சென்று வாருங்கள் தோழரே..! 102 வயது வரை மக்களுக்காகவே சுவாசித்த தோழர் சங்கரய்யா!

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வாழும் வரலாறாக, பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த தோழர் சங்கரய்யா, தனது 102 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

சென்று வாருங்கள் தோழரே..! 102 வயது வரை மக்களுக்காகவே சுவாசித்த தோழர் சங்கரய்யா!

Wednesday November 15, 2023,

5 min Read

ஒரு மனிதனின் வாழ்க்கை எப்போது வரலாறாகிறது என்றால், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது பொதுவாழ்க்கையிலோ மற்றவர்களுக்கு முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டும்போதுதான். அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவர்தான் தோழர் சங்கரய்யா.

102 வயதிலும் ஆரோக்கியமாக இருந்து வந்த சங்கரய்யா, கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செயற்கை சுவாசம் பெற்று வந்த அவர், இன்று காலை காலமானார் என்ற செய்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போராட்ட நாயகன் -சங்கரய்யா

இந்திய சுதந்திர போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர்தான் சங்கரய்யா. தனது 95 வயதிலும்கூட ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடினார்.

Sankaraiah

நூற்றாண்டு கண்ட விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15வது‍ மாநிலச் செயலாளர், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி என தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை ஒன்றல்ல பல வரலாறுகளை உள்ளடக்கியது.

வீட்டில் விதைத்த விதை

1921ம் ஆண்டு ஜூலை 15ம் நாள், கோவில்பட்டியைச் சேர்ந்த நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்தான் சங்கரய்யா. சங்கரய்யாவுக்கு பெற்றோர் இட்டபெயர் பிரதாபசந்திரன். ஆனால், தனது பெயரையே தன் பேரனுக்கு வைக்க வேண்டுமென தாத்தா வலியுறுத்தியதால், அவரது பெயர் சங்கரய்யா என மாற்றப்பட்டது.

சங்கரய்யாவின் பாட்டனார் பெரியாரின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு குடியரசு ஏட்டின் சந்தாதாரராக ஆனார். அதை படித்த சங்கரய்யா, தனது சகோதரர் ராஜமாணிக்கத்தோடு பெரியார் கூட்டத்திற்கு செல்லத் துவங்கினார். இப்படித்தான் வீட்டிலேயே அவரது சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் விதை போடப்பட்டது.

Sankaraiah

Image courtesy: The Hindu

பள்ளிக் கல்வியை முடித்ததும், இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தவர், 1938ம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு‍ சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு‍ வந்ததைப் போல், மதுரையிலும் உருவாக்கப்பட்ட மதுரை மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆனார்.

இந்தியாவை அந்நியர் ஆண்ட போது, அவர்களுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்து, தனது மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினார் சங்கரய்யா.

எதற்கும் அஞ்சாத சங்கரய்யா

சங்கரய்யாவின் உத்வேகமிக்க செயல்பாட்டால் மாணவர் சங்கம் நாளுக்குநாள் செல்வாக்கு பெறத் தொடங்கியது. இதனால் அச்சமடைந்த கல்லூரி நிர்வாகம் சங்கரய்யாவை அழைத்து கல்லூரி மாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுவதாகவும், வேறு கல்லூரிக்கு போய்விட வேண்டும் என்றும் கூறியது. அப்போது, கம்யூனிஸ்ட் தலைவர் சுப்ரமணியர் சர்மா வழிகாட்டுதலின் பேரில் "இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் வேலை நிறுத்தம் நடக்கும்" என்று சங்கரய்யா எச்சரித்தார். அஞ்சிய நிர்வாகம் வெளியேற்றும் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 1940ம் ஆண்டு‍ ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.

சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி

1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார் சங்கரய்யா. ஆனால், அப்போது அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் விடாமுயற்சியாக, மீண்டும் 1967ம் ஆண்டு மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார் சங்கரய்யா. இந்தமுறை அவருக்கு வெற்றி கிட்டியதால், தொடர்ந்து அதே தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் களமிறங்கி வெற்றி பெற்றார். இப்படியாக தமிழ்நாடு சட்டசபை உறுப்பினராக 3 முறை பதவி வகித்தார் சங்கரய்யா.

Sankaraiah

தமிழக சட்டசபையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஒன்றிய அரசை எதிர்க்கும் மாற்றுப்பாதை, குடிநீர், பிரச்சனை, ரேஷன் வினியோகம், பொருளாதாரக் கொள்கைகள், மாநில சுயாட்சி, விவசாயம், கைத்தறி, கிராமப்புற வறுமை, நில விநியோகம், காடுகள், தொழிற்சாலைகள், திட்டங்கள், நுழைவு வரி, மோட்டார் வாகன வரி என சங்கரய்யா எழுப்பிய பிரச்சனைகள் ஏராளம்.

கட்சிப் பொறுப்புகள்

1964ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1986ம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்வான சங்கரய்யா, அப்போதிருந்து தொடர்ந்து மத்தியகுழுவில் இருந்து வந்தார்.

1995ல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில்,கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார் என்.சங்கரய்யா. 2002ம் ஆண்டு பிப்ரவரி வரை அந்தப் பொறுப்பில் இருந்த அவர், 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

Sankaraiah

தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த சங்கரய்யா, சுமார் இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் வாழ்ந்தவர். மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நாடு விடுதலை பெற்றபோது தான், சிறையிலிருந்து விடுதலையே செய்யப்பட்டார்.

சாதி மத மறுப்பு திருமணம்

1947ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி ஆசிரியை நவமணி அம்மையாரை சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொண்டார். மதுரை கட்சி அலுவலகத்தில் நடந்த திருமணத்துக்கு பி.ராமமூத்தி தலைமை வகித்தார். இந்தத் தம்பதிக்கு சந்திர சேகர், சித்ரா, நரசிம்மன் என மூன்று குழந்தைகள்.

தலைமறைவு வாழ்க்கை

தொடர் சிறைவாசத்தால் தனது கல்லூரிக் கல்வி இறுதிக்கட்டத்தில் இழந்தார் சங்கரய்யா. ஆனாலும், தனது சிறைவாசத்தை அரசியல் கற்கும் பள்ளியாக மாற்றிக் கொண்டார். 1948ம் ஆண்டு கட்சி தடை செய்யப்பட்டதால், இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து  மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்டார் சங்கரய்யா. இந்தத் தலைமறைவு காலத்தில் சலவைத் தொழிலாளி மருதை என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது, பெரும்பாலும் அழுக்குத் துணி மூட்டைகளின் நடுவிலேயே தங்கி இருந்தால், கடும் சொறி சிரங்கு தொல்லைக்கு ஆளானார் சங்கரய்யா.

ஓயாத போராட்டங்கள்

தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள், தொழிலாளர்கள் உரிமைகள் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்தவர் சங்கரய்யா. தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. தனது 95 வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடி மக்களை அசர வைத்தார்.

தகைசால் விருது

தமிழ்நாடு அரசின் ’தகைசால் விருது’ முதல் முறையாக 2021ம் ஆண்டு சங்கரய்யாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று விருதை நேரில் வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அப்போது விருதை ஏற்றுக் கொண்ட சங்கரய்யா, அதனுடன் அளிக்கப்பட்ட ரூ.10 லட்சம் பரிசையும் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.

Sankaraiah

இதே போன்று, 1972ல் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் வழங்கப்பட்டபோது அதையும் ஏற்க மறுத்தவர்தான் சங்கரய்யா.

"நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராடினோம், பென்ஷனுக்காக அல்ல," என்று அப்போது அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மறைவு

102 வயதைத் தொட்டபோதிலும் ஆரோக்கியமாகவே இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சங்கரய்யாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்களன்று சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் அவரது உடல்நிலை மெல்ல மெல்ல பின்னடைவைச் சந்தித்தது. இந்நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

Sankaraiah

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய சங்கரய்யாவின் மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மற்ற பல முக்கிய அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்று வாருங்கள் தோழரே..!

மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, தனது இறுதி மூச்சு வரை நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும் போராடிய தோழர் சங்கரய்யாவின் உடல், தற்போது மண்ணை விட்டுப் பிரிந்தாலும், வரலாற்றில் அவரது தியாகங்கள் இனி வரும் தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கும். அவர் விதைத்துச் சென்ற விதைகள் காலத்திற்கும் விருட்சமாக வேரூன்றி அவர் பெயர் சொல்லும்.