'குக் வித் கோமாளி' - தமிழ் மக்களின் மனதை கவர்ந்தது எப்படி?

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி -2 நிகழ்ச்சி அடடா முடிந்துவிட்டதே என ஏக்கப்பெருமூச்சு விட வைத்திருக்கிறது.
4 CLAPS
0

ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் கிரேஸ் அதிகம் என்றாலும், அண்மையில் முடிந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, இதுவரை இல்லாத வரவேற்பை பெற்று வியக்க வைத்துள்ளது. கேலியும், கிண்டலும் கலந்த இந்த கலகலப்பான சமையல் நிகழ்ச்சி, தம்மை மறந்து சிரிக்க வைத்ததாக ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி-யை கொண்டாடிய ரசிகர்களுக்கு, அடடா நிகழ்ச்சி முடிந்துவிட்டதே எனும் ஏக்கம் உண்டாகி இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை அறியாதவர்கள், ரசிகர்களின் பரபரப்பையும், கொண்டாட்டத்தையும் பார்த்து, இந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது? எனும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் டிவி நிகழ்ச்சி

உலகம் முழுவதும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், இந்தியாவிலும் இது பிரதிபலிக்கிறது. இந்திய அளவில், பிக்பாஸ் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமாயின.

தமிழிலும், நடனம் சார்ந்த போட்டி நிகழ்ச்சி, இசை சார்ந்த போட்டி நிகழ்ச்சி என ரியாலிட்டி நிகழ்ச்சிகள் களைகட்டின. இந்த பட்டியலில் சமையல் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொண்டன.

இவற்றில் ஒன்றான, குகு வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதன் கேலி கலந்த நகைச்சுவை சரவெடி தன்மையாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

சீசன் -2

குகு வித் கோமாளி சமையல் போட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் வித்தியாசமானதாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பன்கேற்று தங்களை சமையல் திறனை வெளிப்படுத்தினர் என்றால் அவர்களின் பார்ட்னராக, அமெச்சூர் சமையல் கலைஞர்கள் பங்கேற்றது தான் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது.

பிரபலங்கள், கோமாளிகளுடன் சேர்ந்து சமையல் டாஸ்குகளில் ஈடுபட்டதும், இவற்றின் போக்கில் பஞ்சமே இல்லாமல் நகைச்சுவையை வாரி வழங்கியதும் ரசிகர்கள் நிகழ்ச்சியில் ஒன்றிப்போக வைத்தது.

நேர்த்தியாக ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு, நன்றாக தொகுத்து வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் சேஷ்டைகளும், ஆன் தி ஸ்பாட்டில் அள்ளித்தெளித்த கேலி, கிண்டல்களும், பரஸ்பர நக்கல், நையாண்டிகளும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை விருந்தாக அமைந்தன.

ஏகோபித்த வரவேற்பு

நகைச்சுவை திரைப்படங்களை மிஞ்சக்கூடிய சரவெடி சிரிப்புகளும், துணுக்குகளும், இந்த நிகழ்ச்சியை துடிப்பானதாக உணர வைத்தது. புகழ், மணிமேகலை, பாலா, தங்கதுரை, மதுரை முத்து மற்றும் ஷிவாங்கி உள்ளிட்ட கோமாளிகள் தங்கள் பாணி நகைச்சுவையில் ரகளை செய்ததோடு, போட்டியாளர்களும் அவர்களோடு கலகலப்பாக கலந்து பழகி கலக்கி விட்டனர். அதோடு முக்கியமாக நடுவர்களான செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோரும், சரியான காமெடி சென்சை வெளிப்படுத்தி அசத்தி விட்டனர்.

இப்படி ஓட்டுமொத்த பங்களிப்பால் நிகழ்ச்சி எதிர்பார்த்ததையும் விட பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக கிரான்ட் பைனலை மணிக்கணக்காக லட்சக்கணக்கானோர் விடாமல் பார்த்து ரசித்து, சிரித்து மகிழந்திருகின்றனர்.

கொரானா நெருக்கடி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி 2019ம் ஆண்டு விஜய் டிவியில் முதல் முறை ஒளிபரப்பானது. இதன் தொடர்ச்சியாக 2ம் சீசன் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் உண்டு என்றாலும், இரண்டாம் சீசனின் நிகழ்ச்சி எதிர்பாராத அளவில் வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஒன்றி போய் அவர்களின் விலா நோகச் சிரிக்க வைத்ததே இதற்கு முக்கியக் காரணம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அறிமுகம் இல்லாமல் முதலில் பார்ப்பவர்களுக்கு, இதில் என்ன இருக்கிறது, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்? எனும் சந்தேகம் ஏற்படலாம். ஆனால், ஒரு முறை நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்தால் அதன் பிறகு தங்கள் மறந்து சிரிக்கத் துவங்கிவிடுவார்கள்.

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் பலரும் விரும்பியது இத்தகைய ஒரு நிகழ்ச்சியை தான். நோயின் தாக்கம், பொருளாதார பாதிப்பு என எங்கும் நெருக்கடியான சூழல் நிலவிய நிலையில், பலரும் தங்களை மறந்து சிரித்து மகிழும் நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ அமைந்தது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மிகச்சிறந்த ஸ்டிரெஸ் பஸ்டராக அமைந்தது.

பாராட்டு மழை

பத்திரிகையாளரான சிவராமன் இதை தனது ஃபேஸ்புக் பதிவில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

”இவ்வளவு பைத்தியக்காரத்தனமாக எந்தவொரு ரியாலிட்டி ஷோவையும் கண்டதில்லை. குறிப்பாக இதன் Grand Finale. மதியம் 2 மணி முதல் இப்பொழுது (இரவு 7.34) வரை நகராமல் இருக்கிறேன்...” என அவர் இறுதிப்போட்டியை பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணங்களையும் அவர் அலசியிருக்கிறார். ”Ego X Alter ego கான்செப்ட் இதற்கு முன் அறிந்த வரை தமிழில் வேறு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இந்தளவு பதிவாகவில்லை. பீர்பால், தெனாலி ராமன் கதைகளும் அது தொடர்பாக தத்துவ / உளவியல் தளங்களில் இப்பொழுது வரை நடைபெற்று வரும் உரையாடல்களும் நினைவுக்கு வருகின்றன; உரசிப் பார்க்கவும் வழி வகுக்கின்ற,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதே போல், பல தரப்பினரும் நிகழ்ச்சியால் தங்களுக்குக் கிடைத்த ஆசுவாசம் மற்றும் நிம்மதி உணர்வை பாராட்டாக தெரிவித்துள்ளனர். பிரியங்கா என்பவர், இந்த நிகழ்ச்சி எப்போதும் தன் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை, இந்த நிகழ்ச்சியின் தாக்கத்தையும், அதற்கான காரணத்தையும் விரிவாக அலசியுள்ளது. கலகலப்பான நிகழ்ச்சியில், கேலிக்கும், கலாய்ப்புகளுக்கும் குறைவில்லை என்றால், அவை விரசத்தின் சாயல் அல்லது ஆபாசத்தின் அருகே சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை ஷகிலாவிப் பங்கேற்பு பற்றியும் அந்த கட்டுரை பாராட்டுகிறது. இதே போல, திரைப்பட நடிகை தீபாவும் தனது வெள்ளந்தியான சிரிப்பால் கவர்ந்திருக்கிறார். நடுவர்களில் ஒருவரான செப் தாமுவும், நிகழ்ச்சியால் நெகிழ்ந்து போயிருக்கிறார். இதற்கு முன் இப்படி சிரிதத்தில்லை என அவர் கண்ணீர் மல்க கூறி ரசிகர்கலை நெகிழ வைத்துள்ளார்.

வெற்றி மகுடம்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் கனி முதலிடம் பெற்றுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர், இந்த வெற்றியால் மேலும் பிரபலமாகியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் போன்றோரும் பிரபலமாகியுள்ளனர். காமெடியன்கள் பற்றி கேட்கவே வேண்டாம். நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் மற்றும் தொகுப்பாளர்களும் பரவலாக பாராட்டப்படுகின்றனர்.

படங்கள் உதவி: ஃபேஸ்புக், டிஸ்னி ஹாட்ஸ்டார்

Latest

Updates from around the world