இணைய கூட்டங்களில் தலையில் தொப்பி அணியும் சி.இ.ஓ - காரணம் என்ன?

வீடியோ சந்திப்பு மூலம் நடத்தப்படும் இணைய கூட்டங்களில் பங்கேற்கும் ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்காக பெண் சி.இ.ஓ ஒருவர் புதுமையான உத்தியை பின்பற்றி வருகிறார்.
0 CLAPS
0

லிஸா ஸ்னீடரை (Lisa Utzschneider) கொஞ்சம் வித்தியாசமான சி.இ.ஓ என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச ஐடி நிறுவனம் ஒன்றின் தலைமை பதவியில் இருக்கும் லிஸா, அலுவலகக் கூட்டங்களில் தலையில் தொப்பி அணிந்து தான் காணப்படுகிறார். அது மட்டும் அல்ல, இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் நூற்றுக்கணக்கான ஊழியர்களும் தொப்பி அணிந்து தான் வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

கோவிட்- 19 சூழலில் அலுவல் நிமித்தமாக இணைய வழி கூட்டங்களையே அதிகம் நாட வேண்டிய நிலையில், ஊழியர்கள் மத்தியில் ஒருமித்த உணர்வை ஏற்படுத்தும் உத்தியாகவே இந்த தொப்பி அணியும் பழக்கத்தை லிஸா கொண்டு வந்திருக்கிறார்.

டிஜிட்டல் நிறுவனம்

டிஜிட்டல் விளம்பரங்கள் தொடர்பாக பிராண்டுகளுக்கு ஆலோசனை வழங்கும் இண்டக்ரல் ஆட் சயின்ஸ் - Integral Ad Science (IAS) நிறுவனத்தை லிஸா வழிநடத்தி வருகிறார். கோவிட்-19 உலகை உலுக்குவதற்கு முன் 2019ல் லிஸா இந்நிறுவனத்தின் சி.இ.ஓவாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்த ஆண்டே கோவிட்-19 பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலுக்கு வர, நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு, இணைய வழி கூட்டங்கள் உள்ளிட்ட வழிகளை நாடத்துவங்கின.

ஊழியர்கள் அலுவலகம் வர முடியாத நிலையில், ஜூம் உள்ளிட்ட வீடியோ சந்திப்பு சேவைகள் வாயிலாக இணைய வழி கூட்டங்களை நடத்தும் வாய்ப்பு, வர்த்தகப் பணிகள் பாதிப்பின்றி தொடர வழி செய்தாலும், இந்த டிஜிட்டல் சந்திப்புகளில் சிக்கல் இல்லாமல் இல்லை.

இணையவழி சந்திப்புகள் பங்கேற்பாளர்களுக்கு சுமையாக அமைந்ததோடு, ஓய்வில்லாமல் இந்த கூட்டங்களில் பங்கேற்பது அலுப்பையும், களைப்பையும் ஏற்படுத்துவதாக பலரும் புலம்பும் நிலை உண்டானது.

இணைய சந்திப்புகள்

மேலும், இணைய வழி சந்திப்புகளில் கவனத்தை குவிப்பதும் பிரச்சனையாக இருப்பதாக கருதப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நேர் சந்திப்புகளில் ஏற்படும் இணக்கமும், நெருக்கமும் இணைய வழி சந்திப்புகளில் இல்லாமல் போவதாக பலரும் கருதுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, உலகம் முழுவதும் ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் சார்பில் இணைய வழி சந்திப்புகளை நடத்துவது என்பது சவாலானது தான். இந்த நிலையை சமாளிப்பதற்காக தான், இண்டக்ரல் நிறுவனத்தின் இணைய வழி கூட்டங்களை மேலும் ஈர்ப்புடையதாக அதன் சி.இ.ஓ லிஸா தலையில் தொப்பி அணியும் உத்தியை பின்பற்றத்துவங்கினார்.

இந்நிறுவனத்தின் ஊழியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தாலும், அவர்கள் இணைய வழி கூட்டங்களில் பங்கேற்க வரும் போது, இது நம் நிறுவன கூட்டம் எனும் உணர்வை ஏற்படுத்துவது அவசியம் என லிஸா நினைத்தார்.

இதற்காக நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்து கொண்டவர் மற்ற ஊழியர்களும் இதே போலவே நிறுவன தொப்பி அணிந்து வரவேண்டும் எனக் கூறினார்.

தொப்பி உத்தி

இந்த உத்தியை எல்லா இணைய கூட்டங்களிலும் தவறாமல் பின்பற்றி வருகிறார். ஜூம் வழி சந்திப்புகளை ஊழியர்களை கம்ப்யூட்டர் திரைகளில் பார்க்கும் போது, எல்லோரும் நிறுவன தொப்பி அணிந்திருப்பது ஒவ்வொருவர் மனதிலும், இது நம்ம நிறுவனம் எனும் உணர்வு ஏற்படுகிறது.

கோவிட்-19 பாதிப்பு அசாதரணமான சூழலை உண்டாக்கியுள்ள நிலையில், எல்லாமே தலைகீழாக மாறியுள்ளதால், இயல்பு நிலையை நினைவுப் படுத்தக்கூடிய சின்ன சின்ன செயல்களும் கூட ஆசுவாசம் அளிக்கவே செய்கின்றன. அந்த வகையில் லிஸா தனது நிறுவனத்திற்காக பின்பற்றி வரும் தொப்பி உத்தியும் ஊழியர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலும் பலன்

இணைய வழி கூட்டங்களின் போது ஏற்படும் விலகல் தன்மைக்கு மாறாக எல்லோரும் தொப்பி அணிந்திருப்பது ஒருவித ஒற்றுமை உணர்வை அளிக்கிறது. இதை ஊழியர்களும் விரும்புகின்றனர். லிஸா, இணைய கூட்டங்கள் மட்டும் அல்லாமல், எல்லாவிதமான சந்திப்புகளுக்கும் தொப்பி அணிந்தே செல்கிறார்.

தலையில் தொப்பி அணியும் உத்தி அலுவலகத்தில் மட்டும் அல்ல வீட்டிலும் நல்ல பலன் அளிப்பதாக அவர் கூறுகிறார். வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழலில், தலையில் தொப்பி அணிந்திருப்பதை பார்க்கும் குடும்ப உறுப்பினர்கள் அவர் அலுவலகப் பணியில் இருப்பதை புரிந்து கொண்டு இடையூறு செய்யாமல் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் அவவலக சந்திப்பு முடிந்து வரும் போது தலையில் தொப்பி அணிந்திருந்தால், அம்மா இன்னமும் தொப்பியா? என பிள்ளைகள் பாசத்தோடு கேட்பதாகவும் அவர் இந்த செய்தி தொடர்பான பிபிசி நேர்காணலில் கூறியிருக்கிறார்.

தகவல் உதவி: பிபிசி | தமிழில்- சைபர்சிம்மன்