சிறந்த சைக்கிள் உள்கட்டமைப்பு வசதி பெற்ற நகர பட்டியலில் சென்னை முன்னணி – ஓலா தகவல்!
'ஓலா மொபிலிட்டி கழகம்' போக்குவரத்து வசதி தன்மை தொடர்பாக நடத்திய ஆய்வில், சென்னை நகரம் சிறந்த சைக்கிள் உள்கட்டமைப்பு வசதியை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து வசதி தொடர்பான ஆய்வு அமைப்பாக ஓலா மொபிலிட்டி கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வு அமைப்பு, இந்திய நகரங்களில் போக்குவரத்து வசதி தன்மை தொடர்பான ஆய்வு அறிக்கையை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது.
இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான போக்குவரத்து வசதி தன்மை (Ease of Moving Index) அறிக்கையை வெளியிட்டுள்ளது. சென்னை, கோவை, மும்பை, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 220 குழுக்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அண்மையில் ஸ்மார்ட் சிட்டி மிஷின் இயக்குனர் குணால் குமார் வெளியிட்டார். இந்திய நகரங்களில் உள்ள போக்குவரத்து, பகிர்வு போக்குவரத்து மற்றும் சைக்கிள் வசதி தொடர்பான தகவல்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது.
சைக்கிள் போக்குவரத்திற்கான சிறந்த உள்கட்டமைப்பை பெற்றுள்ள நகரங்களில் சென்னை முன்னிலை வகிக்கிறது. எனினும், கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, பயண இடங்களில் சைக்கிள் நிறுத்தும் வசதி சென்னையில் குறைந்துள்ளது,தெரியவந்துள்ளது.
சென்னை போதுமான சைக்கிள் பயண உள்கட்டமைப்பு பயண வசதியை பெற்றுள்ளதாக 50 சதவீத பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரு நகரங்களில் செயல்திறன் வாய்ந்த போக்குவரத்தில் சென்னை முதலிடத்தையும், தூய்மை மற்றும் நம்பகமான போக்குவரத்தில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
பெரு நகரங்களில் சுற்றுச்சூழல் மாசு சார்ந்த மரணங்கள் அதிகம் நிகழ்ந்த நகரமாக கொல்கத்தா திகழ்கிறது. எனினும், பகிர்வு போக்குவரத்தில் கொல்கத்தா முன்னிலை வகிக்கிறது. தூய்மை போக்குவரத்து காரணிகளில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முன்னிலை வகிக்கிறது. கொச்சி மற்றும் மைசூரு ஆகிய நகரங்களும் முன்னிலை வகிக்கின்றன.
ஓலா, உபெர் போல் கேரள அரசு தொடங்கியுள்ள ‘சவாரி’ - இந்தியாவில் முதல் முறை!
Edited by Induja Raghunathan