பதிப்புகளில்

குக்கிராமக் குயில் பிரித்திகாவின் 'சூப்பர் சிங்கர்' பட்டத்துக்கு வித்திட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்!

23rd Jun 2017
Add to
Shares
5.5k
Comments
Share This
Add to
Shares
5.5k
Comments
Share

அசாத்திய முயற்சிகளில் ஈடுபடும்போது கண்டுகொள்ளாத நம் சமூகம், ஒருவேளை சாதித்துக் காட்டிவிட்டால் அந்த வெற்றியை பங்கு போட தீயாய் திரியும். அந்தத் தீயின் உக்கிரத்தில், உண்மையிலேயே வெற்றிக்கு உறுதுணைபுரிந்தவர்களின் நிழல் கூட பொசுக்கப்படும். இதுதான் 'சூப்பர் சிங்கர்' மகுடம் சூடிய அரசுப் பள்ளி மாணவி பிரித்திகாவுக்கும் நடந்திருக்கிறது.

பிரித்திகாவுடன் ஆசிரியர் அக்ஸ்லியா சுகந்தி

பிரித்திகாவுடன் ஆசிரியர் அக்ஸ்லியா சுகந்தி


உதட்டளவில் கூட ஊக்கம் அளிக்க முன்வராதவர்கள் எல்லாம் இன்று தன்னால்தான் பிரித்திகா வாகை சூடினாள் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அபாரமாக பேசுபவர்களுக்கு மத்தியில், ஒரு மாணவியின் திறமையை அடையாளம் கண்டு, தன் அன்றாட வாழ்க்கையையும் பெரிதுபடுத்தாமல், அவளது வெற்றிக்கு இறுதிவரை உறுதுணைபுரிந்த ஆசிரியர் அக்ஸிலியா சுகந்தி அமைதிகாத்து வருகிறார்.

விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 5' போட்டியில் மகுடம் சூடிய பிரித்திகாவுக்கு பக்கபலமாக இருந்த ஆசிரியர் அக்ஸிலியாவின் பங்களிப்பு குறித்து, ஆரம்பம் முதல் இறுதி வரை பிரித்திகாவின் வளர்ச்சியை நேரில் கவனித்து வரும் நெருக்கமானவர்கள் விவரித்த நம்பத்தக்க தகவல்கள் இவை:

தமிழ்ப் பேசும் உலகால் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு நபர்; 6 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழகமே திரும்பிப் பார்த்து கொண்டாடும் ஒரு நபர்... நம் அனைவரின் மனதை கொள்ளை கொண்ட இவரின் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் ஆச்சரியமே நிறைந்து இருக்கும். தனி நபர் ஒருவர் ஒரு பெரிய வெற்றிக் கனியை பறித்து இருந்தால், பெரும்பாலும் நிச்சயமாக ஒரு பெரிய குடும்பப் பிண்ணனி இருக்க வேண்டும். இதெல்லாம் எதுவுமே இன்றி ஒரு குரல் உலகப் புகழ் பெற்றது. அக்குரலுக்கு சொந்தக்காரர், திருவாரூர் மாவட்டத்தில் தியானபுரம் எனும் குக்கிராமத்தில் பிறந்த சிறுமி பிரித்தி்கா.

இவர் படிப்பது எட்டாம் வகுப்பு. தந்தையோ வாகனம் பழுது செய்யும் கடையில் வண்ணம் இடுபவர். தாயோ கூலி வேலை செய்பவர். சாதாரண இடத்தில் பிறந்த பிரித்திகா, பெற்றிருப்பதோ அசாதாரணமான வளர்ச்சி. இவர் 2-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேறு பள்ளியில் படித்து வந்தார். 3-ம் வகுப்பிற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - தியானபுரத்தில் ஆசிரியர் அக்ஸிலியா சுகந்தியின் அறிவுரையின் பேரில் அடியெடுத்து வைத்தார். இவரது இசை ஞானமானது காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது கண்டறியப்பட்டது. அதோடு பாடத்தில் உள்ள கருத்துகளையும் பாடல்களாக பாடுவது பிரித்திகாவுக்குப் பிடித்த ஒன்று. இவரது அசாத்திய பாடல் திறனையும், குரல் வளத்தினையும் கண்டுவியந்த ஆசிரியர்கள் இவருக்குப் பள்ளி ஆண்டு விழாவில் பாடுவதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கினர்.

பிரித்திகாவின் திறமை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருப்பதை அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியை அக்ஸிலியாவால் இத்தீபமானது தூண்டிவிடப்பட்டு சுடர்விட்டு ஒளி வீசத் தொடங்கியது. ஆசிரியர் அக்ஸ்லியா மற்றும் குடும்பத்தாரின் உதவியோடும் வழிகாட்டுதலோடும் பிரித்திகா பல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

ஆரம்பத்தில் தோல்விகளும், புறகணிப்புகளுமே அவருக்குக் கிடைத்த பரிசு. ஒரு கட்டத்தில் 'இனி எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன்' என ஆசிரியரிடம் கூறியுள்ளார். 

ஆனால், அவளது ஏழாம் வகுப்பாசிரியர் அக்ஸிலியா சுகந்தி அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட சூப்பர் சிங்கர் போட்டியின் முதல்கட்ட குரல் தேர்வில் கலந்துகொள்ள அறிவுறுத்தினார். ஆசிரியரின் உந்துதலினால் மதுரையில் நடைபெற்ற முதல்கட்ட குரல் தேர்வில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பினார். அதன் பிறகு வந்த சுற்றுகளிலும் தனது தனித்தன்மையால் முத்திரைப் பதித்ததால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, கிராமத்து மணம் வீசும் பெண் என்று பெயர் பெற்றார். உலகின் தலை சிறந்த பாடகர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

ஆசிரியர் அக்ஸிலியா தனது எந்த ஒரு குடும்ப சூழ்நிலையையும் பொருட்படுத்தாது, பிரித்திகாவுக்கு போட்டி நடைபெறும் நாட்களில் சென்னை சென்று வர தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்தார். பலமுறை போட்டி நடைபெறும் நாட்களில் நேரடியாக அங்கு சென்றும் பங்குபெற்று ஊக்கமூட்டி வந்தார்.

'நான் இந்த மேடையில் வந்து, இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணமே அக்ஸ்லியா டீச்சர்தான்' என்று பிரித்திகா சொன்னபோது, கேமரா லேசாக அக்ஸ்லியா டீச்சர் மீது படிந்தது. 

ஒரே ஒருமுறை மட்டும் இது விஜய் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால், ஒவ்வொரு சுற்றில் வெற்றி பெறும்போதும் பிரித்திகா தவறாது தன் டீச்சரின் பெயரைக் குறிப்பிடுவார். அவை எடிட்டிங்கில் கச்சிதமாக வெட்டப்பட்டு ஒளிபரப்பாமல் பத்திரப்படுத்தப்படுவது நடந்து வந்தது.

ஆசிரியர்கள் யோகப்பிரியா, அக்ஸ்லியாவுடன் பிரித்திகா

ஆசிரியர்கள் யோகப்பிரியா, அக்ஸ்லியாவுடன் பிரித்திகா


சூப்பர் சிங்கர் போட்டிக்கு அடியெடுத்து வைத்தது முதல் இறுதிவரை எல்லா விதமான உதவிகளிலும் ஆசிரியர் அக்ஸ்லியா பங்கு வகித்தார். போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வது, சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பிரித்திகாவுக்கும் அவரது தாய்க்கும் புதுத்துணி வாங்கித் தருவது என அனைத்தையும அவரே செய்தார். தன்னால் சென்னை வரமுடியாத நேரங்களில், பிரித்திகாவுக்கு வேண்டியதைப் பின்னால் இருந்தே செய்து வந்தார்.

பிரித்திகா டாப் 10 சுற்றுக்குள் வந்த பிறகே அவரது அடிப்படைத் தேவைகளை விஜய் டிவி நிறுவனம் பூர்த்தி செய்ய ஆரம்பித்தது. உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலும் பிரித்திகாவுக்கு நேரடியாக ஸ்பான்ஸர்கள் மூலம் உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன.

போட்டியின் இடையே 'இவள் கிராமிய பாடல்கள் மட்டுமே பாடுவாள்' என்ற முத்திரையைக் கிழிக்கும் விதமாக அடுத்தகட்ட சுற்றுகளில வெவ்வேறு வகையான பாடல்களையும் பாடி தனது திறமையை நிலைநிறுத்தினார் பிரித்திகா. இதற்கு, திருவாரூர் அரசு இசைப்பள்ளியில் முறையாக இசையை இலவசமாக கற்றுக்கொண்டது உறுதுணைபுரிந்தது. பின்னர், நாகப்பட்டினத்தில் இசை கற்கப்பதற்கான ஏற்பாட்டையும் ஆசிரியை அக்ஸ்லியாவே செய்துதந்தார்.

அதன் பிறகு பிரித்திகாவின் வளர்ச்சியானது அசுர வேகத்தில் இருந்தது. இந்த வளர்ச்சிக்கு அக்ஸ்லியாவுடன் சேர்ந்து துணைபுரிந்தவர்களில் மிக முக்கியமானவர் சாய்சரண். சூப்பர் சிங்கரில் கடந்த முறை வெற்றி பெற்ற சாய்சரண் தான் பிரித்திகாவின் குழுத் தலைவர். பாடல்கள் தெரிவு, உளவியல் ரீதியில் தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட அத்தனையையும் சாய்சரணும் அக்ஸ்லியாவும் இணைந்து செய்தனர்.

இதன் எதிரொலியாக, மேடையில் நிகழ்ந்தவை எல்லாம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தவை. அரசுப் பள்ளி மாணவி, ஏழை மாணவி முதலான பார்வைகளைத் தாண்டி, தன் குரல் வளத்தாலும் பாடும் திறமையாளும் பிரித்திகா பட்டத்தை சூடியதற்கு, அவர் பெற்ற 6 லட்சம் வாக்குகளே சான்று.
ஆசிரியர்கள் அக்ஸ்லியா, யோகப்ப்ரியா, சித்ரா உடன் பிரித்திகா

ஆசிரியர்கள் அக்ஸ்லியா, யோகப்ப்ரியா, சித்ரா உடன் பிரித்திகா


பிரித்திகா வெற்றி வாகை சூடிய நாளில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றிக் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார் ஆசிரியர் அக்ஸிலியா. அதில், 

”கடவுளுக்கு நன்றி. மகத்தான ஆசிரியர்கள் அனைவருக்கும் மனபூர்வமான நன்றி. வாக்களித்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஆசிரியர்கள் யோகப்பிரியாவுக்கும் சித்ராவுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் உரித்தாக்குகிறேன். இவ்விருவர்தான் இந்த வெற்றிக்கு உண்மையான காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆசிரியர்கள் யோகப்பிரியாவும் சித்ராவும் பிரித்திகாவின் வளர்ச்சிக்கு பாடுபாடுபட்ட அக்ஸிலியாவுக்கு துணைபுரிந்தவர்கள் ஆவர்.

பெயர் அறியா ஒரு ஊரிலிருந்து வந்து இன்று உலகமே கொண்டாடும் இந்த நிலைக்கு காரணம் அந்த மூன்று நிமிடப் பாடல். ஆம், தமிழ்த்தாய் வாழ்த்துதான் அந்தப் பாடல். பிரித்திகாவுக்கு இசைத் திறமை இருப்பது அவரது பெற்றோருக்கு பள்ளியின் மூலம்தான் தெரியவந்தது. உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஏதோ ஒரு திறமையுடனே பிறக்கின்றனர். இவர்களை கண்டறிய வேண்டியதும் வெளிக்கொண்டு வர வேண்டியதும் ஓர் ஆசிரியரின் கடமை. படிப்பில் சுமாராக இருக்கும் மாணவர்கூட இதர செயல்பாடுகளில் வெற்றிக்கோடி பிடிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக நாம் கவனித்தால் மட்டுமே இதனை கண்டறிய முடியும் அந்த விதத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் மிகச் சிறப்பாக இந்த வேலையை செய்துக்கொண்டு இருக்கின்றனர். மாணவர்களின் நலனிலும் பெரும் சிரத்தை எடுத்து கவனிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக கூடியுள்ளது. இதற்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் முன்னுதாரணம்தான் ஆசிரியர் அக்ஸ்லியா சுகந்தி.

பின்குறிப்பு: பிரித்திகாவின் சூப்பர் சிங்கர் பயணத்தில் பங்கு வகித்தது குறித்து ஆசிரியர் அக்ஸ்லியாவிடம் நேரடியாக கேட்டோம். ஆனால், "என்னுடைய பணி என்பது என் மாணவர்களை திறமையாளர்கள் ஆக்குவதும், அந்தத் திறமையை உலகுக்குச் சொல்ல வழிகாட்டுவதும் மட்டும்தான். பிரித்திகாவைப் போலவே இன்னும் நிறைய மாணவர்களை வெவ்வேறு துறைகளில் வெற்றியாளர்கள் ஆக்குவதற்கு நான் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. என்னைப் போல் சத்தமின்றி எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர் நிறைய செய்கிறார்கள். இந்தப் புகழ் வெளிச்சம் என்பது குறுகியகாலம் கொண்டது. இதற்கு ஆசைப்பட்டு பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருந்தால், அடுத்தடுத்த என் முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் நேரிடலாம். எனவே, என்னை முன்னிலைப்படுத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். இதன் காரணமாகவே, பிரித்திகாவுக்கும் ஆசிரியர் அக்ஸ்லியாவுக்கும் நெருக்காமானவர்களிடம் இருந்து முழு பின்னணி விவரமும் கேட்டறிந்து இக்கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.

Add to
Shares
5.5k
Comments
Share This
Add to
Shares
5.5k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக