பதிப்புகளில்

பார்வையற்றவர்களின் விழிகளில் ஒளி சேர்க்கும் 'ஸ்டார் ஃபிஷ்'

27th Oct 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

“இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாஸ்டனின் குளிரான காலைப் பொழுது ஒன்றில், பார்வையற்றோருக்கு நடைபெற்ற வேலை வாய்ப்புக் கண்காட்சி ஒன்றைப் படம்பிடிக்க வேண்டும் என என்னையும் எனது மனைவியையும் அழைத்திருந்தனர்” என பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறார் சுபாஷிஸ் ஆச்சார்யா, "ஸ்டார் ஃபிஷ்" (Starfish) திட்டத்தின் நிறுவனர், பயிற்சியாளர், வழிகாட்டி.

சவுமிதா, சுபாஷிஸ்

சவுமிதா, சுபாஷிஸ்


ஒரு இந்தியனாக அந்தக் காட்சியை பிற பார்வையற்றவர்களுக்காக படம் பிடிக்க விரும்பினேன். வேலை வாய்ப்புக்கு வந்திருக்கும் இவர்கள் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை படத்தைப் பார்க்கும் பிற பார்வையற்றவர்களால் உணர முடியும். அந்தப் படிப்பாளிகள் கையில் ரெசிய் வைத்துக் கொண்டு தங்களது திறமையை நிரூபிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த காட்சி எனக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி நின்று கொண்டிருந்த 150 பேரிலும் ஒருவரைக் கூட வேலைக்குத் தேர்வு செய்யவில்லை. படித்த, வேலைக்குத் தகுதியான அவர்களை வேலைக்கு தேர்வு செய்யாதது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம்தான் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. மாற்றுத் திறனாளிகள் எந்த அளவுக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை அப்போதுதான் நான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

பார்வையற்றவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் திறமையை வளர்த்து அவர்களின் திறமைக்கேற்ற வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்து அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பு ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். தனித்துவமிக்க, சர்வதேச, சுயமாக நீடித்து நிற்கக் கூடிய, வேலை பெறுவோர் மற்றும் வழங்குவோர் இருவருக்கும் மதிப்பளிக்கும், ஒரு புதிய தளம் குறித்து கற்பனை செய்து பாருங்கள். அறக்கட்டளை மூலம் இரக்க சிந்தனையில் செய்யப்படும் மனிதாபிமான உதவிகளைப் போலல்லாமல் வேலைத் திறனையும் திறமைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் புதிய தளம் குறித்து கற்பனை செய்து பாருங்கள். இதுதான் ஸ்டார் ஃபிஷ் திட்டம்.

image


திறந்து விடப்பட்ட மனித ஆற்றல்

இன்றைய காலகட்டத்தில், படிப்பிருந்தாலும் அனுபவம் இருந்தால்தான் வேலை கிடைக்கும். முன் அனுபவம் என்பது வேலை தேடுவோர் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை. பார்வையற்றவர்களுக்கு முன் அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பில்லை. அவர்களால் பிறரைப் போல இயல்பாக இயங்கவும் முடியாது. அவர்கள் படித்திருந்தாலும் நிறுவனங்கள் அவர்களுக்கு வேலை தருவதில்லை. தற்போதைய கணக்கின்படி உலகில் 25 கோடி பார்வையற்றவர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

அமெரிக்காவில் பார்வையற்ற படிப்பாளிகளில் 80 சதவீதம் பேருக்கு அங்குள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்பின் மூலம்தான் வருமானம் வருகிறது. அது போதுமானதில்லை. மேலும் அமெரிக்காவில் கிடைத்ததை போல பிறர் தரும் நன்கொடையில், இரக்கத்தில் வாழும் அதிர்ஷ்டம் பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. அவர்கள் நம்பிக்கை இன்றி வாழ்கின்றனர். உலக அளவில் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை. அவர்கள் சுயசார்புடன் வாழ்வது கேள்விக்குரியதாய் உள்ளது. அவர்களை இரக்கத்துடன் பார்த்து உதவ முயற்சிக்கலாம். ஆனால் உண்மையில் அவர்களுக்கு சம வாய்ப்பை வழங்கி பொருளாதார சுதந்திரத்தைப் பெறச் செய்வது வரையில் எதுவும் மாறப்போவதில்லை. பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக கடந்த பல நூற்றாண்டுகளில் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.

பெரும்பாலான பார்வையற்றவர்கள் கல்வி பெற்றவர்கள்; மிடுக்கானவர்கள், புத்திசாலிகள். தகவல் தொழில் நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்துபவர்கள். பார்வையற்றவர்களுக்கான திரை வாசிப்பான் (screen reader) உதவியோடு அவர்களால் கம்ப்யூட்டரில் முழுமையாக இயங்க முடிகிறது. இதேபோல் ஸ்மார்ட் போன்களையும் அவர்களுக்குச் செய்து தரப்பட்ட வசதிகளின் உதவியோடு சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். பார்வையுள்ளவர்களைப் போல - சில சமயம் அவர்களைக் காட்டிலும் சிறப்பாகவே - பார்வையற்றவர்களால் இயங்க முடிகிறது.

தற்போதைய தேவை

புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களில் வெற்றி எண்ணிக்கை குறைவுதான். சில தொழில்கள் ஆரம்பித்த ஐந்து வருடத்திலேயே நலிவடைந்து விடுகின்றன. 50லிருந்து 60 சதவீத பொருளாதாரம் புதிய தொழில்களை நம்பித்தான் உள்ளது. அவற்றில் லட்சக்கணக்கான தொழில்கள் உலகு தழுவியவை. ஏன் இந்தத் தொழில்கள் தோல்வி அடைகின்றன? பதில் எளிமையானது. நிர்வாகம், நிதி திரட்டலில் தோல்வி. புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்து, அதை வளர்ப்பதற்கு பெருமுயற்சி தேவைப்படுகிறது. ஒரு விமானம் டேக் ஆப் ஆவதைப் போலத்தான். ஓடு தளத்தை விட்டு மேலேறிப் பறப்பதற்கு உச்சபட்ச ஆற்றல் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக சிறு தொழில்களுக்கு அவை உடனடியாக வளர்ந்து மேலேறிப் பறக்க, நிதி உள்பட தேவையான வளங்கள் கிடைப்பதில்லை.

இப்போதெல்லாம் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் தங்கு தடை ஏதுமில்லை. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் காலம் இது. ஒருவர் எந்த மூலையில் இருந்தும் உலகம் முழுவதிலும் வர்த்தகம் செய்யலாம். உலகமே நமது கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் போது வர்த்தகம் ஏன் தோல்வி அடைகிறது? வாடிக்கையாளர்களைப் பிடிப்பதும் அவர்களைக் கையகப்படுத்துவதும் அவர்களுக்கு விரைந்து சேவையாற்றுவதும் முக்கியம். அதில் ஏற்படும் குறைபாடுகள்தான் தோல்விகளுக்குக் காரணங்களாகின்றன. ஏராளமான தகவல்களை உருவாக்குவதும் ஒருங்கிணைப்பதும் அதிக நேரம் எடுக்கும் விஷயம். அது ஒரு பெரிய பிரச்சனை.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் கேட்ச் 22 (Catch 22) மிகுந்த கால அவகாசம் பிடிக்கும் ஒரு விஷயம். (கேட்ச் 22 என்பது இந்த இடத்தில் வேலைக்குச் சேர முன்அனுபவம் வேண்டும் என்ற முன்நிபந்தனையைக் குறைக்கும்) டேட்டாக்கள் அல்லது தகவல்கள் புதிய எரிபொருளாக கிடைக்கின்றன. ஆனால் இதுவும் அதிக அவகாசம் பிடிக்கும் முயற்சிதான். அது அறிவுப் பொருளாதாரம். அங்கு வேகம்தான் முக்கியம். பெரிய மீன் சின்ன மீனைத் தின்பதல்ல.. வேகமான மீன் வேகமில்லாத மீனைத் தின்றுவிடும்.

புதிய உத்தி ஒன்றைக் கட்டமைத்தோம்

ஸ்டார் ஃபிஷ் தளம் எல்லோருக்கும் பொதுவானது. எங்களுக்குத் தேவையான, தகுதி உடைய, யார் வேண்டுமானாலும் அணுகலாம். நாங்கள் வைத்திருக்கும் பயிற்சித் திட்டத்தில் ஒரு சில வாரங்களிலேயே ஒருவரின் பல்வேறு திறன்களை மேம்படுத்திவிடுவோம். நாங்கள் நன்கொடை பெறுவதில்லை. எங்களுக்கு யாருடைய தொண்டும் தேவை இல்லை. மீனை எப்படிச் சாப்பிடுவது என்று நாங்கள் கற்றுக் கொடுப்பதில்லை. அது பிரச்சனைக்குத் தீர்வு அல்ல. மீனை எப்படிப் பிடிப்பது என்ற கற்பிக்கிறோம். அது கடினம்தான், ஆனால் அதுதான் தேவை. வெளியில் இருந்து நிதி எதுவும் பெறாமல் ஒரு சர்வதேச அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் இது போன்ற அமைப்புகள் அரிதானவை.

சுபாஷிஸ் மற்றொரு ஆச்சரியமான விஷயம் ஒன்றையும் சொன்னார்.

அவரது அமைப்பில் அவரைத் தவிர பணியாற்றும் மற்றவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள்தானாம். வாழ்க்கையின் பல்வேறு பின்னணி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள், பிஎச்டி எம்பிஏ படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலதரப்பட்டவர்களும் தங்களது அமைப்பில் உள்ளதாக சுபாஷிஸ் கூறுகிறார். ஒரு வர்த்தக கலாச்சாரச் சூழலில் அவர்கள் அனைவரும் பணியாற்றுகிறார்கள். தங்களுக்குரிய வாய்ப்புக்களை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர் என்று கூறும் சுபாஷிஸ், “வெற்றி என்பது ஒருவரின் அணுகுமுறையோடு சம்பந்தப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்” என்கிறார். தொழில் திறனைக் கற்றுக் கொண்டு விடலாம். ஆர்வமுடையவர்களைத் தேர்வு செய்கிறோம். அவர்களின் திறனை வளர்க்கிறோம். வேலைதான் எங்களது பிரார்த்தனை. ஸ்டார் ஃபிஷ் ஒரு முக்கியமான பணி, ஒரு புதிய சாத்தியப்பாடு. ஒரு புதிய முன்னணி, அது கடினமானது. எனினும் மாற்றம் தவிர்க்க முடியாதது, மாற்றம் மாறாதது. நாம் புதியதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தொழிலாக மாற்றினோம்

ஐந்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் ப்ராஜக்ட் ஸ்டார்பிஷ் திட்டத்தின் நோக்கம். அவர்கள் தங்களது இலக்கை அடைய வேண்டுமெனில், தொழிற்சாலைகளுக்கு என்ன தேவை என்பது குறித்த ஒரு முழுமையான புரிதல் வேண்டும். எல்லாமே விரைவாக வாடிக்கையாளர்களைச் சென்று சேர்வதையும் அவர்களை நமது வர்த்தக வளையத்துக்குள் கொண்டு வருவதையும் பொருத்தது.

1. மனித தரவு மெகா ஆய்வுப் பொறி ஒன்றை உருவாக்குவது (Creating a Human Big Data Research machine): அறிவுத் தொழிற்சாலையில் மிகப்பரந்த ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஒவ்வொரு விற்பனையாளருக்கும் ஆழமான தரவுகள் தேவை. வாடிக்கையாளர் பற்றிய புரிதல், அவர்களைப் புரிந்து கொண்டு, அவர்களை வர்த்தக வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். மெகா கார்ப்பரேட் விற்பனைக் குழுவினருடன் இணைந்து செயல்படும் ஆய்வாளர்களாக உருவெடுப்பது ஸ்டார் ஃபிஷ் திட்டத்தின் நோக்கம். தேவையான மெகா சந்தை ஆய்வுத் திட்டங்கள், சின்னச் சின்னதாய் பிரிக்கப்பட்டு, அவை உலகம் முழுவதிலுமுள்ள ஸ்டார் ஃபிஷ்சின் பார்வையற்ற உறுப்பினர்களுக்குச் சென்று சேர்கிறது. அவர்கள் அந்தந்த நாட்டில் அதை செயல்படுத்துகிறார்கள். கடைசியாக இவை அனைத்தும் திட்ட மேலாளரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒரு தொடர் செயல்பாடு, ஒரு விநியோகஸ்தர்களின் செயல்பாடாக மாற்றப்படுகிறது. (ஒரு மெகா தரவு பொறி போல) 24 மணி நேரமும் செயல்படுகிறது. குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் உறுதியான வர்த்தக மதிப்புடன் இயங்குகிறது.

2. எழுதுவதும் பிழை திருத்துவதுமான சேவை: எந்த ஒரு கட்டுரையானாலும் நேர்த்தியுடன் இருக்க வேண்டுமெனில், அதற்கு பிழை திருத்தலும் எழுத்து நடையில் நுட்பமான ஒழுங்கமைத்தலும் தேவை. அவகாசம் பிடிக்கும் இந்த வேலையில் பார்வையற்றோரை ஈடுபடுத்தலாம். அவர்கள் கம்ப்யூட்டர் திரை வாசிப்பான் (screen reader) மூலம் இந்தப் பணியை மேற்கொள்வார்கள்.

3. பூமிக்கடியில் செய்யப்படும் ஆய்வில் 90 சதவீத பணி: இது உண்மைதான். பூமியைத் தோண்டி ஆய்வு செய்யும் போது, அடியிலுள்ள பாறை அடுக்குகள் குறித்து அறிய துளைக்குழிகள் எனப்படும் போர்ஹோல்கள் (Boreholes) பயன்படுகின்றன. இந்தத் துளைக்குழிகளை வைத்து பூமிக்கடியிலுள்ள எண்ணெய், பாறை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து அறிய மென்பொருள் ஒன்று உள்ளது. அந்த மென்பொருள் மூலம் துளைக்குழிகளில் இருந்து வெளிப்படும் ஒலியில் இருந்து தரவுகளைப் பெற்று, அந்தத் தரவுகளை வைத்து பூமிக்கடியில் உள்ள பாறைகள் விளக்கப்படுகின்றன. நட்சத்திரங்கள் குறித்து அறியவும் இதே முறை பயன்படுகிறது. இந்த வேலையை பார்வையற்றவர்களால் செய்ய முடியும். இந்தப் பணிக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது.

4. வேலைக்கு ஆளெடுத்தல்: பெரும்பாலான ஆளெடுப்பு நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான விபரங்களைப் பெறவும் ஆய்வு செய்யவும் 80 சதவீத நேரத்தைச் செலவு செய்கின்றன. இதே வேலையை பார்வையற்றவர்கள் செய்தால் என்ன நடக்கும் என கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் செய்யும் போது ஆளெடுக்கும் நிறுவனத்தில் வழக்கமாக நடக்கும் வேலையைப் போல இரு மடங்கு நடக்கும். விரைவாக நடக்கும். வருமானமும் அதிகரிக்கும். இந்த விஷயத்தில் ஸ்டார் ஃபிஷ் ஏற்கனவே முன்னணியில் இருக்கிறது.

5. தேவைக்குக் கிடைக்கும் ஆய்வாளர்கள் / புதிய நிறுவனங்களுக்கு ஆளெடுப்பவர்கள்: அப்போதுதான் புதிதாக அடைகாத்து குஞ்சு பொறிக்க இருக்கும் ஒரு புதிய நிறுவனத்திற்குத் தேவையான ஆய்வுகள், சந்தை குறித்த சோதனை, ஆளெடுப்பு, வாடிக்கையாளர் தொடர்பு என்று அனைத்து சேவைகளையும் நிறைவேற்றித்தர ஒரு நிறுவனம் இருந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். ஸ்டார் ஃபிஷ் அதைத்தான் செய்கிறது. இந்தப் பணிகளில் முன்னணியில் இருக்கிறது ஸ்டார் ஃபிஷ்.

“எங்கள் பயணத்தில் தோல்வி வந்திருக்கிறது, சோதனை வந்திருக்கிறது. ஆனால் உடனடியாக அதில் இருந்து மீண்டிருக்கிறோம். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று கற்றுக் கொண்டிருக்கிறோம். தோல்வி அடைந்த உடன், அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு பாதையை மாற்றியிருக்கிறோம். ஆரம்பத்தில் எல்லா நிறுவனங்களும் சந்திப்பதுதான். தோல்வி என்பது தோல்வியல்ல. அது உங்களுக்கு ஒரு பாடம். அதிலிருந்து விரைவாகக் கற்றுக் கொள்ளுங்கள். பொறுமையும் வருவதை ஏற்கும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார் சுபாஷிஸ்.

ஏற்படுத்திய தாக்கம்

தொடங்கும் போது சுலபமாக இல்லை. இதற்கு முன்பு யாரும் முயற்சி செய்து பார்க்காத ஒன்று இது; திட்டம் பெரியதுதான். ஆனால் ஆரம்பத்தில் இருகைகளை நீட்டி இதை வரவேற்க யாருமில்லை. காலையில் வழக்கம் போல வேலைக்குச் சென்ற சுபாஷிஸ் மாலையில் சுமார் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் வரையில் பிறருக்கு பயிற்சி தரும் வேலையில் ஈடுபட்டார். நாளடைவில் அது ஒரு உத்வேகத்தைத் தந்தது. இந்தக் கடினமான முயற்சியின் போது அவர் கற்றுக் கொண்டது இரண்டு விஷயங்கள்.

ஒன்று மனிதர்களையும் அவர்களின் நம்பிக்கையையும் சம்பாதிப்பதுதான் உலகின் உண்மையான பணம். எனவே அதைச் சம்பாதிக்க வேண்டும். மற்றொரு விஷயம் ரயிலின் வேகமும் அதன் என்ஜினின் வேகமும். இது தலைமைப் பண்பு தொடர்பானது. நீங்கள் ஒரு விஷயத்திற்குத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் போது, அந்த விஷயத்தில் நீங்கள் ஆழமான நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் உங்களைப் பின்தொடர்பவர்கள் அதை நம்புவார்கள்.

ஒன்றரை வருடம் கடந்து விட்டது. ஒன்பது நாடுகளில் 100 பார்வையற்றோருக்கு (மற்றவர்கள் தீவிர உடல் குறைபாடு உடையவர்கள்) ஸ்டார் ஃபிஷ் பயிற்சி அளித்திருக்கிறது. அவர்கள் தற்போது எட்டு நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் 45 நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக வேலை வாப்ப்பில்லாமல் இருந்த அவர்கள் சுமார் 1 லட்சம் டாலர் சம்பாதிக்கின்றனர். 70 சதவீதம் உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர், சம்பாதிக்கின்றனர். புதிய சாத்தியங்களைக் கண்டறிகின்றனர். புதிய நம்பிக்கையுடன் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்கின்றனர். முழு நேர அல்லது பகுதி நேர பணி செய்கின்றனர்.

சுபாஷிஸ் (அவரது பகல் வேலையையும் சேர்த்து) நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்றுகிறார். ஆனால் இந்த வர்த்தகத்தில் (பணியாற்றும் உறுப்பினர்களுக்கு நேரடியாக வருமானம் போய்ச் சேர்ந்து விடுவதால்) அவருக்கு வருமானம் வருவதில்லை, பயிற்சி அளிக்கிறார். உறுப்பினர்களுக்கு வழிகாட்டுகிறார். ஆயிரக்கணக்கில் அவர்கள் உலகம் தழுவிய அளவில் வளர வேண்டும் என விரும்புகிறார். சுபாஷிசை எது உந்தித் தள்ளுகிறது என்று கேட்டால்,

“இதற்கு பதில் மிகவும் எளிமையானது. ஆனால் புரிந்து கொள்ளக் கடினமானது. எங்களின் பார்வையற்ற அல்லது மாற்றுத் திறனாளி தொழில்முறையாளர்கள்தான் என் மீது செல்வாக்கு செலுத்தி என்னை வழிநடத்துகிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் வாழ்க்கையில் அவர்களுக்கு சவால்தான். அவர்கள் நேசிக்கும் ஒருவரை பார்க்க முடியாது. அவர்களின் நண்பர்களைப் போல அவர்களால் சினிமா பார்க்க முடியாது. கார் ஓட்ட முடியாது. இயற்கை எழிலை ரசிக்க முடியாது. புயலுக்குப் பின் வரும் வானவில்லைப் பார்க்க முடியாது. நமக்கு வாய்த்திருக்கும் பல விஷயங்களை அவர்களால் செய்ய முடியாது.” எனப் பட்டியலிடுகிறார்.

ஸ்டார் ஃபிஷ் திட்டத்தில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் தங்களின் குறைபாடு குறித்து ஒரு போதும் பேசுவதில்லை. சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவர்கள் ஒன்றாக இணைந்து ஸ்டார் ஃபிஷை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். “நான் செய்யும் பணிகளை நீங்கள் பார்த்தால் அது உங்களையும் கவரும். அவர்கள் தனிப்பட்ட முறையிலும் தொழில்முறையிலும் தலைவர்களாக வளர்ந்து வருவதைப் பார்ப்பதுதான் எனக்குக் கிடைத்த வெகுமதி. நான் ஒரு தலைவனாக வளர்கிறேன். நான் விரும்பினால் எந்தத் தொழிலையும் பெரிதாக வளர்க்க முடியும். சமூகத்தில் ஒரு சாதாரண வேலைக்காரனாக இருந்த நான் தற்போது ஒரு மதிப்பு மிக்க தலைவனாக மாறியிருக்கிறேன்.” என்று பெருமிதப்படுகிறார் சுபாஷிஸ்.

சுருக்கமாகச் சொல்வதானால், ஸ்டார் ஃபிஷ் திட்டம் ஒரு தொலைநோக்குப் பார்வையுடையது. தொழிலோடு சேர்த்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வர்த்தக மாதிரி. வர்த்தகர்களுக்குத் தேவையான பல்வேறு விதமான சேவைகளுக்குத் தேவையான திறன் படைத்த பணியாளர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்குரிய சம்பளத்தை நிறுவனங்கள் வழங்குகின்றன. புதிய, சின்னச் சின்ன வேலைகளின் மூலம் இந்தத் தொழில் தனக்குத் தானே சுயமாக நிலைத்து நிற்கிறது. இந்த வகைத் தொழில் விரிவாக வளரக் கூடியது. நெடுங்காலம் நிலைத்து நிற்கக் கூடியது. வர்த்தக உலகத்திற்கு திறன் வாய்ந்த பணியாளர்கள் மூலம் மதிப்பை அளிக்கக் கூடியது. ஒட்டுமொத்தத்தில் சமூகத்திற்கு பயனளிக்கக் கூடியது. முடிவாக பார்வையிழந்தவர்களின் விழிகளில் நம்பிக்கையையும் அவர்களுக்கு கவுரவத்தையும் பொருளாதார சுயசார்பையும் அளிக்கக் கூடியது.

கடைசியாக, “அவர்கள், உண்மையான கண்டுபிடிப்பு என்பது ஒரு பொருளை கண்டுபிடிப்பதல்ல என்கிறார்கள். வழக்கமான ஒரு விஷயத்தை ஒரு வித்தியாசமான பார்வையில் பார்ப்பதுதான் உண்மையான கண்டுபிடிப்பு என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய சாத்தியங்களை என்னால் பார்க்க முடிகிறது. லட்சக்கணக்கானவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்க முடிகிறது.” என்று முடிக்கிறார் சுபாஷ்.

இணையதள முகவரி: Project Starfish

ஆங்கிலத்தில்: ஸ்னிக்தா சின்ஹா

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags