பதிப்புகளில்

தகவல் திங்கள்: ஊழியர்கள் பார்வையில் ஸ்டார்ட் அப் கதைகள்!

26th Mar 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, வெற்றி பெற்ற கதை எல்லாமே சுவாரஸ்யமானவை தான். இவ்வளவு ஏன் ஸ்டார்ட் அப்கள் ஏன் தோல்வி அடைந்தன என்று தெரிந்து கொள்வதும் கூட ஒரு பாடம் தான். இதற்கேற்பவே ஸ்டார்ட் அப் உலகில் இருந்து கதைகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஆனால் எல்லாமே நிறுவனர்களால் சொல்லப்படுகின்றன. இல்லை அவர்களை ஆதரித்த முதலீட்டாளர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன.

ஸ்டார்ட் அப் கதைகளை வேறு யார் சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா?

image


இந்த கேள்விக்கான பதிலை வழங்கும் வகையில் அஜய் ரஜினி 'எம்பிளாயிஸ் ஒன்லி' எனும் இணைய நேர்காணல் தொடரை துவக்கியிருக்கிறார்.

ஸ்டார்ட் அப் கதைகளை சொல்லும் தொடர் தான் என்றாலும், இதன் பின்னே ஒரு அழகான வேறுபாடு இருக்கிறது. வழக்கமாக எல்லோரும் செய்வது போல நிறுவனர்கள் மூலம் ஸ்டார்ட் அப் கதையை சொல்ல வைக்காமல், அந்த நிறுவனங்களின் பின்னே இருக்கும் ஊழியர்கள் வாயிலாக அதை தெரிந்து கொள்ள வழி செய்வது தான் இந்த நேர்காணல் தொடரின் நோக்கம்.

ஸ்டார்ட் அப்களுக்கு நிறுவனர்களும், முதலீட்டாளர்களும் எந்த அளவு முக்கியமோ அதே அளவு ஆரம்ப ஊழியர்களும் முக்கியம். ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கனவுகளையும், லட்சியங்களையும் முன்னெடுத்துச்செல்வதில் அவற்றில் முதலில் இணையும் ஊழியர்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அதனால் தான் பேஸ்புக், கூகுள் போன்ற மெகா நிறுவனங்களின் ஆரம்ப கால ஊழியர்கள் பற்றி மதிப்புடன் பேசப்படுகிறது. இந்த நிறுவனங்களில் முதலில் பணிக்கு சேர்ந்தவர்கள் விலக நேரும் போது அந்த நிகழ்வு தொழில்நுட்ப உலகில் செய்தியாகவும் இது தான் காரணம்.

அதிலும் இப்போது ஸ்டார்ட் அப் அலை உள்ளூரிலும், உலக அளவிலும் வீசிக்கொண்டிருப்பதால் அவற்றின் கதைகளை பதிவு செய்வதும் முக்கியமாகி இருக்கிறது.

ஆனால் பெரும்பாலும் நிறுவனர்கள் தான் நாயகர்களாக முன்னிறுத்தப்படுகின்றனர்.

அதனால் தான் அஜய் ரஜினி, ஸ்டார்ட் அப் கதைகளை அவற்றின் முதல் ஊழியர்கள் கொண்டு சொன்னால் என்ன என்று கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார். இதற்கு செயல்வடிவம் கொடுத்து எம்பிளாயிஸ்ஒன்லி இணையதளத்தை துவக்கியிருக்கிறார். இந்த தளம் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவன அனுபவங்களை அவற்றின் முதல் ஊழியர்களுடான வீடியோ நேர்காணல் மூலம் அவர் பதிவு செய்யத்துவங்கியிருக்கிறார். ரீபல் மவுஸ் (Rebelmouse) எனும் புதிய நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு துணைத்தலைவரான மேகன் பெரி நேர்காணல் இந்த வரிசையில் முதலாவதாக வெளியாகி இருக்கிறது.

ஸ்டான்போர்ட் பல்கலை பட்டதாரி மற்றும் சமூக ஊடக செல்வாக்கு அளவிடல் நிறுவனமாக கிளவுட் (Klout) ஆகியவற்றில் பணியாற்றியுள்ள மேகன் பெரி, பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் தங்கள் உள்ளடக்கத்தை சமூக ஊடக பரப்பில் வெளியிடுவதற்கான சேவையை வழங்கி வரும் ரீபல் மவுஸ் நிறுவனம் பற்றிய தனது அனுபவத்தை இந்த நேர்காணலில் ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

image


புதுமையான முயற்சி தான் அல்லவா!

நோக்கம், செயல்பாடு, சேவை/தீர்வுகள் என எல்லாவற்றிலும் புதுமையான முறையில் செயல்படும் புதுயுக நிறுவனங்களான ஸ்டார்ட் அப்களை அணுகும் விதத்திலும் புதுமை தேவை தான் அல்லவா? அதை தான் அதை ரஜனி செய்திருக்கிறார்.

தொழில்முனைவோர், முதலீட்டாளர் என பல முகங்களை கொண்டுள்ள இவரே ஒரு ஸ்டார்ட் அப் ஆர்வலர் தான். ஜேசனின் இந்த வார ஸ்டார்ட் அப் மற்றும் பவுண்டர் லைன் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பவன், சோஷியல் கேபிடல் உள்ளிட்ட செய்தி மடல்களின் தீவிர வாசகன் என்று அஜய் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். மற்றவர்கள் நிறுவனங்களை துவங்கிய கதைகளை தெரிந்து கொள்வது ஊக்கம் அளிக்கக்கூடியது என்றும் அவர்கள் எதிர்கொண்ட தடைகள் பற்றி அறிந்து கொள்வது சிறந்த படிப்பினையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

பலரும் அறிந்திருப்பது போல, இவை அனைத்துமே நிறுவனர்/சி.இ.ஓ அல்லது முதலீட்டாளர் நோக்கிலே வெளியாகி கொண்டிருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஸ்டார்ட் அப் பரப்பில் பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் அனுபவத்தின் அடிப்படையில்,வேறு வகையான கதைகள் சொல்லப்பட இருப்பதை உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் ஈடுபட்ட முதல் ஊழியர்கள் மூலம் இந்த கதைகளை சொல்லும் போது அவை சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்கிறார். மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்த பரப்பில் என்ன நடக்கிறது என அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மீடியம் வலைப்பதிவில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நம்பிக்கையுடன் அவர் எம்பிளாயிஸ் ஒன்லி தளத்தை நிறுவி முதல் ஊழியர் நேர்காணலையும் வெளியிட்டிருக்கிறார். இந்த வரிசையில் தொடர்ந்து ஸ்டார்ட் அப் ஊழியர்களின் நேர்காணல் வெளியாக உள்ளது. உங்கள் அபிமான ஸ்டார்ட் அப்களுக்கு பின்னே உள்ள மனிதர்கள் பற்றிய புதிய தொடர் எனும் வர்ணனையுடன் இதை வழங்கி வருகிறார்.

இதற்காக அஜய் அமைத்துள்ள இணையதளம் எளிமையாக ஆனால், தொடரின் தன்மை மற்றும் நோக்கத்தை உணர்த்தும் வகையில் கச்சிதமாக உள்ளது. முகப்பு பக்கத்தின் நடுவே தொடருக்கான அறிமுகம் மற்றும் வீடியோ இணைப்பு இடம்பெற்றுள்ளது. இடது பக்கத்தில், தொடருக்கான விளக்கத்திற்கான இணைப்பு மற்றும் நிறுவனரின் அறிமுக குறிப்பு இடம்பெற்றுள்ளது.

image


இந்த ஐடியா பிடித்திருந்தால், நீங்களும் கூட இந்த வரிசையில் அடுத்ததாக நேர்காணல் செய்யப்பட வேண்டியவரை பரிந்துரைக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அஜய் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் அவரது இணையதளம் (http://www.ajayrajani.com/ ) பக்கம் எட்டிப்பார்க்கலாம். எளிமையான வடிவமைப்புடன், உள்ளடக்கத்தை பளிச்சென தெளிவாக முன்வைக்கும் தளமாக இது சபாஷ் போட வைக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நினைவு தெரிந்த காலம் முதல் ஸ்டார்ட் அப்களால் ஈர்க்கப்பட்டவன் என்று தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளவர், இப்போது செய்து கொண்டிருக்கும் பணி, அடுத்த திட்டம், ஆய்வில் இருப்பவை என வரிசையாக குறிப்பிட்டிருக்கிறார். அதே வரிசையில் டிவிட்டர் மற்றும் வலைப்பதிவுக்கான இணைப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

ஸ்டார்ட் அப் பயணத்தை, மாறுபட்ட கோணத்தில் அதன் ஊழியர்களை கொண்டு பின் தொடர வழி செய்யும் அஜய்யின் இந்த முயற்சி, இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகள் கண்டறியும் சேவையான பிராடக்ட் ஹண்ட் இணையத்தளத்தில் வெளியாகி பரவலாக கவனத்தை ஈர்த்து, கைத்தட்டல் வாங்கியுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவன வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்வதில் எல்லோருக்கும்ம் ஆர்வம் இருக்கவே செய்கிறது. ஆனால் எற்கனவே பலரும் இதை செய்து வருவதால், ஸ்டார்ட் அப் தொடர்பான புதிய தொடரை துவங்கியிருந்தால் அது பத்தோடு பதினொன்றாகி இருக்கும். மாறாக அஜய், புதிய கோணத்தில் அணுகி கவனத்தை ஈர்த்திருக்கிறார். தனது தொடரை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு , ஊழியர்களின் பார்வையில் ஸ்டார்ட் அப்கள் என வலுவான காரணம் ஒன்றை அளித்திருக்கிறார். அதே நேரத்தில் ஸ்டார்ட் அப் ஊழியர்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்க நினைப்பவர்களும் சரி, ஸ்டார்ட் அப் துறையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் எனும் கேள்வியுடன் இருப்பவர்களும் சரி, அஜய் ரஜினியின் இந்த முயற்சி மூலம், வழக்கமான பாதையில் இருந்து விலகி மாறுபட்ட முறையில் யோசித்தால் புதிய பாதை காணலாம் எனும் நம்பிக்கை பெறலாம்!

தகவல் திங்கள் தொடரும்... 

முந்தைய பதிவுகள்:

தகவல் திங்கள்: மாற்று வரைபடங்கள் காட்டும் உலகம்!

விளம்பரம் இல்லா உலகம் எது?
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக