தொடங்கிய 4 ஆண்டுகளில் கோடிகளில் விற்றுமுதல்: நண்பர்களுடன் வெற்றி வழியை கண்டறிந்த சென்னை இளைஞர்!

’ஸ்ட்ராபெர்ரி க்ரூப்’, ’ஓம் சாய் அக்ரோ ப்ராடக்ட்ஸ்’- என்ற நிறுவன பெயர்களில் 3 ப்ராண்டுகள் மூலம் சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் என பல ஆரோக்கிய உணவு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனை செய்து பெரும் வளர்ச்சி அடைந்துள்ளனர் ராம் மற்றும் அவரது நண்பர்கள்.
64 CLAPS
0

’உன் நண்பன் யார் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன்...' என்ற பழமொழியை பலமுறை கேட்டுள்ளோம். கூடா நட்பால் வாழ்க்கையை தொலைத்தவர்களும், சிறந்த நண்பர்களால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்தவர்கள் பற்றியும் கதைகளில் படித்துள்ளோம். அதேபோல் சரியான பாதையில் சிந்தித்து, தீர்கமான இலக்குகள் கொண்டுள்ள நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் தொழிலில் வெற்றி நிச்சயமே என்பதை காட்டியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த ராம் மற்றும் அவரது இணை நிறுவனர்களான அவரின் நண்பர்கள். 

ராம்; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மனிதவளம் மற்றும் மார்கெட்டிங் பிரிவில் எம்பிஏ முடித்துள்ளார். இவரது பெற்றோருக்கு இவர் மூன்றாவது மகன். நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். படிப்பில் மிகவும் புத்திசாலி கிடையாது. ஆனால் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். 

வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்கிற ஆர்வம் இவர் மனதில் இருந்துள்ளது. வணிகத்தின் மீது ஆர்வம் இருந்தபோதும் தொடக்கத்தில் எத்தகைய வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இல்லை. அதேநேரம் அடுத்தவரிடம் பணிபுரிவது குறித்தும் எப்போதும் சிந்திக்கவில்லை.

’ஸ்ட்ராபெர்ரி க்ரூப்’ நிறுவனர் ராம் 

தொழில் தொடங்க முயற்சிகள் பல...

2013-ம் ஆண்டு உறைந்த மோமோஸ் பகுதியில் செயல்பட நினைத்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சியைக் கைவிட்டார். அதில் வளர்ச்சியடைய முடியாது என்பதே அவரது தனிப்பட்ட கருத்தாக அப்போது இருந்தது. எனினும், இன்று இந்த வணிகத்தை சிறப்பாக நடத்தி வருபவர்களையும் காணமுடிகிறது என்றார் ராம்.

 ”ஆனால் அன்று என் லட்சியத்தை அடையும் விதத்தில் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நுணுக்கங்கள் என்னிடம் இல்லை,” என்று ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் இந்த அனுபவம் அவருக்கு படிப்பினையை அளித்துள்ளது. இதனையடுத்து பங்குகள் பிரிவில் முயற்சிசெய்து அதில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ’மயூரா ஃபுட்ஸ்’ துவங்கும் எண்ணம் உதித்தது. 

2014-ம் ஆண்டு மயூரா ஃபுட்ஸ் துவங்கினார். இவரது நிறுவனம் ’ஸ்ட்ராபெர்ரி க்ரூப்’ என்கிற பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டது. இவர்களது முதல் ப்ராண்ட் ’மயூரா’ ஆகும். 

“நாங்கள் முதலில் சிறுதானியம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான உணவு வகைகளில் கவனம் செலுத்தினோம். 2017-ம் ஆண்டு ’ஓம் சாய் அக்ரோ ப்ராடக்ட்ஸ்’-ஆக விரிவடைந்தோம். தற்போது இதன் கீழ் Daaniya மற்றும் Vedussh உள்ளது. Daaniya மரச்செக்கு எண்ணெய் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளில் ஈடுபட்டுள்ளது. Vedussh வாயிலாக மூலிகைப் பொருட்கள் சார்ந்த தயாரிப்புகளில் ஈடுபட உள்ளோம்,” என்றார்.

ஐந்து நண்பர்கள் இணைந்து இந்த வணிகத்தைத் துவங்க திட்டமிட்டனர். குறைவான ஆரம்பகட்ட முதலீட்டுடன் செயல்படுவதால் பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். ராம் ’மயூரா ஃபுட்ஸ்’ நிறுவனர். செந்தில்குமார், பாபு, கணேஷ்குமார், யுவராஜ் ஆகிய நால்வரும் இணை நிறுவனர்கள். இவர்களில் இருவர் ராமின் சிறுவயது நண்பர்கள். மற்றவர்கள் அவருடன் எம்பிஏ படித்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தரமான உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்தனர். 

செந்தில்குமார் எஃப்எம்சிஜி பகுதியில் பத்தாண்டுகள் அனுபவம் கொண்டவர். இவர் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறார். ராம் சென்னையில் மார்கெட்டிங் மற்றும் விற்பனையிலும் ப்ராண்டிங்கிலும் கவனம் செலுத்துகிறார். நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான பொறுப்புகளில் கணேஷ்குமார் உள்ளார். பாபு உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கிறார். யுவராஜ் ஏற்றுமதி மற்றும் வெளியூர் மார்கெட்டிங் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

இந்நிறுவனம் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் 13 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியது. 

அதற்கடுத்த ஆண்டு, அதாவது 2014-15-ல் சிறுதானிய பொருட்கள் வகையை அதிகரித்து மற்ற ஆரோக்கியம் சார்ந்த பொருட்களையும் இணைத்துக்கொண்டனர். இதனால் இந்த காலகட்டத்தில் வருவாய் 97 லட்ச ரூபாயாக உயர்ந்தது. 

ராம் உடன் நண்பர் பாபு
கடந்த ஆண்டு 2017-18-ல் ’ஸ்ட்ராபெர்ரி க்ரூப்’ (மயூரா ஃபுட்ஸ்) வருவாய் 2.8 கோடியாக இருந்தது. ஓம் சாய் அக்ரோ ப்ராடக் (Daaniya Food) வாயிலாக ஆகஸ்ட் 2017 – மார்ச் 2018 வரை 61 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 1.5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் ராம்.

மார்கெட்டிங் நடவடிக்கைகள் பெரும்பாலும் இவர்களது நம்பகமான விநியோகஸ்தர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் சுமார் 20 பகுதிகளில் இவர்களது விநியோகஸ்தர்கள் உள்ளனர். மேலும் 25 விநியோகஸ்தர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர்.

”இந்த விநியோகஸ்தர்கள் எங்களது வாடிக்கையாளர்களைச் சென்றடைய உதவுகின்றனர். எங்களது தயாரிப்புகள் இவர்களால் தமிழகம் முழுவதும் உள்ள முன்னணி சூப்பர்மார்கெட்டுகளில் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதுவே எங்களது வளர்ச்சி நிலையாக இருப்பதை உணர்த்துகிறது. நாங்கள் வெற்றியடைய உத்திகளை வகுத்து உறுதியுடன் செயல்பட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்  ராம்.

அழகான பேக்கேஜிங், மலிவு விலை, மிகவும் முக்கியமான பயனுள்ள தயாரிப்பு போன்றவை இவர்களது ப்ராண்டிங் உத்தியாகும். உள்ளூர் தயாரிப்புகளை மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற கொள்கையில் உறுதியாக  இருக்கின்றனர். இதுவே இவர்களுக்கு கிடைத்த வரவேற்பிலும் விற்பனையிலும் பிரதிபலிக்கிறது.

சவால்கள் இல்லாமல் இல்லை வாழ்க்கை...

அனைத்து வணிக முயற்சிகளையும் போலவே இவரது தொழில்முனைவுப் பயணத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருந்தது. சரியான விநியோகஸ்தரைக் கண்டறிவதும் தயாரிப்பு குறித்து அவர்களை சம்மதிக்கவைப்பதும் கடினமாக இருந்துள்ளது என்றார் ராம்.

”நாங்கள் புதிதாக செயல்படத் துவங்கியதால் யாரும் எங்களுடன் இணைய முன்வரவில்லை. இருப்பினும் கடினமாக உழைத்து சந்தையில் நம்பிக்கையை உருவாக்கினோம். ஒவ்வொரு ஸ்டோர்களுக்கும் பலமுறை சென்றோம். சிறப்பான தயாரிப்பை விற்பனை செய்யவேண்டும் என்பதற்கு எப்போதும் முன்னுரிமை அளித்தோம்,” என்றார்.

மேலும், ”எங்களது வளர்ச்சியின் வேகம் குறைந்திருப்பது போன்று எனக்கு தோன்றியது. உள்ளூர் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்கிற திடமான முடிவு இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இறுதியில் மக்களுக்கு நல்ல பொருட்களை வழங்குகிறோம் என்கிற மனநிறைவு அதை ஈடுசெய்கிறது,” என்றார் ராம்.

இவர்கள் அனைவருமே திருமணமாகாதவர்கள். இதனால் அவர்களின் முழு கவனமும் வணிக வளர்ச்சியில் உள்ளது. மேலும் தொழில் துவங்கி ஒன்றரை ஆண்டுகளில் அதிர்ஷ்ட்டவசமாக இவர்களுக்கு லோன் கிடைத்தது. இது கூடுதல் தயாரிப்புகளை  அறிமுகப்படுத்த உதவியதாக கூறினார்.

இந்த நண்பர்களின் முயற்சிக்கு ஆரம்பத்தில் இவர்களது குடும்பத்தின் தரப்பிலிருந்து முழு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிறுவனம் ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலுமே செயல்படுகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 45 விநியோகஸ்தர்கள் உள்ளனர். எந்தவித குறிப்பிட்ட வணிக மாதிரியும் இவர்கள் பின்பற்றவில்லை. வெவ்வேறு வணிக மாதிரியை முயற்சித்து அவர்களது செயல்பாடுகளுக்கு பொருத்தமானவற்றை எடுத்துக்கொள்கின்றனர்.

ஸ்ட்ராபெர்ரி, ஓம் சாய் க்ரூப்ஸ் இரண்டு நிறுவனங்களுக்கும் ராம் நிறுவனர். ஆனால் வெவ்வேறு இணை நிறுவனர்கள் இணைந்துள்ளனர். இவர்களது திட்டங்களையும் முதலீட்டையும் அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார் ராம். தயாரிப்பின் மதிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் ப்ராண்டு இருக்கவேண்டும் என்று ராம் விரும்பினார்.

பல்வேறு வகையான பொருட்களை ஒரே பெயரில் விற்பனை செய்வதில் அவருக்கு விருப்பமில்லை. உதாரணத்திற்கு எண்ணெயும் சிறுதானிய வகைகளும் ப்ராண்ட் செய்யப்படும் விதம் வேறுபட்டிருக்கவேண்டும் என விரும்பினார். இந்த வேறுபாட்டைத்தவிர வாடிக்கையாளர்களிடம் பொருட்கள் சென்றடைவதற்கான விநியோக அமைப்பு ஒன்றுதான்.

”நாங்கள் வரும் நிதியாண்டில் Vedussh-ல் பத்து புதிய மூலிகைப் பொருட்களையும் மயூராவில் ஐந்து கூடுதல் பொருட்களையும் Daaniya-வில் 8 கூடுதல் பொருட்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஸ்ட்ராபெர்ரி க்ரூப் வாயிலாக 3.5 கோடி வருவாயும் ஓம் சாய் அக்ரோ ப்ராடக்ட் வாயிலாக 1.5 கோடி ரூபாய் வருவாயும் ஈட்ட திட்டமிட்டுள்ளோம்,” என்றார் ராம்.
ராம் உடன் நண்பர் செந்தில்

இதே பிரிவில் செயல்படும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் திரு. ஐசக் மற்றும் கவின்கேர் நிறுவனத்தின் திரு. ரங்கநாதன் ஆகியோரை ராம் தன்னுடைய முன்மாதிரிகளாக கொண்டுள்ளார். இவர்களிடம் தங்களது வணிகங்களை எங்கே எடுத்துச்செல்லவேண்டும் என்கிற நோக்கம் குறித்த தெளிவு இருந்ததாக ராம் குறிப்பிடுகிறார். பல்வேறு ஸ்டார்ட் அப்’களிடம் உரையாடி அவர்களிடம் கற்றுக்கொள்வதாகவும் இது அனைவருக்கும் பரஸ்பர கற்றல் அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்.

”நாம் அதிகம் பேசக்கூடாது. நம்முடைய பணி பேசப்படவேண்டும். அந்தப் பகுதியில்தான் முழு கவனமும் செலுத்துகிறேன். ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரைக்கும் முறையில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் முதிர்ச்சியான வார்த்தைகளோடு முடிக்கிறார் இந்த இளம் தொழில்முனைவர்.

Latest

Updates from around the world