ரூ.20,000 கோடியில் சென்னை ‘பரந்தூர்’ பசுமை விமான நிலையம்: வசதிகள் என்னென்ன?

சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அங்கு என்ன மாதிரியான வசதிகள் அமைய உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்...
0 CLAPS
0

சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அங்கு என்ன மாதிரியான வசதிகள் அமைய உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்...

சென்னைக்கு தெற்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் பன்னாட்டு விமான நிலையமானது அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர்.

மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முக்கியமானதாகும்.

சென்னை பன்னாட்டு விமான நிலையம்

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே, சென்னையில் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டது.

இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், படாளம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டன. இதில் இறுதிப்பட்டியலில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் முதலீட்டாளர்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.

சென்னை விமானநிலையத்தின் மென்மேலும் அதிகரித்துவரும் விமானப்பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும். மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமானநிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடுஅரசு மேற்கொண்டது.

பரந்தூரில் 2வது விமான நிலையம்:

தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, என்.வி.என்.சோமு ஆகியோர் ‘சென்னையில் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், ப

ரந்தூரில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு பரிந்துரைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய விமானநிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமானநிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

“பரந்தூரில் அமைய உள்ள இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு படிக்கட்டு. இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற கட்டமைப்பு வசதி மிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

வசதிகள் மற்றும் கட்டுமான திட்டப்பணிகள் என்னென்ன?

  • புதிதாக அமையவுள்ள விமானநிலையம் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது.
  • இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.
  • தற்போதைய நிலவரப்படி, 20,000 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2008-ல் வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி, (Guidelines for Greenfield Airport) தேர்வுசெய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் (site clearance) பெற ஒன்றிய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
  • இடஅனுமதி ஒப்புதல் பெற்றபின் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • இதனைத் தொடர்ந்து விமானநிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் (in-principle approval) மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.
“பரந்தூரில் அமைய உள்ள இரண்டாவது விமான நிலையாமானது தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் (One Trillion Dollar) பொருளாதாரமாக உருவாக்கும் மாநில அரசின் முயற்சிக்கு மற்றொரு மைல்கல்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

தொகுப்பு - கனிமொழி

Latest

Updates from around the world