‘$1லட்சம் மதிப்பு ஆர்டர் மட்டுமே; நோ ரெஸ்யூம், திறமையா வேலை செஞ்சா சன்மானம்’ - MacAppStudio-ன் வளர்ச்சிக் கதை!

By vasu karthikeyan|22nd Mar 2021
2012ல் சென்னையில் நண்பர்கள் சுரேஷ் மற்றும் ஜார்ஜ் தொடங்கிய ‘MacAppStudio’ தங்களின் கடின உழைப்பு மட்டுமின்றி புதிய வேறு மாதிரியான அணுகுமுறையால் இன்று உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சென்னையின் முக்கியமான ஆப் டெவலப்மெண்ட் நிறுவனமான 'MacAppStudio' 'மெக்ஆப்ஸ்டுடியோ’ நிறுவனர்களை சந்தித்து உரையாட அவர்களது அலுவலகம் சென்றிருந்தேன். தனி அறையில் காத்திருக்குமாறு அலுவலக பணியாளர் ஒருவர் தெரிவித்தார். அப்போது அந்த நிறுவனத்தின் பத்து விதிகளை பெரிதாக சுவரில் ஒட்டிவைத்திருந்தார்கள்.


முதல் விதியே, 'இது வேறு மாதிரியான நிறுவனம்' என புரியவைத்தது.

குறைந்தபட்சம் ஒரு லட்சம் டாலருக்கு கீழே நாங்கள் எந்த ஆர்டரையும் எடுப்பதில்லை. ஒருவேளை உங்களது பட்ஜெட் இந்த எல்லைக்குள் இருந்தால் நாம் நண்பர்களாக இருப்போம் எனக் கூறிப்பிட்டிருந்தது.

பிஸினஸ் குறித்த தெளிவான புரிதலும் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இந்த கட்டணத்தை அறிவிக்க முடியும். ஆர்டர் கிடைத்தால் போதும் என சந்தை இருக்கும் சூழலில் எப்படி இது சாத்தியம் என்னும் சிந்தனையில் இருந்தபோது நிறுவனர்கள் சுரேஷ் குணசேகரன் மற்றும் ஜார்ஜ் வந்தார்கள்.

Macapp
ஒரு லட்சம் டாலர் என எப்படி நிர்ணயம் செய்தீர்கள்? என உரையாடலைத் தொடங்கினேன். ”ஒரு லட்சம் டாலர் என்றால் சுமார் 70 லட்ச ரூபாய். ஆனால் இந்த எல்லையை ஒரே நாளில் நாங்கள் எட்டவில்லை. 30 லட்ச ரூபாய் என இலக்கு நிர்ணயம் செய்தோம். அதனைத் தொடர்ந்து 50 லட்ச ரூபாய் ஆர்டர்களை மட்டுமே நாங்கள் எடுத்தோம். அதற்கு பிறகுதான் ஒரு லட்சம் டாலர் என்பதை இலக்காகக் கொண்டோம்,” என சுரேஷ் தெரிவித்தார்.

கடும் நெருக்கடியை கடந்த பிறகே இந்த நிலையை நாங்கள் அடைந்திருக்கிறோம் எனக் கூறிய சுரேஷ், ஆரம்பகால நிகழ்வுகளை பகிரத்தொடங்கினார்.

சுரேஷ்-ஜார்ஜ் நட்பில் உருவாகிய நிறுவனம்

நாங்கள் இருவரும் திருச்சி. பள்ளியில் இருந்து நண்பர்கள். வெவ்வேறு கல்லூரியில் பொறியியல் படித்தாலும் தொடர்பிலே இருந்தோம். சென்னை வந்த பிறகு கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினோம். இருவரும் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தாலும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.


அந்த சமயத்தில் இண்டெல் நிறுவனம் ஆப் போட்டியை நடத்தியது. சர்வதேச அளவில் பல நாடுகளில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் நாங்கள் வெற்றி அடைந்தோம். அந்த சமயத்தில் 20,000 டாலர் பணத்தை இண்டெல் பரிசுத் தொகையாக வழங்கியது. அதனால் வேலையில் இருந்துகொண்டே  பல போட்டிகளில் நாங்கள் கலந்து கொண்டோம். அந்த குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் நாங்கள் 2 லட்சம் டாலர் அளவுக்கு பரிசுத்தொகையை ஈட்டினோம்.

team

Mac App studio ஊழியர்கள் குழு

அப்போதுதான் எங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அதனால் இந்த பரிசுத் தொகையை வீட்டில் கொடுத்துவிட்டு, பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நாங்கள் எங்கள் நிறுவனம் ‘MacAppStudio' 2012ல் தொடங்கினோம். 

முதல் மூன்று ஆண்டுகள் ஊழியர்கள் யாரும் இல்லாமல் நாங்கள் இருவர் மட்டுமே நிறுவனத்தை நடத்தினோம். ஆப்பிள் ஆப் ஸ்டோருக்காக ஆப் தயாரித்து பதிவேற்றினோம். மூன்று ஆண்டுகளில் சுமார் 18 ஆப் தயாரித்திருப்போம். இதில் 6 ஆப் ஓரளவுக்கு வெற்றிபெற்றது.

இந்த ஆப் இந்தியர்களுக்கானது அல்ல. அமெரிக்கர்களுக்காக ஆப் தயாரித்தோம். அமெரிக்கர்கள் பணம் செலுத்தி ஆப் வாங்குவார்கள். எங்களுக்கு அப்போ வருமானமே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவையெல்லாம் மிக சொற்பமான வருமானம் மட்டுமே.


இந்த மூன்று ஆண்டுகளில் எங்களுடைய சேமிப்பு கிட்டத்தட்ட கரைந்துவிட்டது. வீட்டுக்காக வாங்கிய கடனை சில தவணைகள் செலுத்த முடியவில்லை. மருத்துவச் செலவுக்கு கூட காசு இல்லை என்னும் நிலைமை.


இந்த நிலையில், எங்களுக்கு மாதம் சில ஆயிரம் வருமானம் கொடுத்த ஆப் என்றால் அது Moneybag என்னும் ஆப்தான். தனிநபர்களின் வருமானம், செலவுகளை நிர்வகிக்கும் ஆப் அது. மூன்று ஆண்டுகளாக பல ஆப்-களை நாங்கள் தயார் செய்திருந்தாலும் இந்த மணிபேக் ஆப்-க்காக பெருமளவு நேரம் ஒதுக்கி இருந்தோம். அதனால் 60 டாலர் என விலை நிர்ணயம் செய்திருந்தோம். மாதம் சுமார் 10 டவுன்லோடு அளவில்தான் இதன் செயல்பாடு இருந்தது.


இந்த நிலையில், இந்த ஆப் இலவசமாக டாரண்டில் எங்களுடைய வாடிக்கையாளர் அப்லோட் செய்துவிட்டு, அதற்கான பாஸ்வேர்டையும் கொடுத்துவிட்டார். பாஸ்வேர்ட் என்பது 16 இலக்கு எண். தற்போது இந்த எண் டைனமிக்காக மாறும். ஆனால் அப்போது 16 இலக்க எண்ணை யார் கொடுத்தாலும் அந்த ஆப் வேலை செய்தது.

கிட்டத்தட்ட எங்களுடைய மூன்று வருட உழைப்பு வீணாகிக்கொண்டிருந்தது. அந்த டாரன்ட் தளத்தில், இந்த செயலியை வடிவமைத்தவர்கள் நாங்கள்தான். எங்களுக்கு ஒரு டாலராவது கொடுங்கள் என கமெண்ட் செய்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் யாரும் எங்களுடைய கமெண்ட்டை பொருட்படுத்தவே இல்லை.

இனி செய்வதற்கு ஏதும் இல்லை என்பதால் டீ குடிக்க  சென்றுவிட்டோம்.

தொழிலில் ஏற்பட்ட திருப்புமுனை

தீடிரென அமெரிக்காவில் இருந்து இவர்களுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அமெரிக்காவின் முக்கியமான ஆப் டிஸ்டிபியூட்டர். இவர்களின் ஆப்-களை அவர் நிறுவனம் மூலமாக விநியோகம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.


அவர் எங்களிடம் பிஸினஸ் செய்ய விரும்புகிறார் என்பதைத் தாண்டி, எப்படி நம்மை கண்டுபிடித்தார் என்னும் கேள்வியே எங்களிடம் இருந்தது.  டாரண்ட் தளத்தில் ’நீங்கள்தான் நம்பர் ஒன்’ எனச் சொன்னார். அவர்களுடைய விற்பனை யுத்தி என்பது பல ஆப்களை ஒருங்கிணைத்து ஒரு பேக்கேஜாக விற்பனை செய்வார்கள். விலை குறைவாக கேட்டாலும் பெரிய எண்ணிக்கையில் கேட்பார்கள் எனத் தெரியும்.

ஒரு டவுன்லோடுக்கு 3 டாலர் எனக் கேட்டார். நாங்கள் 6 டாலர் கேட்டோம். இறுதியாக 4.5 டாலர் விலையை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் எண்ணிக்கை என்பது ஒரு லட்சம் டவுன்லோடு. கிட்டத்தட்ட 4.5 லட்சம் டாலர் ஒரே நொடியில். இந்த நொடியில் இருந்து எங்களுடைய வாழ்க்கை மாறியது. கிட்டத்தட்ட திவால் என்னும் நிலையில் இருந்து மீண்டுவந்தோம்.

இந்த நிலையில் இண்டெல் நிறுவனம் ஒரு ஆப் தயாரிக்க திட்டமிட்டது. நாங்கள் இண்டெல் நிறுவனத்திடம் பல விருதுளை வாங்கி இருப்பதால் மற்றவர்கள் வடிவமைப்பதைவிட நாங்கள் வடிமைப்பதே நன்றாக இருக்கும் எனக் கருதினார்கள். அதனால் இண்டெல் செயலியை வடிவமைத்துக் கொடுத்தோம். இதனுடைய மதிப்பு 2.5 லட்சம் டாலர்கள்.

வாடிக்கையாளர்

MacAppStudio உடன் க்ளையண்ட் குழு

இன்டெலுக்கு பிறகு வேறு நிறுவனங்களுக்காக ஆப் வடிமைக்கத் தொடங்கினோம். முதல் பெரிய புராஜக்ட் ஏஜிஎஸ் சினிமாஸ்தான். இதனைத் தொடர்ந்து படிப்படையாக நாங்கள் வளர்ந்துவந்தோம் எனக் கூறினார்.

“தற்போது ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் அளவிற்கு டர்ன் ஓவர் பெறுகிறோம். புதிய முயற்சிகள் மூலம் இதை அதிகரிப்பதே எங்கள் இலக்கு,” என்கின்றனர் நிறுவனர்கள்.

நோ ரெஸ்யூம், வித்தியாச அணுகுமுறையால் உருவாகிய டீம்

முதல் சில ஆர்டர்கள் எங்களுக்கு இயல்பாக அமைந்ததால் எங்களுக்கு சேல்ஸ் டீம் என்ற குழுவே தேவையில்லை. ஒவ்வொரு ஆர்டரும் இயல்பாக அமைந்தது. அதேபோல,

இதுவரை நாங்கள் ரெஸ்யூம் பார்த்து யாரையும் வேலைக்கு எடுத்ததில்லை. வேலை கேட்டு வருவோரிடம் உரையாடும்போதே அவர்களிடம் உள்ள திறமையைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப வேலையை நாங்கள் வழங்குவோம்.

தற்போது 120 நபர்கள் மாக் ஆப் ஸ்டூடியோவில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை இலவசமாக வழங்குகிறோம். சம்பளமும் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக வழங்குகிறோம் எனக் குறிப்பிட்டார்.


அதேபோல, வேலை வழங்குவதிலும் பெரிய படிப்பு படித்தவர்களை நாங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் ரெஸ்யூம் கூட பார்ப்பதில்லை.

”எங்கள் நிறுவனத்தில் அவர்களை பயன்படுத்த முடியும் எனத் தோன்றினால் அவர்களை வேலைக்கு எடுப்போம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் சேர்ந்தவர்கள் தற்போது புது வீடு கட்டி குடியேறும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை அளவிட முடியாது,” என்றனர் சுரேஷ் மற்றும் ஜார்ஜ்.

இதனால் பலரும் எங்களிடம் வேலை கேட்டு வருகிறார்கள். அனைவரையும் எங்களால் வேலைக்கு எடுக்க முடியாது. அதனால் பிரிட்ஜ் என்னும் ஆன்லைன் கோர்ஸ் நடத்துகிறோம். இதில் டெக்னாலஜியை புரியும் படி சொல்லிக்கொடுப்பதால் எங்களிடம் வேலை கிடைக்கவில்லை என்றால் மற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதில் பயிற்சி பெறுவோருக்கு இருக்கும்.


அலுவலகம் அருகிலேயே ஒரு உணவகம் மூலம் ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது அதன் அருகிலே ஊழியர்கள் தங்குவதற்கும் பெரிய வீடு எடுக்கபட்டிருக்கிறது. பணியாளர்களுக்கு இந்த வசதிகளை செய்ய வேண்டும் என எப்படி தோன்றியது எனக் கேட்டதற்கு, ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் இருவரும் சாப்பிடும்போது, ஊழியர்கள் சாப்பிடாமல் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். கேட்டால் பிறகு சாப்பிட்டுக்கொள்கிறோம் எனக் கூறுவார்கள்.


அப்போதுதான் அவர்கள் சரியாக சாப்பிடுகிறார்களா என்னும் சந்தேகம் எங்களுக்குத் தோன்றியது. அதற்குப் பிறகு முதலில் ஒருவேலைக்கு மட்டும் உணவு வழங்கினோம். அதனைத் தொடர்ந்து முழுமையாக வழங்கத் தொடங்கினோம்.

“இது தேவையில்லாத வேலை என பலரும் விமர்சனம் செய்தார்கள். ஒரு நிறுவன வெற்றிக்கு குழு எவ்வளவு முக்கியம் எனத் தெரிந்ததால், எங்களால் இது முடியும் என நினைத்தோம். இப்போது வரை இதனைத் தொடர்ந்து செய்கிறோம் எனக் கூறினார்கள்.
ஊழியர்

அதுமட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் ஊழியருக்கு தங்க செயின், 1 லட்ச ரூபாய் பரிசு என அவ்வப்போது அவர்களின் வேலைக்கு ஏற்ப சன்மானம் வழங்கி ஊக்கப்படுத்துவது சுரேஷ் மற்றும் ஜார்ஜின் வழக்கம். இப்படி தங்கள் குழு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மீது நம்பிக்கை வைத்ததன் பலனாக மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது மாக் ஆப் ஸ்டூடியோ.

கொரோனா கால சவாலை சந்தித்தது எப்படி?

கோவிட் காலத்தில் பல நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்தன. பலரை வேலையைவிட்டு நீக்கினர். ஆனால் நாங்கள் இதனைச் செய்ய வில்லை. ஒரு கட்டத்தில் புதிய புராஜ்க்ட்கள் குறைவான இருந்த சமயத்த்தில், எங்களுடைய சொந்த பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்தோம். இதனை வைத்துதான் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வெண்டார்களுக்கான தொகையை நாங்கள் வழங்கினோம் எனக் கூறினார்கள்.


இத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இன்றும் ஒரு லட்சம் டாலர் பிசினஸ் என்பது பெரிய தொகையாக தெரியவில்லையா என்று கேட்டேன்.


“வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது பெரிய தொகையாக தெரியும். ஆனால் டெக்னாலஜி மூலம் விரிவாக்கம் சாத்தியம். தவிர டெக்னாலஜிக்கு எல்லை கிடையாது. உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும் என்பதால் தொழிலுக்கு டெக்னாலஜி முக்கியம்.

“டெக்னாலஜி சரியாக இருந்தால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு வேறுமாதிரியாக இருக்கும். சரியான ஆப் இல்லாததால் தோல்வியடைந்த பல நிறுவனங்கள் உள்ளன. சரியான ஆப்கள் இருந்ததால் மாபெரும் வெற்றியை அடைந்த நிறுவனங்களும் உள்ளன. அதனால் இந்த தொகை இயல்பானதுதான்,” எனக் கூறினார்.

தொகை அதிகமானாலும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்களா என்னும் கேள்விக்கு, நிறைய இருக்கிறார்கள் என்றார் சுரேஷ்.

எங்களுடைய கட்டணத்தை பார்த்த பிறகும் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 20 ஆர்டர்கள் வருகின்றது. இருந்தாலும் நாங்கள் அனைத்தையும் எடுப்பதில்லை. நடப்பு ஆண்டில் 50 புராஜக்ட்கள் மட்டுமே செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இதில் 2 புராஜட்கள் சம்பந்தபட்ட நிறுவனத்தின் நோக்கத்தை பொறுத்து இலவசமாக செய்து கொடுக்கிறோம்,” என்றார்.
சுரேஷ் ஜார்ஜ்

அடுத்து என்ன?

தற்போது பிற நிறுவனங்களுக்கு செயலியை வடிவமைத்து கொடுக்கிறீர்கள். ஆரம்ப காலத்தில் இருந்தது போல சொந்தமாக ஆப்கள் வடிவமைக்கும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டேன்.


தற்போது புதிய நிறுவனம் ஒன்றினை உருவாக்கி இருக்கிறோம். இதில் எங்களுக்கான செயலியை வடிவமைத்து வருகிறோம். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்குக்கு மாற்றான சமூக வலைதளத்தை வடிவமைத்து வருகிறோம். சித்திரை 1-ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பு இருக்கும்.

நாங்கள் ஏற்கெனவே நடத்திவரும் நிறுவனம் நாங்கள் சொந்தமாக உருவாக்கியது. இனியும் அப்படிதான் இருக்கும். ஆனால் புதிய நிறுவனத்தில் வென்ச்சர் கேபிடல் முதலீட்டை பெறும் திட்டத்தில்தான் தொடங்கினோம். காரணம் முதலீடு இருந்தால்தான் இந்த ஆப் அடுத்தகட்டத்துக்குச் செல்லும். முதலீடு தொடர்பாக இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் இருக்கிறோம். விரைவில் புதிய முதலீடு கிடைக்கும் என்றார்.

ஏற்கெனவே சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா ஆகியவை பெரும் வெற்றியை பெற்றவை. இந்த நிலையில் அதேபிரிவில் மேலும் ஒரு அப் தேவையா?

ஃபேஸ்புக் நிறுவனத்தை மார்க் ஜூகர்பெர்க் தொடங்கும்போது மைஸ்பேஸ், ஆர்குட் போன்றவை பெருமளவு சந்தையை வைத்திருந்தன. அதனால் அவர் ஃபேஸ்புக் தொடங்காமல் இருக்கவில்லை. கிட்டத்தட்ட அதேபதில்தான் இங்கேயும்.

இந்தப் பிரிவில் மேலும் ஒரு செயலிக்கான தேவை இருக்கிறது. அதனை புதிதாக உருவாக்க முடியும் என எங்களுடைய உள்ளுணர்வு கூறுகிறது. அதனை நாங்கள் நம்புகிறோம் என இருவரும் தன்னம்பிக்கை ததும்ப விடைக்கொடுத்தனர்.

இவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது.