படிப்பில் சுமார்; மிடில் கிளாஸ் வட சென்னை பையன்: உலகளவில் இன்று 30 கோடி டர்ன்ஓவர் செய்யும் காலின் ராஜா!

அமேசானில் பொருள்களை வாங்கியிருப்பீர்கள்.! பொருள்களை விற்றதுண்டா? நாமும் விற்கலாமே என்ற சிறுப்பொறியில் வணிகத்தை துவக்கிய வடசென்னை இளைஞரின் இன்றைய ஆண்டு வருமானம் ரூ30 கோடி!
38 CLAPS
0

ஒரு நன்புத்தகம் வாசிப்பவனின் வாழ்வினை புரட்டிப்போடும். புரட்டிப்பார்க்கும் பக்கங்களில் பொறிக்கப்பட்ட வரிகளோ, புது அனுபவங்களை அளிக்கும், புது உலகினை கண்முன் விரிக்கும். ஏன், நம் வாழ்வின் அழிக்கமுடியாத அத்தியாயங்களாக மாறும்.

காலின் ராஜா-வின் வாழ்வில் புது அத்தியாயத்தை துவங்கி வைத்ததும் ஒரு புத்தகமே... அப்புத்தகம் ஏற்படுத்திய தாக்கம் வடசென்னையில் வறுமையில் வளர்ந்த சிறுவனை அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ30 கோடி வருவாய் ஈட்டும் தொழில்முனைவராக்கியது.

இதுவரை 32 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்த்த ராபர்ட் கியோஸ்கி எழுதிய 'ரிச் டாட் புவர் டாட்' புத்தகம் தான் அது. பணத்தை பற்றி காலங்காலமாய் மக்கள் எண்ணும் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றக் கூடிய புத்தகம் என அறியப்பட்ட அப்புத்தகம் காலின் ராஜாவினையும் சிந்திக்கத் துாண்டியது. 9 டூ 5 வேலையுடன், தொழில் முனைவிலும் ஈடுப்பட செய்தது.

வடசென்னையில் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, வறுமை துரத்த வளர்ந்த அவர், புத்தகத்தின் சிலகுறிப்புகளை வாழ்க்கையின் துருப்புச்சீட்டாக்கிக் கொண்டு உழைக்கத் தொடங்கினார். எண்ணற்ற துாக்கமற்ற இரவுகளுக்குபின்,

இ-காமர்ஸ் பிசினஸில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் தொழில்முனைவராகி உள்ளார்.

காலின் ராஜா

சிறுவயதில் பட்டறைக்குச் செல்லதான் லாயக்கு என புறந்தள்ளப்பட்ட காலினை பற்றி போர்ப்ஸ் பத்திரிக்கையிலும் பிரசுரமாகியது. ஊக்கமிகு அவரது பயணத்தை நம்மிடம் பகிரத் தொடங்கினார்...

"என் பள்ளிக்காலத்தில் வீட்டில் கடுமையான வறுமை. ரேஷன் அரிசியை மட்டும் சோறாக்கி சாப்பிட்டு கடத்திய நாட்களும் உண்டு. நான் படிப்பில் சுமாரான பையன். படிக்கலைனு 7ம் வகுப்பையே இரண்டு வருஷம் படிக்கவச்சாங்க. நம்ம சமூகத்தை பொறுத்தவரை நல்லா படித்தால் நல்ல வேலை, நல்ல வேலை கிடைத்தால் நல்ல வாழ்க்கை என்றே சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றனர். அதனாலே, என்னை படிப்புக்கு லாயக்கு அற்றவன், பட்டறைக்கு தான் வேலைக்கு போவேன்னு சொல்லி சொல்லி என்னிடமிருந்த கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையையும் உடைச்சிட்டாங்க.

அந்த சமயத்தில் தான், பாக்சிங்கில் இறங்கினேன். என்னால எதுவும் முடியாதுனு மட்டம் தட்டியவர்களிடம் என்னை நிரூபிக்க உழைத்தேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலேஜ் சீட்டும் கிடைத்தது.

தொடர்ந்து, பாக்சிங்கிலும் தடகள போட்டிகளிலும் கலந்து கொண்டு, பதக்கங்களை வென்றேன். உன்னால எதுவும் முடியாதுனு ஒதுக்கப்பட்டவனுக்கு அந்த பதக்கங்கள் புது நம்பிக்கையை அளித்தன. என் வாழ்க்கையின் முதல் வெற்றி. என்மீது எனக்கே நம்பிக்கையை ஏற்படுத்தியது, எனும் காலின் இலக்கினை அடைய தீவிரமாய் முயன்று அதற்கான சிறுவெற்றியினை ஒருமுறை கண்டுவிட்டாலே போதும் நம்பிக்கை துளிர்விடும் என்கிறார்.

காலேஜுக்கு அடுத்து என்ன?

பி.இ கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்த அவர், கணினி தொடர்பான சிறுசிறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்படி, கம்ப்யூட்டர் அசம்பிளிங் பணி செய்து ரூ.5000 சம்பாதித்துள்ளார். முதன் முதலில் அவ்வளவு பெரும் தொகையை என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்ததாய் கூறும் காலினின் இன்றைய இரண்டுமணி நேர வருவாய் அது.

"முட்டி மோதி ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டேன். வேலைக்கு சேர்ந்த கொஞ்ச காலத்திலே ஆன்சைட்டில் அமெரிக்காவுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவுல இரண்டு, மூணு கம்பெனியில் மாறி மாறி வேலை செய்தேன். ஆனா, திடீரென்று வேலையைவிட்டு நிப்பாட்டிட்டாங்க. கிட்டத்தட்ட 3 மாசம் வேலையே கிடைக்கல. அப்போ தான் புது கார் வேற வாங்கியிருந்தேன், அதுக்கு மாசமாகினா 1,500 டாலர் (ரூ.1லட்சம்) இஎம்ஐ கட்டணும். வேலையும் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்.”

3 மாதத்திற்கு பிறகு நிதி சார்ந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அப்போ தான், இப்படியே வாழ்க்கையை கொண்டு சென்றிடக்கூடாது என்ற எண்ணம் வந்தது. அப்போது நண்பர் ஒருவர் ’Rich Dad, Poor Dad’ என்ற புத்தகத்தை கொடுத்தார். என் வாழ்க்கையையே மாற்றிய புத்தகம் அது. எனக்குள் பல சிந்தனைகளைத் துாண்டியது.

அந்தசமயத்தில், 'அமேசானில் பொருள்களை விற்பது எப்படி?' என்று பயிற்சியளிப்பதாக ஒரு விளம்பரத்தை பார்த்தேன். பயிற்சித் தொகை 5000 டாலர்னு (ரூ.3,63,000) போட்டிருந்தது. இதை முயற்சிக்கலாம்னு தோணுச்சு. ஆனா, என்னால கண்டிப்பாக அவ்வளவு பணம் செலவழிக்க முடியாது. இருந்தாலும் கத்துக்கலாம்னு ஆன்லைன் விற்பனை தொடர்பான புத்தகங்களை நிறைய வாங்கிப் படித்தேன். யூடியூப் வீடியோக்கள் பார்த்தனே். நிறைய மனிதர்களை சந்தித்து ஆலோசனை கேட்டேன். ஒரு நாளுக்கு 19 மணி நேரம் இதை பத்தி மட்டுமே கத்திட்டு இருந்தேன்.

தினமும் நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சி வரை 2 மணி நேரம் டிராவல் பண்ணி தான் ஆபிசுக்கு போகணும். அந்த நேரத்தில் புத்தகத்தை படிச்சிட்டே போவேன். இ-காமர்ஸ் தளத்தில் பொருளை விற்கபோகிறோம்னு முடிவு பண்ணியாச்சு. பிராண்ட்டின் பெயர்லாம் யோசித்துவிட்டேன். ஆனா, என்ன பொருள் விற்பதுனு முடிவு பண்ணாமல், நாட்கள் ஓடிகிட்டே இருந்தது. மனைவி ஆன்ஜியிடம் இதுமாதிரி ஆன்லைனில் பொருளை விற்கபோகிறேன்னு சொன்னதும், கண்டிப்பா விற்கமுடியாதுனு மில்லியன் டாலர் பெட் கட்டினாங்க. அதையும் சவாலாக எடுத்துக் கொண்டேன்.

அதிகத் தொகை முதலீடு செய்யாமல், 100 டாலருக்கு மடக்கி வைத்து கொள்ளும் வாட்டர் பாட்டில்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கினேன். நானும், என் மனைவியும் ஒருநாள் நைட் முழுக்க உட்கார்ந்து அதை பேக் பண்ணோம். இபே-யில் பொருள்களை பதிவு செய்தோம். நினைச்ச மாதிரி அமையவில்லை எந்தவொரு ஆர்டரும் கிடைக்கல.

கம்ப்யூட்டர் சையின்சுக்கும் காமர்சுக்கும் என்ன கனெக்ஷன். ஒன்னும் கிடையாதே. காமர்ஸ்னாலே என்னனு தெரியாது. அப்புறம் எப்படி இ-காமர்ஸ் பற்றி தெரியும்.

மனைவி ஆஞ்சி உடன் காலின் ராஜா

ஒவ்வொன்றாய் கற்று அறிந்தோம். ஆர்டர் வரத்துவங்கியது. கிடைத்த லாபத்தில் அதே புராடெக்ட்டை மீண்டும் விற்பனை செய்தோம். சந்தையின் நிலவரத்தையும், ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து அறிந்துகொள்ள அது போன்று மூன்று முறை விற்பனை செய்தோம்.

அந்த விற்பனையின் மூலம் 100 டாலர் முதலீடு, 2000 டாலராக பெருகியது. அச்சிறு வெற்றி சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை உறுதி செய்தது. அதில் கிடைத்த அனுபவம், எங்களது சொந்தத் தயாரிப்பை உருவாக்கத் துாண்டியது.

'ரிம் ஸ்போர்ட்ஸ்' ’Rim Sports

ஃபிட்னஸ் உபகரணங்களான வொர்க் அவுட் க்ளவுஸ், க்ளூட் பேண்ட்ஸ், வெயிட் லிஃப்டிங் பெல்ட்ஸ் போன்றவற்றை எங்களது சொந்த டிசைனை உற்பத்தி நிறுவனங்களிடம் தயாரித்து வாங்கி, விற்பனையைத் துவக்கினோம். 15 வருட பாக்சிங் அனுபவத்தில் எங்களுக்குத் தேவையான உடற்பயிற்சி உபகரணங்களைத் தேடித் தேடி வாங்கியதிலே இதை பிசினஸா செய்யும் யோசனை வந்தது.

தொடக்கத்தில் சீனாவிலிருந்து அவுட் சோர்சிங் செய்து கொண்டிருந்தோம். அதில், பிரச்னை என்னாச்சு நம்ம புராடெக்ட்டை லான்ச் செய்த 10வது நாளில், அதே புராடெக்ட் ஆன்லைனில் நிறைய கிடைக்கும். அதனாலே, நாங்க தயாரிப்பாளர்களை வேறு நாடுகளில் தேடத் தொடங்கி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தோம்.

தொடக்கத்தில், 1500 டாலர் மதிப்புள்ள சொந்தத் தயாரிப்புகளின் மூலம் தான் விற்பனையை துவக்கினோம். ஒரு விற்பனைக்கு 10 டாலர் லாபம் என்ற கணக்கில், நாளொன்றுக்கு 10 முதல் 20 விற்பனைகள் நடந்தன.

பிசினஸ் தொடங்கினாலும் நாங்க வேலையை விடவில்லை. என் மனைவி ஆன்ஜி, ஆன்லைன் வணிகத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லாத போதும் எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தார். நைட்டில் பொருள்களை பேக்கிங் செய்து கொடுப்பார். நான் ஆபீஸ் சென்றுவிட்டு பிரேக் சமயத்தில் பார்சலை கொரியர் செய்துவிடுவேன். 9 டூ 5 வேலை வேண்டாம்னு வந்தா, இது 24மணி நேர வேலையாகிருச்சு.

வீட்டு ரூமிலே வேலைக்குலாம் ஆள் வைக்காமல், நாங்கள் இருவருமே எல்லா வொர்க்கையும் செய்து கொண்டோம். கிட்டத்தட்ட, தொழில் தொடங்கி 1 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டத்தொடங்கிய போதும், ஒரு பணியாளர்கூட நியமிக்கலை.

இப்போ எங்க நிறுவனத்திற்காக சென்னையில் எங்க பணியாளர்கள் வேலை செய்றாங்க. முதலில் என் மனைவி வேலையிலிருந்து விலகினாங்க. அமெரிக்காவுலயும் சென்னையிலும் மாறி மாறி வசிச்சபடியே நானும் தொழில்ல கவனம் செலுத்தினேன்.

2018-ல் ஆபீஸ் வேலையை விட்டுட்டு, முழுநேர தொழில்முனைவோர் ஆனேன். e-bayவை தொடர்ந்து, அமேசான், வால்மார்டிலும், எங்களது பிராண்டான 'ரிம் ஸ்போர்ட்ஸ்' (rim sports) என்ற பெயரிலும் ஆன்லைன் விற்பனைத்தளத்தை துவங்கி உடற்பயிற்சி, சில விளையாட்டு உபகரணங்களுடன், அந்தப் பயிற்சியின்போது அடிபட்டவங்களுக்கு உதவும் வகையிலான பயன்பாட்டு உபகரணங்களையும் விற்பனை செய்கிறோம்.

எங்களது சொந்த தயாரிப்புகள் சிலவற்றிற்கு காப்புரிமை பெற்றுள்ளோம். விரைவில் இந்தியாவிலும் லான்ச் ஆகுறோம். சோ, இது தான் என் பயணம்...

“இதுவும் கடந்து போகும், மாற்றம் ஒன்றே மாறாதுனு முயற்சியை விட்ராமல் உழையுங்கள்..." என்று கூறி முடித்த காலின்,”

முழுசா ஒரு மணிநேர மோட்டீவேஷன் ஸ்பீச் கேட்ட உணர்வினை அளித்து பண்றோம்டா... சாதிக்கிறோம்டா என்ற எண்ணங்களை விதைத்துச் சென்றார்.

இணையதள முகவரி :

Latest

Updates from around the world