பதிப்புகளில்

8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கிய 'ஃப்யூயல்'

YS TEAM TAMIL
5th Feb 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

கேத்தன் தேஷ்பாண்டே டாக்டர் அப்துல் கலாமை முதன் முதலாகச் சந்தித்த போது, ஒரு லட்சம் மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள் அதன்பிறகு என்னை வந்து பாருங்கள் என்று சொன்னாராம். அப்படியே தேஷ்பாண்டே செய்து விட்டு, மீண்டும் கலாமைச் சந்தித்தப் போது, 5 லட்சம் மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள். அதன்பிறகு என்னை வந்து பாருங்கள் என்றாராம். மூன்றாவது சந்திப்பில் அந்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது.

image


அந்த ஏவுகணை மனிதரை கேத்தன் அதன்பிறகு சந்திக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் மட்டும் கேத்தனின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவரது பயணம் நிற்கவே இல்லை.

2007ல் கேத்தன் 'ஃப்யூயல்' (Friends Union for Energising Lives- FUEL) அமைப்பைத் தொடங்கினார். இது ஒரு லாபநோக்கற்ற அமைப்பு. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தகவல், பயிற்சி மற்றும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். “இளம் வயதிலேயே தொடங்கி விடுங்கள்” என்பதுதான் கேத்தனின் தாரக மந்திரம். ஃப்யூயலின் திட்டங்கள் 13 அல்லது 14 வயது மாணவர்களிடத்திலேயே தொடங்கி விடுகிறது.

image


தனது ஆகச் சிறந்த செயல்பாடுகளுக்கு வெகுமதியாக கேத்தன் 2013ல் அசோகா ஃபெலோஷிப் விருதைப் பெற்றார்.

மாணவர் தொழில்முனைவரின் வளர்ச்சி

கேத்தனின் தாயார் ஒரு நீதிபதி. அவருக்கு அடிக்கடி இடமாற்றம் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஊருக்கு மாற்றலாகும் போதும் கேத்தனுக்கு பள்ளிக் கூடங்களையும் வகுப்புகளையும் தேட வேண்டியிருந்தது. பெரும்பாலும் கேத்தனின் அம்மா சிறிய நகரங்களில் பணி நியமனம் செய்யப்பட்டார். அந்த நகரங்களில் எது நல்ல பள்ளி.. எங்கு படிக்கலாம் போன்ற விபரங்கள் கூட போதிய அளவில் கிடைப்பதில்லை. 2004ல் அவர்கள் பூனாவில் குடியேற நேர்ந்தது. பூனா வளர்ச்சியடைந்த ஒரு நகரம். அங்கு இந்தப் பிரச்சனை எல்லாம் இருக்காது என்று நினைத்த கேத்தனுக்கு கவலையும் அதிர்ச்சியும்தான் காத்திருந்தது.

“அப்போது நான் பள்ளிப் படிப்பை முடித்திருந்தேன். அடுத்து எந்தக் கல்லூரிக்குச் செல்வது எந்தப் படிப்பை படிப்பது என்று முடிவு செய்ய வேண்டியிருந்தது. பூனா மகாராஷ்ட்டிராவின் மிகப் பெரிய கல்வி மையம். இங்கு பல்வேறு விதமான கல்வி நிறுவனங்களும் படிப்புகளும் இருக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் கல்வி தொடர்பான விபரப் பற்றாக்குறையும் உயர்கல்வி கிடைப்பதில் சிரமமும் ஊரக மற்றும் சிறிய நகரங்களின் பிரச்சனை மட்டுமல்ல, பெரிய நகரங்களிலும் இதுதான் நிலை என விரைவிலேயே தெரிந்து கொண்டேன்” என்கிறார் கேத்தன்.

பூனாவில் உள்ள ஒரு கல்லூரியில் சமூகவியல் பட்டம் பெற்றார் கேத்தன். கல்லூரி நாட்களில் அவ்வப்போது அவருக்கு தொழில் முனைவர் கனவு வந்து போனது. தொழில் கல்விக்கான கல்லூரிகள் இருந்ததுதான். ஆனால் ஒரு மாணவன் விரும்பும் படிப்பு எங்கு உள்ளது என்பதைக் கண்டறிவதற்கான அனைத்துத் தகவல்களும் தரும் விரிவான தளம் எதுவும் இல்லை. போதிய தகவல்களோ வழிகாட்டுதலோ கிடைக்காமல் விரக்தி அடைந்தார் கேத்தன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்கிறான் என்பது கேத்தனுக்குத் தெரியும். 

image


இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்ற யோசனையில் பிறந்ததுதான் 'ஃப்யூயல்'. 2006ல் கேத்தன் ஃப்யூயல் அமைப்பைத் தொடங்கினார். முதலில் தனது வகுப்பில் உள்ள மாணவர்களையே ஒருங்கிணைத்தார். அவர்களுடைய அனுபவத்தின் உதவியால் தகவல்களைத் திரட்டினார். பூனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள பிரபலமான படிப்புகள் போன்ற தகவல்களைத் திரட்டினார்கள். பின் மகாராஷ்ட்டிராவில் உள்ள மற்ற நகரங்களுக்கும் இந்தப் பணி விரிவடைந்தது.

கேத்தன் நன்கு படிக்கும் மாணவர். வெற்றிகரமாகப் பட்டப்படிப்பை முடித்தவர். ஆனால் கல்லூரியில் படிக்கும் போது நாள் தவறாமல் வகுப்புக்குச் செல்லும் மாணவர் இல்லை. ஃப்யூயல்தான் அவருக்கு உண்மையான கல்வியைத் தந்தது. நிதி திரட்டுவது, குழு உறுப்பினர்களை நிர்வகிப்பது, அமைப்பை சந்தைப்படுத்துவது, நிறைய மாணவர்களைச் சென்றடைவது போன்றவற்றை அவர் கற்றுக் கொண்டார்.

கல்வி தொடர்பான தகவல்களில் பற்றாக்குறை

தனது குழு மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியாவின் கிராமப்புற மாணவர்களில் ஏழு சதவீதம் பேர்தான் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து உயர்கல்விக்குச் செல்கின்றன்றனர் என்கிறார் கேத்தன். இதற்குக் காரணம் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என அவர்களால் கண்டறிய முடியவில்லை அல்லது வெற்றிகரமான வேலை வாய்ப்பிற்குத் தேவைப்படும் திறனை வளர்ப்பதற்கான வழிகளோ அல்லது திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்போ அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்கிறார் அவர்.

“மற்றொருபுறம் மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, உயர் கல்வி சந்தையில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடு இந்தியாதான். தகுதி வாய்ந்த மாணவர்கள் வராததால் இந்தியாவில் உள்ள 20 சதவீத கல்லூரி இடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. கல்லூரியில் படித்த உடன் உடனடி வேலை வாய்ப்புப் பெறுபவர்கள் 15ல் இருந்து 25 சதவீதம் பேர்தான்.” என்கிறார் கேத்தன்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களை பொருத்தமான உயர்கல்வியில் இணைத்து உரிய வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடு இல்லை. குறிப்பாக சாதாரண அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது அரிதாகத்தான் உள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மருத்துவம், பொறியியல் இல்லை என்றால் சட்டம் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். ஆனால் போட்டி குறைவான வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான நிறையப் படிப்புகள் உள்ளன. 

கல்லூரிகளும் விதவிதமான படிப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துகின்றன. பள்ளியில் படிக்கும் போதே பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் உயர்கல்வியில் எதைப் படிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து விடலாம். அந்த அளவுக்கு வகை வகையான படிப்புகள் உள்ளன. ஆனால் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடும் அத்தகைய ஒரு நல்ல படிப்பு எது என்பதைத் தேர்வு செய்வதற்கு ஏழை மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய தகவல்களோ வழிகாட்டுதலோ கிடைப்பதில்லை.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? எட்டாம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு உயர் படிப்பு குறித்த உரிய தகவல்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.

ஃப்யூயல் வழங்கும் தீர்வு

2007ம் ஆண்டில் முறையாகப் பதிவு செய்து, ஃப்யூயல் தனது வேலைகளை முழு வீச்சில் தொடங்கியது. ஃப்யூயல் குழுவினர் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்களைத் திரட்டினர். களப் பணியாளர்கள் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களைத் தேடிச் சென்றனர். ஏழு மற்றும் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் திறமை என்ன என்பதைக் கண்டறியும் தேர்வுகளை நடத்தினர். எதிர்காலத்தில் அவர்கள் தேர்வு செய்ய வேண்டிய துறை அதற்கேற்ற படிப்பு என வழிகாட்டினர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை பள்ளிப் படிப்பு, உயர்கல்வி, வேலை வாய்ப்பு என கடைசி வரையில் அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது ஃப்யூயல். அவர்கள் சேர வேண்டிய கல்லூரி, சேர்வதற்கான படிவம், நுழைவுத் தேர்வு, கல்வி உதவித் தொகை என 24 மணி நேர ஹெல்ப்லைன் உதவியுடன் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வழிகாட்டுகிறது ஃப்யூயல்.

பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு பண உதவிக்கும் ஏற்பாடு செய்கிறது ஃப்யூயல். அவர்களுக்கான கட்டணத்தில் 20 சதவீதத்தை ஃப்யூயல் தனது வருமானத்தில் இருந்து தருகிறது. மீதமுள்ள 80 சதவீதத்தை அரசு, சமூகப் பொறுப்பு கொண்ட தொண்டு நிறுவனங்கள், லயன்ஸ் மற்றும் தனிநபர்களிடமிருந்து பெற்றுத் தருகிறது.

image


பயிற்சி மற்றும் வழிகாட்டப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் ஸ்பான்சர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது ஃப்யூயல்.

ஃப்யூயல் இரண்டு பத்திரிகைகள் நடத்துகிறது. ஒன்று ஸ்டூடன்ட்ஸ் ஃப்யூயல். மற்றொன்று என்டர்ப்ரனர் ஃப்யூயல். இதில் ஸ்டூடன்ட்ஸ் ஃப்யூயல், வேலை வாய்ப்புகள், உதவித் தொகை, படிப்புகள் மற்றும் இவை தொடர்பான தகவல்களை அளிக்கிறது. புதிய வேலை வாய்ப்புகள், திறனாய்வு பயிற்சிகள், நுழைவுத் தேர்வுக்கான இலக்கியம், கேஸ் ஸ்டடீஸ் போன்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

புதுமையைக் கண்டுபிடிப்பவர்கள், மாற்றத்தை உருவாக்குபவர்கள் அதனால் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு ஏற்ற பத்திரிகை என்டர்ப்ரனர் ஃப்யூயல். தொழிலுக்கான நிதி, பங்குதாரர் தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை உள்ளடக்கியுள்ளது என்டர்ப்ரனர் ஃப்யூயல்.

கூட்டு முயற்சி மற்றும் தாக்கம்

ஃப்யூயல் 2014 என்எஸ்டிசி (National Skill Development Corporation) ஸ்கில் இன்னோவேஷன் போட்டியின் வெற்றியாளர். ஆக்சன் ஃபார் இண்டியா உச்சி மாநாடுகளில் எப்போதும் பங்கேற்பாளர். ஃப்யூயல் கூட்டு வைத்திருக்கும் அமைப்புகள் சிலவற்றைச் சொல்ல வேண்டுமெனில், தேஷ்பாண்டே அறக்கட்டளை (Deshpande Foundation), ஈகே சோக் சாண்ட்பாக்ஸ் (Ek Soch Sandbox), அசோகா அறக்கட்டளை ( Ashoka Foundation), ஸ்வதேஷ் அறக்கட்டளை ( Swades Foundation), அன் லிமிட்டட் இந்தியா (UnLtd India), தி குளோபல் எஜூகேஷன் அண்ட் லீடர்ஷிப் அறக்கட்டளை (The Global Education and Leadership Foundation -TGELF) போன்ற அமைப்புகளைக் குறிப்பிடலாம்.

தாக்கத்தைச் செலுத்துவோர் மற்றும் சமூக தொழில்முனைவோரை அறிந்து கொள்வதற்கு நேரம் செலவழிப்பது முக்கியம் என்கிறார் கேத்தன். வழக்கமாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர்களுடன் கலந்துரையாடும் போது, தீர்வு காணமுடிகிறது. எதையும் புதிதாகத் தொடங்க வேண்டிய அவசியமில்லாமல் நேரத்தை அவர்கள் மிச்சப்படுத்துகின்றனர் என்பது கேத்தன் கருத்து.

ஃப்யூயல் தற்போது 11 மாநிலங்களில் முழு வீச்சில் செயல்படுகிறது. இதன் தாக்கம் அபாரமானது. இதுவரையில் 2,700 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாகக் கூறுகிறார் கேத்தன். தங்களது மாணவர்களில் 48 சதவீதம் பேர் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கின்றனர். ஃப்யூயல் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களில் எழுபது சதவீதம் பேர் இடை நிற்றல் இல்லாமல் கல்லூரி மற்றும் பள்ளிப் படிப்பைத் தொடர்கின்றனர். ஃப்யூயல் திட்டத்தில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 30லிருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 28 சதவீதமாக குறைந்துள்ளது.

நீண்ட பயணம்

தொழில்நுட்பம், வளங்கள் மற்றும் முதலீட்டில் பற்றாக்குறை உள்ள நிலையில், சமூக தொழில் முனைவருக்கு ஒரு குழுவை உருவாக்குவதோ, வளர்ச்சியைப் பெறுவதோ, தொழில் நுட்பத்தை பெறுவதோ சவால்தான்.

அரசாங்கத்தின் கவனிப்பு அல்லது அங்கீகாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியாவின் 29 மாநிலங்களில் உள்ள அடித்தட்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற சளைக்காத எண்ணத்தோடு நடைபோடுகிறார் கேத்தன்.

ஆக்கம்: சினிக்தா சின்ஹா | தமிழில்: சிவா தமிழ்ச் செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற கல்வித்துறையில் புரட்சி செய்பவர்கள் தொடர்பு கட்டுரைகள்:

உண்மையான கல்வியைக் கற்றுக் கொடுக்கும் 'ஏகலைவன்

'டீச் ஃபார் இந்தியா'வின் கதையும், இளம் ஆசிரியர் அனூப்பின் பெருங்கனவும்!

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக