$35 மில்லியன் வருவாய் ஈட்டும் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்தை கட்டமைத்த சென்னை பொறியாளர்!

ராம் சுகுமார் எந்தவித முன்அனுபவமும் இன்றி Indium Software தொடங்கியபோதும் தொழில்நுட்ப சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் முன்னணி நிறுவனமாக வளர்ச்சியடையச் செய்துள்ளார்.
5 CLAPS
0

ராம் சுகுமார் இண்டஸ்ட்ரியல் என்ஜினியர். இவருக்கு 26 வயதிருக்கையில் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். மென்பொருள் மற்றும் தொழில்நுட்பச் சேவைகள் வழங்கும் நிறுவனத்தை சொந்தமாக தொடங்கவேண்டும் என்பதே இவரது கனவு.

1999-ம் ஆண்டு Indium Software என்கிற கார்ப்பரேட் ட்ரெயினிங் மற்றும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிறுவனத்தைத் தொடங்கினார். ராம், அவரது உறவினர் விஜய் பாலாஜி இருவரும் தங்களது சேமிப்பை ஒன்று திரட்டி சென்னையில் சிறியளவில் வணிக முயற்சி தொடங்குவதற்காக முதலீடு செய்தார்கள்.

ராம் சுகுமார்

எந்தவித முன்அனுபவமும் இன்றி ராம் தொடங்கியபோதும் தனது தொழில் முயற்சியை தொழில்நுட்ப சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் முன்னணி நிறுவனமாக வளர்ச்சியடையச் செய்துள்ளார்.

இன்று Indium நிறுவனம் டிஜிட்டல், பிக் டேட்டா சொல்யூஷன்ஸ், க்வாலிட்டி அஷூரன்ஸ் (QA), லோ கோட் டெவலப்மெண்ட் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு 35 மில்லியன் டாலர் வருவாயை எட்டுவதை இலகக்கை அடைந்திருக்கிறது.

”குடும்பத்தினர் தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் என்னுடைய விருப்பம் மாறுபட்டிருந்தது. சாஃப்ட்வேர் பிரிவில் செயல்பட விரும்பினேன். 90-களின் இறுதியில் சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகமிருந்ததை உணர்ந்து இந்தப் பிரிவில் செயல்படத் தொடங்கினேன்,” என்கிறார்.

சிறியவிலான தொடக்கம்

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகம் இருப்பதால் இவர்களுக்கு சேவையளிக்கும் நோக்கத்துடன் பெரும்பாலான தொழில்முனைவோர் அமெரிக்காவில் நிறுவனம் தொடங்க ஆர்வம் காட்டினார்கள்.

சிறு தவறுகள் இழைத்தாலும் உடனடியாக அவற்றிற்குத் தீர்வு கண்டு சரியான வணிக யுத்தியை வகுத்தால் இந்தியாவில் அதிக செலவின்றி வணிகம் செய்யமுடியும்.

“தோல்வி பயமின்றி நாங்கள் முன்னேற விரும்பினோம். எனினும் எங்களிடம் அதிக முதலீடு இல்லை. 8 முதல் 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி செயலி உருவாக்கம் மற்றும் கார்ப்பரேட் ட்ரெயிங் தொடர்பாக பணியாற்றினோம்,” என்கிறார்.

ஐபிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஆலோசகர் ஒருவர் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பிரிவில் கவனம் செலுத்துமாறு ராமிற்கு யோசனை வழங்கினார். இதற்கான தேவை அதிகம் இருந்ததையும் ராம் கவனித்தார்.

“ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் டெஸ்டிங், திறன், பாதுகாப்பு போன்ற தர உத்தரவாத சேவைகளில் ஈடுபட்டோம். திறன்மிக்கவர்களில் அதிகம் முதலீடு செய்தோம். சேவை வழங்கும் துறையில் மனித வளத்தில் அதிக முதலீடு இருப்பது அவசியம்,” என்கிறார்.

ஆரம்பகட்ட சிக்கல்கள்

2000ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியில் இருந்து நிதித் திரட்ட நிறுவனர்கள் திட்டமிட்டனர். Dot com bubble, 9/11 தாக்குதல் போன்றவை காரணமாக ராம் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

”அந்த சமயத்தில் பல்வேறு இணைய நிறுவனங்களுக்கு சேவையளித்து வந்தோம். இந்த பிராஜெக்டுகள் முடிவுக்கு வந்தன. கிளையன்ட்கள் பலரை இழந்தும் நிலைத்திருக்கக்கூடிய அளவிற்கு நாங்கள் பெரிய நிறுவனம் இல்லை என்பதால் சவாலாக இருந்தது,” என்கிறார்.

சில ஏஞ்சல் வாடிக்கையாளர்கள் சிக்கல்களில் இருந்து வெளிவர உதவினார்கள். இருந்தபோதும் 2007-2009 காலகட்டத்தில் இருந்த மந்தநிலையை சமாளிக்க முடியாமல் போனது.

2008 மந்தநிலை

2008-ம் ஆண்டு ராம் சர்வதேச கிளையன்ட்களுக்கு சேவையளிக்கும் வகையில் செயல்பட்டார். தற்போது இவரது வணிகத்தின் 80% அமெரிக்கா பங்களிக்கிறது.

”அமெரிக்காவில் மந்தநிலை காணப்பட்ட சமயத்தில் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். 2000ம் ஆண்டு காலகட்டத்தைக் காட்டிலும் 2008ம் ஆண்டு மோசமான நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது,” என்கிறார்.

அதேபோல் திறன்மிக்கவர்களை தக்கவைத்துக்கொளவதில் அதிகக் கவனம் செலுத்தினார்.

“ஊழியர்களுக்கு ஊக்கமளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தோம். வணிகத் திட்டங்களை அவர்களிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டோம். இதனால் மனிதவளம் என்கிற சொத்தை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது,” என்கிறார்.

கொரோனா தாக்கம்

கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் ராம் அதுவரை கிடைத்த அனுபவங்களை ஒன்றுதிரட்டி சிறப்பாக எதிர்கொண்டார்.

“கொரோனா காரணமாக எங்களுடன் இணைந்துள்ள 2000-க்கும் மேற்பட்டவர்கள் தொலைவில் இருந்தே வேலை செய்ய வலியுறுத்தியது சவாலாக இருந்தது. லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான சிக்கல்களும் இருந்தன. அனைத்தியும் எதிர்கொண்டு தற்போது வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறோம்,” என்கிறார்.  

2018-ம் ஆண்டில் Indium, Noah Data இணைப்பும் நெருக்கடியை சமாளிக்க உதவியது. 2013-ம் ஆண்டு ராம் Noah Data என்கிற பிக் டேட்டா மற்றும் அனாலிடிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த கூட்டு முயற்சி சேவைகள் விரிவடைய உதவியது. கோவிட்-19 சூழலிலும் 30 சதவீத வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.

போட்டி மற்றும் வருங்காலத் திட்டங்கள்

Indium டிஜிட்டல் மற்றும் தர உத்தரவாத சேவைகளில் கவனம் செலுத்துவதால் பல தரப்புகளில் இருந்தும் போட்டியை எதிர்கொள்கிறது. நடுத்தர அளவில் செயல்படும் ஐடி நிறுவனங்களே தங்களது போட்டியாளர்கள் என்கிறார் ராம்.

”செயற்கை நுண்ணறிவு சார்ந்த எங்களது டெக்ஸ்ட் அனாலிடிக்ஸ் தயாரிப்பு teX.ai. இது அதிகளவிலான டெக்ஸ்ட் கையாளும் நிறுவனங்களுக்கு சேவையளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் uphorix என்பது எங்கள் ஸ்மார்ட் யூனிஃபைட் டெஸ்டிங் தளம்,” என விவரித்தார் ராம்.

நிறுவனத்தின் தற்போதைய வருவாய் குறித்த தகவல்களை ராம் வெளியிடவில்லை. இருப்பினும் 2021-ம் ஆண்டில் 35 மில்லியன் டாலர் வருவாயை எட்ட திட்டட்டு அதை அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று பரவலால் உலகம் முழுவதும் ஐடி சேவைகள் விரிவடைந்துள்ளது. Indium இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. யூகே, ஐரோப்பா, ஆசிய பசபிக் பகுதிகள் போன்ற இடங்களில் சேவையை விரிவடையச் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா