பதிப்புகளில்

டன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின் வியக்க வைக்கும் சமூக வாழ்கை!

8th Aug 2018
Add to
Shares
5.5k
Comments
Share This
Add to
Shares
5.5k
Comments
Share

கல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்ணையும் வென்றவர். அவரது சமூக வாழ்க்கையே அதற்கு சாட்சி. சந்தேகம் இருந்தால் அவர் நெருக்கமாக நட்பு கொண்டிருந்த நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள், அந்த எண்ணிக்கை நிச்சயம் 148 க்கு மேல் இருக்கும்.

அதென்ன 148 என்று கேட்கலாம்? அது தான் டன்பர் எண்ணாக அமைகிறது. அதாவது, ஒரு மனிதர் பேணி காக்கக் கூடிய சமூக உறவுகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதும் அந்த வரம்பு 148 க்கு மேல் செல்ல முடியாது என்றும் இதன் அடிப்படையாக அமைகிறது. இந்த கருத்தாக்கத்தை முன் வைத்தவர் பிரிட்டன் மானுடவியலாளரான ராபின் டன்பர் (Robin Dunbar). அவரது பெயரிலேயே இந்த எண்ணிக்கை டன்பர் என அழைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை முழு எண்ணாக 150 என குறிப்பிடும் வழக்கமும் இருக்கிறது.

யார் ஒருவராலும், 150 க்கு மேற்பட்ட நண்பர்களை சமூக உறவில் பராமரிக்க முடியாது என்பது இந்த கருத்தாக்கத்தின் மையம். டன்பர் மூளையின் அளவை வைத்து இந்த எண்ணிக்கையை முன்வைத்தார். துவக்கத்தில் மனித குரங்குகள் மத்தியில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்தாக்கத்தை அளித்தவர் பின்னர் இதை மனித குலத்திற்கும் விரிவுப் படுத்தினார்.

image


டன்பர் எண் விவாதத்திற்கு உரியது என்றாலும், அதன் அடிப்படை கருத்தாக்கம் முக்கியமானது. சமூக உறவுகளை பேணி காப்பதில் மனித மூளையின் ஆற்றலை ஒரு முக்கிய அம்சமாக அது கருதுகிறது. இதன் பின்னே உள்ள நுட்பமான அம்சங்கள் ஆழமான ஆய்வுக்கு உரியவை. அவை சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் பொருந்துமா? இதை ஒரு அளவுகோளாக கருதுவது சரியா? போன்ற பல கேள்விகள் இருக்கின்றன.

பொதுவாக டன்பர் எண் கருத்தாக்கம் ஆய்வுலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் எழுச்சி பெற்ற பிறகு, நண்பர்களின் எண்ணிக்கைக்கான ஒப்பீடாக இந்த கருத்தாக்கம் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஃபேஸ்புக்கின் நட்பு கோரிக்கைகள் மற்றும் நட்பு வலையை அலசி ஆராய இந்த எண்ணிக்கை முக்கிய அம்சமாக அமைகிறது.

ஃபேஸ்புக் மூலம் கொள்ளப்படும் நட்பு வட்டத்தின் உளவியல் அம்சம் ஆராயப்படும் போது, ஒருவரால் எந்த அளவுக்கு நண்பர்களை பராமரிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த இடத்தில் தான் டன்பர் எண் துணைக்கு அழைக்கப்படுகிறது. ஃபேஸ்புக்கில், ஆயிரக்கணக்கில் நண்பர்கள் எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டாலும், (5,000 எனும் வரம்பு உள்ளது), உண்மையில் சமூக வலைப்பின்னலில் இத்தனை பெரிய நட்புகளை பராமரிப்பது சாத்தியமா? இதன் உண்மை தன்மை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்பபடுகின்றன.

இந்த ஆய்வுகளை விட்டுவிடுவோம். இப்போது டன்பர் எண்ணிக்கையை பற்றிய குறிப்பு ஏன் எனும் விஷயத்திற்கு வருகிறேன். டன்பர் எண் கொண்டு கலைஞர் புகழ் பாட வேண்டும் என்பதே என் நோக்கம். அதைவிட முக்கியமாக இந்த கருத்தாக்கம் கொண்டு கலைஞரின் பன்முக ஆளுமையின் அரிய ஒரு பரினாமத்தை தெரிந்து கொள்ளலாம்.

இணையத்தில் அதிகம் புழங்குவதால், டன்பர் எண் பற்றி பலமுறை படித்திருக்கிறேன். எப்போது, டன்பர் எண் பற்றி படித்தாலும் என மனதில் உதாரணமாக தோன்றுவது கலைஞர் தான். அவரது வாழ்க்கையை, குறிப்பாக நண்பர்களை அவர் பேணி காப்பதை டன்பர் எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்து அந்த கருத்தாகத்தின் தன்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.

image


கலைஞருக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் இருக்கின்றனர். அவர்களை அவர் உயிரினும் மேலாக மதித்து வந்திருக்கிறார். அவர்களோடு ஒவ்வொரு நாளும் கடிதம் மூலம் பேசி வந்திருக்கிறார். இது தவிர, இலக்கியவாதி, திரைக் கலைஞர், அரசியல் தலைவர் என பலவித பரிணாமங்களை அவர் செம்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஓய்வறியாத சூரியனாக அவர் இடைவிடாமல் பணியாற்றி மறைந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்று, எண்ணற்ற மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியதாகும். அரசியல் எதிரியாக உருவான எம்.ஜி.ஆர் துவங்கி அவரது நண்பர்களை கணக்கு போட்டு பார்த்தால் வியப்பாக இருக்கும். 

எம்ஜி.ஆரை தனது 40 ஆண்டு கால நண்பர் என்றே கலைஞர் குறிப்பிடுவது வழக்கம். அதே போல, நட்புக்கு சிறந்த உதாரணமாக கருதக்கூடிய கலைஞர்- அன்பழகன் நட்பை இங்கே மறந்துவிட முடியாது. வாலிப கவிஞர் என வர்ணிக்கப்பட்ட வாலியுடன் அவர் ஒரு கவிஞராக நட்பு கொண்டிருக்கிறார். அதே போலவே, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் கலைஞருக்கமான கவியுலக நட்பு பிரசித்தி பெற்றது. திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலருடன் அவர் தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை மகிழ்ச்சியோடு அசைப்போடக்கூடியவர் என கேள்விபட்டிருக்கிறேன். 

இளைஞர் என்றாலும் கூட அவரிடம் விஷயம் இருக்குமாயின் கலைஞர் அவருடன் அமர்ந்து பேசி புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியதையும் அறிய முடிகிறது. இவர்களில் பலரை அவர் நண்பர்களாக அங்கீகரித்து மகிழ்ந்திருக்கிறார்.

கொள்கை வேறுபாட்டை மீறி கி.வீரமணி அவரது நண்பர் தான், ராமதாஸ் அவர் நண்பர் தான். நட்பு எனில் வெறும் சம்பிரதாய வார்த்தை அல்ல. உண்மையில், இருவருக்கும் பொதுவான ஒரு களத்தில் கலைஞர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தேவையான நேரங்களில் அவர் அந்த நட்பு மலரும் தருணங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இதை அவருடன் பழகியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

image


இவை எல்லாம் உதாரணங்கள் தான். கலைஞர் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் சமூக நட்பு என்பது அதில் எத்தனை பெரிய வலைப்பின்னலாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பல திரைக்கலைஞர்களுடன் அவர் தனிப்பட்ட நட்பு கொண்டிருக்கிறார். பல கல்வியாளர்களுடன் அவர் உறவை பேணி காத்திருக்கிறார். அவர் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாட்டு பற்றி பேசும் நண்பர்கள் இருக்கின்றனர்.

இவ்வளவு ஏன், ஊர் ஊராக சென்று கூட்டங்களில் பேசும் போதெல்லாம், தொண்டர்களை வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், அவர்களை தன்னுடன் பேசி உரையாட வந்தவர்களாகவே அவர் பார்த்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு தனிப்பட்ட முகத்தை நினைவில் கொண்டு மறுமுறை அவரால் நினைவு கூற முடிந்திருக்கிறது. அவர் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருந்த கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை வேறு எந்த அரசியல் தலைவருக்கும் சாத்தியம் இல்லாதது. 

தமிழகத்தின் குக்கிராமத்தில் கூட அவர் தனிப்பட்ட முறையில் தொண்டர்களை அறிந்து வைத்திருந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் உரையாடியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் தனிப்பட்ட முறையில் பல செய்தியாளர்களை அறிந்து வைத்திருந்தார்.

அரசியல் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களையும் அவர் மறந்தது கிடையாது. சந்தர்ப்பம் வாய்த்த போது அவர்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறார். முக்கியமாக எந்த இடத்திலும் அவர் சம்பிரதாயமாக மட்டும் நடந்து கொண்டதில்லை. எல்லா இடங்களிலும் ஒருவருடன் கைகுலுக்கி பேச, உரையாட உணர்வுப் பூர்வமான ஒன்றை வைத்துக்கொண்டிருந்தார். எந்த நட்பையும் அவர் மறந்ததாகவோ, அலட்சியப்படுத்தியதாகவோ அறிய முடியவில்லை. 

அவர் நண்பர்களாக குறிப்பிட்டவர்களை, உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் மற்றும் பலரும் பல்வேறு தருணங்களில் கலைஞர் பற்றி கூறியுள்ள கருத்துக்களில் இருந்து அறியலாம்.

ஒரு மாபெரும் இயக்கத்தை 50 ஆண்டு காலம் வழிநடத்தியிருக்கிறார். பல பரிமானங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியிலும் சரி சமூக வாழ்க்கையிலும் சரி, பல்வேறு கட்டங்களில் எண்ணற்ற மனிதர்களோடு சமூக உறவு பாராட்டியிருக்கிறார். அந்த உறவில் இருந்து அவர் எடுத்துக்கொண்ட விஷயங்களும் அநேகம், கொடுத்தவையும் அநேகம். அவரது இந்த நட்புறவே அவரது அரசியல் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததுள்ளது.

எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள அவரிடம் ஏதேனும் ஒன்று இருக்கவே செய்தது. அதை சிறப்பாக செய்து வந்திருக்கிறார். அவரது நீண்ட நெடிய வாழ்க்கையில், அவர் நட்பு கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயம் ஆயிரத்தை தாண்டும். அதாவது இரு தரப்பினரும் பரஸ்பரம் கருத்து பரிமாறலில் ஈடுபட்ட நட்பு. ஒருவரால் எப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நட்பை பேணி காக்க முடியும் என்பது வியப்பு தான். அதனால் தான் அவர் கலைஞர்.

இது ஒரு உணர்வுபூர்மான ஒப்பீடு தான். ஆனால் ஒரு அல்காரிதமை உருவாகி கலைஞரின் நட்பு செயல்பாடுகளை ஆய்வு செய்யச் சொன்னால் அந்த அல்கோரிதம் ஆய்வும் கலைஞர் டன்பர் எண்ணை வென்றவர் என்றே சொல்லும்.

(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.) 

Add to
Shares
5.5k
Comments
Share This
Add to
Shares
5.5k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக