சில்லறை வர்த்தகர்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் இ-வாடிக்கை

சென்னையைச் சேர்ந்த Jnana Inventive ஸ்டார்ட் அப் e-vaadikkai என்கிற செயலி மூலம் சில்லறை வர்த்தகர்களையும் வாடிக்கையாளர்களையும் உள்ளூர் மொழியில் இணைக்கிறது.
34 CLAPS
0

தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே டிஜிட்டல்மயமாக இயங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியை கொரோனா மேலும் துரிதப்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. தனிமனித இடைவெளி அவசியம் என்கிற நிலையில் நுகர்வோர் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்குவதைக் காட்டிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதையே பாதுகாப்பாகக் கருதுகின்றனர் மக்கள்.

இதனால் ஆஃப்லைன் வர்த்தகங்களும் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு மாறியே ஆகவேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

சென்னையைச் சேர்ந்த Jnana Inventive சிறு நிறுவனங்களுக்கு பிராடக்ட் டெவலப்மெண்ட் மற்றும் மார்க்கெட்டிங் கன்சல்டிங் சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் இ-வாடிக்கை (e-vaadikkai) என்கிற SaaS அப்ளிகேஷன் சில்லறை வர்த்தகங்கள் தங்களது சொந்த கடை அல்லது பிராண்ட் பெயரிலேயே ஆன்லைனில் செயல்படவும் பயனர்களுடன் இணைந்திருக்கவும் உதவுகிறது.

காளிதாஸ் ராஜகோபாலன், சிந்துஜா தம்பதி 2018ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள். சில்லறை வர்த்தக உரிமையாளர்கள் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு எளிதாக மாற, உதவவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

இதற்காக உருவாக்கப்பட்டதுதான் e-vaadikkai ஆப். இந்த Saas அப்ளிகேஷன் சில்லறை வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்க உதவுகிறது.

“கொரோனா வைரஸ் பெருந்தொற்று சில்லறை வர்த்தகர்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. பல வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். உற்பத்தி குறைந்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக இவர்கள் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு மாற விரும்புகிறார்கள். வாடிக்கையாளார்களை இழக்கக்கூடாது என்பதால் வாட்ஸ் அப் மூலம் அவர்களிடம் ஆர்டர்கள் பெறுகிறார்கள். ஆனால் முக்கியத் தகவல் பரிமாற்றங்கள் வாட்ஸ் அப்’பில் சாத்தியம் இல்லை என்பதால் ஆர்டர்களை இழக்க நேரிடுகிறது,” என்று யுவர்ஸ்டோரி இடம் தெரிவித்தார் காளிதாஸ்.

சில்லறை வர்த்தகங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக இவர் உருவாக்கிய இ-வாடிக்கை தளத்தில் 100க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தகர்கள் இணைந்துள்ளனர்.

டிஜிட்டல் இணைப்பு

சில்லறை வர்த்தகங்கள் தங்களது கடை அல்லது பிராண்ட் பெயரிலேயே ஆன்லைனில் செயல்பட இ-வாடிக்கை உதவுகிறது என்கிறார் காளிதாஸ்.

முதலில் அப்ளிகேஷன் மூலம் சில்லறை வர்த்தகர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து Jnana பிரதிநிதி பயனரைத் தொடர்புகொண்டு ஆன்லைன் ஸ்டோர் அமைக்க உதவுகிறார். வர்த்தகங்கள் தங்கள் பிராண்டை எப்படி சந்தைப்படுத்துவது என்றும் செயல்படும் விதம் குறித்தும் வழிகாட்டுவார்கள்.

சில்லறை வர்த்தகங்கள் தங்களது பிராடக்டுகளையும் ஆர்டர்களையும் எளிதாக நிர்வகிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பிற்காக SSL பயன்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் செயல்பாடுகள் குறித்த புரிதல் இல்லாத சில்லறை வர்த்தகர்கள் இந்தச் செயலி மூலம் சிறப்பாகப் பலனடையலாம். அவர்களது தனித்தேவைக்கேற்ப உள்ளூர் மொழியில் சேவையளிக்கும் வசதியை இந்தச் செயலி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தால் (RAI) முன்னணி 10 சில்லறை வர்த்தக தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’களில் ஒன்றாக Jnana Inventive தேர்வாகியுள்ளது. ReTech ஸ்டார்ட் அப் விருதுகளில் இறுதிச்சுற்று வரை தேர்வானது.

சந்தா அடிப்படையிலான கட்டணம்

இந்நிறுவனம் 30 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு துறைசார் அனுபவமிக்க 15 பேர் இந்த ஸ்டார்ட் அப்’பில் குழுவாக இயங்கி வருகின்றனர். சந்தா அடிப்படையிலான பி2பி மாதிரியில் இ-வாடிக்கை செயல்படுகிறது.

“எங்கள் மாதக் கட்டணம் 199 ரூபாய் முதல் 499 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு எந்தவித மறைமுக கட்டணங்களோ கமிஷனோ இல்லை,” என்றார்.

சில்லறை வர்த்தகர்கள் செயலி மூலம் வருவாய் ஈட்டத் தொடங்கிய பிறகு சந்தா தொகையை செலுத்தலாம்.

தனித்துவமான வணிக செயல்பாடுகள்

டிஜிட்டல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் சில்லறை வர்த்தகங்களையும் வாடிக்கையாளர்களையும் ஆன்லைனில் இணைக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. உதாரணத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த Lookup வாடிக்கையாளர்கள் மளிகைப் பொருட்கள், மருந்துகள், லாண்டரி சேவைகள் போன்றவற்றைப் பெற உதவுகிறது.

பயனர்கள் கடை உரிமையாளர்களுடன் உரையாடவும் தயாரிப்பு அல்லது சேவை குறித்து தெரிந்துகொண்டு ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யவும் இதுபோன்ற நிறுவனங்கள் உதவுகின்றன.

இவை தவிர பிக்பாஸ்கெட், கிரோஃபர்ஸ் போன்ற பிராண்டுகளும் சில்லறை வர்த்தகர்கள் பயனர்களுடன் ஆன்லைனில் இணைய உதவுகின்றன.

ஆனால் இ-வாடிக்கை பயனர்களின் தனித்தேவைக்கேற்ப உள்ளூர் மொழியில் சேவையளிப்பது அதன் தனித்துவமான அம்சமாகும். டிஜிட்டல் செயல்பாடுகள் குறித்த புரிதல் இல்லாத சில்லறை வர்த்தகர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை ஆன்லைனில் மேற்கொள்ள இந்த அம்சம் பெரிதும் உதவுகிறது.

வருங்காலத் திட்டம்

இந்த ஸ்டார்ட் அப் நிதி திரட்ட உள்ளதாக காளிதாஸ் தெரிவிக்கிறார். வென்ச்சர் கேப்பிடலிஸ்டுகளை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். ஓராண்டில் 1,500 சில்லறை வர்த்தகர்களை இணைத்துக்கொள்ளவும் அடுத்த மூன்றாண்டுகளில் 5,000 சில்லறை வர்த்தகர்களை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

“இன்றைய டிஜிட்டல் உலகில் சிறியளவில் செயல்படும் சில்லறை வர்த்தகர்கள் தங்களது வணிக நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள உதவவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சில்லறை வர்த்தகர்களுக்கு முழுமையான தீர்வளிக்க விரும்புகிறோம்,” என்றார் இணை நிறுவனர்.
ஆப் டவுன்லொட்ட் செய்ய: e-vaadikkai

ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world