பதிப்புகளில்

'நண்பர்கள் திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் போனார்கள்': 'இந்தியா பிளாஸா' வைத்தீஸ்வரன் உருக்கம்!

கீட்சவன்
13th Nov 2015
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

கடந்த 2013 செப்டம்பரில் ஒரு நள்ளிரவுக்குப் பின் இரண்டு மணியளவில் என் செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. என் நிறுவனம் தர வேண்டிய நிலுவைத் தொகைக்காக, ஓய்வின்றி இடைவிடாது அழைத்துக்கொண்டிருந்தனர் கடன் அளித்தவர்கள். என் நிறுவனத்தில் மற்ற இயக்குநர்களும் முதலீட்டாளர்களும் கூட இருந்தனர். ஆயினும், எல்லாம் இறங்குமுகம் கண்டபோது நான் மட்டுமே தனித்து விடப்பட்டேன். சுமார் 18 மாதங்களுக்கு முன்பு, என்னால் தாங்க முடியாத பாரத்தை சுமந்திருந்தேன்.

image


முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில், தாங்கள் தொடர்புகொண்டிருந்த நபர்களில் ஒருவராகவே கருதப்பட்டு கடந்துபோகும் விஷயமாகவே இருந்தேன். என் 'நண்பர்கள்' என்போர் (முதலீட்டாளர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனக்குத் தெரிந்தவர்கள்) எல்லாருமே திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் பயணத்திலோ அல்லது பிஸியாகவோ இருந்தனர். சிலர் இன்னமும் பயணக்கிறார்கள் போலும்...

சற்று பின்னோக்கிப் பார்த்தால், எனது 14 ஆண்டு கால முன்னோடி முயற்சிகள் வெளியே பேசப்படவில்லை. இன்றோ இ-காமர்ஸ் அலையில் எனது நிறுவனம் பயணிக்கவில்லை. சில விஷயங்களுக்கு அர்த்தம் பிடிபடுவதில்லை. இ-காமர்ஸ் என்றால் எவருக்குமே தெரியாத காலகட்டத்தில், நாங்கள் இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

முதல் முறையாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எதிலுமே கற்றுக்கொள்ளும் விஷயங்கள் கடினமாதாகவே அமையும்; யாருமே முன்னர் பயணிக்காத பாதையில் நாங்கள் முதல் அடி எடுத்துவைத்தோம். அந்த வழிகளைச் சிரமப்பட்டு எளிதாக்கியதால், அதை அப்படியே எளிதாகக் கற்றுக்கொண்டும், பின்பற்றியும் பலரும் முன்னெறிச் செல்கின்றனர்.

ஒரு தொழில்முனைவராக நான் தீரா மோகம் கொண்டவன். தொழில்முனைவு மீது உங்களுக்கு நாட்டம் வந்துவிட்டால், எந்தச் சூழலிலும் வழக்கமான வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். புதிய கண்டறிதலிலும் படிப்பினைகளிலும் உள்ள திருப்தியான மகிழ்ச்சியை எந்த ஒரு கார்ப்பாரேட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் பெற்றிட முடியாது.

என் தொழில் வாழ்க்கையில் மூன்றாம் ஆண்டில் இருந்து ஸ்டார்ட்அப்-களுடன் தொடர்பில் இருக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. ஒரு மிகப் பெரிய குழுமமான முருகப்பா குரூப்-பில் 1985-ம் ஆண்டு கிடைத்தது முதல் வேலை. எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் முதல் ஊழியர்கள் சிலரில் ஒருவனாகவே அங்கு சேர்ந்தேன்.

அடுத்து, சோப்புகள் மற்றும் கணினித் தொழிலில் ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்குக் குறையாமல் விப்ரோ கொண்டிருந்த காலத்தில், அந்நிறுவனத்தில் 1989-ல் சேர்ந்தேன். பாகங்கள் பிரிவில் முதலில் சேர்ந்த பணியாளர்களில் ஒருவர் என்பதால், அங்கும் ஸ்டார்ட்அப் அனுபவம் கிட்டியது.

ஆரம்பகட்டத்தில் இவ்விரு குழுமங்கள் மூலமும் மக்கள் பிரச்சனை, விற்பனைகள், சந்தைப்படுத்துதல், செயல்படுத்துதல் என பல பாடங்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே, நான் ஒரு தொழில்முனைவர் ஆனபோது பெரிதும் துணைபுரிந்தது.

1997-ல் பல்வேறு இடங்களில் உள்ள மக்களிடமும் தொடர்பில் இருக்கக் கூடிய விப்ரோவின் சிறப்புத் திட்டம் ஒன்றில் பணிக்கப்பட்டேன். அப்போது, எனக்கு இலவச ஹாட்மெயில் கணக்கு கிடைத்தது. எனக்கு முதல் முறையாக இ-மெயில் அறிமுகமானது. என் இ-மெயில் கணக்கைப் பார்க்கும்போது, புத்தகங்களை விற்கும் அமேசான் டாட் காம் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன்.

இந்தியாவில் உள்ள புத்தங்களை அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று விற்பனை செய்வதைக் கண்டு வியந்துபோனேன். புதிதாக சவால் நிறைந்ததும் வித்தியாசமானதுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த சமயம் அது. (எந்தச் சூழலிலும் வேறொரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேருவது என்பது எனக்குப் பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்திருந்தேன்.) மிக முக்கியமான தருணம் அது. - அதைப் போலவே இந்தியாவிலும் ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். இந்தியாவில் இ-காமர்ஸ் என்பது மிகப் பெரிய இடத்தைப் பிடித்துவிடும் என்று சட்டென என் உள்ளுணர்வு ஏன் அப்போது சொன்னது என்பது தெரியவில்லை. அப்படித்தான் ஃபாப்மார்ட் (Fabmart), ஃபாப்மால் (Fabmall) மற்றும் இந்தியா பிளாஸா (IndiaPlaza) ஆகியவற்றின் 14 ஆண்டு கால பயணம் தொடங்கியது.

1999-ல் நாங்கள் தொடங்கியபோது, இந்தியா முற்றிலும் வித்தியமான உலகமாக இருந்தது. டயல் செய்து பேசக்கூடிய தொலைபேசிகளும், குறைந்த அளவிலான இணையப் பயன்பாடு காணப்பட்டது. அப்போதுதான் மொபைல் போன்கள் அறிமுகம் ஆகின. நிறுவனத்தை நிறுவுவதற்காக எடுத்துக்கொண்ட அந்த ஆறு மாத காலம்தான் என் வாழ்நாளின் சிறந்தத் தருணங்கள்.

ஆழம் தெரியாமல் கால்வைத்து விட்டீர்களா என்று நீங்கள் கேட்டால், என்னிடம் இல்லை என்ற பதில்தான் வரும். டாட் காம் பிரபலம் அடைந்துவந்த அந்த நடுவாந்திர தருணம் ஒரு களிப்பூட்டும் காலகட்டமாக இருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் முன்பின் பார்த்திடாத ஒரு ஜெண்டில்மேன் என் அருகே வந்தார். என் பெயரைக் கூட கேட்காத அவர், என்னுடைய மதிப்பு குறித்து கேட்டார்!

டாட் காம் அலையில் பயணித்தோம். அது 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். கருப்பு வெள்ளி நிகழ்ந்தது. எங்கள் உலகம் ஓரிரவில் மாறியது.

முதல் சுற்று நிதியை ரிலையன்ஸிடம் இருந்து திரட்டினோம். அதன்பின், இ-காமர்ஸ் உலகம் மீது அவருக்கே ஆர்வம் இல்லாமல் போனது. அந்தச் சூழலில், இசை, புத்தகங்கள், திரைப்படங்கள், வாட்சுகள், நகைகள், பொம்பைகள் என பலப் பிரிவுகளைத் தொடங்கினோம். ஆனால், பலசரக்கு என்பது இரண்டு வெவ்வேறு விழிகளில் திருப்புமுனையாக அமைந்தது.

அதுவரை ஆண்களையே இலக்காக வைத்துப் பிரிவுகளை வகைப்படுத்தி வந்த நாங்கள், அதிக அளவில் பெண் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கினோம். பலசரக்குகள் ஒரே நாளில் டெலிவரி செய்யப்பட்டு, டெலிவரியின்போது பணம் பெறும் திட்டத்தை செயல்படுத்தினோம்.

இதற்காக வேறுவிதமான கிடங்கு அமைக்க வேண்டியதானது. பிக் அப்-கள், டெலிவரிகளை நாங்களே பார்த்துக்கொண்ட நிலையில், இப்போது கிடங்குகளும் சேர்ந்தது. பலசரக்குகளாக பணத்தைப் புரட்டுவதற்கு மிகுந்த சிரமத்தைச் சந்தித்தோம். செய்வதறியாது திகைத்துப்போகும் நிலையும் ஏற்பட்டது.

அதேவேளையில், மறுபுறம் அதிக வருவாய் வாய்ப்பு இருப்பதன் காரணமாக, பலசரக்குகள் நல்லபடி கைகொடுக்க ஆரம்பித்தது. ஆர்டர் செய்த அதே நாளில் டெலிவரியும் செய்வதால் கூடுதல் வருவாயும் கிட்டியது. புதிதாக சில திட்டங்களையும் செயல்படுத்தத் தொடங்கினோம். மிகப் பெரிய அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டியதாகிவிட்டதால், ஆஃப்லைனிலும் விற்பனை செய்ய முடிவு செய்தோம். அதன்படி, 2002 ஜனவரியில் ஃபாப்மால் சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் தொடங்கப்பட்டன.

அதை ஒரு மகத்தான தொலைநோக்கு பார்வை என்றே சொல்வேன். ஆனால், உண்மையில், அதிகப்படியான இருப்புகளை சமாளிக்கவே தொடங்கப்பட்ட அந்த முயற்சி, ஒரு மிகப் பெரிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ஆஃப்லைன் ஃபாப்மால் சூப்பர் மார்க்கெட் தொழில் சிறப்பாக மேம்பட்டது. 2006-ல் ஆதித்ய பிர்லா குழுமம் அந்த ஆஃப்லைன் தொழிலைக் கையக்கப்படுத்தியது. (மோர் செயின் ஆஃப் சூப்பர்மார்க்கெட் என்று பெயர் மாற்றப்பட்டது.) நாங்கள் இ-காமர்ஸ் வலைதளத்தை இந்தியா பிளாஸா என மாற்றிக்கொண்டோம். 2011-ல் நாங்கள் 'சீரிஸ் ஏ'-வை எழுப்பினோம், இந்தோ யுஎஸ் (இப்போது கலாரி கேப்பிடல்) நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றோம்.

2012-ல் உள்ளேயும் வெளியேயும் பல நிகழ்வுகள் அரங்கேறியதன் விளைவாக, நாங்கள் அதலபாதாளத்துக்குச் சென்றோம். நான் திரும்பிப் பார்க்கும்போது, நிதி சார்ந்த விவகாரத்தில் மிகச் சிறந்த கதையை இந்தியா பிளாஸா தன்னகத்தே கொண்டுள்ளதை அறிவேன். நாங்கள் மிகச் சிறப்பாக வளர்ந்தோம்; ஆனால், பணம் ஈட்டுவதில் நீண்ட தூரம் விலகிக் காணப்பட்டோம்.

என் நிறுவனம் பணம் ஈட்ட வேண்டும் என்பதில் நான் ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால், முதலீட்டாளர்களுடன் பறக்க முடியாத சூழல். பெரும்பாலானோரும் அதிக அளவில் நிதியை முதலீடு செய்து, உடனடியாக அவற்றைச் செலவிட்டு, விரைவிலேயே முன்னேற்றம் கண்டு அடுத்தகட்டத்துக்கு ஒரு நிறுவனம் தாவ வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஆனால், இந்த வகை அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய பார்வை இன்றும் அப்படியே மாறாமல் இருக்கிறது.

சீரிஸ் ஏ-விடம் இருந்து 5 மில்லியன் டாலர்களை நிறுவனத்துக்காக முதலீடாக பெற்று, முழுமையான லாபம் அடையாத நிலையால் கவலை அடைந்தேன். அப்போதைய சூழலில் எங்களது ஜி.எம்.வி. மதிப்பு சுமார் ரூ.100 கோடி மட்டுமே. (நாங்கள் தயாரிப்புகள், விற்பனையான சேவைகள், ரிட்டர்ன்ஸ் போக திரட்டப்பட்ட தொகை மற்றும் திருப்பி அளிக்கப்பட்டவை அனைத்தையும் கணக்கில்கொண்டு பாரம்பரிய முறைப்படிதான் ஜி.எம்.வி.யை மதிப்பிடுவோம்.)

ஒருவேளை இந்தியா பிளாஸா முதலீட்டைத் திரட்டுவதில் வெற்றி பெற்றிருந்தால், புத்துயிர் கிடைத்து ஒரு லாபம் மிக்க இ-காமர்ஸ் நிறுவனமாக உச்சம் தொட்டிருக்கும். அந்த 18 மாதங்களில், என் இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து, செயல்பாட்டுக்கான முதலீட்டுக்காக நிதியைத் திரட்டுவதற்கு எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தேன். நாடு முழுவதும் பயணித்து சுமார் 30 முதலீட்டாளர்களை நாடினேன். ஆனால், எந்தப் பலனும் கிட்டவில்லை.

பலரது சொதப்பல்களால் உருவான பின்னடைவுகளுக்கு, தொழில்முனைவர் ஒருவர் மட்டுமே பொறுப்பேற்பது என்பது துரதிர்ஷ்டவசமானது. நான் மட்டுமே ஏற்படுத்தாத களங்கங்களை நான் தனி ஒருவனாக களைவதற்கு பாடுபட்டேன். தொடர்பு துண்டிப்பு நோய்க்கு ஆளான மாதிரி உணர்வு. தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்குத்தான் மக்கள் தாமாக முன்வந்து கைகொடுப்பார்கள் என்பதை உணர்ந்தேன்.

எந்த இளைப்பாறுதலும் இன்றி நிர்கதியாகவும் திணறித் தவித்தேன். தன் நிறுவனம் வீழ்ச்சி கண்டால், அதன் தொழில்முனைவரும் தோல்வியாளராகக் கருதப்படுவது அபத்தம். தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இயங்குவதற்காக உத்வேகம், துணிச்சல்கள், முயற்சிகளைக் கொட்டுவதும், புதிய பாதையில் வலுவுடன் பயணிப்பதும் எல்லாம் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தும் உன்னத அனுபவத்துக்காகத்தானே. ஆனால், எல்லாமுமே வெற்றாகவும் அர்த்தமற்றதாகவும் போனது. இதுவே இந்தியாவில் உள்ள தொழில்முனைவர்களின் இருண்ட பகுதி என்றால் அது மிகையல்ல.

ஒரு முன்முயற்சி தொழில்முனைவு நாடாக இந்தியா மேம்பட வேண்டும் எனில், இத்தகைய போக்குகள் மாறிட வேண்டியது அவசியம். நாம் நிச்சயம் புரிந்துகொண்டு ஏற்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: ஒரு தொழில் தோல்வி அடையலாம்... தொழில்முனைவர் அல்ல!

| கே.வைத்தீஸ்வரனால் விவரிக்கப்பட்டு, சிந்து காஷ்யப் எழுதிய 'இந்தியன் பிளாஸா' கதையின் தமிழாக்கம் இது. |

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக