கொரோனா தடுப்பூசி புக்கிங் சேவை போட்டி: ரூ.2 லட்சம் பரிசு அறிவித்துள்ள கோவை மாநகராட்சி!

கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு வசதியை எளிதாக மேற்கொள்வதற்கான இணைய தீர்வை உருவாக்குவதற்கான போட்டியை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
2 CLAPS
0

கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், முன்பதிவை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் இணைய தீர்வை உருவாக்குவதற்கான போட்டியை கோவை மாநகராட்சி தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் மையம் வாயிலாக அறிவித்துள்ளது.

இந்த சேவையை உருவாக்குபவர்களுக்கு இரண்டும் லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

தடுப்பூசி திட்டத்தை பொருத்தவரை, இதற்கான முன்பதிவு வசதியை நிர்வகிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. தேசிய அளவில் இதற்காக தனி செயலி இயங்கி வந்தாலும், தடுப்பூசி நிர்வாகத்தில் நடைமுறையில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

போட்டி

இந்நிலையில், தடுப்பூசி முன்பதிவை எளிய முறையில் மேற்கொள்வதற்கான இணைய தீர்வை உருவாக்குமாறு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் ஆர்வலர்களுக்கான போட்டியை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் மையம் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த போட்டியின் நோக்கம்,

“கோவை மாநகராட்சி, தடுப்பூசி பதிவு செய்து கொள்வதற்காக நேரில் வரும் மக்களை கட்டுப்படுத்துவதில் பிரச்சனையை எதிர்கொள்கிறது. இதற்கு கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கான புதுமையான தீர்வை எதிர்நோக்குகிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்வு, அனைத்து வகையான பயனர்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும், பதிவுகள் அனைத்தும் ஒற்றைச் சாளர அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் மூலம் எளிதாக முன்பதிவு செய்யும் டிஜிட்டல் திறன் கொண்டவர்கள், தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யக்கூடிய பகுதி அளவு டிஜிட்டல் திறன் கொண்டவர்கள், நேரடியாக மையங்களுக்கு வருபவர்கள் மற்றும் தமிழில் வழிகாட்டுதல் தேவைப்படுபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இணையத்தீர்வு ஏற்றதாக இருக்க வேண்டும்.

மேலும், கோவிட் -19 பதிவுற்கான தீர்வு, இணையம் மூலம் ஒரே இடத்தில் நிர்வகிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும், நேரில் டோக்கன் உருவாக்கத்திற்கு அதிக நேரம் தேவைப்படுவதற்கு தீர்வாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டோக்கன்கள் தனி அடையாளத்துடன் இருக்கும் வகையிலும், அவை வேறு யாருக்கேனும் விற்கப்படாத முறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை தமிழ் மொழியிலும் வழிகாட்ட வேண்டும்.

இரண்டாம் டோசுக்கான தேதியை மாற்றி அமைக்கும் முறைகேட்டை தவிர்க்கும் வகையிலும், கோவிட் சான்றிதழை எளிதாக அளிக்கும் வகையிலும் இணையத்தீர்வு இருக்க வேண்டும்.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று இணையத்தீர்வை உருவாக்கி, கோவிட்- 19 க்கு எதிரான போரில் பங்களிப்பு செலுத்தலாம். இந்த சேவையை உருவாக்குபவர்களுக்கு 2 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜூலை 26.

பதிவு செய்ய: https://startuptn.in/response-forms/open-innovation-challenge-001/

மேலும் தகவல்களுக்கு: https://startuptn.in/events/open-innovation-challenge-covid19-vaccine-slot-man/

Latest

Updates from around the world