யூனிகார்ன் அந்தஸ்து பெறும் கிரிப்டோ பரிவர்த்தனை மேடை CoinSwitch Kuber!

கிரிப்டோ பரிவர்த்தனை மேடையான காயின்ஸ்விட்ச்குபேர் இந்தியாவின் இரண்டாவது கிரிப்டோ யூனிகார்ன் நிறுவனம் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
9 CLAPS
0

இந்திய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மேடையான ’காயின்ஸ்விட்ச்குபேர்' நிறுவனம், ஆண்ட்ரிசன் ஹோரோவிட்ஸ் (a16z), காயின்பேஸ் வென்சர்ஸ் மற்றும் ரிபிட் கேபிடல், செக்கோயா கேபிட்டல் இந்தியா மற்றும் டைகர் குளோபல் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து 260 மில்லியன் டாலர் சி சுற்று நிதி திரட்டியுள்ளது.

1.9 டாலர் சந்தை மதிப்பீடு கொண்டுள்ள ’காயின்ஸ்விட்ச்குபேர்’ (CoinSwitch Kuber), ஆகஸ்ட் மாதம் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற காயிண்டிசிஎக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து யூனிகார்னாகும் இரண்டாவது இந்திய கிரிப்டோ ஸ்டார்ட் அப்பாக விளங்குகிறது.

a16z நிறுவனம் உலகின் முன்னணி வென்சர் கேபிடல் நிறுவனமாக திகழ்கிறது. காயின்பேஸ் உலகின் பெரிய கிரிப்டோ பரிவர்த்தனை மேடையாக திகழ்கிறது.

“கிரிப்டோ வர்த்தகத்தில் உள்ள அனைத்து சிக்கல்களையும் நீக்கி, வாடிக்கையாளர்களுக்கு கற்றல் அனுபவத்துடன் ஒரு கிளிக்கில் கிரிப்டோ நாணயங்களை வாங்கி விற்கும் அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம். சர்வதேச கிரிப்டோ துறையில் முன்னணியில் விளங்கும் இரண்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று காயின்ஸ்விட்ச்குபேர் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அசிஷ் சிங்கால் கூறியுள்ளார்.

"காயின்பேஸ் வென்சர்சின் முதலீடு, நிறுவனத்தின் வர்த்தக மாதிரி மற்றும் இந்தியாவில் இத்துறைக்கு உள்ள வாய்ப்பின் அடையாளமாகவும் அமைகிறது என அவர் கூறியுள்ளார்.

காயின்ஸ்விட்ச்குபேர் 11 மில்லியன் பதிவு செய்த உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. இதன் மாதாந்திர பரிவர்த்தனை ரூ.15,138 கோடியாக இருக்கிறது.

50 மில்லியன் பயனாளிகளை சென்றடைய, புதிய கிரிப்டோ சேவைகளை அளிக்க, மேலும் ஊழியர்களை நியமிக்க, சூழல் நிதியை அறிமுகம் செய்ய, கிரிப்டோ விழிப்புணர்வை உண்டாக்க இந்த நிதியை நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள உள்ளது.

“இந்தியாவில் கிரிப்டோ சந்தை வாய்ப்பு உற்சாகம் அளிக்கிறது, காயின்ஸ்விட்ச் இந்த பிரிவில் முன்னணியில் திகழ்கிறது” என Andreessen Horowitz பங்குதாரர் டேவிட் ஜார்ஜ் கூறியுள்ளார்.

ஏன் முக்கியம்?

இந்தியாவில் கிரிப்டோ சந்தை கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் கிரிப்டோஸ்விட்ச் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

2013ல், அமெரிக்காவில் கிரிப்டோ சந்தை தொடர்பாக தெளிவில்லாத சூழல் நிலவிய போது, காயின்பேஸ் நிறுவனத்தில் a16z 25 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. நிறுவனத்தின் வெற்றிகரமான முதலீடுகளில் ஒன்றாக இது அமைந்தது. இப்போது, a16z மற்றும் காயின்பேஸ் நிறுவனங்களின் இந்திய முதலீடு முக்கியமாக அமைகிறது.

இதனிடையே இந்திய அரசு புதிய மசோதாவில் கிரிப்டோ மற்றும் மெய்நிகர் நாணயங்களை வரையறை செய்ய உள்ளது. இந்தியாவில் கிரிப்டோ தொடர்பான செயல்பாடுகள் சட்டநோக்கிலான சவால்களை கொண்டிருந்தாலும், a16z மற்றும் Coinbase முதலீடு இத்துறைக்கான நம்பிக்கையை உணர்த்துகிறது.

காயின்பேஸ், ஃபேஸ்புக், ஏர்பிஎன்பி உள்ளிட்ட 17 முக்கிய நிறுவனங்களில் a16z முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுவனம் கிரிப்டோவை மையமாகக் கொண்ட 2.2 பில்லியன் டாலர் நிதியை அறிவித்தது.

காயின்ஸ்விட்ச் குபேர் நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டாளர்களாக பாரடிகம், டைகர் குளோபல், செக்கோஷியா கேபிடல் இந்தியா மற்றும் ரிபிட் கேபிடல் உள்ளன. ஏப்ரல் மாதம் பி சுற்று நிதியில் நிறுவனம் 500 மில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக கருதப்பட்ட நிலையில் அதன் சந்தை மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

2017ல் பெங்களூருவில் அசிஷ் அகர்வால், கோவிந்த் சோபி, விமல் சாகர் திவாரி ஆகியோரால் நிறுவனம் துவங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நிறுவனம் இந்தியாவில் 4.5 மில்லியனுக்கு மேல் பயனாளிகளைக் கொண்டிருந்தது. அதன் பிறகு இந்த பயனாளிகள் எண்ணிக்கை 11 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த துறையில் CoinDCX, ZebPay, WazirX, Unocoin ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

"இளம் தலைமுறையினரிடம் இருந்து அதிக பரிவர்த்தனை நிகழ்கிறது. 18 வயது முதல் 35 வயதான முதலீட்டாளர்கள் அதிகம் உள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இருந்து 55 சதவீத பயனாளிகள் வந்துள்ளனர்,” என நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

தனது மேடையில் ஒரு பயனாளி சராசரியாக மாதம் ரூ.9,000 முதலீடு செய்வதாகவும் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world