பியானோ இசையில் உலகை வியக்க வைக்கும் சென்னை சிறுவன்!
சென்னையைச்சேர்ந்த 12 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம், பியானோ இசைத் திறனால், உலகை வியக்க வைத்து, டிவிட்டரை தெறிக்க விட்டிருக்கிறார்.
மேற்கத்திய இசையில் அறிமுகம் இருந்து, பியானோ பற்றிய புரிதலும் இருந்தால் லிடியனின் சாதனை எத்தகையது என எளிதாக புரியும். ஏனெனில், புகழ்பெற்ற ரஷ்ய இசை மேதை நிக்கோலய் ரிம்ஸ்கி- கோராஸ்கோவின் இசைக்கோர்வையை பியானோவில் அதற்குரிய வேகத்தில் இசைத்துக் காட்டி அசத்தியிருக்கிறார் லிடியன்.
பிளைட் ஆப் தி பம்பிள்பி (‘Flight of the Bumblebee ) எனப்படும் அந்த இசைக்கோர்வையை பியானோவில் இசைப்பது, அனுபவம் மிக்கவர்களுக்கே சவாலானது எனச் சொல்லப்படும் நிலையில், லிடியன் இதை மிக அனாயிசமாக வாசித்துகாட்டியிருக்கிறார்.
உலக அளவிலான இசைத்திறன் போட்டியான ’தி வேர்ல்ட் பெஸ்ட்’ நிகழ்ச்சியில், இந்த இசைக்கோர்வையை அவர் இசைத்துக்காட்டிய போது, அதன் நேர்த்தியிலும், பியானோவில் அவரது விரல்கள் விளையாடிய லாவகத்தையும் பார்த்து நடுவர்களும், நிகழ்ச்சியை பார்த்தவர்களும் அசந்து போயிருக்கின்றனர்.
போட்டியின் நடுவர்களான ட்ரு பேரிமூர், ரூபால், பைத் ஹில் மற்றும் தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டன் ஆகியோர் லிடியனின் பியானோ இசையால் பிரம்மித்து போய் பாராட்டியிருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் கார்டன், ’நேரலையில் நான் கண்ட மிகச்சிறந்தவற்றில் இதுவும் ஒன்று’ என டிவிட்டரில் பாராட்டியிருந்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்திருந்த பலரும் டிவிட்டரில் தங்கள் வியப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதிலும் லிடியன், சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் நம்மூரைச்சேர்ந்த பிரபலங்கள் வெங்கட்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் , ஸ்ரீசாந்த்,ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
முக்கியமாக சென்னையின் மொசார்ட் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ’ப்ராவோ லிடியன் என டிவிட்டரில், லிடியன் பியானோ இசைக்கு, கார்டன் பாராட்டிய குறும்பதிவை சுட்டிக்காட்டி, வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ரஹ்மானின் ஆமோதிப்பில் இருந்தே லிடியனின் சாதனை எத்தகையது என புரிந்து கொள்ளலாம்.
லிடியனும் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ரஹ்மான் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
”மிக்க நன்றி அங்கிள், நீங்கள் என் ஆதர்சங்களில் ஒருவர். உங்கள் முன் என் ஸ்டெயின்வே பியானோவை இசைத்துக்காட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
இசைமேதை ரஹ்மானுக்கு லிடியன் புதியவர் அல்ல. லிடியன் அவரது மாணவர்களில் ஒருவர். 12 வயதான லிடியன், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக்கில் தபேலா இசை பயின்றிருக்கிறார்.
இங்கு பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த போது தான் அவர் ஒரு மாலை வேளையில் மாணவர் ஒருவர் ரிம்ஸ்கியின் ’தி பிளைட் ஆப் தி பம்பிள்பீ’ இசைக்கோர்வையை இசைப்பதைக் கேட்டிருக்கிறார்.
துப்பாக்கி சீற்றத்தின் வேகத்தை கொண்டதாக வர்ணிக்கப்படும் இந்த இசைக்கோர்வையை அந்த மாணவர் லிடியன் கேட்டு மனப்பாடம் செய்யும் அளவுக்கு நிதானமாகவே வாசித்தார். அதன் பிறகு யூடியூப்பில் இந்த இசைக்கோர்வையின் உண்மையான வேகத்தை தெரிந்து கொண்ட லிடியன் அதை பயின்று தேர்ச்சி பெற்றார்.
நியூயார்க் இசைப்போட்டியில் இந்த கோர்வையை மின்னல் வேகத்தில் பியானோவில் இசைத்துக்காட்டி உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். சும்மாயில்லை, 3 விதமான பீட் அமைப்புகளில் இதை இசைத்திருக்கிறார்.
லிடியினின் திறமையை டிவிட்டர் பாராட்டுகள் உணர்த்தும் நிலையில், நம்மூர் இளம் மேதையாக இருக்கிறாரே என இணையத்தில் இவரது பெயரை தேடிப்பார்த்தால், இன்னும் வியப்பு ஏற்படுகிறது.
கூகுள் தேடலில், உலகின் இளம் பியானோ இசைக்கலைஞர் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதில் இருந்தே லிடியனின் ஆற்றலை புரிந்து கொள்ள முடிகிறது.
தேடல் முடிவுகளை மேலோட்டமாக பார்க்கும் போதே, இந்த இளம் இசை மேதை உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருப்பதையும், பல நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தியிருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
டெட் அமைப்பின் சார்பில் இவர் மும்பையில் உரை நிகழ்த்தியிருக்கிறார். இவருக்கு என தனியே யூடியூப் சேனல் (https://www.youtube.com/channel/UCpoeBBJnPtgAqC_-pnY_K4w) இருக்கிறது. டிவிட்டரிலும் இவரது பெயரில் கணக்கு (https://twitter.com/Lydianmusic1) இருக்கிறது.
லிடியன் பின்னணி
லிடியன் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவர் என்பதை அறியும் போது அவரது அற்பதத் திறமைக்கான காரணம் புரிகிறது. சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளரான வர்ஷன் சதீஷ் என்பவரின் மகனான லிடியன், 2 வயதிலேயே சைலோபோன் இசைக்கருவி குச்சியை வைத்து வாசித்திக்காட்டியிருக்கிறார். அதன் பிறகு தந்தை சதீஷ் அவருக்கு டிரம்ஸ் கருவியை வாங்கிக் கொடுத்து பயிற்சி அளித்திருக்கிறார்.
இசையோடு வளர்ந்தவர், தனது சகோதரி அமிர்தவர்ஷினி பியானோ இசைப்பதை பார்த்து, அதன் இசைக்கோர்வையை மனப்பாடம் செய்து மீண்டும் இசைத்துக்காட்டும் திறன் பெற்றிருக்கிறார். இப்படித் தான் பியானோ இசையில் அவருக்கு ஈடுபாடு உண்டானது. பின்னர் சென்னை இசை சங்கத்தின் அகஸ்டீன் பால் உள்ளிட்டோரிடம் பயின்றிருக்கிறார்.
இயற்கையிலேயே இருந்த திறமையோடு பயிற்சியும் சேர்ந்து பட்டைத்தீட்ட இன்று 12 வயதில் உலகையே வியக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
லிடியன் உலகின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி கைத்தட்டல்களை அள்ளியிருக்கிறார்.
ஒரு முறை நியூயார்க்கில், ஜான் பிளேக் எனும் கோடீஸ்வர இசை ஆர்வலர் வீட்டில் ஸ்டெயின்வே பியானோவில் மொசார்ட், பீத்தோவன் உள்ளிட்ட மேதைகளின் இசைக்கோர்வைகளை இசைத்துக் காட்டி அசத்தியிருக்கிறார். அப்போது பியானோவில் அவரது விரல்கள் விளையாடிய விதத்திலும் காற்றில் தவழ்ந்த மெய்மயக்க வைக்கும் இசையாக பார்வையாளர்கள் தங்களை மறந்து நின்றனர். பின்னர் ஜானின் சகோதரர் இசை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் லிடியன் இதே போன்ற இசை மாயத்தை நிகழ்த்திக்காட்டிட, அசந்து போன ஜான் பிளேக், கிராண்ட் பியானோ என வர்ணிக்கப்படும் ஸ்டெயின்வே பியானோவை லிடியனுக்கு ஒரு நாள் பரிசளிப்பதாகக் கூறினார். சொன்னபடியே சில மாதங்களில் அவர் சென்னைக்கு பியானோவுடன் வந்து சேர்ந்து வியக்க வைத்துவிட்டார்.
லிடியன் பியானோ இசை: https://twitter.com/i/status/1093956164620972032