நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை இணை நிறுவனர்களாக உயர்த்தியுள்ள Tendercuts!

அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திட்டத்தை வகுத்துள்ள டெண்டர் கட்ஸ் நிறுவனம், தனது மைய குழுவை வலுவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
0 CLAPS
0

இறைச்சி டெலிவரி சேவை நிறுவனமான'Tendercuts' 'டென்டர் கட்ஸ்’ தனது நீண்ட நாள் ஊழியர்கள் கே.சசிகுமார், வருண் பிரசாத் சந்திரன் மற்றும் வெங்கடேசனை நிறுவனத்தின் இணை நிறுவனர்களாக பதவி உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

நிறுவனம் நாடு தழுவிய அளவில் சில்லறை விற்பனை மையங்களின் விரிவாக்கத்தைத் திட்டமிட்டுள்ள நிலையில், நிறுவனர் மற்றும் சி.இ.ஓ நிஷாந்த் சந்திரன் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

டென்டர் கட்ஸ் (TenderCuts) நிறுவனத்தின் முக்கியப் பிரிவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருந்த இந்த மூவரும், இனி நிறுவனத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்களிப்பு செலுத்துவார்கள்.

மனிதவள மேம்பாட்டுத்துறையில் இருந்து சில்லறை விற்பனை துறைக்கு வந்த கே.சசிகுமார், 2016 முதல் ’டென்டர் கட்ஸ்’ நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறார். 2019 ம் ஆண்டு தலைமை வர்த்தக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் இவர். தற்போது அவர் புதிய சந்தை விரிவாக்கம், திட்டங்கள் மனிதவளம் ஆகியவற்றை கவனித்து வருகிறார். துவக்கம் முதல் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

தலைமை தொழில்நுட்ப அதிகாரியான வருண் பிரசாத் சந்திரன், 2016ல் தொழில்நுட்பத் தலைவராக சேர்ந்தார். நிறுவனத்தின் துடிப்பான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

தலைமை செயல்பாட்டு அதிகாரியான வெங்கடேசன், செயல்பாடுகள் மற்றும் மார்க்கெட்டிங் தலைவராக 2018ல் நிறுவனத்தில் இணைந்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவன வர்த்தகத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

“இந்த மூவரும் வெவ்வேறு துறை சார்ந்த அனுபவம் மூலம் நிறுவன வளர்ச்சியில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இவர்களுடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. இந்த பிராண்ட் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்,” என்று நிறுவனர் மற்றும் சி.இ.ஓ நிஷாந்த் சந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த 12 மாதங்களில் இந்தியாவின் 15 முன்னணி நகரங்களில் விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் நிறுவனம் தனது மையக் குழுவை வலுவாக்கி வருகிறது. நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.