தலையசைத்தால் போதும் ஸ்மார்ட் சாதனங்கள் இயங்கும்: வேரபிள் கருவிகள் உருவாக்கும் சென்னை ஸ்டார்ட்-அப்!
சென்னையைச் சேர்ந்த Dextroware Devices ஸ்டார்ட் அப் தலையில் அணியக்கூடிய Mouseware சாதனத்தை கணிணி மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை இயக்குவதற்காக உருவாக்கியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் கணிணிமயம்தான். டிஜிட்டல் சாதனங்கள் கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை வெகுவாகக் குறைத்துவிட்டன. வேலை வாய்ப்புகள் பெறுவதற்குக்கூட நமது இருப்பிடம் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.
“வேலை வாய்ப்புகளை அணுக உதவும் தொழில்நுட்பச் சாதனங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கவேண்டும். அதை அணுகும் உரிமை அனைவருக்கும் உண்டு,” என்கிறார் ஐஐடி மெட்ராஸில் இன்குபேட் செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் Dextroware Devices நிறுவனர் பிரவீன் குமார்.
23 வயதான பிரவீன் குமார் பொறியியல் பட்டதாரி. மாற்றுத்திறனாளிகள், கைகளை இழந்தவர்கள், கைகளையோ விரல்களையோ கட்டுப்படுத்தும் நிலையில் இல்லாதவர்கள் போன்றோரால் எளிதாகக் கணினியைப் பயன்படுத்த முடியாது. இதை உணர்ந்த பிரவீன் குமார் தொழில்முனைவு முயற்சியில் களமிறங்கினார்.
கைகளை இழந்த 40,000 பேரில் 85% பேர் எந்தவித சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை என்கிறார் பிரவீன். செயற்கைக் கைகள் போன்றவை விலையுயர்ந்தவை என்பதால் எல்லோராலும் இதை வாங்கிவிட முடிவதில்லை. இவர்களால் கணிணியையோ மற்ற டிஜிட்டல் சாதனங்களையோ பயன்படுத்த முடியாமல் போகிறது.
கைகளை இழந்தவர்கள் மட்டுமின்றி கார்ப்பல் டியூனல் சிண்ட்ரோம், பார்க்கின்சன் நோய், பெருமூளை வாதம் உள்ளிட்ட நரம்பியல் பிரச்சனைகள் இருப்பவர்களாலும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களாலும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த முடிவதில்லை.
“மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் உடனடியாக தொழில்நுட்ப உலகத்திலிருந்து துண்டிக்கப்படுகின்றனர். இவர்களால் தாங்கள் செய்துகொண்டிருந்த வேலையைக்கூட தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. அதிக நாட்கள் விடுப்பு எடுக்க முடியாத காரணத்தால் வேலையை விட்டு விலக வேண்டியுள்ளது. வேறு வழியின்றி கிடைக்கும் வேலையில் சேர்ந்து திறமை இருந்தும் குறைந்த சம்பவளம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்,” என்கிறார் பிரவீன்.
இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்க விரும்பிய பிரவீன் 2020-ம் ஆண்டு Dextroware Devices நிறுவினார். இந்தத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் தலையில் அணியக்கூடிய ‘Mouseware’ என்கிற சாதனத்தை வடிவமைத்துள்ளது. இந்த சாதனம் கைகளைப் பயன்படுத்தாமல் தலையசைவுகளின் மூலம் கணிணியையும் ஸ்மார்ட்ஃபோன்களையும் இயக்க உதவுகிறது.
எப்படி செயல்படுகிறது?
தலையில் அணியக்கூடிய இந்த சாதனத்தைப் பயனர் அணிந்துகொண்டு கர்சர் எங்கு செல்லவேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கேற்றவாறு தலையை அசைக்கவேண்டும்.
“ஸ்கிரீனில் கர்சர் எப்படி நகரவேண்டுமோ அதேபோல் தலையை அசைக்கவேண்டும். இதை கணிணிக்கு மட்டுமல்லாது ஸ்மார்ட்போன், டேப்ளெட், ஸ்மார்ட் டிவி போன்றவற்றை இயக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். பயனர் இந்த சாதனத்தை தொப்பி, ஹெட்செட் என தங்களது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு,” என்று பிரவீன் விவரித்தார்.
மவுஸ் கிளிக் செய்வதற்கு கால்கள் அல்லது விரல்களில் இயக்கக்கூடிய ஸ்விட்ச், யுனிவர்சல் ஸ்விட்ச் என பயனர்கள் தங்களது வசதிக்கேற்பத் தேர்வு செய்துகொள்ளலாம்.
“ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் என்ஜின் மூலம் குரல் வழியாக டைப் செய்யும் வசதியும் உள்ளது. பெரும்பாலான ஆங்கில ஒலிநடை, இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், வங்காளம், மராத்தி போன்ற பிராந்திய மொழிகள், சீனம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற சர்வதேச மொழிகள் இதில் அடங்கும். பயனர் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யவோ அப்ளிகேஷனை ஓபன் செய்யவோ பிரத்யேக குரல்வழி கட்டளைகளை வகுத்துகொள்ளலாம்,” என்கிறார்.
Dextroware ஐந்து பேர் கொண்ட குழுவாக இணைந்து முன்வடிவத்தை உருவாக்கி வருகிறது. தற்போது முன்பதிவிற்குத் (Pre-order) தயாராக உள்ளது.
முக்கிய தருணம்
பிரவீன் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது Mouseware உருவாக்கவேண்டும் என்று தோன்றியுள்ளது.
இவருக்கு கேம்ஸ் விளையாடுவதில் அதிக ஆர்வமுண்டு. தொழில்நுட்ப உதவியுடன் தலையசைத்து கேம்ஸ் விளையாடுவதில் மூழ்கிவிடுவார். இவரது நண்பருக்கு ஒரு விபத்து காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டது. நான்கு மாதங்கள் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் எதையும் பயன்படுத்த முடியவில்லை.
”திடீரென்று தொழில்நுட்பத்தில் இருந்து விலகி இருக்கவேண்டிய நிலை என் நண்பருக்கு ஏற்பட்டது. விளையாட்டைக் காட்டிலும் கைகளைப் பயன்படுத்த முடியாமல் இருப்போருக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணர்ந்தேன்,” என்கிறார்.
பிரவீனிடம் தொழில்நுட்பத் திறன் மட்டுமல்லாது தொழில்முனைவு ஆர்வமும் இருந்தது. இந்த இரண்டையும் இணைத்து ஒரு பிராஜெக்டாக Mouseware உருவாக்கினார். இந்த பிராஜெக்ட் IEEE SS’12, IIT-M Shaastra, Google-Build for Digital India என பல்வேறு தொழில்நுட்ப நிகழ்வுகளில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
“இந்த பிராஜெக்டை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த பாராட்டுகள் உந்துதலாக இருந்தன,” என்கிறார் பிரவீன்.
பிரவீன் பட்டப்படிப்பு முடித்த பிறகு Dextroware Devices நிறுவனத்தைத் தொடங்கினார். ஐஐடி-எம் இன்குபேஷன் செல்லிற்கு பிராஜெக்டை சமர்ப்பித்து தேர்வு செய்யப்பட்டார். டிசிஎஸ் ஃபவுண்டேஷன் முயற்சியான ‘டிஜிட்டல் இம்பேக்ட் ஸ்கொயர்’ இன்குபேஷன் ஆதரவும் கிடைத்தது.
இதனால் இந்த ஸ்டார்ட் அப்பிற்கு டிசிஎஸ், ஐஐடி மெட்ராஸ் இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவித்தொகை கிடைத்தது. Mouseware வடிவமைத்து வணிக ரீதியான பயன்பாட்டிற்காக உருவாக்க இந்த உதவித்தொகை உதவியுள்ளது.
சந்தை வாய்ப்புகள்
இந்தியாவில் தொழில்நுட்பம் மூலம் உதவக்கூடிய Mouseware போன்ற தயாரிப்புகள் குறைவாகவே உள்ளன என்கிறார் பிரவீன். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
”கணிணி பயன்பாட்டைப் பொருத்தவரை டைப் செய்வது தொடர்பான சிக்கலுக்கு எந்த ஒரு நிறுவனமும் தீர்வு உருவாக்கவில்லை என்பதை எங்களது ஆய்வு மூலம் தெரிந்துகொண்டோம். குரல்வழி டைப் செய்யும் வசதியையும் தனித்தேவைக்கேற்ப குரல்வழி கட்டளை வழங்கும் அம்சத்தையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஸ்மார்ட் சாதனங்கள் அனைத்தையும் இயக்க உதவும் ஒருங்கிணைந்து தீர்வு ஒன்றை இதுவரை யாரும் வழங்கவில்லை,” என்கிறார்.
மக்களுக்கு உதவக்கூடிய இதுபோன்ற தொழில்நுட்பத் தீர்வுகளுக்கு அதிகம் செலவிடவேண்டியிருக்கும் என்கிற முக்கிய அம்சத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற தீர்வுகளுக்கு 45,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கும் நிலையில் Mouseware 12,000-15,000 ரூபாய் என்கிற கட்டணத்தில் பலருக்கும் கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் தீர்வளிக்கிறது,” என்கிறார்.
வணிக மாதிரி
Dextroware Devices ஸ்டார்ட் அப் இன்னும் வருவாய் ஈட்டும் நிலையை எட்டவில்லை. பி2பி வணிக மாதிரியில் செயல்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக செயல்படும் நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளது.
என்ஜிஓ-க்கள், பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி கைகளை இழந்த முன்னாள் அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள், பிசியோதெரபி மற்றும் எலும்பியல் மருத்துவமனைகள் போன்றோருடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் Mouseware சாதனம் அதிகாரப்பூர்வமாக சந்தையில் கிடைக்க உள்ளது.
முதலீடு மற்றும் வருங்காலத் திட்டங்கள்
Dextroware Devices ஸ்டார்ட் அப் ஐஐடி-எம் இன்குபேஷன் செல் மூலம் 10 லட்ச ரூபாய் சீட் நிதி பெற்றுள்ளது.
“சந்தையில் சாதனத்தை விரைவாக அறிமுகப்படுத்த நிதி திரட்ட இருக்கிறோம்,” என்று பிரவீன் குறிப்பிட்டார்.
Dextroware ஸ்டார்ட் அப்பின் புதுமையான தயாரிப்பு, டிஜிட்டல் சாதனங்களை இயக்குவதற்கான ஒரு முக்கிய டூலாக மாறிவிடும் என பிரவீன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
”மனிதர்களுக்கும் கணிணி பயன்பாட்டிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்புவதே எங்கள் நோக்கம். கேம்ஸ் விளையாடுவதற்கான மிகச்சிறந்த அனுபத்தை வழங்குவதால் Mouseware சாதனத்தை கேமிங் டூலாக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் பிரவீன்.
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷனி | தமிழில்: ஸ்ரீவித்யா