நீச்சலடிக்க கடலுக்கு போறீங்களா? அலையில் சறுக்குவதற்கு முன் இந்த செயலியிடம் தகவல் கேளுங்க!

சென்னையில் உள்ள கடற்கரைக்குச் செல்கிறீர்கள? கடல் நீரில் இறங்கி விளையாடலாமா வேண்டாமா சீதோஷ்ண நிலை எப்படி இருக்கிறது என்ற அத்தனை விவரங்களையும் வழங்குகிறது Cleancoast செயலி.
0 CLAPS
0

கடலுக்குப் போறோம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் தொற்றிக் கொள்ளும். கொள்ளை அழகை தன்னகத்தே கொண்டுள்ளதைப் போல ஆபத்தையும் சுழல் அலைகள் மூலம் வைத்துள்ளது கடல். சென்னையில் உள்ள கடற்கரைக்குச் செல்கிறீர்களா?கடலுக்குள் இறங்கலாமா வேண்டாமா என்று போன் பட்டனின் ஒரே க்ளிக் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் இயங்கி வரும் தேசிய கடலோர ஆய்வு மையமான என்சிசிஆர் (National Centre for Costal Research) 'க்ளீன் கோஸ்ட்' (Clean Coast) என்ற செயலியை ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தச் செயலியானது நிகழ் – நேர அடிப்படையில் கடல் நீரின் தன்மை மற்றும் வெப்பநிலையை வரும் நாட்களில் வழங்க உள்ளது. பயனாளரின் இருப்பிடம் அடிப்படையில் அருகில் இருக்கும் கடல் எது என்றும் அவை பற்றியத் தகவல்களையும் அளிக்கும்.

கடலில் இறங்கி நீச்சலடிக்க ஏதுவான சூழல் இருக்கிறதா என்பதை அபாயம் எந்த அளவில் என்பதை குறைவான ஆபத்து, சமநிலை மற்றும் அதிக ஆபத்தான நேரம் என்ற அளகுகளை வழங்குகிறது. கடலின் வெப்பநிலை, உப்புத்தன்மை உள்ளிட்டத் தகவல்களும் கூட உண்மையான நேர அடிப்படையில் இதில் கிடைக்கும்.

இந்தச் செயலின் செயல்பாடு குறித்து கூறிய என்சிசிஆர் அதிகாரிகள்,

“சென்னையில் மெரினா கடற்கரைக்கு 2 கி.மு தூரத்தில் கூவம் அருகேயும், பாண்டிச்சேரியிலும் 10 மீட்டர் ஆழத்தில் பொருத்தப்பட்டிருக்கும் buoys என்கிற மிதவைகளில் சேகரிக்கப்படும் பாராமீட்டர்கள் அடிப்படையில் நீரின் தரம் குறித்து கணக்கிடப்படும். இந்த மிதவைகளின் தகவல்களைக் கொண்டு மிகப்பெரிய பகுதிக்கான வானிலை முன்அறிவிப்பு கணினி உதவியுடன் கணிக்கப்படுகிறது. பயனாளர்கள் தங்களது நகரம் மற்றும் எந்த பீச் என்பதை தேர்வு செய்தவுடன் செயலியானது அந்த குறிப்பிட்ட கடற்கரை பற்றியத் தகவல்களை வழங்கும்,” என்று கூறுகின்றனர்.

தற்போதைய காலநிலை, அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கடற்கரைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை பயனாளர்கள் இந்தச் செயலியின் மூலம் பெற முடியும் என்கிறார் என்சிசிஆர் விஞ்ஞானி ப்ரவகர் மிஸ்ரா. அதே போன்ற கடலில் எண்ணெய் மாசு அல்லது குப்பைகள் அல்லது கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றையும் கூட மக்கள் புகாராக பதிவு செய்ய முடியும் என்கிறார் அவர்.

அடிக்கடி கடற்கரை செல்பவர்களுக்கு இந்தச் செயலியானது தேவைப்படும் ஒன்றாக இருக்கும். கடலில் கழிவு நீர் கலப்பது கடற்கரைக்கு 2 கிலோ மீட்டருக்குள் இருக்கும் தூரத்தில் நிகழ்வதால், மிதவைகள் அங்கு பொருத்தப்பட்டிருக்கிறது.

சோலார் சக்தியில் இயங்கும் மிதவைககள் முதன் முதலில் சென்னை கடற்கரைகளில் கடல்நீரின் கொதிநிலை, உப்புத்தன்மை, க்ளோரோபில், PH அளவு, காற்றின் வேகம், திசை, ஈரப்பதம், கடல் அலையின் வேகம் உள்ளிட்டவற்றை கணக்கிடுவதற்காக பொருத்தப்பட்டது. இம்முறை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் மும்பை, கோவா உள்ளிட்ட கடற்கரைகளிலும் அடுத்த ஆண்டில் buoys பொருத்த என்சிசிஆர் திட்டமிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கடல்நீர் மாசை கண்காணிக்க இவை உதவுகின்றன. கடல் நீரின் தரத்தை ஆராய்வதற்காக 7500 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்திய கடல்பகுதியில் சுமார் 22 இடங்களில் ஒவ்வொரு மாதமும் கடல்நீரை சேகரிக்கிறது என்சிசிஆர்.

கடல் நீரின் நிலை மட்டுமல்ல தண்ணீரின் தரம் மோசமாக இருக்கும் போது அதில் நீச்சலடித்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளையும் செயலியின் தரவுகள் வழங்குகின்றன. உண்மையில் Clean Coast செயலி கடல் மாசை கட்டுப்படுத்துவதோடு அலைகளின் நிலை தெரியாமல் நீச்சலடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

Latest

Updates from around the world