'லாக்டவுனில் ஜீரோ வருவாய்' - ட்ராவல் நிறுவனம் 'Pickyourtrail' உறுதியாகப் போராடி சவாலை வென்றது எப்படி?

கோவிட்-19 தாக்கம் காரணமாக, இணைய பயண திரட்டி சேவையான பிக்யுவர்டிரையல் நிறுவன வர்த்தகம் பூஜ்ஜியத்திற்கு வந்து நின்றது. ஆனால் இந்த காலத்தை மறுசீரமைப்பிற்காக பயன்படுத்திக்கொண்டு மீண்டு வந்துள்ளது இந்நிறுவனம்.
0 CLAPS
0

பயண நிறுவனங்கள் மற்றும், விருந்தோம்பல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல வர்த்தகங்களுக்கு கோவிட்-19 பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதன் காரணமாக பல ஆண்டு வர்த்தகங்கள் பூஜ்ஜியம் நிலைக்கு வந்தன.

2020 மார்ச்சில் சென்னையை தலைமையகமாக கொண்ட இணைய பயண திரட்டி சேவையான 'பிக்யுவர்டிரையல்' (PickYourTrail) வெற்றிடத்தை பார்த்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது, மேலும் ஒரு நாள் தாக்குபிடிக்க முடியுமா என்று கூட தெரியாமல் இருந்தது.

“எல்லாம் அப்படியே துடைத்து எறியப்பட்டுவிட்டது. ஒரு நிறுவனராக என் நிறுவனத்தை உருவாக்கியதில் எப்போதுமே பெருமிதம் கொண்டிருந்தேன்,” என்கிறார் பிக்யுவர்டிரையல் இணை நிறுவனர் ஹரி கணபதி.

இந்த இடத்தில் தான் விடாமுயற்சி மற்றும் உறுதி தேவைப்பட்டது. 2013ல் சொந்த நிதியில் துவக்கப்பட்ட ஸ்டார்ட் அப், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகே வெளிப்புற நிதி திரட்டியது.

பூஜ்ஜியம் அடித்தளம்

ட்ராவல் பயணம் தொடர்பான எந்த வர்த்தகத்திற்கும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையான காலம் துடிப்பானது. 2019 முதல் 2020 வரை நிறுவனம் பிசியான ஆர்ட்களை பெற்றுக்கொண்டிருந்தது. வருவாய் அதிகரித்து, ஊழியர்களையும் நியமித்துக் கொண்டிருந்தது. பயண வர்த்தகத்தில் ரத்து என்பது 2-3 சதவீதம் என்பதால் வருவாய் பெருமளவு உறுதியானது.

எனினும், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் நிறுவனம் பூஜ்ஜியம் வர்த்தகத்தை கண்டது. எனவே நிறுவனர்கள் வெளிப்புற முதலீட்டாளர்கள் உதவியை நாடினர். முதலீட்டாளர்கள் அளித்த அறிவுரை புதிராக இருந்ததோடு ஏமாற்றமாகவும் அமைந்தது என்றார் ஹரி.

“இந்த சூழலில் நாங்கள் மோசமான பெற்றோராக இருக்க விரும்பவில்லை, நீங்களே சமாளித்துக்கொள்ளுங்கள்” என முதலீட்டாளர்கள் நிறுவனர்களிடம் கூறினர்.

அப்போது முதலீட்டாளர்கள் என்ன சொல்கின்றனர் என ஹரிக்கு புரியவில்லை. ஆனால், அந்த அறிவுரை வளர்ச்சிக்கு உதவியதாக இன்று நன்றியுடன் நினைவு கூறுகிறார். முதலீட்டாளர்கள் கொஞ்சம் நிதி அளித்திருக்கலாம் என்றாலும் அவர்கள் காத்திருந்தது நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டை வெளிக்கொணர்வதற்கு என்று பின்னர் புரிந்தது.

சவால்கள்

நிறுவனம் மீண்டும் வரைவு நிலைக்குச்சென்று அடுத்த கட்டம் பற்றி யோசித்தது. இரண்டு வாய்ப்புகள் இருந்தன. இன்று ஆட்குறைப்பு செய்து எஞ்சியவர்களுக்கு முழு சம்பளம் அளிப்பது அல்லது எல்லோரும் ஊதியத்தை குறைத்துக்கொள்வது.

“இது நிச்சயம் மோசமான சூழலாக இருந்தது,” என்கிறார் ஹரி.

நிறுவனர்கள் இரண்டாம் வாய்ப்பைத் தேர்வு செய்து, ஊழியர்களுக்கு 63 சதவீத ஊதிய குறைப்பை தெரிவித்தனர். இதன் மூலம், அடுத்த 8 முதல் 10 மாதங்களுக்கு வங்கியில் பணம் இருக்கும் நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, நிறுவனத்தில் மிகுந்த அதிருப்தி நிலவினாலும், இதற்கு யாரும் காரணம் அல்ல என்பது புரிந்தது.

“நாங்கள் வெளிப்படையாக நடந்து கொண்டு, ஊழியர்களிடம் உள்ள நிலையை தெரிவித்தோம்,” என்கிறார் ஹரி.

இந்த காலத்தில் ஊழியர்கள் எதிர்வினை கலைவையாக இருந்தது. ஒரு சிலர் பணியைவிட்டு விலகிச்சென்றனர். மற்றவர்கள் நிறுவனம் மீது நம்பிக்கை வைத்து நீடித்தனர். நிறுவனத்தால் புதிய நியமன வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை.

“அதற்கு முன் யாரேனும் நிறுவனத்தை விட்டுச்சென்றால் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வேன். ஆனால், இந்த காலத்தில் யாராவது வேலையை விட்டுச்சென்றால் அதை கொண்டாடினோம்,” என்கிறார் ஹரி.

நிறுவனத்தில் இருந்து வெளியேறுபவர்கள் வெளியே வேலை பெற உதவும் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. நிறுவனர்களே இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். வேலையை விட்டு விலகுவதாகக் கூறியவர்கள் தொடர்ந்து நீடிக்கத் தீர்மானித்தனர். வெளிநாடு செல்ல இருந்த சிலரும் நீடித்தனர்.

எதிர்காலத் திட்டம்

நிலைமை சீராகும் போது தயாராக இருக்க வேண்டும் எனும் எண்ணத்தில் நிறுவனம் சீரமைப்பை மேற்கொண்டது.

“நாங்கள் சேவையை உருவாக்கத்துவங்கினோம். தொழில்நுட்பக் குழு இதில் ஈடுபட்ட நிலையில் விற்பனை குழு எஸ்.இ.ஒ- வில் கவனம் செலுத்தியது,” என்கிறார் ஹரி.

நிறுவனம் தனது அல்கோரிதமை மாற்றி அமைத்து, எஸ்.இ.ஓவில் கவனம் செலுத்தியதால், இன்ஸ்டாகிராம் பின் தொடர்பாளர்கள் 5000ல் இருந்து ஒரு லட்சமாக அதிகரித்து உலக அளவிலான சேவையாக உருவானது. அமெரிக்கப் பயணிகள், தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை பிக்யுவர்ட்ரெயிலில் பதிவு செய்வது சாத்தியமானது,

நிறுவனம் எப்போதும் வெளிப்புற இடங்களில் கவனம் செலுத்தி வந்தது, எனினும் பொதுமுடக்கக் காலத்தில் இருப்பிடமாக்கலை மனதில் கொண்டு செயல்பட்டது. நிறுவனம் தனது பங்குதாரர்களுடன் பேசி, பணம் செலுத்த தாமதம் ஆனால் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டது. நிலைமை சீரானதும் பணம் தருவதாகக் கூறியதை பலரும் ஒப்புக்கொண்டனர்.

“பலவீனமாகவும், நேர்மையாகவும் இருப்பது பல நேரங்களில் பலன் தரக்கூடியது,” என்கிறார் ஹரி.

பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட போது, ஜூலை மாதம் வர்த்தகம் மீண்டும் ஊக்கம் பெற்றது. மாலத்தீவுகளுக்கான பயணம் வழக்கத்தை விட அதிகரித்ததை அவர் உதாரணமாக கூறுகிறார்.

பொதுமுடக்கத்தின் முதல் ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்தன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களுக்கு சேவை அளிக்கத்துவங்கினர்.

முதலீட்டாளர் பதில்

இந்த கட்டத்தில் முதலீட்டாளர்கள் தேடி வந்து எந்த அளவு மூலதனம் தேவை என்று கேட்டனர். அப்போது அதிக மதிப்பீட்டில் பணம் பெற்றதாக ஹரி கூறுகிறார்.

“ஒவ்வொரு டாலரை பெறவும் நாங்கள் எவ்வளவு உழைக்கிறோம் என்பதை பார்த்ததால் முதலீட்டாளர்களுடனான எங்கள் உறவும் முதிர்ச்சி அடைந்தது,” என்கிறார் ஹரி.

கிரிஷ் மாத்ரூபூதம், குமார் வேம்பு மற்றும் குனால் ஷா உள்ளிட்ட தேவதை முதலீட்டாளர்களிடம் இருந்து நிறுவனம் 3 மில்லியன் டாலர் திரட்டியது.

நிறுவனர்களுக்கும் இது பாடமாக அமைந்தது. தொழில்முனைவோருக்கு உறுதி தேவை என்பதையும், மோசமான சூழலில் சிறந்தவற்றை வெளிக்கொணறும் என்பதையும் புரிய வைத்தது.

“இப்போது பொதுமுடக்க காலத்தை விட 2x வருவாய் ஈட்டினோம், செலவும் குறைந்தது,” என்கிறார் ஹரி.

Pickyourtrail இப்போது 12-15 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. முக்கிய சீசனின் 20-22 சதவீத வளர்ச்சி காண்கிறது.

இரண்டாம் அலையின் போது சவாலை எதிர்கொண்டாலும், நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்திய இணைய பயணத் துறையில், மேக்மைடிரிப், கிளியர்டிரிப், எக்ஸ்பீடியா உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கற்றல் பாதை

எதிர்காலப் பாதை தெளிவாக தெரிந்தாலும், வாடிக்கையாளர் பரப்பை மிகவும் பரவலாக்கி இருப்பதாக ஹரி நம்புகிறார். செயலாக்கமே இன்று நிறுவனர்கள் முன் உள்ள பெரிய சவாலாக இருக்கிறது.

“நிறைய தேவை இருப்பதால், எந்த அளவு செயலாக்கத்தில் ஊக்கம் காட்டுகிறோம் என்பது முக்கியம்,” என்கிறார்.

ஊழியர் நியமனத்திலும் நிறுவனம் சுவாரஸ்யமான சவாலைக் கொண்டுள்ளது.

“ஊழியர்கள் மத்தியில் செயல்திறனை மிகவும் உயர்த்தியுள்ளதால், இனி எப்படி புதியவர்களை நியமிக்கப்போகிறோம் என்பது சவாலாக உள்ளது என்கிறார் ஹரி.

இந்த இரண்டு ஆண்டுகள் பல பாடங்களை கற்றுத்தந்துள்ளன. வலுவான குழுக்களை கொண்ட, வெளிப்படையான தன்மை கொண்ட சேவை சார்ந்த நிறுவனமாக பிக்யுவர்டிரையல் அமைந்துள்ளது. இடர் நோக்கும் தன்மையும் அதிகரித்துள்ளது.

“வெளியே பல விஷயங்கள் நடைபெற்றாலும், ஒருவர் தனக்குள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கற்றல்,” என்கிறார் ஹரி.

ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world