பதிப்புகளில்

உத்வேக 'வெள்ளி'த்திரை | செல்வாவுக்கு பெண்கள் மீது அப்படி ஒரு 'மயக்கம் என்ன'?

19th Feb 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

புனிதா நாற்பது வயதை நெருங்குபவர். சமூகத்தில் மதிப்புமிக்கதாக கருதப்படும் வேலை. ஓரளவு நல்ல சம்பளம். அவரை விட குறைந்த சம்பளம் பெறும் பணியில் கணவர் இருக்கிறார். குடும்பப் பொருளாதாரச் சூழலால், புனிதாவுக்கு உடல் நலக் கோளாறுகள் இருந்தாலும் வேலைக்குச் சென்றே தீரவேண்டிய நிலை.

வேலை நேரம் போக பிள்ளையை கவனிப்பது, சமையல் செய்வது உள்ளிட்ட வீட்டுப் பணிகள் அனைத்தையுமே தன் தலையில் போட்டுக்கொண்டு செய்கிறார். ஆனாலும், கணவரிடம் அப்படி ஒரு பணிவு. கணவரோ எந்தச் சூழலிலும் கெத்தை விட்டுத்தராதவர். அவ்வப்போது சிறுமைப்படுத்தவும் தயங்காதவர். எல்லாத்தையும் தன் கன்ட்ரோலில் வைத்திருப்பவர். தான் ஒரு மாத காலம் செயல்படவில்லை என்றால்கூட அந்தக் குடும்பம் முடங்கிவிடும் என்பது புனிதாவுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும், அந்தக் குடும்பத்தின் ரிமோர்ட் கன்ட்ரோல் இருப்பதோ குடும்பத் தலைவர் என்று கூறப்படுபவரிடம்.

ஒருநாள் கேட்டேவிட்டேன்.

"உங்க ஃபேமிலியில நீங்கதான் ரொம்ப முக்கியம். ஆனால், உங்க கணவர்தான் ஓவரா சீன் போடுறார். உங்களுக்கு ஒரு மாதிரியா இல்லையா?"

"ஹா ஹா... எனக்கு ஷோவை ரன் பண்ணனும். அவ்ளோதான். வெத்து கெத்துல்லாம் அவரே வெச்சுக்கட்டும்!" என்று அலட்சியமாக பதில் வந்தபோது மலைத்தேன்.

தமிழ் சினிமாவில் பெண்களை ப்ரொட்டாகனிஸ்டாகக் காட்டுவது அரிது. அப்படியே சிலர் காட்டினாலும், ஆர்வக் கோளாறில் மிகைப்படுத்திக் காட்டுவதே அதிகம் நடக்கும். தனக்கு ஏதோ ஒரு முத்திரைக் குத்தப்பட்டு விடும் என்பதாலேயே அந்த 'ஜானர்' பக்கம் ஒதுங்காதவர்கள்தான் இங்கே அதிகம். ஒரு தமிழ்த் திரைப்படத்தில் ஹீரோயின் என்பவரின் பங்களிப்பு எப்படிப்பட்டது என்பது வெயிலுக்குக் கூட தியேட்டர் பக்கம் ஒதுங்காத ரசிகருக்கும் தெரியும். 'தொட்டுக்கொள்ளும்' சமாச்சாரங்களில் ஊறுகாய்க்கு டஃப் கொடுக்கும் வல்லமை படைத்தவர்கள், தமிழ் சினிமா நாயகிகள். இதற்கு, நம் சினிமாவும் சமூகமும் கொண்டுள்ள மயக்கம்தான் காரணம். 


ஆனால், பெண்கள் மீது இயக்குநர் செல்வராகவன் கொண்டிருக்கும் மயக்கம் என்பது வேறு. அவரது சமகாலத்துக்கு இயக்குநர்கள் சிலரது வெற்றிப் படங்களை வரிசைப்படுத்துங்கள். அந்தப் படங்களில் இடம்பெற்றுள்ள ஹீரோயின் என்று அழைக்கப்படும் நபர்களின் கதாபாத்திரங்களை வெட்டித் தூக்குங்கள். அப்படி ஹீரோயின்கள் கழட்டிவிடப்பட்ட அந்தப் படங்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு எந்தச் சிக்கலும் வர வாய்ப்பு இல்லை. முன்பு எப்படி படம் முழுமையாக இருந்ததோ அதேபோல் இப்போதும் நிறைவை நிச்சயம் தரும். இதே முறையை செல்வாவின் படங்களில் கையாண்டு பாருங்கள். ரிசல்ட் உல்டாவாக இருக்கும். அதான் செல்வராகவன்!

*

மயக்கம் என்ன... 'வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபர்' ஆகத் துடிக்கும் ஓர் இளைஞனின் முயற்சி - வீழ்ச்சி - எழுச்சி. இப்படி மிக எளிதாக படத்தைச் சுருக்கிப் பார்த்தவர்களும் உண்டு. நம் சினிமாவில் கதை சொல்லும் படைப்பாளிகளில் பலரும் தங்கள் கதாபாத்திரங்களின் பணி - தொழில்களை அழுத்தமாகவும் முழுமையாகவும் பதிவு செய்வது இல்லை. ஆனால், செல்வராகவனின் படங்களில் தொழில் சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். குறிப்பாக, 'மயக்கம் என்ன' படத்தை எடுத்துக்கொண்டால், ஃபோட்டோகிராஃபி துறை குறித்த நல்ல அறிமுகத்தைத் தரும். பிடித்த வேலையை ரசித்து மயங்கிச் செய்தால், எந்தத் துறையாக இருந்தாலும் வேற லெவல் போகலாம் என்றும் சொல்வார் செல்வா!

நீங்கள் செல்லும் திருமண நிகழ்ச்சிகளில் எப்போதாவது ஃபோட்டோ எடுக்கும் இளைஞர்களைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்களில் பலரும் தற்காலிகமாக வயிறு நிரப்பிக்கொள்வதற்காக அந்த வேலையைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். பல நேரங்களில் பாக்கெட் மணிக்காக பகுதிநேர வேலையாக அதைச் செய்பவர்களும் உண்டு. அந்த இளைஞர்களின் மனதில் ஒரு வெறித்தனமான புகைப்படக் கலைஞன் ஒளிந்துகொண்டிருப்பான். அதையும் செல்வராகவன் போகிற போக்கில் பதிவு செய்திருப்பார். ரசிகர்களில் பலரும் திருமண விருந்துக்குச் சென்றவர்கள் போல் அந்த போட்டோகிராஃபர் மீது கவனம் கொள்ளாமல் திரும்பியிருப்போம். அடுத்து நீங்கள் செல்லும் திருமண நிகழ்வுகளில் இளம் போட்டோகிராஃபர்களை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

image


ஒவ்வொரு காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் ஸ்கோர் பண்ணக்கூடிய திரைக்கதையைக் கொண்டது 'மயக்கம் என்ன'. ஆனால், ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் கேமரா கொஞ்சமும் தூக்கலாக வேலை செய்திருக்காது. கதை, கதாபாத்திரங்கள் மீதான கவனம் துளியும் சிதறாதபடி கேமரா சற்றே அண்டர்ப்ளே செய்திருக்கும். ஒரு படத்தில் எந்த ஒரு தனிப் பிரிவும் தனிப்பட்ட முறையில் அதிகம் கவனம் ஈர்த்து பாராட்டுகளைக் குவித்தால், அது பக்காவான சினிமா அல்ல. சினிமா என்பதே பல்வேறு விதமான பிரிவுகளின் ஒட்டுமொத்த கூட்டுப் படைப்பு. அதை ராம்ஜியும் செல்வாவும் நன்றாக உணர்ந்து செயல்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். அதேபோல், எந்த ஒரு கதையும் களமும் அதற்கே உரிய வண்ணங்களைக் கொண்டிருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் வண்ணத்தை ஒதுக்கிவிட்டுப் பார்க்க முடியாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. திரை மொழியில் வண்ணங்களைப் பயன்படுத்துத்துதல் என்பதும் மிகவும் முக்கியமானது. ஒரு திரைப்படத்தை ரசிக்கும்போது, கதைக்களத்தையொட்டிய தனி 'மூடு' கிரியேட் பண்ணுவதில் கலர் டோனுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில், இந்தப் படத்தில் துள்ளலும் துடிப்புமான முற்பகுதியில் 'பளீச்' வண்ணங்கள் நிறைந்திருக்கும்; இரவுக் காட்சிகளிலும் வெளிச்சம் பரவியிருக்கும். துயரங்கள் உச்சத்தில் இருக்கும் இடைப்பகுதியில் இருள் சூழ்ந்திருப்பதைக் கண்டுணரலாம். இறுதிப் பகுதியில் மீண்டெழும் தருணங்கள் என்பதால் மீண்டும் கலர்ஃபுல் காட்சிகளைக் காண முடியும். இவை அத்தனையும் நம் கண்களை எந்த விதத்திலும் உறுத்தாது என்பதும் தெளிவு.

இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 'சினிமாவுக்குப் பாடல்களே தேவையில்லை. தமிழ் சினிமாவில் பாடல்கள் வேண்டாம்' என்று வலியுறுத்துவோருக்கு, இந்தப் படத்தில் இடம்பெறும் 'பிறை தேடும்' பாடலைப் போட்டுக் காண்பிக்க வேண்டும். திரைப்பாடல் என்பது நம் சினிமாவின் தனித்துவம். அதைப் பயன்படுத்தும் விதத்தில் திரைமொழியை உள்ளடக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமே தவிர, வெறுமனே வெட்ட வேண்டும் என்று கூறுவது, உலக சினிமாவில் அதிகம் மூழ்குவதால் கிடைத்த பாதக விளைவுகளுள் ஒன்று.

*

கார்த்திக் கதாபாத்திரம்தான் ப்ரொட்டாகனிஸ்ட் என்ற கோணத்தில் மட்டும் அல்ல, யாமினியை ப்ரொட்டாகனிஸ்டாக பாவித்தும் 'மயக்கம் என்ன' படத்தை ரசிக்கலாம். நம் சமூகத்தில் உள்ள பெரும்பாலான பெண்களின் பிரதிநிதியாகவே யாமினியைப் பார்க்க முடியும்.

காதலையே எடுத்துக்கொள்வோம். தான் காதலைத் தேர்வு செய்து முடிவு எடுப்பதே யாமினிதான். காதலை வெளிப்படுத்துவது தொடங்கி, திருமணம் வரை கொண்டு செல்வது வரை எல்லாமே யாமினிதான். நிஜத்திலும் ஏறக்குறைய அப்படித்தான். உங்கள் அனுபவத்தையும், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் அனுபவத்தையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். திருமணம் வரை சென்ற காதலாகட்டும், அந்த பந்தத்தை எட்டாத காதலாகட்டும் பெண்களின் பங்குதான் மிகுதியாக இருக்கும். பெரும்பாலும் முடிவு எடுக்கும் சக்தியாகவே அவள் இருக்கிறாள். திருமணம் என்ற கட்டத்தைத் தாண்டும்போதுதான் எல்லாம் மாறுவதை உணரலாம்.

சுந்தர் மீது சுத்தமாக ஈடுபாடு காட்டாமல் கார்த்திக்கை கவனிப்பது தொடங்கி, அவனை முழுமையாகப் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்வது வரை யாமினியின் ஆதிக்கம்தான் ஓங்குகிறது. இங்கே இன்னொரு வகைப் பெண்களும் கார்த்திக்கின் தங்கை கதாபாத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். சைக்கிள் செல்லத்தக்க பாதையில் ஆட்டோவை இயக்கும் திறன் படைத்த பெண்கள் அவர்கள்.

ஏமாற்றத்தின் வலியால் ஏற்பட்ட விபத்தில் மனச்சிதைவுக்கு ஆளான ஒரு புகைப்படக் கலைஞனை அவனது மனைவி மீட்டெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகள், ஒரு தாய் தன் குழந்தையை வளர்க்க எடுத்துக்கொள்ளும் சிரமங்களைக் காட்டிலும் அதிகமானது. அவனை மனிதனாக மட்டுமல்ல; மீண்டும் கலைஞனாகவே உருவாக்க வேண்டும் என்று உறுதியுடன் போராடும் யாமினி உண்மையிலேயே இரும்பு மனுஷி. அதேநேரத்தில், ஒரு வலுவான காரணத்துக்காக கார்த்திக்கிடம் பேசாமல் தண்டிக்கத் தொடங்குவதாகட்டும், அதை இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் நீண்டகாலம் தொடர்வதாகட்டும் யாமினியின் உறுதிப்பாடுதான் பெண்கள் வசமுள்ள உண்மையான கெத்து.

image


வாழ்க்கை வாடிப்போன சூழலில், தன் மேல் 'ஆதரவு'க்கரம் போடும் கார்த்திக் நண்பனை யாமினி அணுகும் விதம் அட்டகாசம். அந்த இடத்தில் கொந்தளிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, தப்பு செய்த குழந்தைக்கு எடுத்துச் சொல்லும் தாய் போல பக்குவமாக பேசிவிட்டு நகர்வார் யாமினி. பிறகு, இருவரும் சந்திக்கும்போது அவனிடம் குற்ற உணர்ச்சி மாறாமல் இருப்பதும், எல்லாவற்றையும் மறந்து இயல்பாகப் பேசுபவளாக யாமினியும் இருப்பதை கவனிக்கலாம்.

தமிழும் தமிழ் சினிமாவும் தெரியாத திரைப்பட ரசிகர் ஒருவர் சப்-டைட்டிலுடன் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால், அவருக்கு யாமினிதான் புரொட்டாகனிஸ்டாகத் தோன்றக்கூடும். 'ஒரு கலைஞனைக் கண்டுகொள்ளும் ஒருத்தி, அவன் வசம் காதல் வயப்பட்டு கரம்பிடிக்கிறாள். எழ முடியாத அளவுக்கு வீழும் அந்தக் கலைஞனை உலகப் பிரபலம் ஆக்குகிறாள்.' - இப்படித்தான் இந்தப் படத்தின் ஒன்லைன் கதையை உணரக்கூடும்.

ஆனால், தமிழில் இப்படம் வெளிவந்தபோது ஆக்கட்டும், இப்போது ஆக்கட்டும்... தனுஷ் படம் என்கிற ரீதியில்தான் பார்க்கப்படுகிறது. இதன் பின்னால் வர்த்தகம் சார்ந்த பார்வை இருந்தாலும், தனுஷ் கதாபாத்திரத்தின் கோணத்தில்தான் 'மயக்கம் என்ன' படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குவார் செல்வா. இப்படம் 'உமன் சென்ட்ரிக்' வகை என்பதை மறைப்பதற்கு கார்த்திக் கதாபாத்திரத்தை வேண்டுமென்றே முன்னிலைப்படுத்துகிறாரோ என்ற கேள்வியும் எழலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். இந்தப் படம் மட்டுமல்ல; செல்வாவின் பல படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள்தான் கதையில் ஆதிக்கம் செலுத்தும். ஆனால், ஆண் கதாபாத்திரங்களே வெளிப்படையாக முன்னிலைப்படுத்தப்படும். இது நியாயமா?

செல்வாவின் இந்த அணுகுமுறையையும் நம் சமூகத்தை விமர்சிக்கும் அணுகுமுறையாகவே பார்க்கிறேன். ஒரு குடும்பம் நல்லபடி இயங்குவதற்கு, அதில் அங்கம் வகிக்கும் பெண்கள் சம அளவிலாலோ அல்லது அதற்கு அதிகமாகவோ பங்கு வகிக்கும்போது, அவர்களின் பங்களிப்பு வெகுவாக மறைக்கப்பட்டு நம் சமூகத்தில் பெரும்பாலும் ஆண்களே முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். உண்மை நிலை இப்படி இருக்க, சினிமாவில் மட்டுமே பெண்களை உயர்த்திக் காட்டுவது என்பது அவர்களுக்கு செய்யும் அநீதி.

ஆம், புனிதாக்கள் அதிகம் வாழும் சமூகத்தில் யாமினிகள் மீது மட்டும் வெளிச்சத்தைப் பாய்ச்சுவது நேர்மையான செயல் அல்ல என்பது நம் செல்வராகவனுக்குத் தெரியும்!

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு - உத்வேக 'வெள்ளி'த்திரை | சத்த வித்தகர்களால் சாத்தியமான 'விசாரணை'!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக