‘தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக வேண்டும்’ - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டில் புதுமையாக்கம் மற்றும் புத்தொழில் வளர்ச்சிக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்றும், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
0 CLAPS
0

2030ம் ஆண்டில் தமிழகத்தை ஒரு லட்சம் கோடி பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை அடைய ஆயிரக்கணக்கில் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக அளவில் புத்தொழில் நிறுவனங்களில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றும், புதுமையாக்கம், புத்தொழில்கள் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் நடைபெற்ற தொழில்முனைவோர்களை ஊக்கப்படுவத்துவதற்கான ISBACON -2022 கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய போது முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம், தொழில் ஆகிய பிரிவுகளில் மேம்பட்ட மாநிலமாக திகழ்கிறது என்றும் இங்கு நிதி ஆதரவுடன் சமூக நீதி ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்தார்.

இக்காலத்தில் வளர்ச்சிக்கு அடிப்படை தொழில்நுட்பம் தான் என்பதை மேற்கோள் காட்டிய முதல்வர், தமிழ்நாட்டில் புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

புத்தொழில் வளர்ச்சிக்காக 29 நிறுவனங்களுக்கு நிதி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட முதல்வர் வரும் ஆண்டுகளில் இது பன்மடங்காக அதிகரிக்கும் என உறுதி அளிப்பதாக கரகோஷத்திற்கு நடுவே தெரிவித்தார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தொழில் காப்பகங்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதல்வர், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த அண்டு 1.8 பில்லியன் டால முதலீடு செய்துள்ளன என்று கூறினார்.

மென்பொருள் துறையில் சாஸ் புரட்சி பற்றி கூறிய முதல்வர் சென்னை நிறுவனம் ஒன்று அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு சாதனை படைத்துள்ளது என்றும் கூறினார்.

தமிழகம் புத்தொழில்களுக்கான பணத்தோட்டமாக மாறும் என்று கூறிய முதல்வர், வழக்கமான துறைகளில் ஈடுபடுவதை குறை சொல்ல முடியாது என்றாலும், புதிய தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலக நாடுகளில் நான்காம் தொழிற்புரட்சி துவங்கிவிட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவு, முப்பரிமாண அச்சு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன என்று தெரிவித்தார்.

கம்ப்யூட்டர்களின் முக்கியத்துவதை உணர்ந்து 1996ம் ஆண்டே திமுக அரசு சென்னையில் ’டைடல் பார்க்’ அமைத்தது என்றும் முதல்வர் கூறினார்.

2030ல் தமிழகத்தை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற உறுதி எடுத்துக் கொண்டுள்ளதை குறிப்பிட்ட முதல்வர், இந்த இலக்கை அடைய ஆயிக்ககணக்கான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், தொழில்முனைவோர்கள், தொழில் திறனாளர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.

தொகுப்பு: சைபர் சிம்மன்