பதிப்புகளில்

இந்தியாவில் தயாராகும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்!

YS TEAM TAMIL
25th Mar 2017
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

1997ஆம் ஆண்டின் துவக்கத்தில் நான் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மத்திய தலைமை தணிக்கை அலுவலர் விமர்சனம் ஒன்றை எழுப்பியிருந்தார். 1977 வாக்கில் வாக்குப் பதிவிற்கான மின்னணு இயந்திரங்களை உருவாக்குமாறு மத்திய அரசு இந்திய மின்னணு நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து பாரத் மின்னணு நிறுவனமும் இந்த முயற்சியில் பங்கேற்றது. 

இந்திய வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் ரூ. 75 கோடி மதிப்புள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. 1982-ல் இந்த இயந்திரங்கள் கேரள மாநிலத்தில் 50 வாக்குப்பதிவு மையங்களில் சோதனை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சட்டரீதியான பிரச்சினைகள் எழுந்ததும் இந்த இயந்திரங்களை மேலும் அதிகமாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டன.

image


பின்னர் சிக்கிம் மாநிலத்தில் சில சிறிய தொகுதிகளில் அவற்றைச் செயல்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இந்த மகத்தான கருத்தாக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான உந்துதலோ அல்லது விருப்பமோ அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கவில்லை என்றே தோன்றியது.

இதற்கென செலவிடப்பட்ட பணம் வீணாகுமாறு விடப்பட்டது என மத்திய தலைமை தணிக்கை அலுவலர் தேர்தல் ஆணையத்தை விமர்சித்தார். ஆணையம் மீதான இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. இந்தப் பிரச்சினையை நாங்கள் ஆய்வு செய்தோம். இதை முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவெடுத்து, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது என தீர்மானித்தோம். 

நானே நேரடியாக ஜெய்ப்பூர் நகருக்குச் சென்றேன். அங்கு பொதுமக்கள் அதிகமாகக் கூடும் சந்தைப் பகுதியில் இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்துவிட்டு, கடைக்கு வந்த குடும்பத்தலைவிகளிடம் அவற்றை முயற்சித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் அனைவருமே மிகுந்த வெட்கத்துடன் என்னிடம் அந்த இயந்திரத்தின் செயல்பாடு பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். 

மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த இயந்திரங்களை கிராமங்களில் பயன்படுத்தக் கூடாது; ஏனெனில் கல்வியறிவில்லாத கிராமப்புற மக்களால் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்று கூறினார். இந்த இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது; படித்தவர்கள், படிக்காதவர்கள் ஆகிய இருபிரிவினருமே பயன்படுத்தும் வகையில்தான் அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நான் அவரிடம் கூறினேன்.

எப்படியிருந்தாலும், காகித அடிப்படையிலான வாக்குச்சீட்டிலும் கூட பெயர், கட்சியின் சின்னம் போன்றவை இருப்பதோடு, தேர்வு செய்வதைக் குறிப்பிடும் வகையில் பெருக்கல் குறியும் அதில் இருந்தது. வாக்குப் பதிவு இயந்திரத்திலும் இவையேதான் இருந்தன என்பதோடு, தேர்வு செய்வதைக் குறிப்பிடுவதற்காக பெருக்கல் குறியை இடுவதற்குப் பதிலாக நாம் பொத்தானை அமுக்குகிறோம்.

மேலே குறிப்பிட்ட இந்த மூன்று மாநிலங்களிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நவம்பர் 1997 தேர்தலில் நாங்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தினோம். இந்தச் சோதனை முயற்சி மகத்தான வெற்றியும் பெற்றது. இதைத் தொடர்ந்து மாநில அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் நான் தீவிரமாக இறங்கினேன். எங்கு பார்த்தாலும் மக்கள் இது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தில்லி தேர்தல் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது சாஹிப் சிங் வர்மாதான் முதல்வராக இருந்தார். இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மிக மோசமாகத் தோல்வியுற்றது. முதல்முறையாக ஷீலா தீக்‌ஷித் பதவிக்கு வந்தார். இருந்தாலும் ஒரேஒரு வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் முடிவு குறித்துக் கூட பா.ஜ.க. எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. நியாயமாக நடந்து கொள்வதற்கான ஒரு சோதனையாகவே அது இருந்தது. 

மிகவும் வித்தியாசமான இந்த இயந்திரத்தின் நியாயத்தன்மையை அரசியல் கட்சிகள் உணரத் துவங்கின. எந்தவொரு வாக்குப் பெட்டியும் திருடுபோகவில்லை; வாக்குப் பெட்டிக்குள் (வாக்குச் சீட்டுகளை செல்லாததாக ஆக்குவதற்காக) மை ஊற்றப்படவில்லை; வாக்குகள் எதுவும் வீணாக்கப்படவும் இல்லை. வேகமான வாக்கு எண்ணிக்கையின் விளைவாக மதிய நேரத்திற்குள்ளேயே தேர்தல் முடிவுகள் வெளியாகின. 

இந்தியத் தேர்தல்களில் வழக்கமாக இருந்துவந்த மோதல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், நிர்ப்பந்தங்கள் ஆகிய அனைத்தையும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அகற்றிவிட்டதையும் நான் கண்டேன். இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் அதிசயம் அதுதான். இளம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நான் காகித அடிப்படையிலான தேர்தலை நடத்தியிருக்கிறேன். அந்த முடிவுகளை யாருமே ஏற்றுக் கொண்டதில்லை. நாட்கணக்கில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டே இருந்தது. 

எனக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் வாக்குச் சீட்டுகளை கலைத்துப் போட்டு, மீண்டும் கட்டுகளாகக் கட்டி, அவற்றை எண்ணுவதற்கு ஒரு வாரம் எடுத்துக் கொண்டார். நாட்கணக்கில் அரசு அதிகாரிகள் இந்த வேலைகளில் சிக்கிக் கிடக்க நேரிட்டது. அந்த நாட்களில் எவ்வளவு புகார்களை நான் கேட்க நேர்ந்தது என்பதும் எனக்கு நன்றாகவே நினைவில் உள்ளது.

நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதை மாநிலங்கள் முழுவதிலும் அவற்றைப் பயன்படுத்துவது, ஒரே நாள் தேர்தலில் பல மாநிலங்களிலும் அவற்றை பயன்படுத்துவது என மிகவும் துரிதமாக விரிவாக்கினோம். இதில் தோல்வியுற்றவர்கள் சந்தேகப்படுவதும், சவால்களை எழுப்புவதும் இயற்கையானதுதான். இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட 52 அரசியல் கட்சிகளுடனும் நான் கூட்டங்களை நடத்தினேன். அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டேன். 

முக்கியமான சில அரசியல் தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நானும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டேன். என்றாலும் அவர்கள் தோல்வியடைந்தபோது குறை கூறினார்கள். இந்தப் புகார்கள் இரண்டு வகையாக இருந்தன. இந்த இயந்திரங்களின் தொழில்நுட்பத்தை விருப்பம்போல மாற்றியமைக்க முடியும் என்பது முதலாவது. இதில் தோல்வியுற்றவர்கள், இந்திய மின்னணு நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநர்கள், பொறியாளர்கள் ஆகியோரை ஒன்றாக அழைத்து அவர்களின் சந்தேகங்களைப் போக்கினேன். 

இரண்டாவது புகார் சட்டபூர்வமானதாக இருந்தது. மறைந்த ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான புகாரை எழுப்பினார். மிக நீண்ட, முழுமையான விசாரணைக்குப் பிறகு இந்தப் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், சிறிது காலம் கழித்து தான் எழுப்பிய புகார் குறித்து நான் மனக்கசப்பு அடைந்தேனா என்று அவர் என்னைக் கேட்கவும் செய்தார். இல்லையில்லை. தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் இதுகுறித்துப் பிரச்சாரம் செய்து வரும்போது, எங்களை எதிர்த்து புகார் கொடுப்பதற்கான உரிமையும் மக்களுக்கு உள்ளது என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

பின்னாட்களில் கர்நாடகா, தில்லி, கேரள மாநில உயர்நீதிமன்றங்களிலும் மற்ற இடங்களிலும் கூட ஆணையத்திற்கு எதிராகப் புகார்கள் எழுப்பப்பட்டன. இவை அனைத்துமே வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான வாதத்தில் தோல்வியடைந்தன. வாக்குப் பதிவு இயந்திரத்தால் இந்தியக் குடிமக்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றங்களும் பெருமளவிற்குச் செயல்பட்டன.

இந்தச் செயல்முறை நிலைபெற்றுவிட்டதோடு, உலகமே பொறாமையோடு பார்க்கும் ஒன்றாகவும் மாறியது. தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற வகையில் என்னிடம் கனடாவில் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் காண்பிக்கப்பட்டது. நான் அதை வாங்குவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். உங்கள் இயந்திரம் மிகவும் விலை அதிகமானதாக, உங்கள் நாட்டு மக்களுக்கே மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது என்று நான் அவர்களிடம் கூறினேன். 

நமது இந்திய மின்னணு நிறுவனம், பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவற்றுக்குப் பெருமை சேர்க்கும்படியான நமது வாக்குப்பதிவு இயந்திரம் மிகக் குறைந்த செலவுடையது; எளிதாகப் பயன்படுத்தக் கூடியது; சிறப்பாகச் செயல்படுவது. அதனை அவ்வளவு எளிதாக சேதப்படுத்திவிட முடியாது. அவற்றை நாங்கள் உயர்ந்த மலைப்பகுதிகளுக்கும், பாலைவனப்பகுதிகளுக்கும் ஒட்டகங்களின் மீதும், யானைகளின் மீதும், ஆறுகளைக் கடந்தும் எடுத்துச் சென்றோம். எந்தவகையில் அவை செயல்படத் தவறவில்லை. உலகத்திற்கு இது நன்றாகத் தெரியும். இந்த சாதனைக்காக உலகம் இந்தியாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதைக் கெடுத்து விடாதீர்கள்.

1997 நவம்பரில் முதல்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்திய பிறகு இருபது ஆண்டுகள் கடந்து விட்டன. எண்ணற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நாம் நடத்தியிருக்கிறோம். அனைத்துக் கட்சிகளுமே வெற்றி பெற்றிருக்கின்றன; தோல்வி அடைந்திருக்கின்றன. எனினும் தோல்வி அடையும்போது புகார் எழுப்புவது என்பது இப்போது எழுந்துள்ள சச்சரவிற்கு முன்பு கிட்டத்தட்ட முழுமையாகவே மறைந்து போயிருந்தது. 2009 ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறுகள் ஏதும் இருக்குமானால் அதைக் காட்டுவதற்கென மீண்டும் அனைவரையும் அழைத்தது. ஆனால் இந்த சுயம்வரத்தில் யாருமே வெற்றி பெறவில்லை.

தற்போது எழுந்துள்ள விரிவான, மேலோட்டமான புகார்களைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிக மோசமாகத் தோல்வியடைந்தவர்கள் இந்தப் புகார்களை எழுப்பியுள்ளார்கள் என்பதையும் நான் காண்கிறேன். வரவிருக்கும் நகரமன்றத் தேர்தல்களில் தோல்வியுறுவோம் என்று அஞ்சி ஒருவேளை முன்னறிவிப்பு செய்வதாகவும் கூட இருக்கக் கூடும். நாட்டின் தேர்தல் முறையில் தேசிய அளவில் மகத்தான மேம்பாட்டைக் கொண்டுவந்த இதை எதிர்த்து புகார் சொல்வதை மிகச் சாதாரணமாக, இலகுவாக செய்துவிடலாகாது. என்றாலும், நாம் ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பில் இருக்கிறோம். எனவே சட்டபூர்வமாகவோ அல்லது தொழில்நுட்ப ரீதியாகவோ கேள்விகள் எதுவும் எழுப்பப்பட்டால் தேர்தல் ஆணையம் அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டியதும் அவசியமாகும். 

எந்தவிதமான சந்தேகத்தையும் அகற்றும் வகையில் எந்தவிதமான சட்டபூர்வமான சவாலையும் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம்பக்கூடிய வகையிலான தொழில்நுட்பரீதியான கேள்வி எதையும் எவரும் கொண்டு வந்தாலும் அதையும் கூட ஆய்வு செய்வதற்கு ஆணையம் தயாராக இருக்கும். இந்திய தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில் இதுதான் எப்போதுமே அதன் கொள்கையாகவும் நடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: டாக்டர். மனோகர் சிங் கில், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக