புகைப்படக்கலைஞர் டூ இயக்குநர்: மாரடைப்பால் மறைந்த கே.வி.ஆனந்தின் திரையுலகப் பயணம்

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் இயக்குநராகி கோ, அயன், மாற்றான் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். தனித்துவமான, சமூக அக்கறையுள்ள கதைக்களங்களாம் கவனம் பெற்றவரான இவர், மாரடைப்பால் மரணமடைந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 CLAPS
0

கொரோனா அரக்கன் ஒருபுறம் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க, கோலிவுட்டில் அடுத்தடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் உடல்நலக் குறைவால் காலமாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் இயக்குநராகி கோ, அயன், மாற்றான் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவரான கே.வி.ஆனந்த், 1966ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்பது தான் அவரது இயற்பெயர். பத்திரிகை ஒன்றில் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து வந்தவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

1994ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் 'தென்மாவின் கொம்பத்து' என்ற மலையாளப் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதலில் இந்த பட வாய்ப்பு பி.சி.ஸ்ரீராமுக்குத்தான் கிடைத்தது. ஆனால் தான் அப்போது பிஸியாக இருந்ததால், தனது உதவியாளரான கே.வி.ஆனந்தை அவர் பரிந்துரை செய்தார்.

கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கே.வி.ஆனந்த் முதல் படத்திலேயே தனது தனித்துவமான ஒளிப்பதிவால் மக்களைக் கவர்ந்தார். அப்படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதும் பெற்றார். அதனைத்தொடர்ந்து சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

தமிழில் 1996ம் ஆண்டு அப்பாஸ் - வினீத் நடித்த ‘காதல் தேசம்’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல்வனின் இந்தி ரீமேக்கான நாயக் உட்பட சில பாலிவுட் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்காக சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதை கே.வி.ஆனந்த் பெற்றார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்த கடைசி படம் ‘சிவாஜி’ தான். ஏனெனில் அப்படத்திற்கு பின் படம் இயக்கத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்கினார் கே.வி.ஆனந்த்.

ஒளிப்பதிவில் ஒருபுறம் பிஸியாக இருந்த காலத்திலேயே 2005ம் ஆண்டு ‘கனா கண்டேன்’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும், கே.வி.ஆனந்தை இப்படம் இயக்குநராக பிரபலமாக்கவில்லை. எனவே சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 2009ம் ஆண்டு சூர்யாவை வைத்து ‘அயன்’ படத்தை இயக்கினார்.

சூர்யா, தமன்னா, பிரபு என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் சூப்பர்ஹிட்டானது. 2009ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை அயன் பெற்றது.

அயன் தந்த வெற்றியால் அடுத்த ஆண்டே ஜீவா வைத்து ‘கோ’ படத்தைத் தந்தார் கே.வி.ஆனந்த். பட ரிலீசுக்கு முன்னதாகவே பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு கூடியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில், அதிரடி திருப்பங்களுடன் சுவாரஸ்யமான காட்சிகளுடனும் இருந்தது கோ. இதனால் அயனைப் போலவே இப்படமும் மாபெரும் வசூலைத் தந்தது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரானார் கே.வி.ஆனந்த்.

சூர்யாவுடன் ‘மாற்றான்’, தனுஷுடன் ‘அநேகன்’, விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ என அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களை இயக்கினார். கடைசியாக, 2019ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். கடந்தாண்டு இந்தியா உட்பட உலக நாடுகள் பல வெட்டுக்கிளியின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட, அதற்கு முந்தைய ஆண்டே இப்பிரச்சினையைப் பற்றி இப்படம் பேசியிருந்ததாக சமூகவலைதளங்களில் பேசு பொருளானது காப்பான்.

ஒளிப்பதிவு, இயக்கம் மட்டுமின்றி இயற்கை விவசாயத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் கே.வி.ஆனந்த். திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஏக்கம் நிலம் வாங்கி அதில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தார். விரைவில் தனது பண்ணையை முன்னோடி பண்ணையாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்.

கொரோனா பிரச்சினையால் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் இருந்த கே.வி.ஆனந்த், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கொரோனா சோதனையில் நெகடிவ் என வந்த போதும், தொடர்ந்து உடல்நலமில்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட தானே, காரை ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், மாரடைப்பால் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

கே.வி.ஆனந்தின் இந்த திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் நடத்துவதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து ஏற்கனவே தமிழ் திரையுலகம் தடுமாறி வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்குள் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், தாமிரா மற்றும் கே.வி.ஆனந்த் மற்றும் பிரபல காமெடி நடிகர் விவேக் ஆகியோர் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் மரணமடைந்திருப்பது திரையுலகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest

Updates from around the world