Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

சர்ச்சையில் சிக்கியுள்ள யூடியூபர் மதன் விவகாரம் உணர்த்தும் பாடம் என்ன?

யூடியூப் உள்ளிட்ட இணைய மேடைகள் பணம், புகழை தேடித்தரும் என்றாலும், இவற்றின் மூலம் வெற்றி பெற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான பாடங்களை கற்றுத்தருவதாக மதன் விவகாரம் அமைகிறது.

சர்ச்சையில் சிக்கியுள்ள யூடியூபர் மதன் விவகாரம் உணர்த்தும் பாடம் என்ன?

Thursday June 17, 2021 , 5 min Read

யூடியூபர் மதன் விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் தீவிரமாகவே இருக்கின்றன. இந்த விவகாரம், இணைய பயன்பாடு, இணைய செல்வாக்கு தொடர்பாகவும் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்புவதாக அமைகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக அப்பாவி ரசிகர்கள் அல்லது பயனாளிகளின் நிலை தொடர்பாகவும் இந்த பிரச்சனை சிந்திக்க வைக்கிறது.

 யூடியூப்

யார் இந்த மதன்?

மதன் குமார் மாணிகம் என்ற சேலத்தைச் சேர்ந்த மதன் ஓபி, கேமிங் யூடியூபர் ஆகும். இவர், தனது டாக்சிக் மதன் 18+ சேனலின் மோசமான செயல்பாட்டிற்காக அடுக்கடுக்கான புகார்களுக்கு உள்ளாகி, காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார்.


இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விபிஎன் மூலம் விளையாடும் மதன், அதை தனது யூட்யூப் சேனலில் லைவ் ஸ்ட்ரீமிங்க் செய்வார். இதில், பெரும்பாலும் பதின் பருவ சிறுவர், சிறுமியர்களே அதிகம் கலந்து கொள்கின்றனர். பப்ஜி விளையாட்டு மோகத்தால் இளசுகள் பல லட்சம் பேர் மதனை பிந்தொடர்ந்து வருகின்றனர்.

அவர் லைவில் சிறுவர், சிறுமிகளிடம் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி மிக மோசமாக நடந்து கொண்ள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவரது சேனலில் செயல்பாடே வக்கிரத்தின் அடையாளமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மதனின் சிறப்பே அவர் இதுவரை தனது முகத்தை யூட்யூபில் காட்டாமலே விளையாடிவருகிறார். இது கூடுதல் ஈர்ப்பாக பலருக்கு அமைந்துள்ளது.

ஸ்டீரிமிங் பாதை

கேமை ஸ்டீரிமிங் செய்யும் போது மதன் பேசும் பேச்சுகளும், பயன்படுத்தும், வசைச்சொற்களும் திகைக்க வைக்கின்றன. இப்படிப்பட்ட ஒருவரை, பதின் பருவத்தினர் தங்கள் செல்வாக்காளராக ஏற்றுக்கொண்டதும், அவருடன் உரையாட ஆர்வம் காட்டியதும், அவருக்காக சூப்பர் சாட்டில் பணத்தை அள்ளிக்கொடுத்ததும் மேலும் கவலை அளிப்பதாக அமைந்துள்ளன.


மதனுடன் இணைந்து செயல்பட்டதற்காக அவரது மனைவி கிருத்திகா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மதனின் தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மதன் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் வலைவீசி தேடப்பட்டு வருகிறார். இந்த வழக்கின் போக்கும், இது தொடர்பான சட்ட நுணுக்கங்களும் முக்கியமானவை.

யூடியூப் வழி

சாமானியர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான மேடையாக யூடியூப் கருதப்படும் நிலையில், யூடியூபர் ஒருவர் சட்டத்தால் தேடப்படும் நிலை நிச்சயம் அதிர்ச்சி அளிப்பது தான். ஆனால் இது முற்றிலும் எதிர்பாரதது அல்ல: சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால், யூடியூப் பிரபலங்கள் அதிகம் இருப்பது மட்டும் அல்லாமல், சர்ச்சைக்குறிய யூடியூபர்களும் கூட அதிகமாக இருக்கின்றனர். இந்தியாவிலும் கூட, கடந்த ஆண்டு சர்ச்சைக்குறிய யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யூடியூப் பெற்றுத்தரும் வெற்றி, புகழ் மற்றும் வருமானம் காரணமாக பலரும், சர்ச்சைக்குறிய உள்ளடக்கம், எதிர்மறை அணுகுமுறை ஆகியவற்றை பயன்படுத்தி யூடியூப்பில் கவனத்தை ஈர்க்க முயல்வதாக கருதும் நிலை இருக்கிறது. இந்த பின்னணியிலேயே மதன் விவகாரத்தை அணுக வேண்டியிருக்கிறது.

அடிப்படையில் பார்த்தால், யூடியூப் படைப்பாக்கம் மற்றும் திறமை வெளிப்பாட்டிற்கான இடமாக அமைகிறது. இதில் நுழைவதற்கான வரம்புகள் கிடையாது என்பதால், யார் வேண்டுமானாலும் வீடியோக்களை உருவாக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்துவது சாத்தியமாகிறது. இந்த வெளிப்பாட்டிலும் புதுமையும், சுவாரஸ்யமும் இருந்தால் பயனாளிகள் வரவேற்கின்றனர்.

மதனிசம்

புகழ், பணம் !

இப்படி, லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்தவர்களே யூடியூப்பில் வெற்றிக்கொடி நாட்டுகின்றனர். இவர்களில் பலர் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் சம்பாதிக்கவும் செய்கின்றனர். இவர்கள் யூடியூபர் எனும் அடைமொழி பெறுவதோடு, அவர்களை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நட்சத்திரங்களாகவும் உருவாகின்றனர்.


திரைப்படம், கேட்ஜெட் திறனாய்வு, சமையல் கலை, புத்தக அறிமுகம் என பலவித யூடியூப் சேனல்கள் இருந்தாலும், கேமிங் பிரியர்களுக்கு என்றும் தனியே விதவிதமான சேனல்கள் இருக்கின்றன.


வீடியே கேம் விளையாட்டை பதிவு செய்து வீடியோவாக வெளியிடுவதோடு, கேம் விளையாடுவதையே ஸ்டீரிமிங் செய்பவர்களும் இருக்கின்றனர். ஸ்டீர்மிங் செய்யும் போதே, விளையாட்டு பற்றி விவரிப்பதும், ரசிகர்களுடன் உரையாடுவதும் பயனாளிகளைக் கவர்கிறது. கேம் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம் என்பதும் ஈர்ப்புக்கு முக்கியக் காரணம்.

”தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள மதன், தனது யூட்யூப் சேனல் மூலம் மாதம் 7-10 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும் கடந்த சில ஆண்டுகளில் கோடிகளில் வருவாய் ஈட்டி, அதன் மூலம் 2 சொகுசு கார்கள், பங்களா என வாங்கிக்குவித்ததாக காவல் துறை பட்டியலிட்டுள்ளது.”

தவறான வழி

வெறும் கேம் விளையாடி அதை விவரித்து பணம் ஈட்டுவதில் இங்கு பிரச்சனை இல்லை. மதன் போன்று கேமிங் மூலம் ரசிகர்களை ஈர்த்து அதில் குழந்தைகளைத் தவறாகவும், கொச்சை வார்த்தைகள் பயன்படுத்தி தவறாக பாதையில் வழிநடத்தியதே இங்கு குற்றமாக அமைந்துள்ளது.


மதன் கேம் ஸ்டிரீமிங் மூலம் புகழ் பெற்றிருக்கிறார். ஆனால் கேமிங் ரசிகர்களைக் கவர அவர் பயன்படுத்திய உத்திகளும், கையாண்ட அணுகுமுறையும் அவர் தவறான வழியை தேர்வு செய்ததை உணர்த்துகிறது. யூடியூப் போட்டி மிக்க களமாக மாறிவிட்ட நிலையில், எளிதாக கவனம் ஈர்க்க, இப்படி மலிவான உத்திகளை அவர் நாடத் துவங்கியிருக்கிறார்.

ஆபாசமாக பேசுவது, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது என மதனின் அணுகுமுறை அமைந்திருந்த நிலையில், இளசுகளும் பதின்பருவத்தினருமே அவரது தீவிரப் பார்வையாளர்களாக இருப்பது வேதனை அளிப்பதாக அமைகிறது.

இளம் நெஞ்சங்களை மதனால் எப்படி கவர முடிந்தது?

ரசிகர்கள் மயக்கம்

கேமிங்கில் தனக்கு இருந்த திறமையை அவர் மூலதனமாகக் கொண்டிருந்தாலும், ரசிகர்களை வளர்த்தெடுத்த விதம் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது. துவக்கத்தில் அவர், கெட்ட விஷயங்களைப் பேசுவராக இருந்தாலும், நல்ல விஷயங்களையும் பேசியிருப்பதாக அவரது ரசிகர்கள் சொல்கின்றனர்.

madan with wife

மனைவி கிருத்திகா உடன் மதன் குமார்

சுயமாக செயல்படுவது, பெற்றோரை மதிப்பது, பிறருக்கு உதவுவது போன்ற கருத்துகளை எல்லாம் அவர் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இளசுகளில் பலர் அவரை தங்களுக்கான ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். மேலும் அவர் கேமிங் விளையாடும் லாவகத்தால் ஈர்க்கப்பட்டு அவருடன் உரையாடுவதிலும் மகிழ்ச்சி கண்டுள்ளனர்.

அறியா பருவம் என்பதால், மதனின் எதிர்மறையான அணுகுமுறையை ரசிகர்கள் பலரும் விரும்பியுள்ளனர். இதன் காரணமாகவே, மற்றவர்கள் இதை கண்டிக்கும் போது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்துள்ளனர். விமர்சனம் செய்யும் போட்டி சேனல்களை கமெண்ட்களால் ஸ்பேம் செய்வது, முடக்குவது போன்றவற்றில் எல்லாம் மதன் ரசிகர்கள் ஈடுபட்டுதள்ளதாக அறிய முடிகிறது.

அவதூறான செய்கை

மேலும், பல இளம் ரசிகைகள் மதன் தங்கள் பெயரை சாட்டில் சொல்வதை கேட்டு கிளர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். இன்னும் சிலர் மதன் மீதான தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்தவும் முயன்றுள்ளனர். மதன் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.


ஸ்ட்ரீமிங்கின் போது மதன் ஓபி என ரசிகர்கள் அவருக்காக முழக்கமிட்ட கதைகள் எல்லாம் இருப்பதாகச் சொல்கின்றனர். சூப்பர் சாட் வசதியில் அள்ளிக்கொடுத்தவர்களும் இருக்கின்றனர். மதன் ஆர்மி என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானதாக தெரிகிறது.


உண்மையில் இந்த வெற்றி மதனுக்கு பொறுப்புணர்வை அளித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக வெற்றி போதை அவருக்கு ஆணவத்தையும், புகழ் போதையையுமே அளித்ததாக புரிந்து கொள்ள தோன்றுகிறது. மேலும், புகழை குறி வைத்து அவர் 18+ சேனலை துவக்கி தரக்குறைவான முறையில் செயல்பட்டிருக்கிறார். இதை சுட்டிக்காட்டிவர்களையும் மோசமாகவே நடத்தியிருக்கிறார்.

இந்த விபரீத போக்கின் விளைவை தான் அவர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். பதின்பருவத்தினரை தன் பக்கம் எளிதாக ஈர்க்க முடிந்தது அவருக்கு மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, மோசமான அணுகுமுறை மூலம் மேலும் புகழ், பணத்தை சம்பாதிக்கலாம் என எண்ண வைத்திருக்கிறது.

ஆனால், சர்ச்சைகளும், விமர்சனங்களும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என அவர் கருதியது தான் துரதிர்ஷ்டம். அதிலும் குறிப்பாக பதின் பருவ பெண்களிடம் தவறான அணுகுமுறையை பின்பற்றுவது தொடர்பான விமர்சனங்களையும் அவர் அலட்சியப்படுத்தியதை பொறுப்பற்ற செயலின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.

மதன்

பப்ஜி விளையாடிக்கொண்டிருக்கும் போதே சூப்பர் சேட் மூலம் பணம் வசூல் செய்யும் மதனின் யூட்யூப் இது

தன் மீதான புகார்கள் குவிந்த நிலையிலும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனும் விதமாக அவர் பேசி இருப்பது ஆவணத்தின் அடையாளமாகக் கொள்ளலாம்.

பாடங்கள்

மதன் தன்னைப்போன்ற கேமர்களுக்கும், யூடியூபர்களும் அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறார். முக்கியமாக தன்னால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களுக்கு அவர் தவறான முன்னுதாரணமாகி இருக்கிறார். ரசிகர்களை அவர் தரக்குறைவாக பேசியதையும், மோசமாக நடந்து கொண்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, இதன் விபரீதத்தை அவர் உணராமலே இருந்ததே அதிகக் கவலை அளிக்கிறது.


யூடியூபர்கள் பிரபலமாவதும், நட்சத்திரங்களாவும் ரசிகர்களால் தான் என்பதை அவர் உணரவில்லை. அந்த ரசிகர்களைக் கண்ணியமாக நடத்துவதே தன் கடமை என்பதையும் அவர் உணரவில்லை. மலிவான உத்திகள் மூலம் ரசிகர்கள் எண்ணிக்கையை பெருக்குவதை விட, தன்னை நாடி வரும் ரசிகர்களுக்கு தவறாக வழிகாட்டாமல் இருக்கும் வேண்டும் எனும் பொறுப்பையும் உணரவில்லை.


இணையத்தில் புகழ் மற்றும் பணத்தை பெறுவதற்காக தவறான வழிகளை பின்பற்றுவது சிக்கலையே ஏற்படுத்தும் என்பதே மதன் விவகாரம் உணர்த்தும் பாடம். வெற்றி அடைந்த பின் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளத் தவறினால், ஓடி ஒளிய வேண்டியிருக்கும் என்பது அதைவிட முக்கியப் பாடமாகும்.