கொரோனா பரவலை தடுக்க உதவும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம்!

நொய்டாவைச் சேர்ந்த Karam நிறுவனம் மாஸ்க், கண்களை முழுமையாகப் பாதுகாக்கும் கண்ணாடிகள், ஃபேஸ் ஷீல்ட் போன்றவற்றைத் தயாரித்து விநியோகிக்கிறது.
0 CLAPS
0

உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியது முதலே கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய மூன்றும் நம் அனைவரது காதிலும் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. சூழலை உணர்ந்து பல நிறுவனங்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் அத்தியாவசியப் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.

உயர்தர மாஸ்க் நான்-ஓவன் துணி கொண்டு தயாரிக்கப்படுகிறது. நெய்யப்படாத துணி தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மாஸ்க் தயாரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலி தடைபட்டது.

இந்த சிக்கலுக்குத் தீர்வளிக்கிறது Karam நிறுவனம். இந்நிறுவனம் நெய்யப்படாத துணிகளைத் தயாரிக்கிறது. அதுமட்டுமின்றி அதிகளவில் மாஸ்க் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

“பிபிஇ பற்றாக்குறை ஏற்பட்டதும் எங்கள் பிராண்ட் விநியோகத்தைத் துரிதப்படுத்தி ஆதரவளித்தது. அதிகரித்து வரும் தேவையை உணர்ந்து சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர், நுகர்வோர் போன்றோருக்காக ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற மாஸ்க் தயாரிப்புப் பணிகளையும் முடுக்கிவிட்டோம்,” என்கிறார் Karam இணை நிறுவனர் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர் ராஜேஷ் நிகம்.

2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்நிறுவனம் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மாஸ்க் தயாரித்துள்ளது. இவை மருந்தகங்களிலும் அமேசான் போன்ற மின்வணிக தளங்களிலும் கிடைக்கின்றன.

மூலப்பொருள்

பாலிப்ரொப்லீன் போன்ற பாலிமர்களில் இருந்து நான்-ஓவன் துணி தயாரிக்க மெல்ட் ப்ளோன் எக்ஸ்ட்ரூஷன் என்கிற செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் துணிகளே உயர்தர மாஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக உறிஞ்சுதன்மை கொண்டது. பாக்டீரியா உட்புகாமல் தடுக்கிறது.

“நவீன பரிசோதனை ஆய்வகங்கள் பற்றாக்குறை, விநியோகச் சங்கிலி பிரச்சனை போன்ற காரணங்களால் இந்தியாவில் இது தொடர்பான தரநிலை பின்பற்றப்படுவதில் சிக்கல் நிலவுகிறது. Karam முன்னணி பிபிஇ தயாரிப்பாளராக செயல்பட்டு வரும் நிலையில், துணி மற்றும் மாஸ்க் தயாரிப்பதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டோம்,” என்கிறார் ராஜேஷ்.
3,300 ஊழியர்களுடன் செயல்படும் Karam கடந்த ஆண்டு 520 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

தற்காப்பு கண்ணாடி மற்றும் ஃபேஸ்ஷீல்ட் தயாரிப்பு

2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் பிபிஇ தேவை உள்நாட்டில் அதிகரித்ததை Karam கவனித்தது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் பணியில் தீவிரம் காட்டியது.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கும் காவல் துறையினருக்கும் கண்களை முழுமையாகப் பாதுகாக்கக்கூடிய கண்ணாடிகளை வழங்க இந்நிறுவனம் மத்திய அரசுடன் கைகோர்த்தது.

மேலும், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாக்கும் வகையில் ஃபேஸ் ஷீல்ட் தயாரிப்பையும் இந்நிறுவனம் தொடங்கியது.

இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் நவீன, தொழில்நுட்பம் சார்ந்த இயந்திரங்களுடன் செயல்படுகிறது.

“லக்னோ புறநகர் பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. மற்றொரு தொழிற்சாலை உத்தர்காண்ட் பகுதியில் இயங்குகிறது,” என்கிறார் ராஜேஷ்.

முப்பதாண்டுகால பழமை வாய்ந்த நிறுவனம்

Karam நிறுவனம் 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராஜேஷ் ஐஐடி கான்பூரில் மெட்டலர்ஜிக்கல் பொறியியல் முடித்துவிட்டு 1992-ம் ஆண்டு குடும்பத்தினர் நடத்தி வந்த கெமிக்கல் ட்ரேடிங் வணிகத்தில் இணைந்துகொண்டார்.

ஒருமுறை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த ஹேமந்த் என்பவரை ராஜேஷ் சந்தித்தார். எல்&டி போன்ற கட்டுமான நிறுவனங்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுவது குறித்து ராஜேஷ் தெரிந்துகொண்டார்.

இந்த உபகரணங்கள் வடக்கு மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் விலையுயர்ந்ததாக இருந்தது. எனவே சர்வதேச தரத்திலான பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார்.

ஹேமந்த், ராஜேஷ் இருவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பு உபகரணங்கள் வணிகத்தைத் தொடங்கத் தீர்மானித்து 1994-ம் ஆண்டு Karam தொடங்கினார்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world