தமிழகத்துக்கு ரூ.8,835 கோடி முதலீடு, 35,520 பேருக்கு வேலை வாய்ப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட அமெரிக்கா, லண்டன் மற்றும் துபாய் பயணங்களின் மூலம், ரூ.8.835 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

12th Sep 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது, 8.835 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டிருபதன் மூலம், 32,520 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிறுவனங்கள் தொழில் துவங்க அனைத்து உதவிகளும் மாநில அரசால் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிநாடுகளில் உள்ள நகர உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்தவும், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், கடந்த மாதம் 28ம் தேதி முதல் இம்மாதம் 10 ம் தேதி வரை, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


முதல்வரின் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது, மாநிலத்தில் புதிய தொழில்கள் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், இதன் மூலம் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அரசு செய்திக்குறிப்பில் முதல்வர் மேலும் கூறியுள்ளதாவது:

”இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செயல்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்திட, சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்துடனும், கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.”

லண்டன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்படும் விதம் பார்வையிடப்பட்டு, அங்கு பின்பற்றப்படும் நுட்பமான நடைமுறைகள் தமிழகத்திலும் பின்பற்றப்பட உள்ளன.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை அடுத்து அமெரிக்காவில், பபல்லோ கால்நடை பண்ணை செயல்பாடுகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார்.

மேலும், நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் 20,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

உலகமெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் முதலீட்டை ஈர்க்கவும் நியூயார்க்கில் ’யாதும் ஊரே’என்ற புதிய திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.


சான் ஹூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், ரூ.2,300 கோடி அளவில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இவை, 6,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும்,

தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு உதவ, அமெரிக்க தொழில்முனைவோர் அமைப்பின் உதவியுடன் டிஜிட்டல் ஆக்சிலரேட்டர் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். இந்நகரிலும் யாதும் ஊரே திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
எடப்பாடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லாச் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை பார்வையிட்ட படம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவன ஆலையையும் முதல்வர் சுற்றிப்பார்த்தார். அப்போது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா ஆலையை தமிழகத்தில் துவக்க முதல்வர் அந்நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார்.


சான் பிரான்சிஸ்கோ நகரில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் மாசில்லா எரிசக்தி தயாரிக்கும், ’புளும் எனர்ஜி’ ஆலையையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு அதன் நுப்டங்களை கேட்டறிந்தார்.

பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அனாஹியம் நகரில் கழிவுநீரை குடிநீராக்கி பயன்படுத்தி செயல்படுத்தும் திட்டத்தை முதல்வர் பார்வையிட்டார். இதே போன்ற திட்டம் சென்னை நகரில் மேற்கொள்ள முயற்சிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து முதல்வர் துபாய் சென்று, இந்திய தூதரகம் மற்றும் பிஸினஸ் லீடர்ஸ் ஃபாரம் அமைப்பு நடத்திய தொழில்முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில்,

ரூ.3,750 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்க, 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. இவை 10,800 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த பயணங்களின் போது, மொத்தம் ரூ.8,835 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 35,520 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வழி செய்யப்பட்டுள்ளது.


புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிறுவனங்கள் தொழில் துவங்க தேவையான உதவுகளை அரசு செய்யும். இந்தப் பயணம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவியதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே தமிழகம் மீது நம்பிக்கை ஏற்படவும் வழி செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கட்டுரை தொகுப்பு: சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India