'நன்றி தலைவா’ - $100 மில்லியன் மதிப்பு ஐபிஓ ஆவணத்தில் ரஜினியை குறிப்பிட்ட Freshworks நிறுவனர்!

பிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில், தனது கிளாஸ் ஏ பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.
8 CLAPS
0

சென்னை மற்றும் கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான பிரெஷ் ஒர்க்ஸ், அமெரிக்காவில் 100 மில்லியன் டாலருக்கான பங்கு வெளியீட்டிற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், பிரெஷ் ஒர்க்ஸ் தனது கிளாஸ் ஏ பொது பங்குகளை நாஸ்டக் சர்வதேச சந்தையில் ‘FRSH’ எனும் அடையாளத்துடன் பட்டியலிட உள்ளது.

பிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கிரிஷ் மாத்ருபூதம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த பங்கு வெளியீட்டிற்கான குறியீடு பெயரை ‘பிராஜெக்ட் சூப்பர்ஸ்டார்’ என ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

"என்னுடைய மானசீக குருவாக இருக்கும் தலைவர் ரஜினிக்கு என்னுடைய அன்பும், நன்றியும். இதற்கு நிகரான ஆங்கிலச் சொல் என்ன எனத்தெரியவில்லை. மானசீக குரு என்றால், வழிகாட்டி, உங்கள் மனதில் வீற்றிருக்கும் முன்னோடி எனப் பொருள். அவரை பார்த்தே நீங்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். சூப்பர்ஸ்டார் உலக அளவில், கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவர் பெரிய அளவில் வெற்றி பெற்ற பிறகும், மிகவும் அடக்கமாக இருக்கிறார். நன்றி தலைவா,” என ஆவணத்தின் பிற்சேர்க்கையில் கிரிஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கிளாஸ் ஏ பொதுப் பங்குகளை முதல் பங்கு வெளியீட்டாக வழங்க உத்தேசித்திருக்கும் ஆவணங்களை அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஸ் சேவை பிரிவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, பிரெஷ் ஒர்க்ஸ், 2021 ஜூன் மாதம் 52,500 ஆக இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் 53 சதவீத வருவாய் வளர்ச்சியைக் கண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் வரையான காலாண்டில் இதன் மொத்த வருவாய் 168.9 மில்லியன் டாலராக உள்ளது. முந்தைய இணையான காலாண்டில் இது 110.5 மில்லியன் டாலராக இருந்தது. நிறுவனத்தின் நஷ்டம், ஓராண்டுக்கு முன் 57 மில்லியன் டாலரில் இருந்து 9.8 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.

தகவல் உதவி: ராஷி வர்ஷனி