பதிப்புகளில்
வென்றவர்கள்

இதுவரை 75 ஆயிரம் இளைஞர்களுக்கு சிஏ பயிற்சி அளித்துள்ள சென்னை பட்டயக் கணக்காளர்!

பட்டயக் கணக்காளர் ஆக விரும்பும் மாணவர்களுக்கு படிப்புடன் வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்து கற்பிக்கும் Sify Technologies சிஎஃப்ஓ-வாக இருக்கும் எம்பி விஜய்குமார்.

YS TEAM TAMIL
17th Apr 2019
192+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

பட்டயக் கணக்காளர் ஆக விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைகளில் நோட்டுப்புத்தகங்களும் பேனாவும் எடுத்துக்கொண்டு அதிகாலை வேளையில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் டேங்க் அருகே ஒரு இடத்தில் ஆஜராகிவிடுகின்றனர். இவர்களது ஆசிரியர் எம்பி விஜய்குமார் எடுக்கும் வகுப்பை கூர்ந்து கவனிக்கத்தான் தினமும் இவர்கள் ஒன்று திரள்கின்றனர்.

கடும் வெயில், அடை மழை எதையும் பொருட்படுத்தாமல் இந்த மாணவர்கள் தவறாமல் வகுப்பில் கலந்துகொள்கின்றனர். அதே அளவு அர்ப்பணிப்பு விஜய்குமாரிடமும் காணப்படுகிறது.

விஜயின் முன்னாள் மாணவரான சிஏ முடித்த நந்தித் ஒய்கே கூறும்போது,

“ஒரு முறை சென்னையில் மழை பெய்துகொண்டிருந்தது. சாலையில் இருந்த தண்ணீரை மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்லவேண்டியிருந்தது. அந்த சந்தர்ப்பத்திலும் அவர் சரியான நேரத்திற்கு வந்து வகுப்பைத் தொடங்கினார். எப்படிப்பட்டச் சூழலிலும் சரியான நேரத்தில் வகுப்பை துவங்கிவிடுவார். இதுவும் நான் அவரிடம் கற்ற படிப்பினைதான்.

பின்னர் நான் Sify நிறுவனத்தில் இணைந்துகொண்டபோது அவரது பணியிடத்திலும் இரவு வெகு நேரம் கடந்தும் பணிபுரிவதைப் பார்த்தேன்,” என்கிறார். 49 வயதாகும் விஜய்குமார், Sify Technologies நிறுவனத்தில் சிஎஃப்ஓ-வாக தனது கடமைகளை முறையாக நிறைவேற்றுவதுடன் கற்றுக்கொடுப்பதில் இருக்கும் ஆர்வம் காரணமாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் SCODA உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சிஏ படிப்பு தனது வாழ்க்கையை மாற்றியுள்ளதாக நம்புகிறார் விஜய். இவரைப் போன்றே கனவுகளைக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அவர்களுக்கு கணக்கியல் மற்றும் நிதிச்சட்டத்தில் பயிற்சியளிக்க தீர்மானித்தார்.

கணக்கியல், நிதி மற்றும் சில வாழ்க்கைப் பாடங்கள்

மாணவர்கள் சிஏ பயிற்சிக்காக இணைந்தாலும் விஜய் குமாரின் வகுப்புகளில் நிதி மட்டுமல்லாது வாழ்க்கைப் பாடங்களையும் சேர்த்தே பயில்கின்றனர். அவரது வகுப்பிற்குச் செல்லும்போது சில சுவாரஸ்யமான தத்துவங்களையும் பெறலாம்.

‘எழுதும் பேனா நின்றுவிடக்கூடாது...’

‘உங்களுக்கு அருகிலிருப்பவரின் புத்தகத்தை எட்டிப்பார்க்காதீர்கள். நீங்கள் சிறப்பானவர் என்கிற அகங்காரம் உங்களுக்குள் இருக்கட்டும்.’

‘உங்களது கால்குலேட்டரை கீழே வைத்துவிடுங்கள்! இது நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆரம்ப சம்பளமே 10 லட்ச ரூபாய் என நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது விடையளியுங்கள்.’

பட்டயக் கணக்காளராக உருவாக விரும்புவோருக்கு உதவவேண்டும் என்கிற விஜய குமாரின் ஆர்வமே 21 ஆண்டுகள் ஆசிரியராக செயல்பட உந்துதலளித்துள்ளது. இந்த பயணத்தில் 75,000 இளம் மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்த ஆர்வமே உதவியுள்ளது.

ஒருவர் தான் வாழும் விதத்தை வைத்தே மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே வாழ்கிறார் விஜய்குமார். வழக்கமாக அவர் காலை நான்கு மணிக்கு எழுந்துவிடுகிறார். நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு சில உடற்பயிற்சிகளை செய்கிறார். பின்பு தயாராகி காலை 5.45 மணிக்கு ’ப்ரைம் அகாடமி’யை வந்தடைகிறார். அதன் பிறகு காலை 9 மணிக்கு அலுவலகத்தை சென்றடைகிறார்.

”மாணவர்கள் பாடத்தைக் கற்றுக்கொள்ள மட்டும் வருவதில்லை. நாம் சொல்வதைக் காட்டிலும் நாம் நடந்துகொள்ளும் விதத்திலேயே அவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் விஜய்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்

தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டையில் பிறந்த விஜய்குமாருக்கு முதலில் அறிவியலில் ஈடுபாடு இருந்தது. எனினும் அரசுக் கல்லூரியில் பொறியியல் சீட் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக விசாகப்பட்டினத்தில் பி.காம் படித்தார். அந்த சமயத்தில் வேறு வாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் பட்டயக் கணக்காளர் படிப்பு மேற்கொண்டார்.

1992-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் தனது பணி வாழ்க்கையைத் துவங்கினார். இரண்டாண்டுகள் கழித்து சுந்தரம் ஃபைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதலீட்டு வங்கித் தலைவராக பணியாற்றியவாறே பட்டயக் கணக்காளர் படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார்.

”நான் அனைத்தையும் எளிமையாக்குவதை விரும்புகிறேன். கற்றுக்கொடுப்பதில் மட்டுமல்ல பணி வாழ்க்கையிலும் அவ்வாறே இருக்க விரும்புகிறேன். என்னுடைய நண்பர்களின் ஆலோசனைப்படி நான் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன். ஏனெனில் எனக்கு அடுத்தவருக்கு விவரிப்பது பிடிக்கும்,” என்றார் விஜய்குமார்.

பலத்தில் கவனம் செலுத்தினார்

விஜய்குமார் கற்றுக்கொடுப்பதில் இருந்த ஆர்வத்தின் காரணமாக 1999-ம் ஆண்டு சுந்தரம் நிறுவனத்தின் பணியை விட்டு விலகி பயிற்சி பட்டயக் கணக்காளர் ஆனார். சென்னையின் ப்ரைம் அகாடமியில் சேர்ந்தார். இங்கு தினமும் காலையில் பல குழுக்களாக பிரிக்கப்பட்ட சுமார் 800-1000 மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.

”மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திறன் என்னிடம் இருந்தது. மாணவர்கள் தங்களது கனவை நனவாக்கிக்கொள்ள என்னால் உதவ முடிந்தது. இதுவே பயிற்சியளிப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்க ஊக்குவித்தது. படிக்க வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பட்டயக் கணக்காளர் ஆகவேண்டும் என்கிற இவர்களது லட்சியத்தை இவர்கள் எட்ட உதவும்போது அவர்களது வாழ்க்கையில் மட்டுமல்லாது அவர்களது குடும்பம் மற்றும் அடுத்த தலைமுறையிலும் மாற்றம் ஏற்படும்,” என்றார்.

வழக்கமாக மாணவர்கள் தாங்களாகவே படிப்பார்கள் என்றாலும் அதற்கே உரிய சவால்கள் காணப்படும்.

”பட்டயக் கணக்காளர் படிப்பு என்பது மாணவர்கள் தாங்களாகவே படிக்கும் முறையைச் சார்ந்தது. வகுப்பறையில் பாடம் நடத்தவேண்டிய அவசியமில்லை. எனினும் இதிலுள்ள அதிகப்படியான தலைப்புகள் மற்றும் வழிகாட்டல் இல்லாமை போன்றவையே சிஏ தேர்வில் தேர்ச்சி பெறுவதில் காணப்படும் மிகப்பெரிய தடைகளாகும்,” என விஜய்குமார் விவரித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சிஏ இறுதித் தேர்வை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் இடைநிலைத் தேர்வை 1.5 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். மாணவர்கள் அதிகளவில் தேர்வெழுதினாலும் வெறும் 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கடின உழைப்பும் முழு கவனமும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. இத்தனை ஆண்டுகளில் விஜயின் வகுப்பிற்கு சென்னையிலிருந்து மட்டுமல்லாது நேபால் போன்ற பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு நாள் காலையும் பலர் தவறாமல் வருகை தருகின்றனர். சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கும் அரக்கோணத்திலிருந்து வரும் மாணவி ஒருவர் சைக்கிளில் ரயில் நிலையம் வரை வருகிறார். காலை 4 மணிக்கு ரயிலில் ஏறி சென்னை வந்தடைகிறார். அங்கிருந்து பேருந்தில் பயணித்து சரியான நேரத்தில் ப்ரைம் அகாடமி வருகிறார்.

”படிப்பிலும் லட்சியத்தை அடைவதிலும் அவர்கள் காட்டும் ஆர்வமே என்னை ஊக்குவிக்கிறது. பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது ஆங்கில வழிக்கல்வி கற்காத மாணவர்கள் என என்னால் இயன்றவரை அனைவருக்கும் உதவுகிறேன்,” என்றார் விஜய்குமார்.

கரும்பலகையோ பாடபுத்தகமோ இல்லாத வகுப்பறை

விஜய்குமார் தனது பாடத்திட்டத்தை பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைப்பதில்லை. தன்னுடைய பணி அனுபவத்தையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டே வடிவமைத்துள்ளார். இதுவே பலரை ஈர்க்கும் அம்சமாகும்.

பட்டயக் கணக்காளர் படிப்பு என்பது அறிவாற்றலை நடைமுறையில் பயன்படுவதும் விதத்தை சார்ந்தது என விஜய் விவரிக்கிறார். இவர் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க கரும்பலகையைப் பயன்படுத்துவதில்லை. ஒருவர் தேர்விற்காக பயிற்சிபெறும் அணுகுமுறையைக் கொண்டிருக்காமல் பணி வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் கவனம் செலுத்தி மொத்த பாடதிட்டத்தையும் நிறைவு செய்யவேண்டும் என்கிறார்.

”நான் முழு நேர ஆசிரியராக இருக்கவில்லை. ஏனெனில் நான் சிறப்பான பணி அனுபவம் பெற்றால் மட்டுமே பட்டயக் கணக்காளர் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்ளமுடியும்,” என்றார்.

இந்த பயிற்சி நிறுவனத்திற்கும் சிஏ பிரிவிலும் விஜய் பங்களித்ததை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி அவர்களால் ’கேபிடல் ஃபவுண்டேஷன் நேஷனல் விருது’ வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு CIMA ’இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 சிஎஃப்ஓ-க்களில்’ ஒருவராக அங்கீகரித்தது.

ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

192+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags