பதிப்புகளில்

'மரங்களின் மருத்துவர்' – பெங்களூருவை பசுமையாக பரமாரிக்கும் விஜய் நிஷாந்த்!

YS TEAM TAMIL
12th Mar 2018
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

ஒரு நகரில் எத்தனை மரங்கள் உள்ளது என்பதை ஒருவர் எவ்வாறு தெரிந்துகொள்வது? மரங்களை எண்ணி கண்டுபிடிக்க முடியுமா? எத்தனை மரங்கள் வெட்டப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியுமா? நகரை பசுமையாக பராமரிக்கப்படுவதை எவ்வாறு உறுதிசெய்வது?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் பெங்களூருவைச் சேர்ந்த விஜய் நிஷாந்த் இடம் பதில்கள் உள்ளது.

image


தோட்ட நகரம்

விஜய் பெங்களூருவிற்கு தெற்கே வெவ்வேறு வகையான பசுமையான மரங்களால் சூழப்பட்ட பகுதியான ஜெயநகரைச் சேர்ந்தவர். இவர் விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் நகர்புற பாதுகாவலர். மரங்களின் வகைகளைக் கண்டறிந்தது, அதிலிருந்து பழங்களை பறித்தது போன்ற சிறு வயது சம்பவங்களை நினைவுகூறுகிறார். ஒரு காலத்தில் பெங்களூருவிற்கு இந்தியாவின் ’தோட்ட நகரம்’ என பிரபலமாக பெயர் சூட்டப்பட்டது குறித்து பகிர்ந்துகொண்டார்.

விஜயின் உடனிருந்தோரும் வழிகாட்டிகளும் மரங்களை பாதுகாக்கவேண்டும் என்றும் மரங்களை நடவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் அவருக்கு சிறு வயதிலேயே இயற்கை மீதும் அதை பாதுகாப்பதிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. விஜய், ஹரிணி நாகேந்திரா அவர்களின் வழிகாட்டலுடன் Atree-ல் பயிற்சியாளராக பணியாற்றினார். மேலும் ப்ருஹத் பெங்களூரு மஹாநகர பாலிகே (BBMP) ஃபாரஸ்ட் செல்லில் பத்தாண்டுகளுக்கு மேலாக தன்னார்வலராக இருந்து வருகிறார்.

நகரம் முழுவதும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதாகவும் அவ்வாறு வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்பதையும் உணர்ந்தார். 

“இதை கண்காணிக்கும் முறை சரியாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை புரிந்துகொண்டேன். பொறியியல் படிப்பை விடுத்து என் நண்பரின் நிறுவனத்தில் சேர்ந்தபோது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைத்தது. வீடுகள் சம்பந்தப்பட்ட வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினேன்,” என்றார் விஜய்.

மென்பொருள் பணியில் இணைந்திருந்த குறுகிய காலத்தில் கிடைத்த நிபுணத்துவத்தையும் நுட்பங்களையும் பயன்படுத்தி மரங்களை கண்காணிக்க விருக்ஷா .காம் (Vruksha.com) என்கிற வலைதளத்தை உருவாக்கினார். ரவி குமார் என்கிற ஒரு நண்பரின் உதவியுடன் 2010-ம் ஆண்டு விருக்ஷாவை நிறுவினார். ரவி அவருக்கு நிதி உதவி செய்தார். விருக்ஷாவின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஷரீஃப் எஸ் ஆவணப்படுத்துவதற்கான செயலியையும் தளத்தையும் உருவாக்கினார். இவர் தொழில்நுட்பப் பின்னணி கொண்டவர். ஜிஐஎஸ் சிஸ்டம் மற்றும் மின் வணிக தீர்வுகள் பிரிவில் திறன் மிக்கவர். 

image


விஜய் தனது நண்பர்களுடன் இணைந்து ஜெயநகரில் தனது வார்டில் 115 மரங்களை அடையாளப்படுத்தி இணைத்தார். இந்த செயல்முறையில் மரங்களின் வகை, உயரம், ஆரோக்கியம் போன்ற முழுமையான மதிப்பீடுகள் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் பிபிஎம்பி இத்திட்டத்தில் ஆர்வம் காட்டினாலும் அரசியல் தலையீடு காரணமாக 2013-ம் ஆண்டு வரை திட்டம் செயல்படுத்த முடியாமல் போனது. விருக்ஷா குழு ஜெயநகர், பைரசந்திரா, பட்டாபிராமன்நகர் ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள மரங்கள் குறித்து மட்டுமே வரைபடம் உருவாக்க முடிந்தது.

”மரங்களின் புகைப்படங்களை பதிவு செய்ய ஒரு ஐபேட் கிடைத்தது. நகரின் தோற்றத்தை 9-ம் நூற்றாண்டிலிருந்து ஆழமாக பதிவு செய்து வரும் தொகுப்பான ’பெங்களூரு தர்ஷனா புக்’கில் இந்த திட்டம் இடம்பெற்றது. இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது."

இன்று நடுத்தர மற்றும் பெரிய மரங்களுக்கு அடையாளமாக பச்சை மரங்களும் மரக்கன்றுகளுக்கு அடையாளமாக மஞ்சள் மரங்களும் மரங்கள் நடுவதற்கு ஏதுவான வெற்றிடங்களுக்கு அடையாளமாக ஆரஞ்சு வண்ண மரங்களும் கொண்ட படத்தை இந்த வலைதளம் அளிக்கிறது. ஜிபிஎஸ் டேட்டாவுடன் ஒவ்வொரு மரத்தின் புகைப்படமும் பதிவு செய்யப்பட்டு அதன் ஆரோக்கியத்திற்கான மதிப்பீடு, அதன் தடிமன், உயரம் போன்ற தகவல்களும் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. நட்சத்திர எண்ணிக்கை மரத்தின் ஆரோக்கியத்தை குறிக்கிறது. விருக்ஷாவின் வரைபடத்தில் உள்ள வெற்றிடங்களில் வெவ்வேறு இடங்களில் என்ன மரங்களை நடலாம் என்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.

image


தற்சமயம் இந்த வலைதளத்தில் நகரின் நான்கு வார்டுகள் மற்றும் ஒரு ஏரி குறித்த தரவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த பகுதியைச் சார்ந்த மரங்கள் மற்றும் அதுவரை நகரில் இல்லாத புதிதாக நடப்பட்டு வளர்க்கப்பட்ட மரங்கள் போன்றவற்றை விருக்ஷா பட்டியலிடுகிறது. தற்சமயம் 85 வெவ்வேறு வகையான மரங்கள் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

விருக்ஷா குழுவினர் மரங்கள் நடப்பட்ட காலகட்டத்தையும் வரைபடமாக்கப்பட்ட காலகட்டத்தையும் வலைதளத்தில் இணைக்கும் பணியில் கடந்த இரண்டாண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவின் மொத்த வார்டுகளிலும் உள்ள மரங்களை வரைபடமாக்க 10 நபர்கள் அடங்கிய குழு 18 மாதங்கள் பணிபுரியவேண்டியிருக்கும் என்றார் விஜய்.

மரங்களை மீட்டெடுத்தல்

மரங்களும் உயிரினங்கள் தான் என்றும் அதற்கென இதயமும் மனதும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் மரங்களின் மருத்துவரான விஜய். சுற்றியிருக்கும் மரங்கள் பல விதமான அழுத்தத்திற்கு ஆளாவதையும் பலவகையான மனித நடவடிக்கைகளால் விபத்திற்கு ஆளாவதையும் கவனித்தார்.

”மரத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான வழிகளை ஆராயத் துவங்கினேன். வரைபடத்தில் நான் இணைத்த மரங்களை சுத்தப்படுத்தி பராமரித்தேன். மரத்திற்கு ஏற்படும் நோய்தொற்றை தடுக்கவோ, காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவோ ஆரஞ்சு எண்ணெய் அல்லது தேன் மெழுகு பயன்படுத்தினேன். ஒரு மாதத்தில் பெரும்பாலான மரங்கள் மீட்கப்பட்டன,” என்கிறார் விஜய்.

நகரில் மரங்களுக்கான கிளினிக்கை நிச்சயம் ஒரு நாள் உருவாக்கப் போவதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் விஜய். மாரத்தள்ளி பகுதியில் இருந்த மரங்கள் சேதப்படுத்தப்பட்டதை பார்த்தபோதுதான் அவருக்கு மரங்களுக்கான கிளினிக்கை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்படத் துவங்கியது. பொதுவாக மரங்களை அழிக்கவோ அல்லது வெட்டவோ மக்கள் ஈயம் அல்லது அமிலத்தைக் கொண்டு மரத்தை சேதப்படுத்துவார்கள்.

image


பெங்களூரு நகரிலும் மாநிலத்திலும் உள்ள மரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களில் விஜய் பங்கேற்கிறார். கர்நாடகா மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1976-ல் முன்மொழியப்பட்ட திருத்தம் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக மரங்களை வெட்ட வழிவகுக்கும் என்பதால் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. விஜய் அதில் பங்கேற்றார். விவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு தேவையான அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த சட்ட திருத்தம் முன்மொழியப்பட்டது.

விஜய் போன்ற பாதுகாவலர்கள் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தது பலனளித்தது. மக்களின் எதிர்ப்பை ஏற்று மாநில அரசாங்கம் இந்த சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் திரும்பப்பெற்றது.

ஆங்கில கட்டுரையாளர் : ஹேமா வைஷ்ணவி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக