‘சென்னையின் நிஜ கதாநாயகன்’ டிராபிக் ராமசாமி காலமானார்!

பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து சென்னையின் நிஜ கதாநாயகனாக வலம் வந்தவர் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி. தனது 87 வயதிலும் மக்கள் பணிக்காக ஓயாது உழைத்தவர், உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
1 CLAP
0

மெலிந்த தேகம், கண்ணில் கண்ணாடி, கையிலும், சட்டை பாக்கெட்டிலும் எப்போதும் கொத்தாக சில பேப்பர்கள், ஆடம்பரமில்லாத உடை என எளிமையான தோற்றம், சிரித்த முகம், தேவைப்பட்டால் அதில் கண்டிப்பு, என இப்படி அங்க அடையாளங்களைக் கூறியதுமே நம் மனக்கண்ணில் நிச்சயம் டிராபிக் ராமசாமி-யின் உருவம்தான் வந்து போகும். அந்தளவிற்கு சுயநலம் இல்லாத செயல்களால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவர்.

இந்த அவசர உலகில் சாலையில் செல்லும் போது பார்க்கும் அத்துமீறல்களை எல்லாம் தட்டிக் கேட்கக்கூட நேரமில்லாமல், ‘நிச்சயம் இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான்’ என மனதில் எதிர்பார்த்துக் கொண்டே கடந்து சென்ற போது, ஹீரோவாக வந்தவர் தான் டிராபிக் ராமசாமி.

தவறுகளைத் தட்டிக் கேட்கும் ஹீரோக்கள் இளமையாக, பாய்ந்து பாய்ந்து சண்டை போடும் பயில்வான்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தவர். பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல சட்டங்கள் இயற்றப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்.

இதற்காக, தன் சொந்த வாழ்க்கையில் அவர் கொடுத்த விலை மிகவும் அதிகம். பல்வேறு மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு ஆளானார். ஒரு கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டது. ஊர் நலனையே சிந்தித்ததால் சொந்தக் குடும்பம் அவரைப் பிரிந்தது. பல்வேறு வழக்குகள் அவர் மீது பாய்ந்தது.

ஆனால், இது எதையுமே பொருட்படுத்தாமல், மிரட்டல்களுக்கு அஞ்சாமல், வயதையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிப் போராடியவர் டிராபிக் ராமசாமி. அவரது முயற்சியினாலும், போராட்டங்களினாலும் மட்டுமே பல சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.  

வயோதிகம் காரணமாக சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் டிராபிக் ராமசாமி. இதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக இருந்தவர், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

சென்னையின் நிஜ நாயகனாக வலம் வந்த டிராபிக் ராமசாமி யார் என்பதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்...

டிராபிக் ராமசாமி செய்யாறில் 1934ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை பெயர் ரெங்கசாமி, தாயார் சீத்தம்மாள். இவருடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துள்ளார். எனவே தனது சிறுவயதிலேயே ராஜாஜி போன்ற சில நல்ல தலைவர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. கூடவே சமூகம் சார்ந்த சிந்தனைகளும் உதயமானது..

சட்டப்படி கேட்டால்தான் தனது உரிமைகளைப் பெற முடியும் என டிராபிக் ராமசாமி நடத்திய போராட்டங்களுக்கு வித்திட்டது அவரது 14 வயதில் நடந்த சம்பவம் ஒன்றுதான். ஒருநாள் வயலில் அறுப்பு முடிந்து கையில் பத்து கிலோ அரிசியுடன் பேருந்தில் வந்துகொண்டிருந்தார் டிராபிக் ராமசாமி. அப்போது தாசில்தார் ஒருவர் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அப்போது அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. ஆனால் பத்து கிலோவரை பெர்மிட் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.

எனவே, அரிசியைக் கொடுத்துவிட்டு வந்த ராமசாமி, ஒரு 3 பைசா கார்டில் கலெக்டருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து கலெக்டர் தாசில்தாரைப் பணி இடைநீக்கம் செய்ய, தாசில்தார் இவர் வீடுவரை வந்து அரிசியைக் கொடுத்து, கடிதம் எழுதி வாங்கிச் சென்று வேலையில் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இந்தச் சம்பவம் தான், நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும் என்ற எண்ணத்தை அவருக்குள் விதைத்தது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மும்பை கல்வி நிறுவனம் ஒன்றில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் பட்டம் பெற்றார். தனது 18வது வயதில் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சி.ராஜகோபாலச்சாரியிடம் உதவியாளராக பணிபுரிந்தார். தன் முதல் ஆசானான ராஜகோபாலச்சாரியையே எப்போதும் தனது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார் டிராபிக் ராம்சாமி என்பது குறிப்பிடத்தக்கது..

1954-ம் ஆண்டு தனது 20 வயதில் சென்னையின் அடையாளமாக விளங்கிய பின்னி மில்ஸ் நிறுவனத்தில் நெசவுப் பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தார். 1971ம் ஆண்டு தாமாகவே முன்வந்து அப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, சமூகப் பணிகளில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

ஊர்க்காவல் படையில் பணி புரிந்தவர் என்பதால், சென்னை பாரீஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் தாமாகவே முன்வந்து, வாகன நெருக்கடிகளை சரி செய்ய போக்குவரத்து பணியாளர்களுக்கு உதவத் தொடங்கினார். அடிக்கடி போக்குவரத்து காவல்துறைக்கு உதவியதால், அவரை கௌரவிக்கும் விதமாக, காவல்துறை அவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது.  அவரை டிராபிக் ராமசாமி என அப்பகுதி மக்களும் அழைக்கத் தொடங்க, நாளடைவில் அதுவே அவரது அடையாளப் பெயராகிப் போனது.

பெரும்பாலான நேரங்களில் சாலையில் போக்குவரத்தை சீரமைத்தல் அல்லது நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் பதிவு செய்து, அதற்காக வாதாடுதல் என எப்போதும் தன்னைப் பற்றி சிந்திக்காமல் பொதுநலம் சார்ந்தே சிந்தித்தவர் டிராபிக் ராமசாமி. இதனாலேயே ஒரு கட்டத்தில் அவரது மனைவியும், மகளும் அவரை விட்டு பிரிந்து சென்றனர்.

1990ல் தான் முதன்முறையாக நீதித்துறைக்கு ஒரு பொதுநல வழக்கை எடுத்துச் சென்றார் ராமசாமி. உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதையை காவல்துறை ஒருவழிப்பாதையாக மாற்றியதால், ஓராண்டுக் காலத்தில் அங்கு 22 பேர் விபத்தில் உயிரிழந்தது டிராபிக் ராமசாமியை பாதித்தது.

தனக்குக் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து ராமசாமி, ஒருவழிப் பாதை கூடாது என்று ஒரு பொதுநல வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது வரை பல முக்கியமான வழக்குகளை இவர் போட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அவற்றில் மீன்பாடி வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று இவர் போட்ட வழக்கு முக்கியமானது. 2002ம் ஆண்டு சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவற்றிற்கு தடை பெற்றார்.

சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, அவற்றை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். டிராபிக் ராமசாமியின் இந்த முயற்சியின் பலனாகவே கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவானது.

சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் பெற்றுத் தந்தவர் இவர்தான். இன்று இந்த ஆணை தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2007ம் ஆண்டு முதல் பொது இடங்களில் பேனர் வைக்கும் முறைக்கு எதிராக பல்வேறு பொதுநலன் வழக்குகளைத் தொடுக்கத் தொடங்கினார் டிராபிக் ராமசாமி. சாலையில் வாகனங்களில் செல்வோருக்கு இது போன்ற பேனர்களால் ஏற்படும் ஆபத்துக்களை தீர்க்க, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடினார்.

பெரிய அரசியல் கட்சிகள் ஆகட்டும், கோவில் திருவிழாக்கள் ஆகட்டும் எதுவாக இருந்தாலும், பொதுமக்களுக்கு எதிராக இடையூறு விளைவிக்கும் வகையில் வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் இருப்பவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் குரல் கொடுத்தார்.

அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றார். சட்டவிரோத கட்டுமானங்கள், ஊழல்கள் போன்றவற்றை எதிர்த்து அடிக்கடி பொது நல வழக்குகள் பதிவு செய்வார். இதனாலேயே அரசியல்வாதிகள், சென்னையைச் சேர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள் (பில்டர்கள்) என செல்வாக்கு மிகுந்தவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார்.

அனைத்து தரப்புகளிலிருந்தும் எதிரிகள் உருவானதால், ஏழு முறை கைது செய்யப்பட்டார். 2002ம் ஆண்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானதில் வலது கண் பார்வையை இழந்தார். எனினும் தன்னுடைய சமூக நலப் பணியை விட்டுக்கொடுக்க டிராபிக் ராமசாமி முன்வரவில்லை.

மிரட்டல்களுக்கு அஞ்சாமல் துணிந்து தன் வேலைகளைச் செய்து வந்தார். தொடர்ந்து பல பொதுநல வழக்குகளில் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவருக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 14 ஆண்டுகளாக காவல்துறை பாதுகாப்பில் இருக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

பராபட்சமின்றி எல்லா அரசியல் தலைவர்களை எதிர்த்தும் சட்டரீதியில் கேள்வி கேட்டதால் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றார். தான் தொடுக்கும் விளம்பர பேனர்களுக்கு எதிரான பொதுநல வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை எடுக்காத போது, தானாகவே களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட பேனர்களை கிழித்து எறிந்தார். இதனால் சமயங்களில் குண்டர்களின் தாக்குதலுக்கும் ஆளாகி இருக்கிறார். தன்னலமின்றி பொதுநலனோடு செயல்பட்டு, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு சிம்மசொம்மனமாக விளங்கினார் டிராபிக் ராமசாமி.

தன்னைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை எப்போதுமே காதில் போட்டுக் கொண்டதில்லை அவர். ‘விளம்பரப் பிரியர்.. விளம்பரத்திற்காகவே பொதுநல வழக்குகளைத் தொடர்கிறார்’ என்று அவரால் பாதிக்கப்பட்டவர்கள், அவரைப் பற்றி அவதூறு பரப்பினர். ஆனால் அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து தன் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை டிராபிக் ராமசாமி. ‘சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அது தவறும் பட்சத்தில் அதனை சுட்டிக் காட்டுவதில் மட்டுமே தன் முழுக் கவனத்தையும்’ அவர் செலுத்தத் தொடங்கினார்.

தேர்தலில் போட்டி

அதிகாரம் கையில் இருந்தால், தான் சொல்ல நினைப்பதை இன்னும் உரக்கச் சொல்லலாம் என நினைத்தார் டிராபிக் ராமசாமி. இதனாலேயே அரசியலில் இறங்க முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அவருக்கு தோல்வியே பரிசாகக் கிடைத்தது. ஆனாலும் 2015 ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலிலும், 2015ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். அப்போதும் வெற்றி அவர் வசப்படவில்லை.

”இது ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்காக, மக்களால், மக்களுடன் இணைந்து நம்மால் மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால் நாம் அது குறித்து பேசவேண்டும். அமைதியாக கடந்து செல்லக்கூடாது...” என்பதே டிராபிக் ராமசாமியின் கொள்கையாக இருந்தது.

அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், சென்னையில் நாயகனாகக் கொண்டாடப்பட்டார் டிராபிக் ராமசாமி. இதுவரை 300-க்கும் அதிகமான பொது நல வழக்குகளை (PIL) அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தான் தொடுக்கும் பொதுநல வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையையும் அவர் கையாண்டார்.

விகடன் பிரசுரம் இவருடைய வாழ்க்கையை ‘ஒன் மேன் ஆர்மி’ என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது. டிராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2018ம் ஆண்டு ஒரு படம் ரிலீசானது. பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அப்படத்தில் நாயகனாக டிராபிக் ராமசாமியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

“இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால்தான் அது கிடைக்கும். காந்தி போராடாமல் சுதந்திரம் கிடைத்திருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தது. போராட வேண்டாம் எனச் சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்,” என இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிராபிக் ராமசாமி பற்றி பேசியிருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சமயத்தில் அவர் களத்தில் போராடிய போது, அவருக்கு துணையாக யாருமே உடன் நின்றதில்லை. ஆனாலும் தன் குறிக்கோளில் அவர் உறுதியாக இருந்து போராடி, வெற்றிகளை வசமாக்கினார்.

அவர் தன்னை வருத்தி போட்டுக் கொடுத்த பாதை, மற்றவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உடலளவில் டிராபிக் ராமசாமி மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பாடம் மிக முக்கியமானது.

‘நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும்’ என்ற விதையை மக்கள் மனதில் அவர் விதைத்துச் சென்றிருக்கிறார்.

Latest

Updates from around the world