பதிப்புகளில்

ஸ்வெட்டர் பின்னி உலகப் புகழ் பெற்ற அமெரிக்கர்!

cyber simman
29th Apr 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ஸ்வெட்டர் பின்னும் பழக்கம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரண்டுக்கும் புதிய மவுஸ் ஏற்படுத்தி தந்திருக்கிறார் அமெரிக்கரான சாம் பார்ஸ்கி. இதன் மூலம் இணையம் அறிந்த மனிதராகி இருக்கிறார்.

image


பார்ஸ்கி இப்போது ஸ்வெட்டர்காரர் அல்லது ஸ்வெட்டர் மனிதராக அறியப்படுகிறார். அவருக்கு என ஒரு இணையதளம் இருக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனி பக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் பார்ஸ்கி ஸ்வெட்டருடன் வெளியிடும் செல்பி படங்களை தான் இணையவாசிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே அவர் எடுத்து வெளியிட்ட படங்கள் இணையம் முழுவதும் ரசிக்கப்படுகிறது.

இணைய புகழை சிறிதும் எதிர்பாராத பார்ஸ்கி, தனது ஸ்வெட்டர் ஆர்வத்தை வர்த்தக நோக்கில் விரிவாக்குவது பற்றியும் தொழில்முனைவு தன்மையோடு யோசித்து வருகிறார். இவை எதுவுமே திட்டமிடாமல் நிகழ்ந்திருக்கின்றன. எல்லாவற்றுக்குமே அவரது ஸ்வெட்டர் பின்னும் ஆர்வம் தான் அடிப்படை.

ஸ்வெட்டர் பின்னும் கலையில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பார்ஸ்கி மட்டும் இதில் தனித்து விளங்கக் காரணம் இல்லாமல் இல்லை. அவர் ஸ்வெட்டர் பின்னுவதை பொழுதுபோக்காக மேற்கொண்டு வந்தாலும், அதன் வடிவமைப்பில் சின்னதாக ஒரு புதுமையை புகுத்தியிருந்தார். 

உலக புகழ் பெற்ற நினைவு சின்னங்கள் போலவே தோற்றம் அளிக்கும் ஸ்வெட்டர்களை உருவாக்குவது தான் அவரது ஸ்டைல். பாரீஸ் நகர் ஈபிள் கோபுரம், நயாக்ரா நீர்விழுச்சி, ஹாலிவுட் நினைவுச்சின்னம் ஆகியவற்றின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் ஸ்வெட்டர்களை அவர் உருவாக்குகிறார். இப்படி பிரபல நினைவுச்சின்னங்கள் போலவே தோற்றம் தரும் ஸ்வெட்டர்களை உருவாக்கவதோடு நின்றுவிடாமல், அந்த ஸ்வெட்டர் அணிந்து கொண்டு, குறிபிட்ட நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்கே நேரில் சென்று, அங்கு படம் எடுத்துக்கொள்வதும் அவரது பழக்கமாக இருக்கிறது.

இப்படி, பிரபல இடங்களில் அதன் அடையாளமாகக் கருதப்படும் நினைவு சின்னத்தை ஸ்வெட்டராக அணிந்து எடுத்துகொண்ட படங்களே அவரை இணையத்தில் பிரலபலாக்கி இருக்கிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் அல்லது சின்னங்கள் தொடர்பான ஸ்வெட்டர்களை உருவாக்கி, அந்த இடங்களில் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

image


பார்ஸ்கியின் செல்பி புதுமையாக தான் இருக்கிறது அல்லவா? 

சுற்றுலா செல்லும் இடங்களில் செல்பி எடுத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது பலருக்கும் இயல்பாக இருக்கிறது. பார்ஸ்கியும் இதை தான் செய்கிறார் என்றாலும், புகழ் பெற்ற இடங்களில் அங்குள்ள நினைவுச்சின்னத்தை ஸ்வெட்டரில் அமைத்துக்கொண்டு போஸ் கொடுப்பது அவரது பாணியாக இருக்கிறது.

ஆனால், ஏற்கனவே சொன்னது போல பார்ஸ்கி இதை திட்டமிட்டு செய்யவில்லை. கடந்த 1999 ம் ஆண்டு அவருக்கு ஸ்வெட்டர்கள் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. உள்ளூர் விற்பனை நிலையம் ஒன்றில், ஸ்வெட்டர் பின்னப்படுவதை பார்த்து, அதை கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார். நீங்கள் எங்களிடம் ஸ்வெட்டருக்கான நூல் வாங்க ஒப்புக்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையுடன் அவர்கள் பார்ஸ்கிக்கு கற்றுத்தர முன்வந்தனர்.

ஆனால் கற்றுக்கொண்ட கலையை அவர் விட்டுவிடவில்லை. அன்றிலிருந்து தொடர்ந்து ஈடுபாட்டுடன் ஸ்வெட்டர் உருவாக்கி வருகிறார். ஆரம்பத்தில் வழக்கமான வடிவமைப்பில் ஸ்வெட்டர்களை அமைத்தவர் கொஞ்சம் சவாலாக இருக்கட்டுமே எனும் உணர்வில் ஈபிள் கோபுரம் போன்ற பிரபலமான இடங்களை சித்தரிக்கும் வகையில் ஸ்வெட்டரை உருவாக்க முற்பட்டார். இதற்காக ஒரு மாத காலத்திற்கும் மேலாக மெனக்கெட வேண்டியிருந்தது.

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று போஸ் கொடுத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக ஏற்பட்டிருக்கிறது. இது கொஞ்சம் செலவு பிடிக்கும் பழக்கம் என்பதால் சரியாக திட்டமிட்டு பயணங்களுக்கான ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொரு இடத்திற்கான ஸ்வெட்டரை உருவாக்கி அங்கு சென்று படம் எடுத்துக்கொண்டு வந்தார்.

ஆனால், இந்த படங்களை எல்லாம் இணையத்தில் பகிர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஃபேஸ்புக்கில் ஸ்வெட்டர் ஆர்வலர்களின் குழுக்கள் இருப்பதை பார்த்து தானும் ஒரு பக்கத்தை உருவாக்கி ஸ்வெட்டர் படங்களை பகிர்ந்து கொண்டார். அந்த படங்களில் இருந்த புதுமை ஸ்வெட்டர் ஆர்வலர்களை கவரவே ஃபேஸ்புக்கில் அவரது வாழ்த்துக்கள் குவியத்துவங்கின. இதனால் உற்சாகம் அடைந்தவர் தொடர்ந்து மற்ற ஸ்வெட்டர் படங்களை பகிரத்துவங்கினார். 

லண்டன் கோபுரம் போன்ற இடங்களில் அந்த கோபுர வடிவிலான ஸ்வெட்டரை அணிந்தபடி அவர் போஸ் கொடுப்பது காண்பவர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. நினைவு சின்னங்கள் மட்டும் அல்ல மின் கம்பங்கள் போன்ற சாதாரண பொருட்கள் போலவும் ஸ்வெட்டர் உருவாக்கி அதன் முன் அவர் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். சில இடங்களில் மனைவியுடனும் இணைந்து படம் எடுத்துக்கொள்வது அவரது வழக்கம்.

image


இதனிடையே சமூக வலைப்பின்னல் செய்தி தளமான ரெட்டிட் தளத்தில் இது பற்றிய குறிப்பு வெளியாக, அவரது படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தன. அதன் பிறகு, இந்த புதுமை முயற்சி பற்றி டைம் பத்திரிகை, பாக்ச் நியூஸ் உள்ளிட்ட செய்தி தளங்கள் அவரிடம் பேட்டி கண்டு செய்தி வெளியிட அவர் மேலும் பிரபலமாகி விட்டார்.

பொழுதுபோக்காக மேற்கொண்ட ஒரு பழக்கம் பார்ஸ்கியை உலகம் முழுவதும் அறிய வைத்திருக்கிறது. பார்ஸ்கியும் உற்சாகமாகி ஸ்வெட்டர் பின்னும் கலை தொடர்பாக வகுப்பெடுக்க அல்லது ஸ்வெட்டர் செல்பிக்கள் எடுத்துக்கொள்ளும் அனுபவம் தொடர்பாக உரை நிகழ்த்த தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். 

கையால கஷ்டப்பட்டு உருவாக்கும் ஸ்வெட்டர்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருவது பற்றியும் யோசித்து வருவதாக தனது இணையதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பார்ஸ்கியின் இணையதளம்: https://www.sambarsky.com/

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags