‘கேன்டி தின்ன கூலி’ - சாக்லெட்களை ருசி பார்க்கும் வேலை; சம்பளம் ரூ.60 லட்சம்!

கனடாவைச் சேர்ந்த சாக்லெட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அசத்தலான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
0 CLAPS
0

கனடாவைச் சேர்ந்த சாக்லெட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அசத்தலான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான் நிறுவனங்கள் பல வகையான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. சில விநோதமான வேலை வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு.

தற்போது சாக்லெட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்புகளை சுவைத்து பார்க்க கூடிய Chief candy officer வேலைக்கு ஆள் தேவை என கொடுத்துள்ள விளம்பரமும் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

கனடா நிறுவனத்தின் வேலை வாய்ப்பு:

குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இனிப்பாக சாக்லெட் உள்ளது. உலகம் முழுவது பல வகையான ருசி கொண்ட சாக்லெட்கள், ஒரு ரூபாயில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த கேண்டி ஃபன் ஹவுஸ் (Candy Funhouse) என்ற நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேலை வாய்ப்பு குறித்த ஒரு விநோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“வேலைவாய்ப்பு: தலைமை கேண்டி ஆபீசர் (Chief candy officer )! நீங்கள் சாக்லெட், குச்சி மிட்டாய் மீது ஆர்வமுள்ள வேடிக்கையான நபரா? எங்கள் கேண்டியாலஜிஸ்டுகளை வழிநடத்த 6 டிஜிட் சம்பளத்துடன் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது, உங்கள் குழந்தையின் சார்பாகவும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்!”

சாக்லெட் சாப்பிட ரூ.60 லட்சம் சம்பளம்:

சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ’கேண்டி ஃபன் ஹவுஸ்’ நிறுவனம், தங்களது சாக்லெட்டை ருசி பார்க்கும் Chief candy officer பணிக்கு ஆண்டுக்கு $1,00,000 டாலர்கள், அதாவது, இந்திய மதிப்பில் 61 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை சம்பளமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த பணியில் சேரும் நபர், அனைத்து மிட்டாய்களையும் அங்கீகரிப்பது, மிட்டாய்களை ருசி பார்த்து அதனை விற்பனைக்கு அனுப்பலாமா?, வேண்டாமா? என முத்திரை (CCO stamp of approval) மூலம் ஒப்புதல் தருவது போன்ற பணிகளை செய்ய வேண்டும். இதற்காக அந்த நபர் மாதந்தோறும் 3500 சாக்லேட்களை ருசி பார்க்க வேண்டுமாம்.

5 வயது குழந்தை முதற்கொண்டு டொராண்டோ, கனடா அல்லது நியூ ஜெர்சியின் நெவார்க் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே செய்யலாம் எனவும் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் பணியாற்றலாம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் வேலைக்கு விண்ணப்பிப்பவர் சாக்லெட் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும், சிறப்பாக சுவை பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும் என சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நபர் கற்பனைத்திறன் கொண்ட, இயல்பாக ஒரு டீமை வழிநடத்தக்கூடிய, புதிய யோசனைகளை பரிசோதிக்கத் தயாராக இருப்பவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு - கனிமொழி

Latest

Updates from around the world