சைவம் டூ அசைவம்: ஒரே நாளில் ஹீரோவான ஜெகதீசன் வெற்றிக்கு கொடுத்த விலை என்ன?

By Chitra Ramaraj
December 05, 2022, Updated on : Mon Dec 05 2022 12:40:03 GMT+0000
சைவம் டூ அசைவம்: ஒரே நாளில் ஹீரோவான ஜெகதீசன் வெற்றிக்கு கொடுத்த விலை என்ன?
சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கோபத்தை, கிரிக்கெட் மைதானத்தில் காட்டி, சதங்களை விளாசி சாதனைகளைப் படைத்துள்ளார் தமிழக வீரரான ஜெகதீசன். கிரிக்கெட்டிற்காக தனது உணவுப் பழக்கவழக்கத்தை சைவத்தில் இருந்து அசைவத்திற்கு மாறியவர் இவர் என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தாங்கள் விரும்பிய துறையில் சாதனை படைக்க விரும்புவர்கள், அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அதற்கு சமீபத்திய உதாரணமாகி இருக்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் ஜெகதீசன்.


கடந்த மாதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து, தமிழக வீரரான என் ஜெகதீசனை விடுவிக்க முடிவு செய்ததாக செய்திகள் வெளியானது. இந்தச் செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாபெரும் தவறு செய்து விட்டது, நல்ல ஒரு வீரரை இழந்து விட்டது என்பதை தனது புதிய வரலாற்றுச் சாதனையால் நிரூபித்துக் காட்டியுள்ளார் ஜெகதீசன்.


ஆம், எந்த வீரர் வேலைக்கு ஆக மாட்டார் என ஓரங்கட்டப் பட்டாரோ, அவர் பெங்களூரில் நடந்த 50 ஓவர் விஜய் ஹசாரே டிராபியில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக 277 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

jagadeesan

அதிரடி சாதனைகள்

விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிகபட்சமாக, விராட் கோலி (2008/09 விஜய் ஹசாரே தொடரில்) 7 போட்டிகளில் 534 ரன்கள் அடித்திருந்தார். அப்போது இவரது சராசரி 89 ரன்கள் ஆகும். இந்த சீசனில் அந்த சாதனையை முறியடித்து, ஆறு போட்டிகளில் 600 ரன்களைக் கடந்திருக்கிறார் ஜெகதீசன்.


அதேபோல், ஒரு சீசனில் இதுவரை தனி நபர் அடித்தது , நான்கு சதங்கள் மட்டுமே அதிகபட்சமாக இருந்தது. விராட், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் மற்றும் ருத்ராஜ் கெய்க்குவாட் ஆகிய நால்வரும் இந்த சாதனையை படைத்திருந்தனர். தற்போது ஐந்தாவது சதம் அடித்ததன் மூலம் அதிலும் ஜெகதீசன் புதிய சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் உள்ளூர் அளவிலும், சர்வதேச அளவிலும் ஜெகதீசன் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

jagadeesan

இப்படி பல சாதனைகளை முறியடித்து, புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ள தமிழக வீரர் ஜெகதீசனுக்கு பல நாட்டு கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹஸ்ஸி அனுப்பிய வாட்சப் வாழ்த்துச் செய்தியில், ‘வாழ்த்துகள்... தொடர்ந்து இதே வெற்றிப் பாதையில் செல்லுங்கள்’ என வாழ்த்தி இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ஜெகதீசன்.

தொடர் சறுக்கல்கள்

இப்போது சாதனைகளைச் செய்ததற்காக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்று வரும் ஜெகதீசன், கடந்த ஜூன் மாதம் சர்ச்சைகளில் சிக்கியதற்காக இதே ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தவர் ஆவார். அப்போது நடந்த டிஎன்பிஎல் தொடரில் ரன் அவுட் ஆன பிறகு தனது அணி வீரர் பாபா அபரஜித்திடம் நடு விரலை காட்டி செய்கை செய்ததற்காக சர்ச்சையில் சிக்கினார்.


மேலும், சையத் முஸ்தாக் அலி கோப்பையில் 6 போட்டிகளில் 118 ரன்களை மட்டுமே எடுத்ததும் ஜெகதீசன் மீது கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை இழக்க ஒரு காரணமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதும், அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதற்கான பாதைகள் ஒவ்வொன்றாக அடைபடுகின்றன என்றே ரசிகர்கள் நினைத்தனர்.


ஆனால், தொடர்ந்து சந்தித்த சரிவுகளை எல்லாம் தனக்கான, பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு, முன்பைவிட பலமடங்கு வேகத்தோடு விளையாடி, புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் ஜெகதீசன்.

jagadeesan

விஜய் ஹசாரே கோப்பையில் தொடர்ந்து 5 போட்டிகளில் சதம், அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் என உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் தர கிரிக்கெட்டில் படைத்த சாதனைகளை தவிடுபொடியாக்கி, தன் பலத்தை சற்று உரக்கவே அனைவருக்கும் எடுத்துக் காட்டியிருக்கிறார் ஜெகதீசன்.


ஆனால், இப்படியான அபாரமான வெற்றிகளைப் பெற ஜெகதீசன் மேற்கொண்ட பயிற்சிகள் கொஞ்சம் நஞ்சமல்ல... அதில் அனைவராலும் தற்போது அதிகம் உற்று நோக்கப்படுவது அவரது உணவு முறை மாற்றம் ஆகும்.

சைவம் டூ அசைவம்

ஆம், கிரிக்கெட்டிற்காக சைவ உணவு முறையிலிருந்து அசைவத்துக்கு மாறி இருக்கிறார் அவர். சைவ உணவு முறையை பின்பற்றும் ஜெகதீசனின் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். எந்த ஒரு நல்லதையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்படி தனது உணவு கலாச்சாரத்தையே மாற்றிக் கொண்டதாகக் கூறுகிறார் ஜெகதீசன்.

“அசைவம் சாப்பிட்டால் மேலும் பலனளிக்கும் என்று நம்பினேன். எனவே அது பழகுவதற்கும் சுலபமாக இருந்தது. புதிய விசயங்களை கற்பதுடன் நல்ல உணவையும் எடுத்துக் கொள்ளவேண்டும். உணவு முறையும் ஒரு முக்கியமான அம்சம்," என்கிறார் ஜெகதீசன்.

இது தொடர்பாக ஜெகதீசனுக்கு 8 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சியளித்து வரும் அவரது கோச் குருசாமி கூறுகையில்,

“இதற்குதான் பல ஆண்டுகளாக நான் காத்திருந்தேன். அணியிலிருந்து நீக்கப்படுவோமோ என்ற அச்சத்திலும், மன அழுத்தத்திலும் ஜெகதீசன் இருந்தார். ஆனால், தனக்கான வாய்ப்பை அவர் சரியாகp பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்," என்றார்.
jagadeesan

ஜெகதீசனுக்கு அவரது குடும்பத்தின் ஆதரவும், உறுதுணையும் அதிகம் இருந்திருக்கிறது. அவரது தந்தை ராஜன் நாராயணன் ஜெகதீசனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். விளையாட்டில் சோர்வுரும் நேரங்களில் எல்லாம் கோயமுத்தூரில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்றுதான் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வாராம் ஜெகதீசன்.

“ஜெகதீசனிடம் நல்ல திறமை இருந்தது. ஆனாலும் அவர் சாதனைகள் செய்ய முடியாமல் ஏதோ ஒன்று அவரைத் தடுப்பதை உணர்ந்தேன். கஷ்டப்பட்டு அது என்னவென்று கண்டுபிடித்தோம். அவர் தனது டி20 ஸ்ட்ரைக்-ரேட்டை (118.61) 150 மற்றும் அதற்கு மேல் மேம்படுத்த விரும்புவதைத் தெரிந்து கொண்டோம். இப்போது அது அவருடைய விளையாட்டு அல்ல. எனவே தற்போதைக்கு அதை மறந்துவிட்டு மீண்டும் ரன்களை எடுக்க வேண்டும் என அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,” எனக் கூறுகிறார் குருசாமி.

உலகமே அவரது சாதனைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்க, தான் சாதனை செய்ததையே முதலில் ஜெகதீசன் உணரவில்லையாம்.


“நான் உண்மையில் எந்த சாதனைகளையும் பற்றி யோசிக்கவில்லை. எனது பேட்டிங் மற்றும் நான் செய்து வரும் அனைத்தையும் பின்பற்றுவது பற்றி மட்டுமே இருந்தது. இது மிகவும் நன்றாக இருந்தது, இந்த ஆட்டம் மட்டுமல்ல, மற்ற ஆட்டங்களில் கூட 50 ஓவர்கள் விளையாடுவது மட்டுமே எனது குறிக்கோள் என்று நான் நினைக்கிறேன், யார் எதிரணி என்பது முக்கியமில்லை. நான் எனது பேட்டிங்கிலும், எனது கீப்பிங்கிலும் குறிப்பாக எனது உடற்தகுதியிலும் நிறைய உழைத்து வருகிறேன். சில காலமாக நான் அதைச் செய்து வருகிறேன். இறுதியில் நான் ரன்களை எடுக்கும்போது நான் நன்றாக உணர்கிறேன். மக்களிடம் என்னுடைய சிறப்பான திறனை காட்ட வேண்டும். அடிப்படைகளை கற்பதையும் பயிற்சிகளில் ஈடுவதையும் தவறாமல் செய்து வருகிறேன்,” என்கிறார் ஜெகதீசன்.

யார் இந்த சாதனை நாயகன் ஜெகதீசன்?

26 வயதான நாராயண் ஜெகதீசன் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். 2016ம் ஆண்டு தமிழகத்தின் ரஞ்சி டிராபி அணியில் அறிமுகமானார். பிறகு, 2016-17 ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாட்டிற்காக லிஸ்ட் ஏ போட்டியில் விளையாடினார்.


2016-17 ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேசத்திற்கு எதிராக 7-வது இடத்தில் பேட்டிங் செய்த ஜெகதீசன், முதல் இன்னிங்சில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் என்று 123 ரன்கள் எடுத்தார். அவரது அபாரமான ஆட்டத்தால், மோசமான தொடக்கம் இருந்தபோதிலும், தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்கள் என்ற மகத்தான ஸ்கோரைப் பதிவு செய்ய உதவியது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலும், ஆட்ட நாயகன் விருதை ஜெகதீசன் தட்டிச் சென்றார்.


தொடர்ந்து, 2018ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். தனது அறிமுக ஆட்டத்தை 2020ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கு எதிராக விளையாடினார்.

jagadeesan

இதுவரை 26 முதல்தர ஆட்டங்கள், 41 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடி ஒவ்வொரு ஃபார்மெட்டிலும் 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் ஜெகதீசன். முதல் தர போட்டிகளில் 1261 ரன்களும், லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் முறையே 1782 ரன்களும், 1064 ரன்களும் எடுத்துள்ளார்.


நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஜெகதீசன் ஆறு போட்டிகளில் 156.00 சராசரியில் 624 ரன்கள் எடுத்து முன்னணி வீரராக உள்ளார்.

ஒரே நாளில் ஹீரோ

பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த போதும், 7 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 73 ரன்களை மட்டுமே ஜெகதீசன் எடுத்துள்ளார். எனவேதான், வரும் ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.


இதன் காரணமாக, கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீசன், தனது கோபத்தை கிரிக்கெட் மைதானத்தில் காட்டி, தற்போது அதில் சதங்களை விளாசி, சாதனைகளைப் படைத்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது, இம்மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க நிறைய அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அதிக தொகைக்கு அவர் ஏலத்தில் போக வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர் விளையாட்டுத்துறை வல்லுனர்கள்.