1 ரூபாயில் சானிடைசர் சாஷே அறிமுகம் செய்யும் சென்னை நிறுவனம்!
கொரோனா தாக்கத்தின் நடுவே சானிடைசர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் கெவின்கேர் நிறுவனம் 2 மிலி சாஷேவை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே முடக்கியுள்ளது. உலக அளவில் இதுவரை பத்து லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில், கிருமி நாசினி (சானிடைசர்) மற்றும் முகமூடிகளுக்கானத் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமான கவின்கேர், குறைந்தது இரண்டு முறை பயன்படுத்தக்கூடிய 2 மிலி சானிடைசர் சாஷேவை ஒரு ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. சானிடைசர் அனைத்து தரப்பு மக்களுக்குக் கிடைக்க இது வழி செய்யும்.
கவின்கேர் நிறுவனம் சிக், நைல் மற்றும் ராகா வகைகளின் கீழ், தனிநபர் நல பொருட்களைக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரித்து வருகிறது.
சிக் பிராண்ட், மத்திய தர மற்றும் கீழ் மத்திய தர மக்களை இலக்காக கொண்டுள்ளது. மற்ற இரு பிராண்ட்களும் மத்திய தர மற்றும் உயர் மத்திர தர மக்களை இலக்காக கொண்டவை.
கெவின்கேர் இந்த மூன்று பிராண்ட்களிலும் சானிடைசர்களை அறிமுகம் செய்துள்ளது. சிக் பிரிவில் சானிடைசர் ஒரு ரூபாய் சாஷேவில் கிடைக்கிறது.
2 மற்றும் 5 மிலி சானிடைசர்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 10 மிலி முதல் 800 மிலி பிரிவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
"எங்கள் ஆய்வுப் பிரிவு ஏற்கனவே சானிடைசரில் ஆய்வு செய்து இதற்கான பார்முலாவை தயார் செய்திருந்தது. சரியான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தோம். கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தயாரிப்பை அறிமுகம் செய்ய இது சரியான தருணம் என கருதி 15 நாட்களில் அறிமுகம் செய்துள்ளோம்,” என்று கவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார்.
கவின்கேர் புத்துச்சேரியில் உள்ள உற்பத்தி ஆலையில் இவற்றைத் தயார் செய்கிறது. மூலப்பொருட்களை, மும்பை, சென்னை மற்றும் கோலாபூரில் இருந்து தரவிக்கிறது. இந்த சானிடைசர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளில் கிடைக்கும் என்று ரங்கநாதன் தெரிவித்தார்.
ஆங்கில கட்டுரையாளர்: பாவ்யா கவுஷல் | தமிழில்: சைபர்சிம்மன்