ஆன்லைனில் படிக்க வசதி இல்லை: 580 மதிப்பெண் எடுத்து சாதித்த மாநகராட்சி பள்ளி மாணவி ஆயிஷா!

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஆயிஷா சித்திக் ஆன்லைன் வகுப்பு செல்போன் வசதி கூட இல்லாத குடும்ப வறுமை பின்னணியில் இருந்து படித்தாலும் +2 பொதுத்தேர்வில் 580 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளார்.
4 CLAPS
0

தமிழகத்தில் நடந்து முடிந்த +2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பெருந்தொற்றால் மாணவர்கள் ஆன்லைனிலேயே வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுதினர். கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக கொரோனா விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு உயர்நிலை மாணவர்கள் மட்டும் நேரில் வந்து வகுப்புகளில் பங்கேற்க அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர்.

சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த முடிவுகள் 20.6.2022 அன்று வெளியிடப்பட்டது. 93.76% மாணவர்கள் +2விலும், 94.07% மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒருபக்கம் கொரோனா பெருந்தொற்றால் வாழ்க்கைச் சூழல் மாறிப்போன வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் நல்ல மதிப்பெண்களை எடுத்து அவர்களின் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆயிஷா சித்திக் தனது தந்தையுடன்

சென்னை வண்ணாரப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஆயிஷா சித்திக், +2 பொதுத்தேர்வில் 600க்கு 580 மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கும் தனது பெற்றோருக்கும் நற்பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆயிஷாவின் வெற்றியை அவரது தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.

தன்னுடைய சாதனை குறித்து பேசிய மாணவி, “ஆறாம் வகுப்பு முதல் நான் இந்தப் பள்ளியில் படித்து வருகிறேன். என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஆதரவினாலேயே என்னால் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கே முதல் மாணவி வர முடிந்தது. என்ன சந்தேகம் இருந்தாலும் எத்தனை மணியாக இருந்தாலும் ஆசிரியர்கள் என்னுடைய கேள்விகளுக்கு தயங்கமால் விளக்கம் கொடுத்தனர்.

“அன்றைய பாடங்களை அன்றைக்கே நான் படித்து முடித்துவிடுவேன். ஒரு பாடத்தை படிக்கும் போது வெறுப்பு இல்லாமல் நன்றாக புரிந்து படிக்க வேண்டும். நான் அப்படித் தான் படித்தேன் நம்பிக்கையோடு படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விடாமல் படித்தால் நிச்சயமாக என்னைப் போன்று பலராலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்,” என்கிறார்.

என்னுடைய குடும்பம் மிகவும் வறுமையான சூழலில் தான் இருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் என்னுடைய அப்பாவிற்கு வேலையும் பறிபோய் விட்டதால் அம்மாவின் நகைகளை விற்றுத் தான் எங்களின் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு செல்போன் கூட என்னிடம் இல்லை. அதனால் பெரும்பாலும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் கேட்டு விளக்கங்களை பெற்றுத் தான் படித்தேன். பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.

School of Excellence-இல் சட்டம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மேற்படிப்பைத் தொடர அரசின் உதவி கிடைக்கும் என்று நம்புவதாக உறுதியாகக் கூறுகிறார் ஆயிஷா.

வறுமையான நிலையில் மிகவும் சிரமப்படுவதால் தன்னுடைய பெண்ணின் உயர்கல்விக்கு தமிழக முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஆயிஷாவின் தந்தை.

தகவல் உதவி : சன்நியூஸ் | தொகுப்பு: கஜலட்சுமி

Latest

Updates from around the world