சென்னை சமூக ஊடக சேவை நிறுவனம் Pepul 1.5 மில்லியன் டாலர் விதை நிதி உயர்த்தியது!

இந்தியாவில் உருவான சமூக வலைப்பின்னல் சேவையான Pepul ஹவர்கிளாஸ் வென்சர்ஸ், கிரிஷ் மாத்ருபூதம், விஜய் சேகர் சர்மா ஆகியோரிடம் இருந்து 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
266 CLAPS
0

பிரைவசியை முதன்மையாகக் கொண்ட, ஆர்வத்தின் அடிப்படையில் செயல்படும் இந்தியாவில் உருவான சமூக வலைப்பின்னல் சேவையான Pepul ஹவர்கிளாஸ் வென்சர்ஸ், கிரிஷ் மாத்ருபூதம், விஜய் சேகர் சர்மா ஆகியோரிடம் இருந்து 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

சுரேஷ் குமார்.ஜி 2020ல் Pepul நிறுவனத்தை துவக்கினார். இதற்கு முன்னதாக, சுரேஷ் குமார் மற்றும் அவரது நண்பர் ஜார்ஜ், டிஜிட்டல் நிறுவனமான MacAppStudio-வை சுயநிதியில் உருவாக்கி, பல்வேறு பரிசோதனைகள், ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த காலகட்டத்திலேயே, தூய்மையான, பாதுகாப்பான, நல்லெண்ண சமூக வலைப்பின்னல் சேவையை இந்தியாவில் இருந்து உருவாக்கும் எண்ணம் கொண்டிருந்தனர். இந்த எண்ணமே பின்னர் "Pepul" சேவையாக அறிமுகமானது. இப்போது, இந்தியாவில் இருந்து உருவான உலகத்தரம் வாய்ந்த நல்லெண்ண சமூக ஊடக மேடையாக உருவாகும் எண்ணம் கொண்டுள்ளது.

மற்ற சமூக ஊடக மேடைகள் போல் அல்லாமல், Pepul நல்லெண்ண அம்சங்களை புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் மைய அம்சமாகக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று, இந்த மேடையில் அனாமதேய பயனாளிகள் மற்றும் எதிர்மறை உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதாகும்.

எனவே தான் இந்த சேவை பயனாளிகள் தங்கள் நிகழ் நேர படத்துடன் உண்மையான அறிமுக பக்கத்தை உருவாக்க மட்டும் அனுமதிக்கிறது.

நீண்ட கால நல்லெண்ண கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக அனாமதேய பயனாளிகள் மற்றும் எதிர்மறை உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதில், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் உலகின் பாதுகாப்பான சமூக ஊடக மேடையை உருவாக்கி வருகிறோம்.

பாதுகாப்பு தவிர, பயனாளிகள் தங்கள் வாழ்க்கைக் கதைகள், ஆர்வங்கள் மற்றும் திறன்களை அழகிய கதைகள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.

”யார் வேண்டுமானாலும் அருகாமையில் அல்லது தொலைவில் உள்ள ஆர்வம் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். அந்த ஆர்வத்தின் அடிப்படையில் நிஜ உலக சமூகங்களை உருவாக்கிக் கொள்ளலாம்,” என்று Pepul நிறுவனர் சுரேஷ் குமார் யுவர்ஸ்டோரியிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.

எந்த ஒரு உண்மையான பயனாளியும், தனது ஆர்வத்திற்கு ஏற்ற நல்லெண்ண சமூகத்தை உருவாக்கிக் கொள்ள வழி செய்வதே நிறுவனத்தின் இலக்காக அமைகிறது.

இந்த சமூக வலைப்பின்னலின் அடுத்த கட்ட வளர்ச்சியில் இந்த இலக்கு முக்கிய அம்சமாக அமைகிறது. நல்லெண்ண அம்சம் மற்றும் உண்மையான பயனாளிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Pepul பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக உணர வைக்கிறது. இதன் காரணமாக முன்னோட்ட கட்டத்திலேயே பெண்கள் இந்த மேடையில் இணைவதில் ஆர்வம் காட்டினர்.

Pepul தனது நோக்கத்தை அடைய ஹவர்கிளாஸ் வென்சர்ஸ், பிரெஷ் வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா ஆகியோரிடம் இருந்து 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

பாதுகாப்பான சமூக வலைப்பின்னல் மேடைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது, ஊழியர்கள் விரிவாக்கம், பயனாளிகள் விரிவாக்கம் ஆகியவற்றுக்காக இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த செயலி முன்னோட்ட கட்டத்தில் 177 நாடுகளில் தரவிறக்கம் செய்யப்பட்டாலும், தற்போது இந்திய பயனாளிகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. வரும் ஆண்டுகளில் வருவாய் ஈட்டும் வகையில் புதுமையான வருவாய் திட்டங்களும் இருப்பதாக இதன் நிறுவனர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Latest

Updates from around the world