சிஏ தேர்வு எழுத வேண்டியவர்; தீவிர ரஜினி ரசிகர் - ‘வெங்கடேஷ் ஐயர்'-ன் கிரிக்கெட் கதை!

பெங்களூருவை பந்தாடிய இந்த வெங்கடேஷ் ஐயர் யார்?
133 CLAPS
0

வெங்கடேஷ் ஐயர்! நேற்றைய ஐபிஎல் போட்டியில் மிகவும் கவனம் ஈர்த்த ஒரு நபர். நேற்றுதான் அவருக்கு முதல் ஐபிஎல் போட்டி. முதல் போட்டியிலேயே 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றிபெற உதவினார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

முன்னாள் வீரர்கள் பலரும் அவரை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் வீரர் இர்பான் பதான், வெங்கடேஷ் ஐயரின் நேற்றைய கவர் ட்ரைவ் குறித்து சிலாகித்து பதிவிட்டு இருந்தார்.

அதேபோல், மனோஜ் திவாரியோ,

“வெங்கடேஷ் ஐயரிடம் உள்ள திறமையை அடையாளம் கண்டு விளையாட வைத்த கொல்கத்தா அணிக்கு வாழ்த்துக்கள். உள்நாட்டு விளையாட்டு போட்டிகளின்போதே வெங்கடேஷின் திறமையை நான் பார்த்துள்ளேன். அதே திறமையை இன்று ஐபிஎல்-லிலும் வெளிப்படுத்தியுள்ளார். பிசிசிஐ அவரை நன்கு ஆதரித்தால் ஹர்திக் பாண்டியா போல் இந்தியாவுக்கான அடுத்த வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக கோலோச்சுவார். எனவே வெங்கடேஷ் ஐயர் மீது கொஞ்சம் கண் வையுங்கள்," என்றுள்ளார்.

மனோஜ் திவாரி கூறியது போல் திறைமைமிகுந்த வீரர் வெங்கடேஷ் ஐயர். என்றாலும் ஐபிஎல் கிரிக்கெட் என்ட்ரி சற்று வித்தியாசம் நிறைந்தது.

யார் இந்த வெங்கடேஷ் ஐயர்?

மத்திய பிரதேசம்தான் அவரின் சொந்த மாநிலம். இந்தூரில் இவரின் குடும்பம் படிப்பில் தீவிர கவனம் செலுத்துபவர்கள். வெங்கடேஷின் தந்தை மனிதவள ஆலோசகராகவும், தாய் ஒரு மருத்துவனை நிர்வாகத்திலும் பணிபுரிந்தவர்கள். வெங்கடேஷும் அவர்களைப் பின்பற்றி சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டியாக இருந்துள்ளார். எந்த வகுப்பிலும் அதனை நன்கு கவனிக்கும் தனித்திறன் கொண்ட அவர், சிஏ தேர்வு எழுத வேண்டியவர். அதற்காக பல ஆண்டுகளாக தயாராகி வந்தவர் மீண்டும் கிரிக்கெட் பாதைக்குள் நுழைய அவரின் தாயே காரணமாக இருந்துள்ளார்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகளை போல, ஆரம்பத்தில் வேடிக்கையாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் வெங்கடேஷ். ஆனால், அவரின் பெற்றோருக்கு வெங்கடேஷ் விளையாடுவதைவிட, அவர் எப்போதும் புத்தகமும் கையும் இருக்கவே விரும்பியுள்ளனர். அதனால், வெங்கடேஷ் விளையாடும் போதெல்லாம் கடைக்கு செல்வது போன்ற பல வேலைகளை வாங்கி அவரின் தாய் விளையாட்டில் இருந்து அவரை திசை திருப்பி இருக்கிறார். இதனால் 19 வயது வரை அவர் நினைப்பில் கிரிக்கெட் விளையாடுவோம் என்பதே இல்லாமல் இருந்துள்ளார்.

கல்லூரி வாழ்க்கை சிறுவயதில் விட்டுவிட்ட கிரிக்கெட்டை மீண்டும் கையிலெடுக்க வைத்துள்ளது. பி.காம் டிகிரி முடித்ததும், ‘சிஏ' ஆசை மீண்டும் கிரிக்கெட்டை நிறுத்திவைக்க வைத்தது. 2016ல் சில தேர்வுகளில் தேர்ச்சிபெற்று இருந்தவர், தனது சிஏ கனவுக்கு தயாராகும் வகையில் தற்காலிகமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்குபோட தீர்மானித்தார்.

2018 வரை சிஏ பயிற்சிக்காக பெங்களூருவரை தலைமையிடமாகக் கொண்ட "பிக் ஃபோர்" என்ற கணக்கியல் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். ஆனாலும் கிரிக்கெட் ஆசை விடவில்லை. இந்தமுறை தீர்க்கமான முடிவை எடுக்கத் துணிந்தார்.

சிஏ கனவை துறந்து கிரிக்கெட்டே முக்கியம் என்ற முடிவெடுத்தார். இதற்கு அவரின் தாய் ஆதரவு தெரிவிக்க, விளைவு விரைவாக, அவரின் பெர்பாமென்ஸ் ரஞ்சி வரை கொண்டு சென்றது. சிஏ கனவை துறந்தாலும், எம்பிஏ படிப்பை மேற்கொண்டார். இதற்கு காரணம் அவரின் பிளான் பி.

”வாழ்க்கையில் நாம் அனைவருக்கும் பிளான் பி வேண்டும். ஒன்று சொதப்பினால் இன்னொன்றில் வெற்றி காணலாம்," என்று கூறும் வெங்கடேஷ் ஐயர், கிரிக்கெட்டில் தனக்கு எதிர்காலம் இல்லையென்றால் எம்பிஏ கைகொடுக்கும் என்று நினைத்து அதை தொடர்ந்தார். இத்தனைக்கும் கிரிக்கெட்டில் பயணித்து கொண்டே அதை செய்தார்.

மத்திய பிரதேச அணிக்காக விளையாடத் தொடங்கினார். 2019 டிசம்பர் நடந்த ரஞ்சி தொடரில் தான் அறிமுகம் ஆனார்.

பெற்றோர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உதவியால் கல்வி மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் சமமாக அவரால் கவனம் செலுத்த முடிந்தது. கல்லூரி தேர்வு சமயங்களில் கிரிக்கெட் தொடர் நடக்கும். அப்போது காலையில் கல்லூரிக்கு சென்று தேர்வுகளை எழுதிவிட்டு மதியம் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வந்துள்ளார்.

ஒருமுறை, சத்தீஸ்கர் அணிக்கு எதிராக விளையாடிய போது, அவர் கல்லூரி சென்று திரும்பியபோது மத்திய பிரதேசம் 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. அப்போது களமிறங்கிய வெங்கடேஷ், தனது அசாத்திய பேட்டிங்கால் சதம் எடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்திவிட்டு மதியம் பிற்பகல் தாமதமாக கல்லூரிக்கு சென்றிருக்கார். இந்தப் போட்டிக்கு பிறகு தான் அவருக்கு ரஞ்சி தொடரில் அறிமுகம் கிடைத்துள்ளது.

பின்னர், சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஐந்து இன்னிங்சில் 75.66 சராசரி உடன் 227 ரன்கள் மற்றும் 149.34 ஸ்ட்ரைக் ரேட் என முதலிடம் பிடித்தார். விஜய் ஹசாரே டிராபியில், பஞ்சாப் அணிக்கு எதிராக 146 பந்துகளில் 198 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

இதேபோட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க, ஐபிஎல் 2021 ஏலத்தில் கொல்கத்தா அணியால் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் முதல் போட்டியிலேயே அறிமுக வாய்ப்பு கிடைக்க, அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் இந்த ரஜினி ரசிகன்.

ஆம், வெங்கடேஷ் ஐயர் ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகர். ரஜினிகாந்த்தின் திரைப்படங்களை விடாமல் பார்த்துவிடும் வழக்கம்கொண்ட வெங்கடேஷ்,

“ரஜினி ஒரு லெஜெண்ட்," என்று கூறுகிறார். படையப்பா படத்தில் ரஜினி- ‘என் வழி தனி வழி' என்று பஞ்ச் டயலாக் பேசுவார். அந்த டயலாக்கே எனக்கும் பஞ்ச்லைன் ஆகிவிட்டது. இனி பல கற்றல் மற்றும் நல்ல அனுபவங்களுடன் என் வழியும் தனி வழி..." என்று சிலாக்கிறார் வெங்கடேஷ் ஐயர்!

தகவல் உதவி - espncricinfo