Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

செம்பருத்தி, வாடாமல்லி, டிசம்பர் பூ அலங்காரம்: பூச்சூடிய கூந்தலழகை படம் பிடிக்கும் போட்டோகிராபர்!

"பூச்சூடல்' ஒரு சாதாரண பழக்கமாகினாலும், தலைமுறைகள் தாண்டி கடத்தப்பட்ட ஒரு வழக்கம். அதிலொரு முழுமையான அழகு இருக்கிறது. அத்தனை அழகை கண்டபின் புகைப்படம் எடுக்காமல் இருக்க முடியுமா!" எனும் புகைப்பட கலைஞர் நவீன், கடந்த 2ஆண்டுகளில்140க்கும் அதிகமான பூக்கள் சூடிய பெண்களின் பின்னலழகை புகைப்படமாக்கியுள்ளார

செம்பருத்தி, வாடாமல்லி, டிசம்பர் பூ அலங்காரம்: பூச்சூடிய கூந்தலழகை படம் பிடிக்கும் போட்டோகிராபர்!

Thursday June 09, 2022 , 3 min Read

'"பூச்சூடல்' ஒரு சாதாரண பழக்கமாக தோன்றினாலும், காலங்காலமாக தலைமுறைகள் தாண்டி கடத்தப்பட்ட ஒரு வழக்கமாக இருக்கிறது. அதையும் தாண்டி அதில் ஒரு முழுமையான அழகு இருக்கிறது. அந்த அழகை என் கேமரா கருவியால் படமெடுக்கிறேன்."

ஒரு முறை திருவிழாவில் 85 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் கனகாம்பரம், வாடாமல்லி, டிசம்பர் பூவினை தலை நிறைய வைத்திருந்தார். பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருந்தது. அத்தனை அழகை கண்டபின் புகைப்படம் எடுக்காமல் இருக்க முடியுமா, என்ன!" எனும் புகைப்பட கலைஞர் நவீன்ராஜ் கெளதமன், கடந்த 2ஆண்டுகளில் 140க்கும் அதிகமான பூக்கள் சூடிய பெண்களின் பின்னலழகை புகைப்படமாக்கியுள்ளார்.

naveen

"என் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒட்டக்குடி எனும் கிராமம். எங்களுடையது கூட்டுக்குடும்பம்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் அப்பா, அவரது அலுவலக நண்பரிடமிருந்து பிலிம் ரோல் கேமரா வாங்கிவந்து குரூப் போட்டோ எடுப்பார். அந்த புகைப்படத்தை பிரின்ட் வடிவில் பார்ப்பதற்கு இரண்டு, மூன்று ஆண்டுகளாகும். அப்போது, சிறு புள்ளைகளான எங்களுக்கும் கேமராவில் படம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். எல்லோரும் போஸ் கொடுக்க, நான் போட்டோகிராபராகி விடுவேன். அங்கு தான் எனக்கும் போட்டோகிராபிக்குமான தொடர்பு தொடங்கியது.

கல்லுாரியில் படிக்கும் போது எங்கவூர் வயல்வெளி, அதில் வியர்வைச் சொட்ட சுருங்கியத் தோலுடன் விவசாய வேலை பார்க்கும் தாத்தா, நாற்றில் வந்து அமரும் பறவைகள் என ஆரம்பக்கால போட்டோகிராபர்களுக்கே உரித்தான பாணியில் மொபைல் போட்டோகிராபியில் ஈடுப்பட்டேன்.

கல்லுாரி படிப்பு முடிந்து, பணிக்காக சென்னைக்கு வந்தேன். அப்போது தான், சென்னை 'வீக்கெண்ட் கிளிக்கர்ஸ்' எனும் பெயரில் செயல்படும் போட்டோகிராபர்கள் அமைப்பு பற்றி தெரியவந்தது. அதில்,

“ஆர்வமுள்ள போட்டோகிராபர்கள் வார இறுதி நாட்களில் பயணம் மேற்கொண்டு சில தலைப்புகளின் கீழ் புகைப்படம் எடுப்பார்கள். அவர்களுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினேன். தொடர்ச்சியாக நான் மேற்கொண்ட பயணங்கள் என்னை தொடர்ந்து புகைப்படக் கலையிலேயே பயணிக்கச்செய்யவே, முழு நேர புகைப்படக் கலைஞராக 10 ஆண்டுகள் கடந்துவிட்டது," என்று அவரை பற்றிய அறிமுகம் அளித்தார் நவீன்.

வெட்டிங் போட்டோகிராபியில் ஈடுபட்டு கொண்டிருப்பினும், மனதிற்கு நெருக்கமான புகைப்படங்களை எடுக்க அவர் தவறவில்லை. அப்படியாக, ஊருக்கு வெளியில் தனிக்காட்டு ராஜாவாக கம்பீரமாக நிற்கும் ஒற்றை மரங்களை ஒரு தொடராக படமெடுத்து பதிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு வயதிலுள்ள மனிதர்களின் புன்சிரிப்புகளை அவர் படமெடுத்து, கவனத்தை ஈர்த்தார்.

poochoodal

எந்த தலைப்பின்கீழ் புகைப்படம் எடுப்பினும், நவீனின் புகைப்படங்களில் ஓர் அமைதி நிலவுகிறது. அதற்கு தான் சந்திக்கும் மனிதர்களுடன் நடந்த உரையாடலாகவோ, அல்லது அவர்களது கதைகளின் வெளிப்பாடாக இருக்கும் என்று கூறிய நவீன், சமீபத்தில் பொக்கிஷங்களாக்கியது அவர் கடந்து செல்லும் பூக்கள் சூடிய பெண்களின் கூந்தலழகு!

"என்னைப் பொறுத்தவரை மக்கள்தான் எல்லாமே. தமிழ்நாட்டில் பல பருவங்கள், பலவிதமான மனிதர்கள், பல கலாச்சாரங்கள், ஏராளமான பழக்கவழக்கங்கள் மற்றும் பல மொழிகள் உள்ளன. நான் பயணப்படும் இடங்களை மட்டுமின்றி அங்குள்ள மனிதர்களை பற்றி அறிய விரும்புகிறேன். அவர்களின் கதைகளை கேட்டறிய நினைப்பேன். அதே போல், நான் பயணப்படும் இடங்களை, அங்குள்ள மக்களின் முகங்கள் மூலம் பதிவுச் செய்திட விரும்புகிறேன். அவர்களது முகங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை படமாக்கிட முயல்கிறேன். அதற்காகவே, 'சுயம்பு' எனும் பெயரில் பல்வேறு வயதினருடைய புன்னகைகளை பதிவிட்டு ஒரு தொகுப்பாகினேன்.”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கள்ளக்குறிச்சியில் நடைப்பெற்ற கூவாகம் திருவிழாவினை படமெடுக்க சென்றிருந்தேன். திருவிழாவில், 20களின் தொடக்கத்திலிருந்த பெண்கள் அடங்கிய ஒரு குடும்பம் என்னை வெகுவாக ஈர்த்தது. அதற்குக் காரணம் அவர்கள் கூந்தலில் சூடியிருந்தப் பூக்கள்.

“கனகாம்பரம், டிசம்பர் பூ, வாடாமல்லி என அவர்களது கூந்தலை அலங்கரித்திருந்த பல வண்ண மலர்கள், என் பருவ வயது நினைவுகளை என்னுள் கடத்தியது. அவர்களைப் பின்புறம் திரும்பி நிற்கச் சொல்லி, பூக்கள் அலங்கரித்த அவர்களது கூந்தலை படமெடுத்தேன். சில புகைப்படங்கள் ஆத்மார்த்தமான உணர்வினை கடத்தவல்லவை. அப்படியான புகைப்படம் தான் அது,” என்கிறார்.
poochoodal

"பூச்சூடல்" ஒரு சாதாரண பழக்கமாக தோன்றினாலும், காலங்காலமாக கடத்தப்பட்ட ஒரு வழக்கமாக இருக்கிறது. அதையும் தாண்டி அதில் ஒரு முழுமையான அழகு இருக்கிறது. அவர்கள் யாரும் கண்ணாடி பார்த்து பெர்ஃபெக்ட்டாக பூ வைப்பதில்லை. போகிறப் போக்கில் கிடைக்கும் பூக்களை வாங்கி தலைமுடியிலே சொருகி கொள்கின்றனர். அப்போதிலிருந்து, நான் பெண்கள் அணிந்திருக்கும் பூக்களை கவனித்து புகைப்படமாக்கினேன்.

திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உடுமலைப்பேட்டை, திருவண்ணாமலை என பல ஊர்களுக்கு பயணித்து பெண்கள் சூடிய பூக்களை 'பூச்சூடல்' எனும் தொடராக பதிவுச் செய்ய தொடங்கினேன். கடந்த 2 ஆண்டுகளில் 140 பெண்களின் கூந்தல் அழகை படமெடுத்துள்ளேன். இப்போதெல்லாம், பூச்சூடிய பெண்களைக் கண்டால் அனிச்சையாய் கைகள் கேமராவினை எடுக்கின்றன.
poochoodal

தொடர்ச்சியாக பூச்சூடல் புகைப்படங்களை எடுத்ததில், பெண்கள் பூ சூடுவதேன் என்ற கேள்வி எழுந்தது. பூச்சூடிய பலரிடம் இந்த கேள்விக்கான விடையைத் தேட முயன்றேன். கிராமப் பெண்களுக்கு தலைச் சீவி, பூ வைத்து கொள்வது வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால், என் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் தேவையில்லை தானே!. அவர்களைப் பொறுத்தவரை இது சாதாரணமானது மற்றும் வழக்கமான ஒன்று. மனிதகுலத்தின் இயல்பான பழக்கத்தை நாம் கேள்வி கேட்க முடியாது, இல்லையா? மற்றும் கேட்பது தேவையற்றது. அவர்கள் பூக்களை அணியும் போது, அவர்கள் தங்களை முழுமையாக உணர்வதாகவும், அழகாக இருப்பதாகவும் உணர்கிறார்கள்.

ஒரு முறை திருவிழாவில் 85 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் கனகாம்பரம், வாடாமல்லி, டிசம்பர் பூவினை தலை நிறைய வைத்திருந்தார். பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருந்தது. அந்த அழகை என் கேமராவில் சேமிக்க நினைத்தேன். அதை தாண்டி பெரிய நோக்கம் எதுவுமில்லை. எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. " என்றார் அவர்.

மல்லிகை, செம்பருத்தி, அல்லி, ரோஜா, கனகாம்பரம் என நவீன் எடுத்த புகைப்படங்களில் இருந்த பெண்கள் எந்த பூவினை சூடியிருப்பினும், பூக்கள் சூடியிருப்பதால் பெண்கள் அழகாக இருக்கிறார்களா அல்லது பெண்கள் சூடியிருப்பதால் பூக்கள் அழகாக இருக்கிறதா என்பதை கணிக்கமுடியவில்லை!