Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

லித்தியம் பேட்டரி விஞ்ஞானி டூ CSIR இயக்குநர்: தமிழ் வழியில் படித்து உயர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி!

சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து, தமிழ் வழியில் கல்வி கற்று, இன்று அறிவியல் துறையில் மிகப்பெரிய பதவியில் அமர்ந்துள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

லித்தியம் பேட்டரி விஞ்ஞானி டூ CSIR இயக்குநர்: தமிழ் வழியில் படித்து உயர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி!

Monday August 08, 2022 , 4 min Read

நாட்டின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமாக விளங்குகிறது, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவான சிஎஸ்ஐஆர் (CSIR). இதன் தலைமை இயக்குநர் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் நல்லதம்பி கலைச்செல்வி என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விசயம்.

முந்தைய தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் மாண்டேவின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றது. அதையடுத்து, உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் ராஜேஷ் கோகல் சிஎஸ்ஐஆர் குழுவின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தான், அந்தப் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் (Department of Scientific and Industrial Research) செயலாளராகவும் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 2 வருடங்களுக்கு இவர் இந்த பொறுப்பில் இருப்பார்.

kalaiselvi

CISR-இல் முதல் தமிழ் பெண் இயக்குனர்

1942ல் ஆங்கிலேயே அரசால் தொடங்கப்பட்டு, பின்னர் மத்திய அரசு மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி அமைப்புதான் சிஎஸ்ஐஆர். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி அமைப்பு என்றால் அது சிஎஸ்ஐஆர்தான்.

சிஎஸ்ஐஆர் என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு அங்கமாகும். மேலும் உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாடு, பரிமாற்றம், பயன்பாடு மற்றும் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளை இது மேற்கொண்டு வருகிறது.

சிஎஸ்ஐஆர் கட்டுப்பாட்டில் மொத்தம் 38 லேப்கள், 39 சென்டர்கள், 3 இன்னோவேஷன் சென்டர்கள், 5 யூனிட்கள் உள்ளன. இந்தியா முழுக்க 14000 பேர் இதில் பணியாற்றுகிறார்கள். 8000 டெக்கினிக்கல் சப்போர்ட் பணியாளர்கள், 4600 சைண்டிஸ்ட்டுகள் இதில் பணியாற்றி வருகிறார்கள்.

இதன் தலைமை இயக்குநராக பதவியேற்பதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை கலைச்செல்வி பெற்றுள்ளார்.

தமிழ் வழியில் படித்தவர்

நல்லதம்பி கலைச்செல்வி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழ்வழிக் கல்வி பயின்ற அவர், சிறுவயது முதலே அறிவியலில் அதிக ஆர்வம் உடையவராக திகழ்ந்துள்ளார்.

kalaiselvi
‘தன்னுடைய புரிந்து கொள்ளும் திறன் மூலம் கல்லூரியில் அறிவியில் குறித்த கருத்துக்களை எளிதாக மனதில் நிலை நிறுத்தி கொண்டதாகக்,” கூறுகிறார் கலைச்செல்வி.

சிறப்பு மின்தேக்கி (Super Capacitor), மின்முனை (Electrode) போன்ற துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ள நல்லதம்பி கலைச்செல்வி, லித்தியம்-அயன் பேட்டரி ஆராய்ச்சியில் நன்கு அறியப்பட்டவர். மத்திய அரசின் இந்திய மின்சார வாகனங்களின் திட்டத்தில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தற்போது, காரைக்குடி சிஎஸ்ஐஆர்-சிஈசிஆர்ஐ (மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம்) நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

ஆராய்ச்சி பணிகள்

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எலக்ட்ரோ கெமிக்கல் பவர் சிஸ்டம்ஸ் பற்றிய ஆராய்ச்சிப் பணிக்காகப் பெயர் பெற்றவர் கலைச்செல்வி. மின்முனைப் பொருட்களின் மேம்பாடு, தனிப்பயன் வடிவமைத்த தொகுப்பு முறைகள், ஆற்றல் சேமிப்பு சாதனம் அமைப்பது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரோடு பொருட்களின் மின்வேதியியல் மதிப்பீடு மற்றும் எதிர்வினை அளவுருக்களின் மேம்படுத்தல் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

லித்தியம் பேட்டரிகள், சூப்பர் கேபாசிட்டர்கள் மற்றும் கழிவுகளிலிருந்து செல்வத்தால் இயக்கப்படும் மின்முனைகள் மற்றும் ஆற்றல் சேமிப்பு மற்றும் எலக்ட்ரோ கேடலிடிக் பயன்பாடுகளுக்கான எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவை டாக்டர் கலைச்செல்வியின் ஆராய்ச்சியில் முக்கிய அங்கமாகும்.

kalaiselvi

உயர் ஆற்றல் மற்றும் அதிக சக்தி கொண்ட லித்தியம் பேட்டரி பயன்பாடுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட எலக்ட்ரோடு பொருட்கள், நாவல் மின்முனைகள் மற்றும் நீர் மற்றும் நீர் அல்லாத லித்தியம் பேட்டரிகள், அயனி திரவ அடிப்படையிலான மின்முனைகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பாலிமர் மேம்பாடு ஆகியவற்றிலும் கலைச்செல்வி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். மின்சார இயக்கத்திற்கான தேசிய இயக்கத்திலும் (NMEM) கலைச்செல்வி முக்கியப் பங்கு வகித்தார்.

எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி, எனர்ஜி, மெட்டீரியல் வேதியியல், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, நானோ மெட்டீரியல்ஸ் கெமிஸ்ட்ரி, மற்றும் எலக்ட்ரோகெமிக்கல் பவர் சோர்ஸ்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் கலைச்செல்வி. மத்திய அரசின் இந்திய மின்சார வாகனங்களின் திட்டத்தில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சாதனைகளும், விருதுகளும்

2007ம் ஆண்டு சர்வதேச விஞ்ஞானியாக அங்கீகரிக்கப்பட்டார் கலைச்செல்வி. INSA-NRF விஞ்ஞானிகளின் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011ல் கொரியா எலக்ட்ரோ டெக்னாலஜி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (KERI) செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல CSIR ராமன் ஆராய்ச்சி பெல்லோஷிப்பைப் பெற்றார்.

kalaiselvi

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி, காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர்-சிஇசிஆர்ஐ-ன் (Central Electrochemical Research Institute - CSIR-CECRI ) இயக்குநராகப் பொறுப்பேற்றார். அந்த பிரிவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் கலைச்செல்விக்கு உள்ளது. அதே ஆண்டு அவருக்கு சிவி ராமன் மகிளா விஞ்ஞான புரஸ்கார விருது வழங்கப்பட்டது. 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள கலைச்செல்வி பெயரில், ஆறு காப்புரிமைகள் உள்ளது.

சிஎஸ்ஐஆர் அமைப்பில் அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் கலைச்செல்வி. இந்த அமைப்பில் சாதாரண என்ட்ரி லெவல் ஆராய்ச்சியாளராக பணியை தொடங்கிய இவர் தற்போது மொத்தமாக இந்த அமைப்பின் தலைவராகி உள்ளார்.

முதல்வர் வாழ்த்து

கலைச்செல்விக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று!” என அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்களும், அறிவியல் ஆர்வலர்களும், கலைச்செல்விக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளிக் கல்லூரிப் படிப்பை எந்த மீடியத்தில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. ஆசிரியர்கள் கற்றுத் தருவதை நன்கு உள்வாங்கித் தெளிவாகப் புரிந்து கொள்கிறோமா என்பதுதான் கல்வியின் அடிப்படை. அப்படி ஆழ உழுது கல்வி கற்றவர்கள் பலர் இன்று உயர்பதவியில் உள்ளனர்.