பதிப்புகளில்

கருவாடு முதல் கம்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் சந்தை இது...

அப்பா, அம்மாவை தவிர எல்லாம் பல்லாவரம் சந்தையில் கிடைக்கிறது என்று விளையாட்டாக சொல்வதுண்டு, உண்மையும் அது தான்.  

Jessica null
8th May 2018
Add to
Shares
4.6k
Comments
Share This
Add to
Shares
4.6k
Comments
Share

பூ சந்தை, ஆட்டுச் சந்தை,கோழிச் சந்தை, வாரச் சந்தை, உழவர் சந்தை என, இப்படி பல சந்தைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் எல்லா சந்தையும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே ரொம்ப கலர்புல்லாக இருக்கும் இந்த சந்தையை நேரில் பார்க்க ஆசைப்படுபவர்கள், போக வேண்டிய இடம் ’பல்லாவரம் சந்தை’.

பல்லவார சந்தையின் மூலத்தை தோண்டிய போது, பல சுவாரஸ்ய அனுபவங்கள் கிட்டியது. 4–10 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள், 15-18 ஆம் நூற்றாண்டில் மொகலாயர்கள், 18-19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் என ஆட்சி செய்யப்பட்ட பல்லவாபுரம், பல்லாவரம் ஆன பின்பும் இப்பகுதியின் பல இடங்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

image


மனித நாகரீகத்தில் சக்கரத்தின் பங்கு எந்தளவிற்கு முக்கியமாக இருந்ததோ அதே அளவிற்கு மாடுகளின் பங்கும் முக்கியமாக இருந்தது. 1815 ல் மாட்டுச் சந்தையாக தன் அடையாளத்தை தொடங்கிய பல்லாவர சந்தை இன்று மல்டி ஸ்பெஷாலிட்டி மார்கெட்டாக விளங்கி வருகிறது.

“கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிய இந்தச் சந்தையில் ஆடுகளும் கோழிகளும், பழைய துணிகளும் மெதுவாக விற்பனைக்கு வர ஆரம்பித்தன. கூடவே மூக்கணாங்கயிறு, கயிறு, சங்கு, லாடம், மணி, வாய்ப்பூட்டு போன்ற உப கடைகளும் முளைத்தன. பழைய சந்தை அமைந்திருந்த இடத்தில் ஒரு கிணறும், அதனருகில் மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியும் அமைந்துள்ளன.

ப்ரெஷ் காய்கறிகள், மூலிகைகள், கீரைகள், மரக்கன்றுகள், பூச்செடிகள், கருவாடு, கிடாக்கள், நாட்டுக்கோழிகள், கிளிகள், லவ் பேர்ட்ஸ், சோப்பு, சீப்பு, கண்ணாடி, செல்போன், டிவி, கட்டில், சோபா, கம்ப்யூட்டர், லேப்டாப் என பல்லாவர சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை.அந்தளவுக்கு அங்கு வரிசையில் நிற்கும் பொருட்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

நல்ல பெரிய வாழைக்கருவாடு, நெத்திலி கருவாடு, சென்னாங்குன்னி, போன்ற எல்லாமே ஒரு பக்கம் தார்ப்பாய் கூடாரம் அடித்து அதனடியில் குவிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

யாரும் கூவவே வேண்டாம். லட்டுபோல விற்றுத் தீருகிறது. இது வெள்ளிக்கிழமை சந்தை என்பதால் வியாழன் இரவே ஜே ஜே என கூட்டம், சந்தை ரோட்டை ஆக்கிரமித்து விடுகிறது. வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். பல்லாவரம் பஸ் ஸ்டாண்டிற்கு அருகே ஜனதா தியேட்டர் பின்புறம் உள்ள, கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான சாலையில் தான் இந்த பல்லாவர சந்தை 200 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வந்தது. ஆனால் இப்பொழுது போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்லாவரம் CSI சர்ச் பின்புறம் மாற்றப்பட்டுள்ளது.

ஒரு சினிமா டீம் உள்ளே போய் ஹீரோவை வில்லன்கள் துரத்தி போய் சண்டைக்காட்சி எடுக்க ரொம்ப பொருத்தமான இடம், இந்த பல்லாவர சந்தை (இயக்குனர்கள் கவனிக்க). சேர்க்காமலேயே மக்கள் கூட்டம் சேரும் இடமும் கூட. நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேர் சந்தைக்குள் நுழைந்து போய்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறார்கள். 

சந்தை டு பல்லாவரம் போக 10 ரூபாய் வாங்கும் ஷேர் ஆட்டோக்காரர்கள் அந்த கூடத்திலும் லாவகமாக ஊர்ந்து போய் விடுகிறார்கள். சுட்டெரிக்கும் வெயில், புழுதி மண், என எதைப்பற்றியும் கவலைப்படாமல் காலை 4 மணிக்கு தொடங்கி நள்ளிரவு12 மணி வரை வியாபாரம் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. 

இங்கே இன்னும் மாடுகளுக்கு லாடம் அடிக்கப்படுகிறது. மூக்கனாங்கயிறும் தார்க்குச்சியும், ஏன் கழுதைப்பால் கூட கிடைக்கிறது. பழைய டயர்கள், மரச்சக்கரமும் அச்சாணியும் கூட இங்கே வாங்க முடியும். தெருவில் நாம் எதையாவது வாங்கியபடி நடக்கும் நவநாகரீக மனிதர்களும், கிராமவாசிகளும், மிகப்புதிதாக சந்தைக்கு வந்த வாகனங்களில் கடக்கும் இளம்பெண்களும், ஆண்களும் என சந்தை எப்போதுமே எதிரும் புதிருமான அம்சங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.

பழமையான பொருட்களின் மீதான சேமிப்பு வெறி இருந்தால் இந்த சந்தைக்கு நேரடியாக காலையிலேயே போய்விடுங்கள். பழங்காலத்தில் போரில் பயன்படுத்தப்படும் கேடயத்துடன் கூடிய வாட்கள், பெண்டுலத்துடன் அமைந்த கடிகாரம், மயில் வடிவிலான கத்தி ஸ்டாண்ட், மரத்தினால் செய்யப்பட்ட உரல் போன்ற பாரம்பரிய மிக்க பொருட்கள், பழைய கிராமபோன் கூட இங்கே கிடைக்கிறது. 

image


கம்ப்யூட்டர் ஒரிஜினல் ஓஎஸ் 50 ரூபாய்க்கு வாங்கி விடலாம். பழைய ஆயில் பெயிண்டிங் முதல் வாட்டர் கலர் வரை எல்லாம் கிடைக்கும். பழைய கலைப்பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்யும் சினிமாக்காரர்கள் நிறைய பேர் வந்து வாங்கி போகிறார்கள் என்பது கொசுறு தகவல் .

“பர்னிச்சர், சோபா பொருட்களை வாங்க அதிகளவில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரூ14000 மதிப்புள்ள புதிய பர்னிச்சர்கள் சந்தையில் ரூ.8000 க்கு கிடைக்கிறது. மார்க்கெட்டிங், வாடகை செலவு இல்லை என்பதாலும் ஒரே நாளில் அதிக பொருட்கள் சந்தையில் விற்பதாலும் லாபமே தவிர நஷ்டம் இல்லை என்கிறார், சிந்தாதரிப்பேட்யை சேர்ந்த மோத்தி.

சந்தையில் நரிக்குறவர்களிடமிருந்து தரமான தேனும், குழந்தைக்கு பால்மணியும், கழுதை பாலும் கிடைக்கிறது. கல்லூரி மாணவிகளை கவரும் களிமண்ணால் செய்யப்பட்ட பாலிமர் க்ளே (polimer clay) நகைகளும் இங்கே பிரசித்தம். 

“பல்லாவர சந்தைல என் அப்பா காலத்துல இருந்து பொருள் வித்துட்டு இருக்கேன். அப்பா கூட பொருள் வித்துட்டு இருந்தேன். வெளியூரிலிருந்து இங்கே சரக்கு கொண்டு வந்து இருக்குவோம். காலையிலே லாரில கொண்டு வர பொருள் சாயந்தரத்துகுள்ள வித்து தீந்திடும். இங்கே புது பொருட்கள் கிடைக்கிற அளவுக்கு பழைய பொருட்களும் கிடைக்கும். பல்லாவரத்துல தொடங்குற சந்தை திருசூலத்துல தான் போய் முடியுது. 

பழைய HP, Dell லேப்டாப் 2000 ரூபாயிலிருந்து இருக்கு. பழைய சாமான் சந்தைக்கு ரெகுலர் கஸ்டமர்கள் வருவதால், போன் செய்து கேட்டு பின் அவர்கள் வாங்காவிட்டால் மட்டுமே அடுத்தவருக்கு அந்த பொருளை கொடுப்போம். புது சிஸ்டம், லேப்டாப் வேணும்ன்னு சொல்லி வெச்சாலும் வாங்கி தருவோம் என்கிறார், பழைய லேப்டாப் விற்கும் விக்னேஷ்.” 

பெட்ரோல் டாங்க் மூடி, இண்டிகேட்டர் என எந்த பைக்குக்கு, எது மாற்ற வேண்டுமானாலும் பல்லாவரம் சந்தைக்கு வந்து அலசி விட்டு தான் புதுப்பேட்டைக்கே செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பட உதவி: விகடன்

பட உதவி: விகடன்


10 ரூபாய்க்கு விற்கப்படும் கலர்க் கோழி குஞ்சுகளை ஆசையாக பள்ளி மாணவர்கள் வாங்கிச்செல்வதைப் பார்க்கும் போது, பள்ளிக் கூட வாழ்க்கை நம் நினைவு செல்களை முட்டுகிறது.

1980க்கு பிறகு தான் சந்தையின் அசுர வேக வளர்ச்சி தொடங்கியுள்ளது. செல்போன், டிவி, டேபிள் பேன், ஏர்கூலர், ஏசி, டேப் ரிக்கார்டர், 5.1 சவுண்ட் சிஸ்டம், கார் பேட்டரி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மண்வெட்டி, அரிவாள், காமிக்ஸ் கதைப்புத்தகங்கள் என பல்லாவர சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை. அந்தளவுக்கு இங்குவரிசையில் நிற்கும் பொருட்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. 2004 வரை 500 கடைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன.

எல்லாப் பொருளையும் சந்தையில் இங்கு பேரம் பேசி வாங்கலாம். பேரம் பேசுவதற்கு உகந்த நேரம் மாலை தான். ஆறுமணி தாண்டி விட்டால் அதுவும் கிடையாது. நீங்கள் எதிர்பார்க்காத விலையில் பல பொருட்களை வாங்கலாம். பொருட்களை வாடகை வண்டிகளில் எடுத்து வரும் வியாபாரிகள் பலரும் திரும்பவும் அதை எடுத்துச் செல்ல விரும்புவதில்லை.

விண்டோ ஷாப்பிங் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு விண்டோ மட்டுமல்ல. மேற்கூரையும் இல்லாமல் சுமார் 3 கி.மீ வரை இருபுறமும் கடைகளாய் இருக்கும் இடத்தில், ஒரு கரும்பு ஜூஸ் குடித்துவிட்டு, இருநூறு ரூபாய்க்கு இரண்டு கட்டைப் பைகளை நிரப்பும் அனுபவம் நிச்சயம் வித்தியாசமாய் இருக்கும்.
image


வளர்ச்சியடைய விருப்பமுள்ளவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வாழ்வியலை அனுபவசாலிகள் மட்டுமல்ல, சில நேரம் இது போன்ற சந்தைகள் கூட கற்றுக்கொடுக்கும். கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் பல்லாவரம் சந்தையும் இடம்பெறட்டும்.

பல்லாவர சந்தை பொருட்கள் வாங்குவதற்கான இடமட்டுமல்ல. ஜாலியாய் ஊரை சுற்றி பார்த்து விட்டு வருவதற்கான சுற்றுலா தளமும் கூட. 

Add to
Shares
4.6k
Comments
Share This
Add to
Shares
4.6k
Comments
Share
Report an issue
Authors

Related Tags