவிக்கிறது. 

“பணப்புழக்கம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஆராயும் போக்கு போன்றவை அதிகரித்திருப்பதாலும் காற்று சுத்திகரிப்பானின் விலை மிகவும் குறைந்துள்ளதாலும் சந்தையில் வளர்ச்சி அதிகரித்துள்ளது,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதனின் ஆரோக்கியத்தில் உட்புற மாசு மற்றும் வெளிப்புற மாசு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் நுகர்வோர் விழிப்புணர்வும் அதிகரித்திருப்பதால் இந்தியாவில் காற்று சுத்திகரிப்பான்களின் சந்தை 2021-ம் ஆண்டில் 209 மில்லியன் டாலரை எட்டும் என மதிப்பிடப்படுவதாக TehchSci ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 2018-2024 ஆண்டுகளிடையே காற்று சுத்திகரிப்பான் விற்பனை 24 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ப்ளூவேவ் கன்சல்டிங் தெரிவிக்கிறது.

அமேசான் இண்டியா 2015-ம் ஆண்டு காற்று சுத்திகரிப்பான் சாதனங்களை ஆன்லைனில் டெலிவர் செய்யத் துவங்கியது. ஹனிவெல், ஃபிலிப்ஸ், கெண்ட், எல்ஜி, ஷார்ப், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஹேவல்ஸ், Mi, உஷா ஸ்ரீராம் போன்றவை இந்திய சந்தையில் செயல்படும் ப்ராண்டுகளாகும். Crusaders, Dyson, Purita போன்றவை மற்ற உள்நாட்டு ப்ராண்டுகளாகும். எனினும் இந்த ப்ராண்டுகள் அனைத்திலும் ஏர்ஓகே போலல்லாமல் HEPA வடிகட்டிகளே பயன்படுத்தப்படுகிறது.

தற்சமயம் காற்று மாசு பிரச்சனையைக் கையாளும் வெவ்வேறு தயாரிப்புகள் ஏர்ஓகே ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்டார்ட் அப் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட காற்று மாசு தொடர்பான தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது. 

சீனாவில் உள்ளது போல் இந்தியாவிலும் பொது இடங்களில் மிகப்பெரிய காற்று சுத்திகரிப்பானை வைப்பது தொடர்பான பணிகளில் இணை நிறுவனர்கள் ஈடுபட்டுள்ளனர். 

”மக்கள் காற்று மாசு பிரச்சனைக்கு தீர்வு காணவும் மாசில்லா வாழ்க்கை வாழவும் உதவவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்றார் தீக்ஷித்.

ஆங்கில கட்டுரையாளர் : வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
709
Comments
Share This
Add to
Shares
709
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக