Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

கொரோனா பாதிப்பு சமயத்தில் எந்தத் தொழில் தொடங்கலாம்?

வீட்டில் முடங்கிப் போய் இருக்கும் இக்காலக்கட்டத்தில் எந்த வகை பகுதிநேர வேலை, தொழில்களில் ஈடுபடலாம்: 10 ஆலோசனைகள்!

கொரோனா பாதிப்பு சமயத்தில் எந்தத் தொழில் தொடங்கலாம்?

Monday April 06, 2020 , 5 min Read

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது இப்போதைக்கு யாருக்குமே தெரியாது. டீ பங்க் கடை தொடங்கி பங்குச்சந்தை வரை பற்பல பேரிழப்புகளைச் சந்தித்து வருகின்றன.


இத்தகைய பேரிடர் காலங்களில் நாம் செய்துவரும் தொழில்களிலும், வேலைகளிலும் வருவாய் குறையாமல் பார்த்துக்கொள்வேதே பெரும்பாடுதான். தொழில்புரிவோர் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

கொரோனா

வேலை செய்வோர் வீட்டிலிருந்தே வேலை செய்வதில் தீவிரம் காட்டலாம். ஆனால், இந்த இரண்டு தரப்புமே தங்களது வழக்கமான வருமானத்தைத் தக்கவைத்துக்கொள்வது பெரும் போராட்டம் என்பது மட்டும் தெளிவு.


சரி கொரோனா சமயத்தில் எந்த தொழில்களை தொடங்கினால் வளர்ச்சி வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம்...


பகுதிநேர தொழில், வேலைகள் என்னென்ன?


முன்பெல்லாம் எப்போதாவது நிலவிவந்த பொருளாதார மந்தநிலைப் போக்குகள் இப்போதெல்லாம் அடிக்கடி வரும் அழையா விருந்தாளியாகிவிட்டது. இதுபோதாதென்று கொரோனா லாக்டவுன் போன்ற பேரிடர்களை வேறு சந்திக்க வேண்டிய நிலை.


எனவே, நாம் வழக்கமாகச் செய்யும் தொழில், வேலைகளைத் தாண்டி, கூடுதலாக வருவாய் ஈட்டுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. இதற்கு, உகந்த காலக்கட்டமாகவே இந்தக் கொரோனா லாக்டவுனைப் பயன்படுத்தலாம்தானே.


அந்த வகையில், பகுதிநேர வேலை, தொழில்களில் அடித்தளம் அமைக்க சில யோசனைகள் இதோ:

1) ஈர்க்கத்தக்க குட்டி உணவகங்கள்

எந்தச் சூழலில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மவுசு குறையாது. ஆம், இந்த லாக்டவுன் காலத்திலும் உணவகங்களுக்கு பெரிதாகக் கட்டுப்பாடுகள் இல்லை. தற்போது பெரிய ஓட்டல்களைக் காட்டிலும் வீட்டு உணவுகள், ஆரோக்கிய உணவுகள், இயற்கை முறை உணவு வகைகளைத் தேடி உண்பதில் மக்களுக்கு நாட்டம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், தனித்துவமாக குட்டியாக ஒர் உணவகத்தைத் தொடங்குவது குறித்து யோசிக்கலாம்.


அதை வீட்டிலேயே ஓர் அறையில்கூட செய்யலாம். உங்கள் பகுதிக்கும் மட்டும் தெரிந்தால்போதும் பிசினஸுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பணிக்குச் செல்வோர் இரவு நேர குட்டி உணவகங்கள் தொடங்குவதுபற்றி யோசிக்கலாம். டன்சோ (Dunzo) போன்றா டெலிவரி நிறுவனங்கள் மூலம் சிறு வட்டத்துக்கு ஆர்டர் எடுத்து அவர்கள் வீட்டிலேயே சப்ளை செய்யலாம். குறிப்பாக பாச்சிலர்கள், வயதானவர்களை குறி வைத்து அவர்களுக்கு சமைத்து அனுப்பலாம்.

உணவு
2) டெய்லரிங் & டிசைனிங்

80, 90-களில் தையற்பயிற்சி நிலையங்களுக்கு ஏகப்பட்ட மவுசு. உலகமயமாக்கலில் காணாமல் போனவற்றில் சிறுசிறு தையற்கடைகளும் அடக்கம். ஆனால், இப்போது மீண்டும் ட்ரெண்ட் மாறத் தொடங்குகிறது. மக்கள் ரெடிமேடு ஆடைகளுக்குப் பதிலாக மீண்டும் தையலகங்களை நாடி, தங்களுக்கு விருப்பமான வடிவமைப்புகளை எடுத்துச் சொல்லி உடைகளை அணிய ஆரம்பிக்கின்றனர். முன்புபோல் இல்லாமல் இப்போது தையற்கூலியும் வெகுவாக கூடிவிட்டதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக, புதுப் புது டிசைன்களில் தைப்போருக்கு மவுசு அதிகம்.


எனவே, வீட்டிலேயே டெய்லரிங், டிசைனிங் கலையில் வல்லவராகுங்கள். தொழிலாகச் செய்ய முனைபவர்கள் தங்கள் பகுதியில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பகுதி நேர வேலையும் தரலாம். ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தலாம். உணவுக்குப் பிறகு உடைதான் அத்தியாவசியம். எனவே, எந்தச் சூழலிலும் இந்தத் தொழிலுக்குப் பாதிப்பு குறைவுதான். டெய்லரிங்கும் டிசைனிங்கும் தெரிந்திருந்தால், இந்தக் காலக்கட்டத்தில் மாஸ்குகள்கூட அதிக அளவு தயாரிக்கலாம்தானே!

3) வெப்சைட், ஆப் உருவாக்கம்

தனி நபர்கள் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரையில் எல்லா தரப்புக்குமே இப்போது வெப்சைட்டோ அல்லது செயலியோ அவசியமாகிவிட்டது. அதுவும் தற்போது ஊரடங்கு சமயத்தில் நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்ய முனைகின்றனர்.


இணையம் - தொழில் நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள், இணையத்தை வடிவமைப்பதில் தேர்ச்சி பெற்று, வெப்சைட் - ஆப் உருவாக்கித் தந்து வருவாய் ஈட்ட முடியும். தனியாக மட்டுமின்றி, வீட்டின் ஒரு பகுதியையே அலுவலகமாக்கியும் செயல்படுத்தலாம். பணியாளர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுக்கலாம். வெப்சைட், ஆப் உருவாக்கம் மட்டுமின்றி, அதுசார்ந்த நிறையப் பணிகளைக் கண்டடையலாம்.

4) மின்னூல் வடிவமைப்பு

புத்தக வடிவமைப்பில் ஆர்வம் உள்ளவர்கள், போட்டோஷாப், இன்-டிசைன் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு, வீட்டிலிருந்தபடியே மின்னூல் வடிவமைப்பில் ஈடுபடலாம். கிண்டில் முதலான தளங்கள் வந்தபிறகு ஆன்லைன் மூலம் வாசிக்கும் பழக்கம் கூடியிருக்கிறது. கையில் புத்தகமாக இல்லாமல், ஸ்மார்ட் ஃபோனில் அச்சில் வாசிக்கும் அதே சுவையுடன் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நம் மக்கள். எனவே, புத்தகத்தை வடிவமைத்து மின்னிதழ், இ-புக் ஆக மாற்றினாலே போதும். இப்போது நேரடியாக இ-புக் வரத் தொடங்கிவிட்டன. இதற்கான தேவை அதிகரித்துள்ளது.


பதிப்பகத் துறையில் ஆர்வம் இருந்தால், முழுக்க முழுக்க மின்னூல் பதிப்பகமே கூட ஆரம்பிக்கலாம். கூடவே, லோகோ வடிவமைப்பு, அழைப்பிதழ் வடிவமைப்பு போன்றவற்றையும் செய்யலாம். இதுவும் தனியாகச் செய்யக் கூடியது மட்டுமல்ல, பலருக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் தந்து ஒரு நிறுவனமாகவும் செய்யக் கூடியதே.

இ-புக்
5) இ-டியூஷன்... இணையவழி பாடங்கள்

ஸ்மார்ட்போன் காலத்தில் இ-டியூஷன் எனப்படும் பாடப் பயிற்சி வகுப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பள்ளிப் பாடங்கள் மட்டுமல்ல, போட்டித் தேர்வுகள் தொடங்கி, துறை சார்ந்த படிப்புகள் வரை எல்லாவற்றுக்கும் இ-டியூஷனுக்கு மவுசு உண்டு. லாக்டவுன் காலத்திலும் தொடரக் கூடிய பணி. தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி, நீங்கள் இ-டியூஷனை ஒருங்கிணைக்கும் நிறுவனமாகக் கூட இயங்கலாம்.


இது, பகுதிநேர வருவாய்க்கு உகந்தது. எதிர்காலத்தில் இ-டியூஷன் நடத்த இப்போது உங்களைத் தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாம். குறிப்பாக, ஃபிட்னஸ் - யோகா பயிற்சிகளுக்கும் நல்ல டிமாண்ட்.

6) மொழியாக்கம்

மொழியில் புலைமை உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்தே வருவாய் ஈட்ட உதவும் அட்சய பாத்திரம்தான் மொழியாக்கம். உள்ளூர் ஆப் தொடங்கி கூகுள் வரையிலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க கன்டென்டுகள் ஏராளம். தாராளம். இந்த ஏரியாவில் வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. ஒரு வார்த்தைக்கு 50 பைசா முதல் 2 ரூபாய் வரை கிடைக்கின்றன. இதுவும் தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், நீங்களே ஒரு ஏஜென்ஸி போலவும் இயங்கலாம்.


தேவைப்படும் நிறுவனங்களிடமிருந்து மொழியாக்க ஆர்டர்களைப் பெற்று, அதை உங்கள் கைவசம் உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களிடம் கொடுத்து வேலை வாங்கித் தரலாம். பிரஸ் ரிலீஸ் தொடங்கி புத்தகங்கள் வரையில் எத்தனையோ வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து மாநில மொழிகளுக்கோ அல்லது மாநில மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கோ மொழிபெயர்க்க உங்களைத் தயார் செய்துகொண்டால் நீங்கள் ஃப்ரீலான்ஸிங்கிலும் அசத்தலாம்.

7) வீடியோ - யூடியூப் சேனல்

ஸ்மார்ட்போன்களும், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் ஏற்படுத்திய இணைய மாற்றங்களில் ஒன்று, வீடியோ கன்டென்ட்டுகளுக்கு மவுசைக் கூட்டியதே. இணையத்தில் இப்போது டெக்ஸ்ட், ஆடியோ கன்டென்ட்டுகளைவிட வீடியோ கன்டென்ட்டுகளுக்குதான் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். ஆனால், தமிழில் இன்னமும் போதுமான அளவு வீடியோக்கள் வெளிவருவது இல்லை என்பதே உண்மை.


அதேபோல், எளிதில் தரமாக வீடியோ எடுக்கக் கூடிய ஸ்மோர்ட்போன்களும் நிறைய இருக்கின்றன. எனவே, உங்களுக்கு விருப்பமான துறை சார்ந்த வீடியோக்களை நீங்களே உருவாக்கலாம். சினிமா விமர்சனம் தொடங்கி சமையல் கலை வரை எதுவாகவும் இருக்கலாம். தொடர்ந்து சிறப்பாக வீடியோ கன்டென்ட்டுகளை உருவாக்கி வந்தால் நிச்சயம் பலன் உண்டு.


ஆனால், ஆன்லைனைப் பொறுத்தவரையில் ஒரு முயற்சியைத் தொடங்கிய மறுநாளே பலனை எதிர்பார்ப்பது தவறு. நமக்குப் பலன் கிடைக்க பல மாதங்களோ, சில வருடங்களோ கூட ஆகலாம். எனவே, உங்கள் எதிர்பார்ப்பை சிலகாலத்துக்கு ஓரங்கட்டிவிட்டு, சோர்வின்றி வீடியோக்களை அப்டேட் செய்ய ஆரம்பிக்கலாம். இதற்காக, யூடியூப் சேனலைப் பிரதானமாக வைத்துக்கொள்ளலாம். அதே வீடியோவை மற்ற சோஷியல் மீடியா தளங்களிலும் பரவலாக்கலாம்.

8) ஆன்லைன் கலைப் பயற்சிகள்

கொரோனா காலத்தில் வீட்டில் குழந்தைகளை எங்கேஜிங் செய்ய முடியாமல் பெற்றோர்கள் திணறுவதைப் பார்த்திருப்பீர்கள். வழக்கமான விடுமுறை காலத்தில் ஓவியம், இசை, நடனம் போன்ற கலைப் பயிற்சிகளுக்கு குழந்தைகள் அனுப்பப்படுவர். இப்போது அதுகூட இயலாத நிலை. இந்தச் சூழலில் ஆன்லைனில் கலைப் பயிற்சிகளுக்கான மதிப்பு கூடியிருக்கிறது. இனி வரும் காலங்களிலும் இது இன்னமும் கூடலாம்.


கிராஃப்ட், ஓவியம், ஓரிகாமி, இசை, நடனம் எதுவாக எந்தக் கலைகளாக இருந்தாலும், உங்களுக்குத் திறமையும் ஆர்வமும் உள்ள ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெற்று, குழந்தைகளுக்கு ஆன்லைனில் கலைப்பயிற்சி அளிக்கலாம். இணைய வழி என்பதால் வெளிநாடு வாழ் இந்தியக் குழந்தைகளையும் எளிதில் ரீச் பண்ணலாம். உங்களுக்கு ஆர்வம் மட்டும்தான் இருக்கிறது எனும் பட்சத்தில், கலைப் பயிற்சியாளர்களையும் பெற்றோரையும் ஒருங்கிணைக்கும் ஆன்லைன் கலைப் பயிற்சி நிறுவனத்தையே ஆரம்பிக்கலாம்.

சோஷியல் மீடியா
9) சோஷியல் மீடியா அட்மின் / மார்க்கெட்டிங்

'சோஷியல் மீடியா அட்மின்' பணிக்கான வாய்ப்பும் இப்போது அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் வரை பல தரப்பினரும் தங்கள் சார்பில் பதிவுகளை இடுவதற்கு சோஷியல் மீடியா அட்மின்களை நியமிக்கின்றனர்.


மாதம்தோறும் நல்ல வருமானம் கிட்டும். இதற்கு, நாம் சோஷியல் மீடியாவில் வல்லவர்களாக உருவெடுக்க வேண்டியதே முக்கியம். இதேபோல், ஒரு நிறுவனத்தின் ப்ரோடக்டுகளை சோஷியல் மீடியாவில் மார்க்கெட்டிங் செய்யவும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதைத் தனி நபராகவோ அல்லது ஒரு நிறுவனம் அமைத்தோ ஈடுபடலாம். சொல்வதற்கு எளிதுதான். ஆனால், தீவிர ஹோம் ஒர்க் செய்து, இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் செய்வது சற்றே கடினம்தான். ஆனால், நல்ல அடித்தளம் அமைத்துவிட்டால் நல்ல எதிர்காலம் உறுதி.

10) சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்

சோஷியல் மீடியாவில் இன்ஃப்ளூயன்ஸர் ஆவது மிகவும் கடினம்தான். ஆனால், உங்கள் துறை சார்ந்த இன்ஃப்ளூயன்ஸ்ராக உருவெடுக்க முடியும். சோஷியல் மீடியாவில் தினமும் சிரத்தையும் உங்கள் துறை சார்ந்த கருத்துகளை, கைடன்ஸ்களை வெளியிடலாம். எப்போவும் உங்கள் ஃபாலோயர்களை எங்கேஜிங்காக வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் உங்களைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் கூடும்.


ஒருகடத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத இன்ஃப்ளூயன்ஸர் ஆவீர்கள். அதை உங்கள் வேலை, தொழிலின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தலாம். நேர்மையாக இயங்கி சரியான வழியில் இன்ஃப்ளூயன்ஸ்ராகவும் வருவாய் ஈட்ட முடியும். இதுகுறித்து நீங்கள் நிறைய வாசித்து, நிறைய ஹோம் ஒர்க் செய்து, இதுபோன்ற லாக்டவுன் நேரங்களில் தீவிரம் காட்டலாம். பெர்ஃபார்மன்ஸில் ஆர்வம் இருந்தால் டிக்-டாக்கிலும் தயங்காமல் அசத்தலாம். ஏனெனில், டிக்-டாக்கின் வளர்ச்சி மிகப் பெரியது.


- ப்ரியன்