ரூ. 250ல் மழை நீரை சேகரிக்கலாம்: 10 நிமிடத்திற்கு 225 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம்!

26 CLAPS
0

இப்பொழுது தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னையில் தலையாய பிரச்சனையாக இருப்பது தண்ணீர் பஞ்சம், சென்னை ஏரிகளின் நீர்நிலை 1% க்கும் குறைவாக இருக்கிறது என்பதை தினம் தினம் நாம் செய்திகளில் பார்த்து தான் வருகிறோம். இதற்கான தீர்வு மழைதான் என்ற நிலையில் அதை சேகரிக்கும் வழிகளை நாம் தேட வேண்டும்.

பல மாதங்கள் கழித்து சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிறது, இதை பயன்படுத்திக்கொள்ள குடியிருப்புகள் மழை நீரை சேகரிக்க முன்வந்துள்ளனர். சென்னை சித்தலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான தயானந்த் கிருஷ்ணன் தண்ணீரை சேகரிக்க முடிவு செய்ததோடு ரூ.250 க்குள் சேகரிக்கும் முறையை ஏற்பாடு செய்துள்ளார்.

பட உதவி: The New Indian Express

250 ரூபாயில் மழை நீர் சேகரிப்பா? இது சாத்தியாமா?

சாத்தியம் தான், இதற்குத் தேவை இரண்டு வளைந்த பிவிசி குழாய், 3 அடி பிவிசி குழாய், நீரை வடிகட்ட ஒரு துணி. இதை மட்டுமே வைத்து தனது 400 சதுரடி மொட்டைமாடியில் வெளியேறும் தண்ணீரை திசைத்திருப்பி பிவிசி குழாய்கள் முலம் இணைத்து ஒரு டிரம்மில் நீர சேகரிக்கிறார். நாள் ஒன்றுக்கு 10 நிமிடத்தில் 225 லிட்டர் தண்ணீரை இவரால் சேகரிக்க முடிகிறது.

துணியை வைத்து நீரை வடிகட்டுவதால் சுத்தமான நீர் டிரம்மில் விழுகிறது, இந்நீரை பாத்திரம் தேய்ப்பது போன்ற இதர வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர் கிருஷ்ணனின் குடும்பம். இது குறித்து நியு இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில்,

“மழை நீர் வீணாகச் செல்வதை நான் விரும்பவில்லை, அதனாலே மாற்றுவழியை யோசித்தேன். துவக்கத்தில் சற்று கலங்கிய நீர் கிடைத்தாலும் அதன் பின் சுத்தமான நீர் கிடைத்தது. இந்நீரை பாத்திரம் தேய்க்க, வீட்டை கழுவுதல் போன்ற வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தலாம்.

இந்த முறை நமக்கு தற்காலிகமாக மழை நீரை சேகரிக்க உதவினாலும், சென்னை மாநகராட்சி மழை நீரை முற்றிலும் சேகரிக்க சில சோதனைகளை செய்து வருவதோடு குடியிருப்புகள் மழை நீரை சேகரிக்கத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.

சென்னை தண்ணீர் பற்றாக்குறை வரலாறு காணாத அளவு மக்களை அதிகம் பாதித்துள்ளது. மழை நீரை சேகரிக்க தங்களால் முடிந்த எல்லா முறைகளையும் மக்கள் முயற்சி செய்கின்றனர். இந்த எளிய முறையையும் முயற்சி செய்து மழை நீரை சேகரிப்போம்!

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Latest

Updates from around the world